குழந்தைகளின் அற்புத உலகில்kuzhanthaikalin-arputha-ula

 

ஆசிரியர்: உதயசங்கர்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.90.00

தமிழிலக்கிய உலகின் கவனம், சமீப நாட்களில் குழந்தைகளின் அற்புத உலகின்பால் சற்றுக் கூடுதலாகப் பதியத் தொடங்கியுள்ளது. குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றனர், ஏன் தோற்றுப் போகிறார்கள், அவர்களின் குழந்தைமை தொலைந்து போகிற இடம் எது என்றெல்லாம் நுணுகி ஆராய்கிற நூல்கள் ஆங்கிலம் வழி தமிழுக்கு வருகின்றன. தமிழிலும் சுயமாக எழுதப்படுகின்றன.

இந்தப் பின்னணியில், தமிழிலக்கிய உலகம் நன்கறிந்த படைப்பாளியான உதயசங்கர், குழந்தை களுக்கான படைப்புகளை மலையாளத்தில் இருந்து மொழியாக்கம் செய்தும், தானே புதிதாக எழுதியும் அரிய பங்களிப்புகளைச் செய்து வருகிறார். ‘டிஓய்எஃப்ஐ இளைஞர் முழக்கம்’ - மாத இதழில் 25 மாதங்களாகத் தொடர்ந்து அவர் எழுதிவந்த கட்டுரைகள், ‘குழந்தைகளின் அற்புத உலகில்...’ என்ற நூலாக தற்போது நமக்குக் கிடைத்துள்ளன. மிக அழகிய கருத்தாழமிக்க அட்டைப் படத்துடனும், சிறந்த வடிவமைப்புடனும் என்.சி.பி.எச். நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது பாராட்டுக் குரியது.

‘குழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?’ எனும் கேள்வியுடன் தொடங்குகிறது நூல். “எங்கொழந்தயப் பத்தி எனுக்குத் தெரியாதா? நாங் கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டான்.” - எனப் பெருமை பொங்கும் குரல்களை நாம் கேட்காத நாளொன்று உண்டா?

ஆனால், இப்புத்தகம் முன்வைக்கும் உண்மைகள், நமது மனவெளிகளில் உறைந்து போய்க் கிடக்கும் இத்தகைய போலிப் பெருமைகளை ஆணிவேருடன் கெல்லி எறிந்து விடுகின்றன. நமது கவனம், பொருளாதாரம் சார்ந்ததாக மட்டுமே உள்ளது.

வாழ்தலின் இன்பத்தை உணர்வதேயில்லை. பெரியவர்களின் சொற்படி கீழ்ப்படிந்து நடந்தாக வேண்டுமென நமது அதிகாரத்தின் கொடுங்கரங்கள் சொடுக்கிற சவுக்குகளின் முதல் வீச்சு, குழந்தைகளைப் பள்ளிக்கனுப்புகையில் சுழல்கிறது.

குழந்தைகளின் சிறகுகள், வாழ்தலின் இன்பத்தை நோக்கியே விரிந்து பறந்து கொண்டிருக்கின்றன. நாமோ ஒருபோதும் அவர்களின் பறத்தலைப் புரிந்துகொள்வது கிடையாது. புரிந்துகொள்ளா விட்டால் கூடப் பரவாயில்லை; பள்ளி, வீடு, சமூகம் - என எல்லா இடங்களிலும் அவர்களை ஒடுக்கி, சிறகுகளை முறித்து முடமாக்குவதை மட்டுமே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

இது குறித்து தனது பட்டறிவினாலும், பல நூல்களில் இருந்து பெற்ற படிப்பறிவினாலும் அறிந்த சிந்தனைகளை அழகும் - தெளிவுமிக்க நடையில் கருத்தாழமிக்க முறையில் தொகுத்துத் தந்திருக்கிறார் உதயசங்கர். கையிலெடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு விறுவிறுப்பான எழுத்தாக்கம் அவருடையது.

குழந்தைகளின் உலகில் ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதாய், பரவசம் மிகுந்ததாய் நகர்கிறது. நிசப்தமும், இருளும் ஆட்சி செய்த தாயின் கருவறையிலிருந்து வெளியேறிய பின், வெளிச்சமும் - சத்தமும் நிறைந்த புற உலகிற்குள் ஊடாடத் தொடங்குகிறது குழந்தை. அப்போது அதற்கு ஏற்படும் குழப்பத்தைப் பற்றிய அறிவியல் உண்மைகளை உதயசங்கர் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கொண்டுபோகிறார். தாயின் வயிற்றின் மீது குழந்தையின் தலைப்பக்கத்தை வைத்துவிட்டு விட்டால் அது தானே நகர்ந்து நகர்ந்து சென்று தாயின் மார்புகளைத் தேடி பாலருந்த முற்படும் எனும் எடுத்துக்காட்டு - ஒரு சான்று.

“குழந்தைகளின் உளவியல், புரிந்துகொள்கிற ஆற்றல், கண்டுணரும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம், உணர்வுகளின் வெளிப்பாடு, கற்பனைத் திறன், அனுபவங்களின் சேகரிப்பு, பகுப்பாய்வு - என குழந்தைகளின் உலகத்திற்குள் ஊடாடுகிற ஓர் ஆரோக்கியமான மனப்பாங்கு தேவையாய் இருக்கிறது” (ப.3) என சுருக்கமான ஒரு முன்னோட்டத்தைக் கடந்து நாம் போகப்போக குழந்தைகளின் அற்புத உலகம் நம் மனக்கண்முன் விரிகிறது.

“தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறந்த கணத்திலிருந்தே புதிய கிரகத்திற்குள் அடியெடுத்து வைக்கிற பரவச உணர்வுடன் எல்லாவற்றையும் உற்று நோக்குகிறது...

” என்ற வாக்கியத்தில் (ப.6) தொடங்கி, “உழைப்பின் தீவிரம் அதன் வாழ்வைக் களிகொள்ளச் செய்கிறது. அந்த இன்பமே மீண்டும் மீண்டும் உழைப்பின் மீது குழந்தையை ஈடுபாடும், பெருவிருப்பும் கொள்ளச் செய்கிறது...”என்று முடிகிற வரையிலான பகுதியை வாசித்துப் பாருங்கள், குழந்தை எனும் அற்புதத்தை, அசைவியக்கத்தை, புத்தம் புது மலரை, ஒரு கண்டுபிடிப்பாளரை மிக அழகான ஓர் உயிரோவியமாய்த் தீட்டிக் காட்டுகிற உதயசங்கரின் எழுத்துத் தூரிகையை நீங்கள் கொண்டாடுவீர்கள்.

“காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் முழுமை யான அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்கிற குழந்தை தன் மீது அன்பு கொண்டவர்களைப் போற்று கிறது. ஒவ்வொரு நாளையும் புதிது புதிதாய் வாழ்ந்து தன் ஒவ்வொரு செய்கையையும் தானே வியக்கிறது. அதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அந்தச் செய்கையை இன்னும் முதிர் வடையாத தன் ஞாபகக் கிடங்கில் சேர்க்கிறது...” என்று உயிர்க்களை ததும்பும் சொல்லோவியம் தீட்டியிருக்கிறார் உதயசங்கர்.

பூமியின் வண்ணக்கனவுகளை ஏந்தி வளரும் குழந்தைமையின் ரகசியத்தைக் குட்டி உலகத்தின் குட்டி மனிதர்களின் அதிசய மனத்தின் வழி அறி முகம் செய்கிறார். கருகும் கனவுச் சிறகுகளின்பால் கவலை கொள்கிறார். குழந்தைகளின் மீது துளியும் கவனம் செலுத்தாமல், அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலேயே கவனம் செலுத்திய முந்தைய தலைமுறை ஒரு துருவ முனையில் நிற்கிறது.

நேர் எதிர் முனையிலோ, குழந்தை கேட்கிற எந்த ஒன்றையும் மறுக்காமல், அது நல்லதா - கெட்டதா என்று கூட ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கும் இன்றைய சமகாலப் பெற்றோர் இருக்கிறார்கள். இவ்விரு தரப்பினருக்குமாகச் சேர்த்தது, ‘மறுக்கும் பக்குவம்’, ‘மறுப்பதற்கான உரிமை’ - ஆகிய இரு அத்தியாயங்களில்அறிவுரைக்கிறார்.

‘விளையாட்டே கதியென்று குழந்தைகள் கிடக்கிறார்களே...?’ என அங்கலாய்ப்பவர்களின் அறிவுக் கண்களைத் திறக்க உதவுகிறது, ‘விளை யாட்டின் உளவியல்’ பகுதி. அப்புறம், குழந்தை களென்றால் கதைகள் இல்லாமலா?

குழந்தை களின் ஆளுமை வளர்ச்சியில் கதைகள் சொல் வதும், கேட்பதும் எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பதைக் ‘கதையின் ஆதி பருவம்’, ‘கதை என்றால் என்ன’, ‘குழந்தைகளும் கதைகளும்’ ஆகிய மூன்று அத்தியாயங்கள் அழுத்த மாகப் பதிவு செய்திருக்கின்றன.

பிஞ்சுக் குழந்தைகளின் உடல்நலம் குறித்து பெற்றோர்கள் இப்போது எடுத்துக் கொள்ளும் கவலைகள் மிக அதிகம். மூக்கில் இலேசாக சளி ஒழுகியதுமே பெற்றோர் அடையும் பதற்றம், டாக்டர்களிடம் ஓடும் வேகம், அவர்கள் பரிந்துரைக்கும் கண்ட கண்ட டெஸ்டுகள் - மருந்துகள் - அவற்றின் பின்னணியில் சூத்திரக் கயிறுகளால் ஆட்டிப் படைக்கும் முதலாளித்துவச் சந்தைப் பொருளாதார பெருவணிக நிறுவனங்கள் - இவை எல்லாவற்றுக்கும் மூலாதாரமாக அமையும்

சமூக அமைப்பு குறித்த அபாயகரமான உண்மைகளை அம்பலப்படுத்துகிறார்; ‘ஆரோக்கியமும் - மருத்துவமும்’, ‘உடலின் சொற்கள்’ - ஆகிய இரு அத்தியாயங்களின் மூலம் நமக்கு அவ்விளக்கம் கிடைக்கிறது.

‘அனைவருக்கும் உரிமையுடையது கல்வி’ என அரசாங்க அமைப்புகள் பிரகடனம் செய்கின்றன. ஆனால், எதார்த்தத்தில், ஏழை - எளியோரும், பின்தங்கிய மக்களும் - குறிப்பாக பழங்குடியின மக்கள் - அவ்வளவு எளிதில் தரமான கல்வியைப் பெற்றுவிட முடிகிறதா என்ன?

ஒருபுறம் ‘கல்வி உரிமைச் சட்டம்’ வருகிறது. மறுபுறம், ஆண்டுக் காண்டு பட்ஜெட்டில் கல்விக்கான நிதிஒதுக்கீடு குறைந்துகொண்டே போகிறது. தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் (L-P-G) எனும் முழக்கங்கள் உலகையே உலுக்கி நிலைகுலைத்துவிட்டன.

யாருக்கு இவை பயன்படுகின்றன? உண்மையில், கல்வியை அனைவருக்குமானதாக மாற்றுவதற் காகவா இந்த முழக்கங்கள்? கல்வி மட்டுமின்றி. அத்தியாவசியத் தேவைகள் அனைத்திற்கும் முன்னுரிமை பெறுவோர் வசதி படைத்தவர்கள் மட்டுமே என்பது நிதர்சனமாகிவிட்டது.

இந்த உண்மையை இப்போதுதான் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்-பெற் றோர்கள். இதைப் பேசுகிறது- ‘விலகிக் கொண் டிருக்கும் மாயத்திரை’ அத்தியாயம்.

குழந்தைகள்-கேள்விகள் இரண்டும் இணை பிரியாதவை. கேள்விகள் எழுப்பாத குழந்தைகள் உண்டா...? இல்லை, “வாய மூடிட்டு அமைதியா இரு, தொண தொணன்னு எப்பப்பாரு கேள்வி கேக்கறதே வேலையாப் போச்சு....” என அதட்டி குழந்தைகளின் ஆர்வமிக்க மனங்களில் கல்லைத் தூக்கிப் போடாத பெற்றோர்தான் உண்டா?

ஆனால். சமீபகால உலகம் ‘கேள்விகளில்லா உலக’மாகிவிட்டது. அறிவுத் தாகம் நிறைந்த குழந்தைகளின் கேள்விச் சிறகுகளை முறித்துப் போட்டு முடமாக்கி விட்டோம். ஏன்?

ஏனெனில். பெரியவர்கள் கேள்வி கேட்பதையே அடியோடு மறந்துபோய் மரத்துப்போய் நீண்ட காலமாகிவிட்டது. இரண்டாவதாக, குழந்தை களுடைய கேள்விகட்குச் சரியான பதில்கள் அவர் களுக்குத் தெரிந்திருப்பதில்லை. தெரியாது என வெளிப்படையாகத் தமது அறியாமையை ஒப்புக் கொள்வதற்கும் அவர்களின் வறட்டுக் கவுரவம் தடுக்கும்.

குழந்தைகளின் கேள்விக் கணைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி, அவர்களைத் திட்டி வாயை மூடச் செய்வதுதான் என்பதாகி விடுகிறது. பள்ளிகளிலோ இன்னும் மோசம். நர்சரிப் பள்ளி யிலேயே குழந்தைகளின் உத்வேகமிக்க கேள்வி களும், ஆர்வத் துடிப்புகளும் முடக்கப்பட்டு முனை முறிந்து போகின்றன. ஆசிரியர்களிடம் குழந்தைகள் கேள்வி கேட்க முடியுமா?

 ஸ்கேலால் அடித்தாலும், வெய்யிலில் - மணலில் முட்டிக்கால் போட்டு நிற்கச் செய்தாலும் -என்ன செய்தாலும், பெற்றோரே எதுவும் கேள்வி கேட்க இயலாத ஊமைகளாகி விடும்போது, குழந்தைகள்-பாவம் என்ன செய்துவிட முடியும்?

இப்படியெல்லாம் மனதளவில் பாதிப்புகட்கு ஆளாகும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகையில், இந்த சமூகத் திடம் இருந்து தங்களுக்கு என்ன கிடைத்ததோ அதைத்தானே அவர்கள் திருப்பி இச்சமூகத்திற்குக் கொடுப்பார்கள்? ‘கேள்விகளில்லா உலகம்’ பகுதியில் மேற்கண்ட கேள்விச் சிந்தனைகளை முன் வைக்கிறார் உதயசங்கர்.

‘ஆயிஷா’, கிஜூபாய் பகேகே எழுதிய ‘பகல் கனவு’, டோட்டோசான்: சன்னலில் ஒரு சிறுமி’, ‘எங்களை ஏன் டீச்சர் ஃபெயிலாக்கினீங்க?’ - என்ற நான்கு நூல்களும் இன்றைய கல்விமுறை குறித்தும். பள்ளிக்கூடங்களின் மந்தைத்தனமான கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறவை.

மாற்றுக் கல்விமுறைகளைக் கையாண்டு வெற்றியடைந்த ஆசிரியர்களையும். அவர்களுடைய முயற்சிகளையும் பற்றி கனவுகளை விதைப்பவை. இந்த நூல்களை முன் வைத்து-நான்கு அத்தியாங் களில் ஆசிரியர்கள் -பெற்றோர்களின் மனசாட்சி களை உலுக்கும் வகையில் உதயசங்கர் கேள்வி களை எழுப்பி விவாதித்திருக்கிறார்.

இறுதி அத்தியாயம் - ‘எதிர்காலத்தின் சொந்தக் காரர்கள்’ - குழந்தைகள்தான் வரப் போகிற நாட்களுக்கு நிஜமான உரிமையாளர்களாக இருக்கப் போகிறவர்கள் என்பதை நிறுவுகிறது.

‘இன்றைய நிலையில், ஜனநாயக உணர் வுள்ளோர், கல்வியாளர்கள், இடதுசாரிகள், சமூக அக்கறையுள்ள அறிவுஜீவிகள் ஆகியோரின் தலையீடு மிகவும் அவசியம். குழந்தைகளின் உளவியல் குறித்த ஆராய்ச்சிகள், குழந்தைகளின் படைப்பூக்கத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டங்கள், குழந்தைகளுக்கான கல்வி முறையில் மாற்றங்கள்....

என செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். பாதையும் நெடிது.

நாம் மிகச் சில அடிகளே எடுத்து வைத் திருக்கிறோம்’ - என்று நிறைவாகக் குறிப்பிட்டு, போக வேண்டிய தொலைவைக் கவனப்படுத்தி யிருக்கிறார் உதயசங்கர்.

‘குழந்தைகளின் அற்புத உலகில்’ நூலை மிக அழகிய வசீகரமான அட்டைப்படங்களுடனும். நேர்த்தியான வடிவமைப்புடனும் தயாரித்துத் தந்திருக்கிற என்.சி.பி.ஹெச் நிறுவனம் பாராட்டுக் குரியது.

ஒரு புனைவு நூலுக்குரிய கவித்துவ நடையில், ஓர் ஆய்வுநூலுக்கே உரித்தான அறிவியல் உண்மைகள் நிரம்பிய உள்ளடக்கத்தைப் பதிவு செய்வதென்பது மிகவும் சிரமமான காரியம்.

 உதயசங்கர் அதில் வெற்றியடைந்திருக்கிறார். கையிலெடுத்தால், வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அவ்வளவு சுவையும், பயனும் நிரம்பிய நூலிது.

 

Pin It