காலத்தோடு சேர்ந்து எல்லாம்தான் மாறிப் போய் விட்டது. அன்பு, உறவு, பாசம், நட்பு எல்லாம்தான்.

தன் அம்மா தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அமலா ஃபோன் செய்தாள்.

icu 400அப்போது, வசீகரன் ஒரு பட வேலையில் டிஸ்கஷனில் இருந்தான். அடுத்த மாதம் ஷூட்டிங் செல்ல வேண்டும். அவன் தான் அந்தத் திரைப்படத்தின் Co-Director. மே மாதத்தில் படம் துவங்கியாக வேண்டும். இந்த ஏப்ரலில் இன்னும் இருபது நாள்தான் பாக்கி இருக்கிறது.

இந்த நெருக்கடியான சூழலில் தன் பொறுப்பு எத்தனை உத்திரவாதம் நிறைந்தது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தன் இக்கட்டான நிலைமையை இயக்குநரிடம் எப்படிச் சொல்வது? வரமுடியாத சூழல் என்று மனைவியிடமும் சொல்ல முடியாது. அவன் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தான். உதாரணம் பழையதானாலும் அதுதான் பொருத்தமாக இருந்தது.

வசீகரனுக்கு எல்லாம் புதிது புதிதாக இருக்க வேண்டும். பழைய சிந்தனைகள் மரபுகள் என்று எதுவும் பிடிக்காது. பிறந்த எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே வேண்டும். அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பின் ஏன் சாவு என்றால் மனிதர்கள் இப்படி அலட்டிக் கொள்கிறார்கள். நிரந்தரப் பிரிவு என்பதாலா? சட்டென்று நினைவு தடம் புரண்டது.

வீட்டிற்குப் போய் அமலாவைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சி மூன்று மாதத்துக்கு மேலாகிவிட்டது. அவளை நினைத்தவுடன் அவள் சூடான மூச்சுக்காற்றை அவனால் உணரமுடிந்தது. போய் தான் ஆக வேண்டும் என்று உடனடியாக முடிவெடுத்தான்.

அமலாவின் அம்மா பவித்ராவுக்கு 60 வயது இருக்கும். யாருக்கும் கெடுதல் நினைக்காதவர். ரொம்பவும் நல்லவர். அவர்கள் கொடுத்த ஒரு கிரவுண்டு நிலத்தில்தான் அவனும் அமலாவும் தங்களுக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டார்கள். இல்லாவிட்டால் தனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வீட்டிற்கு வாடகை கொடுத்து அவனால் காலத்தை ஓட்ட முடிந்திருக்காது.

அன்று, அதிகாலையிலேயே எழுந்து, முடிக்க வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு முடித்து விட்டு, ஊருக்குச் செல்ல இயக்குநரிடம் பர்மிஷன் கேட்பதற்காகக் காத்திருந்தான் வசீகரன்.

இயக்குநருக்கு வீடு அலுவலகம் ரெண்டும் ஒன்றுதான். விசாலமான அந்த பில்டிங்கில் அவருடைய அலுவலக அறையும் பெட்ரூமும் தனித்தனியே இருந்தன. அவனும் அலுவலகத்தின் உதவி இயக்குநர்களுக்கான அறையில் தான் தங்கியிருந்தான். அன்று, புதிய படத்திற்காக பல புதிய உதவி இயக்குநர்களை, இயக்குநர் நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது.

வசீகரன் நேர்காணலுக்கு வந்திருந்தவர்களிடம் அவர்கள் Bio-data க்களை வாங்கிக் கொண்டு, அவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டான். நேர்காணலுக்கு வந்திருந்தவர்களில் நேர்த்தியாக இரண்டு மூன்று Viscom படித்த பெண்களும் இருந்தார்கள்.

சரியாகப் பத்து மணிக்கு இயக்குநர் தன் அலுவலக அறைக்கு வந்தார். நேரந்தவறாமையை முறைப்படி கடைபிடிக்கும் வழக்கத்தைக் கூட வசீகரன் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டான்.

இயக்குநர் வந்ததும் இன்டர்வியூ துவங்கியது. அது முடிவதற்கு மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. தனக்குக் கிடைத்த சிறிய கேப்பில் இயக்குநரிடம் தன் நிலைமையைச் சொன்னான்.

அவர் மனிதஅபிமானி. உடனடியாக அவனுக்குப் பணம் கொடுத்துக் கிளம்பச் சொன்னார். மாலை 7 மணிப் பேருந்தில் தான் இடம் இருந்தது.

Red Busஇல் Sleeper டிக்கெட் போட்டுக் கொடுத்தார் உதவி இயக்குநர் பரத். ஓட்டுநர் கிருஷ்ணா கோயம்பேடு பேருந்து நிலையம் வரை வந்து வசீகரனை கோவைக்கு பஸ் ஏற்றிவிட்டார்.

நெருக்கடியான சூழலில் இயக்குநரைத் தவிக்க விட்டு வந்தது வசீகரனின் மனதை உறுத்தியது. இன்னொன்று குடும்பப் பொறுப்பு. மனைவியின் அம்மாவின் கையறு நிலை. இந்த இரண்டு பொறுப்புக்களும் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இதையெல்லாம் தாண்டி மனதின் ஒரு மூலையில் மூன்று மாதங்களுக்குப் பின் அமலாவைப் பார்க்க அப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்கிற ஆவல் வேறு. அவன் குற்ற உணர்வை மேலும் கிளறிவிட்டது.

அமலாவின் அம்மாவுக்கு ப்ரெயின் ஹெமரேஜ். இரத்தம் மூளையில் கட்டியாகி விட்டிருந்தது. மருத்துவமனையில் ICU வில் வைத்துப் பார்க்கலாம், ஆனால் காப்பாற்ற முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்று டாக்டர் கூறி விடவே அம்மாவை வீட்டிற்குத் திருப்பிக் கொண்டுவந்து விட்டார்கள்.

பாதி உயிராக பெட்டில் அமலாவின் அம்மாவைப் பார்த்த போது Flash Cut போல் அவருடன் பகிர்ந்து கொண்ட பல நினைவலைகள் வசீகரனின் மனத் திரையில் வந்து போயின.

அமலா அவனைப் பார்த்ததும் வாய் பொத்தி அழுதாள்.

வீடு முழுவதும் உறவினர்கள். அவரவருக்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அமலாவிடம் பேசுவதற்குக் கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆனால், வந்திருந்த வாரிசுகள், அம்மாவின் கட்டிலைச் சுற்றி நாற்காலி போட்டு அமர்ந்து புளு சட்டடை மாறனைப் போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் அம்மாவின் வாழ்க்கையை விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். விமர்சித்தவர்கள் எவரும், தங்களை சுய விமர்சனம் செய்து கொண்டதாகத் தெரியவில்லை.

அப்பாவின் மறைவுக்கும் அப்படித்தான். அவர் மயக்கமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அவரை அம்மா உட்பட எல்லோரும் விமர்சித்துக் கொண்டுதானிருந்தார்கள்.

அவர் மயக்க நிலையில் இருந்தாலும் அவர்கள் தன்னைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்டுக் கொண்டிருந்தால் அவர் மனசு என்ன பாடுபடும்.? அன்பு, பாசம், உறவு என்பதெல்லாம் வெறும் பணத்திலும், சொத்திலும் தானா? பாவம் அந்த உயிர் எப்படித் துடித்துப் போகும்?

அறிவியல் கூற்றுப்படி இறந்ததற்குப் பின்னரும் கூட நான்குநைந்து நிமிடங்கள் நம்மைச் சுற்றி நடப்பதைக் கேட்க முடியுமாம்! அப்படியென்றால் இவர்கள் விமர்சனம் அவர்களை என்ன பாடு படுத்திவிடும்? அம்மாவுக்கு ப்ரெயின் ஹெமரேஜ் என்பதால் கேட்பதற்கு வாய்ப்பில்லை என்பதில் ஓரளவு மனசு சமாதானமடைந்திருந்தது அமலாவுக்கு. என்றாலும், அவளை வேறு எதுவோ தீவிரமாக அலட்டிக் கொண்டிருந்தது.

அமலா அம்மாவின் இரண்டாவது மகள். மூன்றாவது மகள் இன்னும் வந்து சேரவில்லை. பூனாவில் இருந்த அவள் விமானத்தில் தன் கணவனுடனும், மகனுடனும் வந்து கொண்டிருந்தாள்.

அமலா கும்பலின் இடையில் இருந்தாலும் அடிக்கடி தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு அழுதாள். ஏதோ ஒரு விஷயம் அவளை அதிகமாக பாதித்திருந்தது. அவள் வசீகரனிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. குற்ற உணர்வில் தவிப்பவள் போலத் தெரிந்தாள். அம்மாவின் இந்த நிலைக்கும் அவளுக்கும் ஏதோ ஒருவித தொடர்பு இருக்க வேண்டும் எனத் தோன்றியது அவள் நடவடிக்கை.

திடீரென்று பீறிட்டு வெளிப்பட்ட அழுகுரல், மூன்றாமவள் வந்து விட்டாள் என்பதை அறிவித்தது!

அமலா தன் தங்கையை ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் வந்த மூன்றாமவளும் சமாதானமடைந்தாள்.

மூத்தவன் தன் விமர்சனத்தை மீண்டும் முன் வைத்தான். பெண்களுக்கு நல்ல இடத்தையெல்லாம் பிரித்து எழுதி வைத்து விட்டு அம்மா தனக்கு மட்டும் குளத்தின் பாகத்தை தந்து தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புலம்பினான். அவன் வாயிலிருந்து லேசான சாராய வாடை வெளிப்பட்டதால் யாரும் அவனிடம் பேசிக் கொடுக்கவில்லை. சொத்து விஷயத்தில் எல்லோருக்குமே ஒருவித அதிருப்தியிருந்தது.

அமலா மோர் கொண்டு வந்து கொடுத்தபோது அவளை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டு வாங்கிக் குடித்தான் அவள் சகோதரன்.

எல்லோருக்கும் வேண்டியது அம்மாவின் சொத்து, பணம் மற்றும் அம்மாவின் நகைகள். அமலாவைத் தவிர எல்லோருடைய உரையாடல்களிலும் அது மட்டும் தான் வெளிப்பட்டது.

அன்று இரவு எல்லோரும் உறங்குவதற்காக செட்டில் ஆகி நீண்ட நேரம் ஆன பின்னும் அமலா, தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தபடியே வெறுமையாய் அமர்ந்திருந்தாள்.

அம்மாவுக்கு இப்போதும் ஹார்ட் பீட் நார்மலாகத்தான் இருந்தது. இந்த நிலையில் இது இப்படியே எவ்வளவு நாள் நீளும் எனக் கணிக்க முடியவில்லை.

மாலையில் அம்மாவைப் பரிசோதித்த குடும்ப டாக்டர் மிதுன், மீறி போனால் இரண்டு நாள் என கெடு விதித்துச் சென்றிருந்ததில் சகலருக்கும் சற்று ஆசுவாசம் தோன்றியிருந்தது.

அமலா, இடையிடையே எழுந்து சென்று அம்மாவைத் தொட்டுப் பார்த்து விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

இரவு விளக்கின் ஒளியில் அமலா தங்கம் போல ஜொலித்தாள். அமலாவைப் பார்க்காமல் மூன்று மாதங்களாய் தேக்கி வைத்திருந்த உணர்ச்சி வசீகரனை அலைக்கழித்தது.

அமலா என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதைப் பற்றி எதையும் சிந்திக்காமலே ஆவேசமாய் அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்தான். அவள் ஒரு ஜடம் போல அவன் ஆசைக்கு அடங்கிப் போனாள்.

அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கூட வசீகரனின் காமத்தீயில் ஆவியாகிப் போனது.

சிறிது நேரத்தில் வசீகரனின் உறங்கிப் போனான். அமலா மட்டும் சுழலும் ஃபேனை வெறுமையாய் பார்த்தபடிக் கிடந்தாள்.

வசீகரன் கூடப் பெண்ணியம் பேசுகிற ஆள்தான். ஆனால், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை அவனிடம் எப்போதுமே மேலோங்கியிருக்கும். மற்ற இயக்குநர்களின் படங்களைக் கூடப் பார்க்க மாட்டான். அப்படியே பார்த்தாலும் அது சிறப்பாயிருந்தது என அவன் மனம் ஒத்துக் கொள்ளாது. எப்போதும் தான் எழுதிப் படமாக்கப்படாமலிருக்கும் படைப்புகள் பற்றியே எல்லோரிடமும் பெருமிதமாகப் பேசிப் புளகாங்கிதமடைவான்.

அமலா கூட நன்றாக எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவள்தான். நிறைய படிப்பவளும் கூட. அவள் சிறுகதைகள், கவிதைகள் அவ்வப்போது சிறு பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வசீகரன் அபூர்வமாய் படித்தாலும், ஒரு முறை கூட அவளைப் பாராட்டியதே இல்லை. நண்பர்களிடம் அவளை அறிமுகப்படுத்தும் போது கூட அவளை ஹவுஸ் வைஃப் என்று மட்டும் தான் குறிப்பிடுவான். அவனிடம் தான் எழுதிய கதைகளைச் சொல்லும் போது கூட அவள் சொல்லும் ஐடியாக்களை ஏற்றுக் கொள்ள அவன் ஈகோ அவனை அனுமதிக்காது.

ஆனால், அமலா எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை! எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தாள்.

கடந்த மூன்று மாதமாய் தான் அதற்கு ஒரு வடிகால் கிடைத்தது! அவள் முகநூலில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் ஓவியா என்கிற புனைப் பெயரில் தன் கவிதைகளை வெளியிட்டாள். அதற்கு பல நல்ல கமெண்ட்ஸ்களும் கிடைத்தன. நிறைய நண்பர்களும் கிடைத்தார்கள். அது அவளுக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது.

சமீபகாலமாய் கவினிடமிருந்து அமலாவுக்கு அவள் கவிதைகளை மிக நுட்பமாக உள்வாங்கிய கமெண்ட்கள் வந்தன. கவினின் கவிதைகளை அணுகும் விதமே அவள் மனதைத் தொட்டது. கவினின் ரசனை இதயத்தை மயிலிறகால் வருடிவிட்டது போலிருந்தது. கவினிடம் நிறைய உரையாட வேண்டும் போல இருந்தது.

முகநூல் மெசஞ்சரில் பேச ஆரம்பித்தாள். கவினைப் பற்றிய எந்தத் தகவலையும் அவள் தெரிந்து கொள்ள முற்படவில்லை. கவினும் தான் யார் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. வெளிப்படுத்திக் கொண்ட பெயர் முதல் புகைப்படம் வரை எல்லாமே ஃபேக் (Fake). கவினும் அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்கள் முகநூல் உரையாடல் இரவு வெகுநேரம் வரை நீண்டது.

ஒருவர் மனதை நெருங்க பெரிய அளவு கால இடைவெளி ஒன்றும் தேவையில்லை சில மணி நேரங்களே போதும் என்று அமலாவுக்குத் தோன்றியது. கணவன் மனைவி, குடும்ப உறவுகள், சுற்றம் என்பதெல்லாம் காதலுக்கு ஒரு தடையாய் இருக்க முடியாது என்பதைக் காதல்தான் அவளுக்கு உணர்த்தியது.

வழக்கத்திற்கு மாறாக தன் மகள் அமலா உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் மாறிக் கொண்டிருப்பதையும், இரவு வெகுநேரம் வரை அவள் யாருடனோ ஃபோனில் Chating நடத்திக் கொண்டிருப்பதையும் அவள் அம்மா பவித்ரா கவனித்துக் கொண்டிருந்தாள். மகள் யாரிடமோ காதல் வயப்பட்டிருக்கிறாளோ? என்கிற சந்தேகம் அவள் BP யை அடிக்கடி உயர்த்திக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு அமலா தன் மடியில் ஏகாந்தமாய் படுத்திருக்க அம்மா அவள் தலைமுடியைக் கோதியபடியே கேட்டாள்.

நீ யாரையாவது லவ் பண்றியாம்மா?

அமலா அம்மாவின் முதல் கேள்வியிலேயே உறைந்து போனாள்.

நீண்ட நேரம் மௌனமாயிருந்தாள்.

அவள் விழிகள் கண்ணீரால் நிறைந்தன.

'ம்' என்றாள்.

அம்மா உறைந்து போனாள்.

அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

அம்மாவின் டென்ஷன் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கவினிடமிருந்து அமலாவுக்கு ஒரு Call வந்தது.

அமலா குளித்துக் கொண்டிருந்தாள்! அம்மா, அமலாவின் மொபைலைப் பார்த்தாள்.

கவின் Calling என மானிட்டர் காட்டியது. அம்மா ஃபோனை ON செய்து 'ம்' என்று மட்டும் சொன்னாள்.

எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அம்மாவை மயக்கமுற்று விழச் செய்தது.

குளித்துவிட்டு வந்த அமலா, அம்மா மயக்கமாய் விழுந்து கிடந்ததையும் அருகில் தன் மொபைலையும் பார்த்தாள். அவளுக்கு சர்வமும் விளங்கி விட்டது.

பரபரப்போடு phone செய்து ஆம்புலன்ஸை வர வழழைத்தாள். மருத்துவமனையில் அம்மாவை அட்மிட் செய்து விட்டுத் தன் கணவன் வசீகரனுக்கு phone செய்தாள். அவனும் இப்போது வந்து சேர்ந்து விட்டான். இனி தொலைவில் இருந்து வரக் கூடிய உறவினர்கள் என்றும் யாருமில்லை.

டாக்டர் கொடுத்த இரண்டு நாள் கெடு முடிந்த பின்னும் அம்மாவின் இதயம் துடிப்பதை நிறுத்தவில்லை.

கவினிடமிருந்து மீண்டும் phone வந்தது. அவள் எடுத்து மானிட்டரைப் பார்த்தாள். மீண்டும் அந்த இனிய குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. எச்சரித்தது. அச்சுறுத்தியது.

ஃபோன் அதுவாகவே கட் ஆகும் வரை எடுக்காமலிருந்த அமலா, கவினின் பெயரைத் தன் மொபைலில் Block செய்தாள்.

அன்று இரவு அம்மாவுக்கு மூச்சிறைப்பும், ஹார்ட் பீட்டும் அதிகமானது. அடுத்த நாள் காலை வரை அருகே இருந்து அம்மாவைப் பார்த்துக் கொண்டாள் அமலா. சரியாக 4.15 அதிகாலை அம்மா தன் கடைசி மூச்சை நிறுத்தினாள்.

அம்மாவின் உடல் சகல சம்பிரதாயங்களுக்குப் பின் மின் தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள் பலரும் விடைபெற்றுக் கொண்டார்கள். காலம் முன்பு போல் இல்லை. எல்லோரும் நெருப்பின் மீது நடப்பதைப் போல எல்லாவற்றையும் துரிதப்படுத்திக் கிளம்பினார்கள்.

மூன்றாம் நாள் அஸ்தியைக் கடலில் கரைத்து விட்டு வந்ததும், வசீகரன் சென்னை செல்ல சூட்கேஸில் தன் உடைகளை அடிக்கிக் கொண்டிருந்தான். 6.58 க்கு ட்ரைன். அதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருந்தது.

அமலா சூடான காப்பியை எடுத்து வந்தாள். கடந்த மூன்று நாட்களிலும் அவள் மிகவும் வாடிப் போயிருந்தாள். அதிகம் பேசவில்லை.

வசீகரன் காப்பியை வாங்கிக் குடிக்க ஆரம்பித்ததும் அமலா, 'உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்.' என்றாள்.

அவன் குழப்பமாகப் பார்த்தான்.

'என் அம்மா இறந்ததற்கு நான்தான் காரணம்.' என்றாள்.

வசீகரனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

பதட்டத்தோடு 'என்ன சொல்றே?' என்றான்.

அவள் நடந்ததைச் சொன்ன போது அவன் ரத்தம் கொதித்தது.

சிறிது நேரம் எந்த பதிலும் சொல்ல முடியாமல் தன் கோபத்தைக் கட்டுப்ப்படுத்திக் கொண்டு,

'இப்ப நீ என்ன சொல்ல வர்றே?' என்றான்.

அமலா நிதானமாக,

'பெண்ணியம் பேசற உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே. House wife ன்னா என்னான்னு தெரியுமா? சம்பளம் வாங்காத ஒரு கொத்தடிமை. ஒரு அடிமை என்ன கேட்கப் போறா? சுதந்திரம் தான்.'

வசீகரன் அதிர்ச்சியுடன்,

'இதுக்குப் பேர் சுதந்திரமில்லை. அரிப்பு. உன் தான்தோன்றித்தனத்துக்கு நீ கேட்கற லைசென்ஸ்.'

ஒரு படத்தை முழுசாப் பார்க்காமெயே விமர்சிக்கிற ஆள்தானே நீங்க! உங்களுக்கு அப்படித்தான் தெரியும். நான் யார்? எனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்ன வேணும்? எது வேண்டாம்னு தெரியுமா? ஒரு பொண்ணோட உணர்வுகளை மதிக்காத காமம் தெரிஞ்ச உங்களுக்குக் காதல் தெரியுமா? சரி அந்தக் காமமாவது முழுசா தெரியுமா? G Spot ?'

வசீகரன் அதிர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தான்.

'ஸாரி, நான் உங்களை மட்டும் குற்றப்படுத்தலை. நிறைய பேர் அப்படித்தான் இருக்காங்க. ப்ளீஸ், ஒரு நல்ல படம் பண்ண மனித அக உணர்வுகளப் புரிஞ்சிருக்கணும், அவங்க உணர்ச்சிகளைப் புரிஞ்சிருக்கணும். உலக அரசியல் தெரிஞ்சிருக்கணும். உங்க அனுபவமும், அதில் நீங்க கத்துகிட்ட பாடமும் மட்டுமே வாழ்க்கையாயிராது. உலகம் பெருசு.'

வசீகரன் உறைந்து போனான். அவள் அருகில் வந்து அவன் தலையை அன்பாய் கோதிவிட்டு, 'நிச்சயமா நம்ம பிரிவு ஒரு நல்ல படத்த எடுக்க உங்களுக்கு உதவும். All the Best.' என்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அடுத்த வாரத்தில் அவன் பட அலுவலகத்திற்கிடையில் மியூச்சுவல் டைவர்ஸ் கேட்டு அமலா அனுப்பியிருந்த வக்கீல் நோட்டீஸ் வந்தது.

அவன், 'தான் இன்னும் தெரிந்து கொள்ள எவ்வளவோ அனுபவங்கள் காத்திருக்கின்றன.' எனப் புரிந்து கொண்டு அந்த மியூச்சுவல் டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்துப் போட்டான்.

அமலாவின் தீட்சண்யமான முகம் அவன் நினைவில் வந்து போயிற்று.

அமலா தன் மொபைலில் கவினின் நம்பரை un block செய்தாள்.

ஒரு காஃபி ஷாப்பில் மாலை சந்திக்கலாம் என்று கவின் ஃபோன் செய்ய அந்தக் குரலைக் கேட்டதும் கவினை அவளுக்குப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கண்ணாடி முன் நின்று தன் அழகை சற்றே மெருகூட்டிக் கொண்டு ஒரு CAB ஐ Book செய்து கிளம்பினாள்.

பரபரப்பில்லாத அந்த காபி ஷாப்புக்குள் நுழைந்ததும் அவள் பார்வை கவினைத் தேடியது.

இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துப் புன்னகைக்க, அமலா கவினின் எதிரில் வந்து அமர்ந்து அவனோடு கைகுலுக்கிக் கொண்டாள்.

கவினிடமிருந்து மிதந்து வந்த பெண்களுக்கே உரிய அந்த பெர்ஃப்யூம் வாசனையில் தவிர்க்க இயலா வண்ணம் மரணத்தின் நெடியும் கலந்திருந்ததை அமலாவால் உணர முடிந்தது.

- மீ.தே.தமிழரசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.