புதுமலர் இதழ் சார்பாக ஏற்கெனவே வள்ளலார் சிறப்பிதழ், கவிஞர் தமிழ் ஒளி சிறப்பிதழ் வெளியிட்டோம். இந்த இரண்டு ஆவணச் சிறப்பிதழ்களும் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்பொழுது பாவேந்தர் பிறந்த நாளும், நினைவு நாளும் வரக்கூடிய ஏப்ரலில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறித்த ஆவணச் சிறப்பிதழ் வெளிவருகிறது. இவ்விதழில் வழக்கம்போல் மிகச் சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் வெளி வந்துள்ளன.
பாரதிதாசனை நினைவுகூரும் இம்மாதத்தில் இரண்டு கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறோம். பாரதிதாசன் அவர்களின் அனைத்துப் படைப்புக்களையும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து அரசே மலிவு விலையில் வெளியிட வேண்டும்.
அடுத்து மூடநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த பகுத்தறிவுப் பாவலனாகத் திகழ்ந்தவர் பாரதிதாசன் அவர்கள். கவிஞரைப் போலவே மகராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி வந்தவர் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள். அது மட்டுமல்லாமல், மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டச் சிறப்புச் சட்டம் இயற்றக் கோரிச் சமரசமில்லாமல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தார் அவர். மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்திப் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புரை செய்ததால் எரிச்சலுற்ற இந்து சநாதனவாதிகள் அவரைச் சுட்டுப் படுகொலை செய்தனர். இக்கொடிய செயலைக் கண்டித்து டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். எனவே மிகுந்த அறச்சீற்றத்தோடு போராடும் மக்களை அமைதிப்படுத்த மஹராஷ்டிர அரசு. நரேந்திர தபோல்கர் விரும்பிய மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
அதே போல் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கோட்பாடுகளை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவாக மகராஷ்டிராவைப் போல் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும். இவ்விரு கோரிக்கைகளையும் நிறை வேற்றுவதே பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இதற்கான அரசியல் அழுத்தத்தைச் சனநாயக சக்திகள் தமிழ்நாடு அரசுக்குத் தந்து விரைவில் மூடநம்பிக்கையற்ற தமிழ்நாட்டை உருவாக்கத் துணை நிற்க வேண்டும்.
- புதுமலர் ஆசிரியர் குழு