man against facismஃபாசிச இரவு நீண்டது.

கதவுகள் காரணமின்றி தட்டப்பட்டன.

புத்தகங்கள் குற்றவாளிகளாக இழுத்துச் செல்லப்பட்டன.

சொற்கள் கூட கண்காணிக்கப்பட்டன.

மௌனம் தான் பாதுகாப்பு

என்று நகரம் கற்றுக்கொண்ட காலம்.

அந்த அமைதியின் அடியில் மட்டும்

ஒரு ஒலி தொடர்ந்து இருந்தது

அச்சின் சுழற்சி.

மெதுவானது.

ஆனால் தடுக்க முடியாதது.

மண்ணுக்குள் ஓடும் நீரோட்டம் போல.

அங்கே

ஒரு மனிதர் உழைத்தார்.

புகழ் தேடாமல்.

மேடை ஏறாமல்.

பெயரை முன்வைக்காமல்.

உழைக்கும் வர்க்கத்தின்

ஒரு சாதாரண கை.

அவரது மேசையில்

காகிதம் கிடையாது

வாழ்க்கைகள் கிடந்தன.

கூலி தொழிலாளியின் வியர்வை,

விவசாயியின் பிளந்த கை,

காடுகளின் சுரண்டல்,

சிறைகளின் சுவாசம்

அனைத்தும்

சொற்களாக மாறின.

அந்த சொற்கள்

நூல்களாகத் தைக்கப்பட்டன.

புரட்சிக்காக

எழுத்துகள் கோர்க்கப்பட்டன.

பொட்டலம் கட்ட முடியாத

ஒரு உள் வெப்பம் அவரிடம் இருந்தது.

அது கோபமல்ல.

அது கடமை.

அணையாமல் காக்கப்பட்ட

மக்களின் சிந்தனை.

வழக்குகள் குவிந்தன.

காவல் நிலையங்கள் திறந்தன.

சிறைச்சுவர் நீண்ட நிழல் போட்டது.

அவர் முகத்தில்

சிறு புன்னகை மட்டும்.

பயம் இல்லாததால் அல்ல

வேலை தொடர வேண்டும்

என்று தெரிந்த அமைதி.

ஆழ்கடலில்

அலை பிறக்கிறது

யாரும் பார்க்காமல்.

பிறகு அது கரையை மாற்றுகிறது.

அப்படித்தான்

அவரது செயல்.

கத்தல் இல்லை.

ஆர்ப்பாட்டம் இல்லை.

ஆனால்

தலைமுறைகளை அசைக்கும் பொறுமை.

மார்க்ஸ் எழுதிய கனவுகள்,

லெனின் நடைபாதைகள்,

மாவோவின் அனுபவங்கள்

அவை எல்லாம்

புதிய கைகளில் சேர்ந்தன

அந்த உழைப்பின் வழியே.

அவர்

பாலம் மாதிரி இருந்தார்.

பாலம் தன்னைப் பற்றி பேசாது.

மக்களை மட்டும் கடத்தும்.

வெற்றிலை சிவக்கும் அறம் போல

எளிமையான வாழ்வு.

நேர்மை.

பகிர்வு.

நான் என்பதைக் குறைத்து

நாம் என்பதைக் பெருக்கிய மனசு.

ஒரு நாள்

அவர் நின்றார்.

ஆனால்

அச்சு நின்றதா?

நூல்கள் நின்றதா?

கேள்விகள் நின்றதா?

இல்லை.

இப்போது

ஒவ்வொரு திறக்கும் புத்தகத்திலும்

அவரது உழைப்பு இருக்கிறது.

ஒவ்வொரு விழிக்கும் மனதிலும்

அவரது தடம் இருக்கிறது.

அவர்

ஒரு தனி உருவம் அல்ல.

ஒரு வரலாற்றுத் தேவை.

ஒரு வர்க்கத்தின் கடமை.

இடைவிடாத முயற்சியின் வடிவம்.

கடல் வற்றாது.

நீரோட்டம் நிற்காது.

உழைக்கும் மக்கள் மறையாது.

அவர்கள் இருக்கும் வரை

அவரது பணி தொடரும்.

அமைதியாக.

ஆழமாக.

நீண்ட மூச்சாக.

அறிவொளி

உழைக்கும் வர்க்கத்தின்

அணையாத நினைவுச் சுவாசம்.

- ப.தமிழ் நேயன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.