kumar ponambalam

13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் இருந்து என்றோ ஒரு நாள் நீக்கம் செய்யப்படும் சந்தர்ப்பம் வருமென மாமனிதர் குமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.

2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்கு வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு சொன்னார்.

13ஆம் திருத்தச் சட்டம் அரசியல் தீர்வு அல்ல என்றும், ஆனாலும் குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்ட 13ஆவது திருத்தச் சட்டம் கூட சிங்கள ஆட்சியாளர்களினால் ரத்துச் செய்யப்படும் சூழல் உருவாகுமெனவும் அவர் அன்று தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருந்தார்.

--- கொழும்பில் உள்ள பிரபல அச்சு ஊடகம் ஒன்றில் நான் பணியாற்றிய போது, குமார் பொன்னம்பலம் வழங்கிய அந்த நேர்காணல், அச்சுக்குச் சென்று சிறிது நேரத்தில் திடீரென ஓடிக் கொண்டிருந்த இயந்திரம் நிறுத்தப்பட்டு அந்த நேர்காணல் அகற்றப்பட்டது.

உடனடியாக ஏதோவொரு கட்டுரையைப் போட்டுப் அந்தப் பக்கத்தை நிரப்பி மீண்டும் புதிய பதிப்பு அச்சிடப்பட்டது.

குமார் பொன்னம்பலத்தின் நேர்காணலோடு ஏற்கனவே அச்சிடப்பட்ட பல பிரதிகள் அப்படியே கட்டப்பட்டு வெளியே போகாமல் ஒரு மூலைக்குள் போடப்பட்டிருக்க வேண்டும். அல்லது எரிக்கப்பட்டிருக்கலாம்.

நேர்காணல் பிரசுரிக்கப்படக் கூடாதென, அச்சுக்குப் போய் சில நிமிடங்களில் எங்கிருந்து திடீர் உத்தரவு வந்தததென இதுவரை எனக்குத் தெரியாது. அப்போதிருந்த பிரதம ஆசிரியர் மனவேதனையோடு தனது மேசையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

அந்த நேர்காணல், குமார் பொன்னம்பலத்தின் 31 நாள் நினைவு வணக்க நூலில் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் சர்ச்சையான கருத்துக்களைத் தவிர்த்தே அதனைப் பிரசுரிக்க அனுமதியளித்தேன்--(கொழும்பில் அப்போதைய பாதுகாப்புநிலை ஆபத்தானதாக இருந்தது. அத்துடன் நான் பணியாற்றிய நிறுவனமும் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சமும் இருந்தது.)

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவைக் கடுமையாக விமர்சித்த குமார் பொன்னம்பலம், கொழும்பு கோட்டையில் உள்ள இலங்கை வங்கியின் கேட்போர் கூடத்தில் சிங்களப் புத்திஜீவிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றினார்.

கேள்விகளுக்குத் துணிவோடு பதிலளித்த குமார் பொன்னம்பலம், போர் நிறுத்தப்படவில்லை என்றால், கடன்சுமை தாங்க முடியாமல் இலங்கை குட்டிச் சுவராகும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்தக் கருத்தரங்கில் நானும் மாமனிதர் சிவராம் அண்ணணும் பங்கு பற்றியிருந்தோம். சிங்கள மக்களினால் கேட்கப்பட்ட குறிப்பிட்ட சில கோள்விகளைத் தவிர, அநேகமான கேள்விகள் இனவாதமாகவும், ஆத்திரத்தை ஏற்படுத்தும் கருத்துகளாகவும் இருந்தன.

ஆனால் பொறுமையாகவும் நிதானமாகவும் பதில் வழங்கினார் குமார் பொன்னம்பலம்.

அப்போது செய்தித் தணிக்கை அமுலில் இருந்ததால் குமார் பொன்னம்பலம் கூறிய பதில்களில் சில கருத்துக்களை மாத்திரமே நான் பணியாற்றிய அந்த அச்சு ஊடகத்தில் என்னால் எழுத முடிந்தது .

13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென்ற தங்கள் விருப்பங்களையே சிங்களப் புத்தஜீவிகளில் பலர், குமார் பொன்னம்பலத்திடம் முன்வைத்திருந்தனர்.

22 வருடங்கள் சென்று விட்ட நிலையிலும் சிங்கள மக்களில் பலரும், மிலிந்த மொறகொட போன்ற சிங்கள அரசியல்வாதிகளும், அமைச்சர் சரத் வீரசேகர போன்ற முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள் சிலரும் அதே கருத்துடனேயே இன்றும் செயற்படுகின்றனர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது ஏற்றிருக்கலாம் என்று புலம்புவோருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

- அமிர்தநாயகம் நிக்சன்

Pin It