இப்போது தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்ச்சி பற்றிப் படர்ந்து வளர்ந்து வருகிறது. இந்நேரத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஆரியத்தை, அதன் அதிகாரத்தை எதிர்த்து நின்று சீற வேண்டிய காலத்தில் சிலர், திராவிடம்தான் தமிழருக்கு எதிரானது என்கின்றனர். இது உண்மையானதல்ல என்பதைக் கடந்த கால மனித சமூக வரலாறு நமக்குக் காட்டுகிறது. பல்லாயிரமாண்டு எதிரியான ஆரியம் தனது மொழியான சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்தியா முழுவதும் வாழ்ந்த நமது மூதாதையரான நாகர்களை ஒழித்து, நமது தமிழ் பேசும் நிலங்கள் அனைத்தும் குறுக்கப்படக் காரணமாக அமைந்தது. இன்றும் அவர்கள் சமஸ்கிருதத்தை அரசியல் அதிகாரம் கொண்டு எஞ்சி இருக்கிற தமிழகத்தையும் சூறையாடப் பார்க்கிறார்கள். இந்நிலையில் முதன்மை எதிரியான ஆரியத்தை விட்டுவிட்டு அதிகாரமற்ற, இன்றைய திரியாத திராவிடம்தான் நமக்குப் பகை என்பது எதிரியை விட்டுவிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
திராவிடம் என்பது தமிழே - தமிழை இந்தியா முழுவதும் பேசியவர்கள் நாகர்கள். திராவிடம் என்பது இனப் பெயரல்ல; மொழியைக் குறிக்கும் சொல் என்பதை அண்ணல் அம்பேத்கர் தன் ஆய்வின்வழி விளக்குவதைக் கீழே காண்போம்:
"இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தென்னிந்தியாவின் திராவிடர்களும் வடஇந்தியாவின் அசுரர்களும் அல்லது நாகர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி,
'திராவிடர்' என்பது ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும்.
'தமிழ்' எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல். 'தமிழ்' என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது தமிதா (பி.யூ.சி. கண்டாடர், இந்தியாவின் பண்டைய வரலாறு பற்றிய விரிவுரைகள் (1919), பக்கம் 60) என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமிழராகி, முடிவில் திராவிடர் என்று உருத்திரிந்தது. திராவிடர் என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி, தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.
மாறாக, அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதுமான மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும் (மேலது நூல், பக்கம் 25-28). உண்மையில், இந்தியா முழுவதிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிலும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு, தென்னிந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வடஇந்தியாவிலிருந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதிலாகச் சமஸ்கிருதத்தை வரித்துக்கொண்டனர். ஆனால், தென்னிந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணி வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். திராவிடர் என்ற சொல்லை வடஇந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென்னிந்திய நாகர்களைப் பொறுத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டிருந்ததால், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்; அதுமட்டுமின்றி, வடஇந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டதன் காரணமாகத் திராவிட மொழி மிக அவசியமாயிற்று. தென்னிந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்பட்டனர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமுமாகும்.
எனவே, தென்னிந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் விசேஷமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது, நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது கலாச்சாரப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த பெயர். திராவிடர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால், இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால் இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தாம் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள்." (ஆ.க. பக்கம் 537-538, அம்பேத்கர் இன்றும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் நூல், விடியல் பதிப்பக வெளியீடு).
தமிழ் என்பதே திராவிடமாகத் திரிந்துள்ளது; திராவிடம் என்பது ஒரு இனமல்ல, திராவிட மொழி மொழியைக் குறிக்கும் ஒரு சொல் என்று ஆய்வாளர்களின் மேற்கோள்களைக் காட்டி அம்பேத்கர் இதை விளக்கியுள்ளார். மேலும் இந்தியா முழுவதும் வாழ்ந்த மக்கள் நாகர்கள் என்பவரே; அவர்கள் பேசிய மொழி தமிழே என்றும் கூறுகிறார். வடஇந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் ஆரியர்களின் சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் மொழியை இழந்தனர்; தெற்கே தமிழைக் காப்பாற்றிக்கொண்டனர் என்று ஆற்றுப்படுத்துகிறார். எவ்வழிப் பார்ப்பினும் தமிழர்கள் தங்கள் சிறப்பை இழக்கவும் தாய் மண்ணை இழக்கவும் ஆரியர்களே காரணமாய் இருந்துள்ளனர். இது வரலாற்றின் பெரும் துயரமாக இன்னும் நீடிக்கிறது. திராவிடர் என்ற சொல்லைப் பகையாகக் காட்டி, ஆரியரின் வரலாற்று ஆதிக்கத்தையும் தமிழின அழிப்பையும் மறைப்பது தமிழர்களுக்குக் கேடாய் அமையும் என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும். அன்றும் இன்றும் என்றும் ஆரியமே தமிழரின் பகை என்பதை அழுத்தமாகச் சொல்வோம். இதைத் தமிழர்கள் காலத்தே உணர்ந்து கடமையாற்றுவோம்.
தமிழர்க்குப் பகை ஆரியமே என்பதை உணர்வோம். ஆரியம் வென்று தமிழ், தமிழ்நாடு காக்க ஒன்றிணைவோம்! இன்றைய திராவிடம் என்ற அரசியல் திசையைத் தமிழர்கள் திறனாய்வோம்; அதன் வரலாற்றுச் சார்பைப் புரிந்துகொள்வோம்.
இது பல்லாண்டுகால வரலாற்றுப் பெரும்போர். தமிழர்களே, ஆரியத்தை உணர்வீர்! விழிப்பு பெறுவீர்! ஒன்றிணைவீர்!
'தமிழ்த்தேசியம்' என்கிற இன எழுச்சிக்கு ஆரியமே முதன்மைப் பகை என்பதை மடைமாற்ற, ஆரியர்களின் கைக்கூலிகளாகச் சிலர் இன்று நீட்டி முழங்குகின்றனர். தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மைப் பகை ஆரியம் என்பதைத் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்வோம்... தமிழ்த்தேசியராய் வெல்வோம்.
- காஞ்சி அமுதன்