குருதியும், சதையும் கொண்ட உயிரினங்கள் தன்னுயிர் நீத்து சடலமாக மாறிய பின்னரும் அந்த உடலத்தை உண்டு உயிர் வாழும் ஒட்டுண்ணிகளில் அதிவீரிய நச்சு வகையைச் சார்ந்ததுதான் ஹிந்துத்வ பாஸிஸம். நம் தாயகத்தில் மதவழி சிறுபான்மையினரை வெற்றிகரமாக கையாண்ட ஹிந்துத்வ பாஸிஸம் தனது குருதிக்காவின் கொடிய கரங்களை எல்லை தாண்டியும் நீட்டுகிறது.

Nedumaran30 ஆண்டு கால இனப்போரில் அடிபட்டு சிக்கி சீரழிந்து குற்றுயிரும் குலையியிருமாக பரிதவிக்கும் தமிழினத்துயரில் தன் பாஸிஸத்தை பதியம் போடத்துடிக்கின்றது ஹிந்துத்வம். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தைய இலங்கையை இந்தியாவின் விரிவாதிக்கத்திற்குள் தக்க வைத்துக் கொள்வதற்கு, ஹிந்துத்வத்தை எவ்வாறெல்லாம் அந்நோக்கத்திற்கேற்ப பொருத்துவது என்பதை எதிரும், புதிருமான தளத்தில் நின்று விவாதித்து வருகின்றனர் ஹிந்துத்வ அறிவு ஜீவிகள்.

இது தொடர்பான ஆவணங்கள் வெளிவந்துள்ளன. பின்வரும் தலைப்புகளில் அந்த ஆவணங்கள் விவாதங்களை முன்வைக்கின்றன.

. இலங்கைத் தமிழரை ஹிந்துமயமாக்குதலும், தமிழ் பிரிவினைவாதத்தில் ஹிந்து பிரதிபலிப்பும்.

. விடுதலைப் புலிகள் - ஒரு தோற்றுப்போன கிறிஸ்தவ சதி
(இங்கே சொடுக்கவும்)

. நிரந்தர ஹிந்து - பௌத்த ஒற்றுமை
(இங்கே சொடுக்கவும்)

. சீனா - பாக்கிஸ்தான் பூச்சாண்டி
(இங்கே சொடுக்கவும்)

. தலைத்தூக்கும் சிங்கள வெறி
(இங்கே சொடுக்கவும்)

நேரெதிரான, முரணான விவாதப் பொருள்களை முன்வைக்கும் ஹிந்துத்வ சித்தாந்திகளுக்கு ஒன்றும் சித்தப்பிரம்மை பிடித்திடவில்லை. ஹிந்துத்வ பாஸிஸ்டுகள் எல்லா வாய்ப்புகளையும் அனைத்து கோணங்களிலும் நின்று அலசி அப்போதைய சூழ்நிலைக்கு எது பொருத்தமோ அந்த உத்தியை நடைமுறைப்படுத்துவர். இதற்காக இவர்கள் தங்களின் மற்ற முரணான கோணங்களையோ, பார்வைகளையோ, உத்திகளையோ கைவிட்டுவிட்டனர் / மாற்றிவிட்டனர் என்று பொருளல்ல.

எந்த தலைகீழ் மாற்றத்திலும் தங்களின் இலக்கு நோக்கிய பயணத்தை பிசிறின்றி செலுத்தும் கலையை பாஸிஸ்டுகள் கற்றுத் தேர்ந்துள்ளனர் என்பதற்கு இவர்களின் கடந்தகால கீழறுப்பு வரலாறே சாட்சி சொல்லும். எந்த உயிரினமும் வாழவியலா பாலை நிலப்பெருவெளியில் தழைக்கும் முள்நிறைந்த கள்ளிச்செடி, ஊர்ந்து செல்லும் மண்ணுளிப்பாம்பு போன்ற கீழ்மை உயிரிகள் தான் இந்த ஹிந்துத்வ பாஸிஸ்டுகள்.

வென்றவன், வல்லான், மிகைத்தவன் பாதம் நக்கி சேவை செய்வது ஹிந்துத்வ சிந்தனை மரபின் உயிர் நாடி என்பதை வரலாற்றின் வெளிச்சத்தில் விளங்கிக் கொண்டால் நமக்கு குழப்பம் வராது.

இந்திய துணை கண்டத்தினுள் நிகழ்ந்த முகலாய, ஆங்கில படையெடுப்புகளின் போது, இந்த படையெடுப்பாளர்களை தாம்பூலம் வைத்து வரவேற்றது ஹிந்துத்வத்தின் சனாதன முன்னோர்களே. உலகப்போரில் ஜெர்மானியர் கை ஓங்கிடலாம் என்ற ஊகம் கிளம்பியவுடனே ஜெர்மனிய மொழியை மெய் சிரத்தையோடு கற்றொழுகிய கனவான்கள் இவர்கள்.

கீழறுப்பு, நயவஞ்சகம், இரட்டுற மொழிதல் போன்ற கீழ்மை குணங்களின் மொத்த உரிமையாளர்களான இவர்களுடன் இணைந்து ஈழ விடுதலையை சாதிக்கத் துடிக்கும் நம்மவர்களை நினைத்துத்தான் மனம் வருந்துகின்றது. அடிமை மறுப்பு, விடுதலை எழுச்சி போன்ற கருத்தியல்களுக்கு கடும் வைரியான இவர்களுடன் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் ஆதரவு சக்திகளும் ஒத்துப்போவது பலவித ஐயப்பாடுகளை நமக்குள் எழுப்புகின்றது.

இவர்களின் இப்பேதைமையை தெளிவுபடுத்துவான் வேண்டி ஹிந்துத்வ பாஸிஸ்டுகளின் இலங்கை விவாத ஆவணங்களில் காணப்படும் கருத்துகளை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிப்பது ஒன்றுதான் சரியான வழியாகப்படுகிறது.

1.இலங்கைத் தமிழரை ஹிந்து மயமாக்குதலும், தமிழ் பிரிவினை வாதத்தில் ஹிந்து பிரதிபலிப்பும்

“இந்திய சிறீலங்கா உறவானது இதிஹாஸ பழமையுடையது. பாரத வர்ஷத்தின் பெருங்காப்பியமான ராமாயண காலந்தொட்டே இருந்து வருகின்றது. இலங்கையை சோழர்கள் கைப்பற்றியதையும் பாண்டிய மன்னர்களுக்கும் சிறீலங்கா மன்னர்களுக்கும் இடையே நட்புறவு நிலவி வந்ததையும் நாம் கண்ணுற்றுள்ளோம். இலங்கையின் தமிழ் வரலாறு என்பது ஹிந்து வரலாறுதான். இன்று சிறீலங்கா என அறியப்படும் நாட்டில் சைவஹிந்து மதம்தான் தமிழ் இன அடையாளத்தைக் காத்து வந்துள்ளது. ஹிந்து பாரம்பரியம்தான் சிறீலங்காவின் தமிழ் அடையாளத்தை வரையறுத்ததோடு உத்வேகமூட்டியும் வந்திருக்கின்றது. இதை ஏழாம் நூற்றாண்டில் சிலோனில் ஏற்பட்ட பல்லவ தாக்கத்தின் வாயிலாகவும், பதினொன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சோழ தலையீடு வாயிலாகவும் அறியமுடியும்.

13 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே யாழ்ப்பாணத்தை மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போதும் நாம் ஹிந்து மரபுகளின் வழியாகவே அறியப்பட்டோம். விடுதலை பெற்றபிறகும் யாழ்ப்பாணத்திலிருந்து விஜயநகர பேரரசிற்கு இடையறாது திறை செலுத்தப்பட்டு வந்தது.

ஆறாம் பராக்கிரம பாஹூவிற்கு விசுவாசமாக இருந்த யாழ்ப்பாணத்தின் நிலம், கடல் சார் அரசியல் சக்திகள்தான் சைவஹிந்து மதத்தை உயர்த்தி பிடித்தன. யாழ்ப்பாண அரசின் கொடியில் நந்தி சின்னம்தான் இருந்ததே தவிர புலிச்சின்னம் இருந்திருக்கவில்லை.

கற்சிலை மடு என்ற இடத்தில் பண்டாரவன்னியன் என்ற தீவிர ஹிந்து, சிவன் கோயிலைக் கட்டினான். ஆறுமுக நாவலர் என்ற தமிழறிஞர் யாழ்ப்பாணத்தில் 1822ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஏராளமான ஹிந்து ஆகமங்களை அச்சிட்டதோடு, ஹிந்து மத கல்விக்கூடங்களைத் தொடங்கி ஹிந்து மறுமலர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.

1832ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த சி. டபிள்யூ. தாமோதர பிள்ளை என்ற பல்கலைக்கழக பட்டதாரி ஒரு தீவிர ஹிந்து ஆவார். அவர் ஆறுமுக நாவலரின் அடியொற்றி அரிய தமிழ் இலக்கியங்களை பதிப்பித்து சைவஹிந்து மரபை பரப்பினார்.

1877இல் பிறந்த ஆனந்த குமாரஸ்வாமி என்ற சிறீலங்கத் தமிழர் ஹிந்து கலைகளை பன்னாட்டினரும் பார்க்கும் படியான வடிவமாக்கினார். துடிப்புமிக்க சிறீலங்கத் தமிழ் ஹிந்து பாரம்பரியத்திற்கு நாம் உண்மையானவர்களாக இருக்கின்றோமா? ஒவ்வொரு தமிழனின் மையக் கருவாக விளங்குவது ஹிந்து மதமேயன்றி வேறில்லை. ஆனால் திராவிடக் கட்சிகளின் பயணதடத்தை பார்த்தோமேயானால் அவர்களுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். கிறிஸ்தவ வேலைத் திட்டத்தை நிறைவேற்றும் போக்கைத் தவிர வோறெதையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கவியலாது.

எனவே ஆர்.எஸ்.எஸ்., வி.ஹி.ப., ஹிந்து முன்னணி, பிற ஹிந்துமத இயக்கங்கள்தான் சிறீலங்காவிற்கான பண்பாட்டு, ஆன்மீக தூதை சுமக்க வேண்டும். அதன் மூலம் தகர்ந்திருக்கின்ற தமிழ் ஹிந்து சமூகத்தின் சிந்தையில் நம்பிக்கையையும், உறுதியையும் உண்டாக்கவியலும்.

ஹிந்து கவுன்ஸில், சைவ மங்கையர் கழகம், சாய் ஸமிதி போன்ற அமைப்புகளுடன் வேறு சில அமைப்பினரும் சேர்ந்து தமிழர்கள் உள்ள ராணுவ முகாம்களில் தொண்டாற்றுகின்றனர். தமிழக / இந்திய ஹிந்து அமைப்புகள் சிறீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு சிதிலமடைந்துள்ள மக்களின் மறுவாழ்விற்கு உதவிட இதுதான் சரியான தருணம். அரசாங்கமும் பலவீனப்பட்டிருப்பதால் அது எவ்வகையான உதவியையும் ஏற்றுக்கொள்ளும்.

நிரம்பி வழியும் அகதிமுகாம்களில் உள்ளோருக்கு உணவு, உடை, சலவைக்கட்டி, சுகாதார தேவைகள் உள்ளிட்ட இன்ன பிற வசதிகளை வவுனியாவில் உள்ள ஹிந்து கவுன்ஸில் கடந்த ஆறு வார காலமாக செய்து வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பஜனைக் குழுக்களையும் உருவாக்கி வருகின்றனர்.

தொடக்கநிலை அகச்கட்டுமான வசதிகள் அங்கிருந்தாலும், இந்தியாவிலுள்ள ஹிந்து நன்கொடையாளர்கள் நிலைமையின் தேவைக்கேற்ப ஆள், பணம் இவற்றின் மூலமாக அகதிகளின் மறுவாழ்விற்கு உதவிட முன்வரவேண்டும்.

சிறீலங்கா அரசின் அனுமதியோடு காஞ்சிமடம், சைவ ஆதீனங்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானம் போன்ற நிறுவனங்கள் தங்களது கிளைகளை அங்கு நிறுவி முக்கிய பங்காற்ற முடியும். பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இலங்கைத்தீவில் நிறைய நிலபுலன்களும், சொத்துக்களும் உள்ளன. அவற்றை பயன்படுத்தி கோயில்களையும், சேவைக்கிளைகளையும் கட்டலாம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாசலபதி பகவானுக்கு ஒரு கோயில் கட்டுவதைப் பற்றியும், ஆன்மீக வகுப்புகளை நடத்துவதைப் பற்றியும் கூட ஆலோசிக்கலாம். சிறீலங்கா அரசின் அனுமதியோடு தமிழகத்திலுள்ள ஹிந்து அமைப்புகளின் சேவகர்கள் அங்கு அனுப்பப்படுவது மிக மிக இன்றியமையாததாகும்.

ராமர் சேதுவை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னம் என்ற அறிவிப்பை இந்திய அரசு செய்திட்டால் . . . ராமாயண தலங்களுக்கான வரலாற்று சுற்றுலாவை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தி முறையாக ஊக்குவித்தால் . . . இவ்விரண்டும் மேற்கத்திய சக்திகளின் தீய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் சாவு மணி அடித்து விடும்.

சிறீலங்கத் தமிழர்களின் 85%மானோர் ஹிந்துக்கள் என்பதாலும், விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பிறகு திராவிட கிறிஸ்தவ கூட்டு அயர்ந்து போயிருப்பதாலும், அவை மீள்வதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும் என்பதாலும் போர்க்கால அடிப்படையில் தமிழ் அடையாளத்தை மறு - ஹிந்துமயமாக்க வேண்டும். பிராமணீய தமிழ் விழுமியங்களை மறு அறிமுகப்படுத்தி முன்னிலைப் படுத்துவதற்கு இதுதான் உகந்த தருணம் எனவும், இப்படியாக சாதிக்கப்பட்டவைகள் வாயிலாக தமிழக போக்கையும்மாற்ற வேண்டும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறாக வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் அடையாளத்தை மறு - ஹிந்துமயமாக்குவதின் வாயிலாக தமிழகத்தில் உள்ள திராவிட பூதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முழு அளவிலான அழுத்தத்தை கொடுக்கவியலும். எழுச்சிமிகு ஹிந்து கர்நாடகாவிற்கும், ஹிந்து தமிழ் சிறீலங்காவிற்குமிடையே திராவிட தமிழ்நாடு நசுக்கப்பட்டு விடுவதோடு, தமிழ்நாடு தெளிவான ஹிந்து அடையாளத்தோடு புத்துயிர் பெற்றெழும்.

சிறீலங்காவில் உறுதியான தமிழ் ஹிந்துவின் இருப்பு என்பது இந்தியாவின் தென்னெல்லைகளை நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கும்.”

ஹிந்துத்துவம், இந்திய விரிவாதிக்கம் என்ற இரட்டைக்குழல் துப்பாக்கி எத்தனை திசைகளில் சுழல்கிறது பார்த்தீர்களா? மூர்க்கத்துடன் மோதி மடியும் இரு காட்டு விலங்குகளும், மாய்ந்து விழும் அவற்றின் உடலங்களுக்கிடையே சிக்கி உயிரிழக்கும் அற்ப விலங்குகளும் என அனைத்துமே பிணந்தின்னிக் கழுகுகளுக்கும், ஓநாய்களுக்கும் விருந்தாக மாறுவது போல் இலங்கை இனப் பிரச்சனையில் தொடர்புடைய எவருடைய எழுச்சி, வீழ்ச்சியாலும் தங்களுக்கென்ன ஆதாயம் எனப்பார்க்கக் கூடிய இந்திய விரிவாதிக்க ஹிந்துத்வ அதிகார மனோநிலையை தமிழக அரசியல்வாதிகளும், தலைவர்களும் எப்படி எதிர்கொள்கின்றனர்? என நாம் பார்க்க வேண்டும்.

ஹிந்துத்வ விரிவாதிக்கவாதிகளும், தமிழக புலி ஆதரவாளர்களும் ஒன்றுபடுமிடம்

தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திரைப்பட இயக்குநர் சீமான் போன்றோர் புலி ஆதரவு முழக்கத்தை முன்னெடுத்து வரும் முன்னணியாளர்களாக திகழ்கின்றனர். இலங்கைத் தமிழின மீட்சி, சிங்களப் பேரினவாத கொடுங்கோன்மை போன்ற விடயங்களில் இவர்கள் எழுப்பும் குரல்களில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

நீரில் மூழ்கும் நிலையிலிருப்பவன் கொடுஞ் சுறாவின் முதுகில் ஏறி தப்ப முயன்ற கதையாக இம்முன்னணியாளர்கள் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்று கூறி ஹிந்துத்வ அமைப்புகளை பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதுதான் அதிர்ச்சியை அளிக்கிறது.

இலங்கையில் மடிவது ஹிந்துக்கள். எனவே இந்தியாதான் உதவி செய்ய வேண்டும் என்கிறார் அய்யா பழ. நெடுமாறன். இதை அப்படியே வழிமொழிந்திருக்கின்றார் ராஜேந்திர சோழன்.

‘இலங்கையில் மடிவது கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டிருக்கும். அங்கு மடிவது ஹிந்துக்கள். எனவே இந்தியாதான் தலையிட வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தான் ஆயுத பயிற்சி கொடுக்கின்றது’ என பேட்டியளிக்கின்றார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

‘புலிகளை ஆதரிப்பது கோட்ஸே என்றாலும் அவரை நான் ஆதரிப்பேன்’ என சூளுரைக்கின்றார் திரைப்பட இயக்குனர் சீமான். தமிழகத்தில் ஹிந்து முன்னணி ஓட்டும் ரத்த ஆற்றின் புரவலப் பெருந்தகையான தொழிலதிபர் பொள்ளாச்சி ந.மஹாலிங்கத்தின் துதிபாடி அவர் பெயர் துலங்க அய்யா பழ. நெடுமாறன் எடுக்கும் முயற்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

பொள்ளாச்சி மஹாலிங்கனாரின் ஹிந்துத்வ புரவலத்தன்மையை ஒரு ஒரமாக வைத்துவிட்டு பார்த்தாலும் கூட அவர் காவேரி நதி நீர்ப்பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டைக் குறித்து அய்யா பழ. நெடுமாறன் என்ன சொல்லப் போகிறார்?

கடந்த 09.07.09 அன்று சென்னையில் ஆர்.எஸ். எஸின் கிளை அமைப்பான விவேகானந்தா நல்லோர் வட்டத்தின் சார்பாக நடந்த விழாவில் கலந்து கொண்டு அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் முத்துக்குமாரின் நினைவுப்படத்தை திறந்து வைத்தார்.

Ramagopalanஇலங்கையில் பாளையமிறங்கி, ராமேஸ்வரம் கடல் பரப்பினூடாக தமிழக மீனவர்களை பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இனர் சுட்டுத் தள்ளுகின்றனர் என ஜூனியர் விகடன் பாணியில் பரபரப்பூட்டி இங்குள்ள பரம்பரை பாக்கிஸ்தான் பூச்சாண்டியாளர்களான ஹிந்துத்வ எசமானர்களையே மிஞ்சி விட்டார் ஈழப்புனைவு எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலன்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளோடு பா.ஜ.க.வின் இல. கணேசனும் ஒய்யாரமாக வீற்றிருக்கின்றார்.

மீட்பர் பா.ஜ.கா

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வே வெல்லும் என்ற தவறான நம்பிக்கையை புலிகளுக்கும் அவர்களது அரசியல் பிரிவினருக்கும் நெடுமாறன், ராமதாஸ், வைகோ வகையறாக்கள் ஊட்டியதன் நீட்சியாகத்தான் சிவாஜிலிங்கம் எம்.பி தலைமையிலான புலி ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குழு சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து உரையாடுகின்றனர். அதன்பிறகு புதுதில்லி சென்று அத்வானி, அசோங் சிங்கால், தொகாடியா போன்ற ஹிந்துத்துவ தளகர்த்தர்களை சந்தித்து அளவளாவினர். இல. கணேசனும், சிவாஜிலிங்கமும் ஒரே மேடையில் தோன்றி பேசினார்கள்.

இவர்கள் பெரிதும் நம்பியிருந்த மதவெறி பாஸிஸ பா.ஜ.க. வினருக்கு மக்கள் மரணத்தீர்ப்பு கொடுத்தனர். பா.ஜ.க. தலைமையிலான புதிய இந்திய நடுவணரசு வானத்திலிருந்து இறங்கும் மீட்பர் போல தம்மை இலங்கை ராணுவ முற்றுகையிலிருந்து காத்திடுவர் என புலிகளின் அதி உயர்மட்டக்குழு நம்பி மோசம் போனதுதான் கடைசியில் மிச்சம்.

இன்று இலங்கையின் வவுனியாவில் ஹிந்துத்வ அமைப்புகளான ரவிஷங்கர் தலைமையிலான ‘வாழும் கலை’ சாய் ஸமிதி, சின்மயா மிஷன் போன்றவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் செஞ்சிலுவை சிங்கத்தின் அலுவலகங்களை மூடுமாறு இலங்கையரசு நிர்ப்பந்தித்துள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சார்ந்த கிராமப்புற பூஜாரிகள் இலங்கைக்குச் செல்கின்றனர்.

இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே குடும்பம் உட்பட சிங்கள மேட்டுக்குடியினர் சாய்பாபா, ரவிஷங்கரின் பரம பக்தர்களாக உள்ளனர். இலங்கைத்தமிழர் மீதான சிங்கள அரசின் இன ஒடுக்குமுறை முழு அளவில் கட்டவிழ்த்து விடப்படும் போது ரவிஷங்கரும், சாய் பாபாவும் ஏன் ராஜபக்ஷேவை பார்த்து இன வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தும் அருள் வாக்குகளை சொல்லவில்லை?

இலங்கை அரசுடன் நெருங்கிய தொடர்பும், செல்வாக்கும் படைத்த ஹிந்துத்வ சக்திகளுடன் உறவு பூண்டுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களே! நீங்கள் ஏன் ஹிந்துத்வ சக்திகள் மூலம் இலங்கை அரசை நெருக்கவில்லை? அப்படி ஒரு நெருக்கடியை இலங்கை அரசுக்கு தராத ஹிந்துத்வ அமைப்புகளை கண்டித்து அறிக்கை, ஆர்ப்பாட்டம், கண்டனம் என எதையும் தெரிவிக்கவில்லையே? ஏன்?

வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக சுற்றி வளைத்தனர். அந்த முற்றுகையின் முடிவில் தீர்மானகரமான வெற்றி புலிகளுக்கு காத்திருந்த வேளையில் வாஜ்பாய் இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கைப் படையினரை மீட்பேன் என புலிகளை மிரட்டி அந்த முற்றுகையை தளர்த்தினார். இங்குள்ள புலி ஆதரவாளர்கள் இப்படிப்பட்ட பா.ஜ.க.வை நம்பி எப்படி ஈழ ஆதரவு அரசியல் நடத்துகின்றனர் என்பது புரியவில்லை.

கஷ்மீர் மீதான ஓரவஞ்சனை

அயல் நாடான இலங்கையில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமை / தனிநாடு கோரிக்கைக்கு விண்ணதிர முழங்கும் இங்குள்ள புலி ஆதரவாளர்கள், நம் தாயகத்தில் நடக்கும் கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளை ஆதரித்தும், கஷ்மீரை தனது அந்தப்புரமாக மாற்றத்துடிக்கும் இந்திய விரிவாதிக்க வெறி குறித்து கண்டித்தும் ஒரு ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் நடத்தியதுண்டா?

பா.ம.க.வின் சொந்த ஊடகமான மக்கள் தொலைக்காட்சி, புலிகளைப் போராளிகள் என்று கூறும் அதே வாயால் கஷ்மீர், பலஸ்தீன், இராக் விடுதலை எழுச்சிப் போராளிகளை தீவிரவாதி, பயங்கரவாதி என பட்டஞ்சூட்டி அழகுபார்க்கின்றது. இது இவர்களின் ஹிந்து சாய்வைக் காட்டுகிறதோ? அங்கு போராடுபவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா இந்த ஓர வஞ்சனை?

சீனப் பூச்சாண்டி

சீனா - பாக்கிஸ்தான் பூச்சாண்டி (இங்கே கொடுக்கவும்) என்ற தலைப்பின்கீழ் ஹிந்துத்வ பாஸிஸ்டுகள் முன்வைக்கும் கருத்துக்களை அப்படியே புலி ஆதரவாளர்கள் வழி மொழிவதைப் பாருங்கள்:

‘தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் நீரிணையில் மூன்று இடங்களில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை லிபியாவிற்கு கொடுப்பது என ராஜபக்ஷே அறிவித்தார். இந்தப்பகுதிகள் லிபியாவின் கைகளுக்கு செல்வது என்பது பாகிஸ்தானை இந்தியா தனது தமிழ்நட்டின் எல்லைப்பகுதிகள் அனுமதித்துள்ளதாகவே கருதவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் சிமிண்ட் ஆலையை பிர்லாவும், ராஜபாளையத்தின் ராம்கோ குழுமமும் வாங்கப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த ஆலையை லிபியா அல்லது கட்டாருக்கு கொடுக்கவே ராஜபக்ஷே அரசு தீர்மானித்துள்ளது. லிபியாவைப் போலவே கட்டாரையும் பாக்கிஸ்தானின் ஒரு முன்னணி நட்பு நாடாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நாட்டின் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் செயல்படப்போகின்றன. என்பதை அங்கு பாக்கிஸ்தான் இருப்பதாகவே நாம் கருதிக்கொள்ள வேண்டும்.’

-நூல் : சீனாவின் முற்றுகையில் இந்தியா, பக்கம் 10,11 வெளியீடு : முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்.

நிறைவாக . . .

இலங்கையில் சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கெதிராக கிளர்ந்த பொழுது தமிழ் விடுதலை இயக்கங்களில் தங்களையும் இணைத்துக் களங்கண்டவர்கள் தான் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம்கள். தமிழ் ஆயுதக்குழுக்களின் விலக்கி நிறுத்தும் தூய தமிழ்த் தேசிய பார்வையின் விளைவாக அந்த முஸ்லிம் போராளிகள் அந்நியமாகிப் போயினர்.

புலிகளால் துரத்தப்பட்டு 19 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிமுகாம்களில் வசித்த போதும் கூட மாணிக் பண்ணை ராணுவமுகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று உதவியுள்ளன அங்குள்ள இஸ்லாமிய இயக்கங்கள். வடக்கிலும், கிழக்கிலும் புலிகளால் விரட்டப்பட்டு அகதிமுகாம்களில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் கண்ணியத்துடனும், தன்மானத்துடனும் தங்கள் பிரதேசங்களில் மீன்டும் குடியேற்றப்பட வேண்டும். இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண விழையும்போது வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தேவைகள் அபிலாஷைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம்களின் தனித்தன்மைக்கு ஊறு நேரிடாது என்கிற உத்திரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்கள், அங்குள்ள தமிழர்களின் நியாயமான வாழ்வுரிமை, அரசியலுரிமை கோரிக்கைகளுக்காக தோளோடு தோள் நிற்க அணியமாகவே உள்ளனர். இந்த பருண்மைகளை கணக்கிலெடுக்காமல் தமிழர் - ஹிந்து என்ற ஒற்றைப்பார்வை கொண்டு இலங்கை இனப் பிரச்சினையை குறுக்குவது என்பது சமாதான சகவாழ்விற்கான திறவுகோலை ஆழ்கடலில் வீசிஎறிவதற்கு சமமான ஒன்றாகவே பார்க்கப்படும். இந்த குறுகிய பார்வையின் வாயிலாக ஈழவிடுதலையையும் அடைய முடியாது - சிங்கள பேரினவாதத்தையும் ஒழிக்கமுடியாது.

மாறாக, சிங்கள பேரினவாதத்துடன் கைகோர்த்துக் கொண்ட அகண்ட பாரதம் தான் மெய்ப்படும்.

2. நிரந்தர ஹிந்து - பௌத்த ஒற்றுமை

ஒத்துப்போகும் நாகரீக விழுமியங்களும், வரலாற்றனுபவங்களும் இந்தியாவையும், சிறீலங்காவையும் ஒன்றிணைக்கின்றன. தர்மம் (சமஸ்கிருதம்) அல்லது தம்மம் (பாலி, சிங்களம்) என்ற மாறா அறம்தான் இருநாடுகளையும் ஒன்றிணைக்கின்றது. இந்தியாவின் பல்வேறு மொழிகளுடனும், பிராகிருதத்துடனும் சிங்களமொழி நெருக்கமாக உள்ளது. இந்திய மொழி வரி வடிவங்களின் அடிப்படையான பிராஹ்மிதான் சிங்கள மொழி வரி வடிவத்தின் அடிப்படையாகும். தொடக்க கால பிராஹ்மி வரிவடிவங்களிடங்கிய கல்வெட்டுக்கள் சிறீலங்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஹிந்து - பௌத்த அறங்களுக்கிடையே பொதுவான சொல்லாடல்கள்:

நிர்வாணம்
ஆத்மா
யோகம்
கர்மா
ததாகதம்
புத்தம்
சம்ஸாரா
தம்மம்

அற்புதங்கள் நிகழ்த்தக்கூடிய துறவியாகவும், மரபார்ந்த யோகியாகவும் புத்தர் விளங்கினார்.

2,500 வருடங்களுக்கும் மேலாக புத்தகயா சிறீலங்கர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் புண்ணியத்தலமாக விளங்கிவருகின்றது. சிறீலங்காவில் பின்பற்றப்படும் நிறைய சடங்குகள் இந்தியாவிலும் காணப்படுகின்றன.

பலி என்ற சடங்கில் கிரஹ தேவதைகள் பூஜிக்கப்பட்டு தீய விளைவுகளை விட்டு காக்கும்படி வேண்டப்படுகிறது. ஆண் / பெண் குழந்தை பிறக்கும்போது ஜாதகம் கணிக்கப்பட்டு அவன் / அவளின் வாழ்வின் எல்லா தலையாக நிகழ்வுகளிலும் அதுபின் பற்றப்படுகிறது.

சிறீலங்கா என்ற தீவினுடைய பௌத்த சாஸன காவலர்களாக விஷ்ணு, ஸமன், கதிர்காமர் விபீஷணர் என்ற நான்கு தெய்வங்கள் கருதப்படுகின்றன. கணேசக் கடவுள் கணபதி அல்லது ‘கண தெய்வோ’ என போற்றப்படுகின்றார்.

கடவுளர் சிலைக்கும் பக்தனுக்குமிடையே ஒரு இடைத்தரகர் கபூராலா அல்லது கபூ மஹத்தியா அல்லது கபூவா என்பவர் உள்ளார். இவர் ஹிந்து பூசாரிக்கு சமமாவார். பௌத்த மரபிலும், பாலி மொழியிலும் ‘தம்மம்’ என்ற சொல்லிற்கு ‘உண்மை’ ‘உயரிய உண்மை’ ‘உள்ளது உள்ளபடி’ என பொருள் கொள்ளப்படுகின்றது. இதுவே பிருஹதாருண்யக உபநிஷத்தில் ‘நிச்சயமாக, தர்மம் என்பது உண்மையாகும்’ (1.4.14) என உரைக்கப்படுகின்றது.

. துன்பத்தின் உன்னத உண்மை காரணம்
. துன்ப ஊற்றின் உன்னத உண்மை
. துன்பம் நீக்கும் உன்னத உண்மை
. துன்பம் நீக்கும் பாதைக்கான உன்னத உண்மை

என்ற பௌத்த தம்மத்தின் நானகு உன்னத உண்மைகளும் ஆதிசங்கரர் கீதா பாஷ்யத்தில் அருளியுள்ள நிவ்ருத்தி (அகநோக்கு) என்ற உலக பாட்டையுடன் ஒத்துப் போகின்றது.

திருவள்ளுவரின் தலையாய தமிழ் நூலாகிய திருக்குறளும் அறம் (தர்மம்) என்று தான் அழைக்கப்படுகின்றது. சங்ககாலம் (சங்கம் மருவிய காலம்) தொட்டே தமிழ் - பௌத்த தொடர்புகள் உள்ளன. அதன் விளைவாக பௌத்த துறவியும், புலவருமான சீத்தலைச் சாத்தனார் ‘மணிமேகலை’ என்ற அற்புத காவியத்தை செந்தமிழில் படைத்துள்ளார்.

தர்மம் - தர்மம் இவையிரண்டும் மிகப் பழமையான சொற்கள். தர்மம் - தம்மம் என்கிற ஹிந்து - சிங்கள நாகரீகங்களின் நிரந்தர அடையாளம் ஆதிகாலந்தொட்டு இன்று வரை நிலவி வருகின்றது. தர்மமும் தம்மமும் பிளவற்ற, விலக்காத, முடிவற்ற தன்மையுடையதாகும்.

“ஆனோ பத்ராஹ் கிராதவோ யாந்து விஸ்வதாஹ்” (எல்லா பக்கங்களிலிருந்தும் உயரிய கருத்துக்கள் நம்மை வந்தடையட்டும்) பௌத்த ஹிந்து தலைவர்களை ஒன்றுபடுத்துவது என்பதொன்றும் கடினமான செயலல்ல. ஏனெனில் கிறிஸ்தவ தாக்குதல் என்பது இருவருக்கும் எதிரானதொன்றே.

1879ஆம் ஆண்டு மொஹோத்திவத்த குணாணந்தா என்பவர் கிறிஸ்தவ மிஷனரிகளை பொது விவாதத்தில் தோற்கடித்தார். 2003ஆம் ஆண்டு மதமாற்றத்திற் கெதிரான தடையை சட்டமாக்கும் முயற்சி சிறீலங்கா தீவினுள் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது. அது அப்போது தடுக்கப்பட்டு விட்டாலும் அதன் நோக்கத்தை தற்சமயம் நிறைவேற்றி விடலாம்.

சிறீலங்கா ஹிந்து கவுன்ஸிலும், புத்த பிக்குகளின் தேசிய சபையும் இவ்விஷயத்தில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. மேற்குலகு, குறிப்பாக மிஷனரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. அவை ஆகியவற்றில் கிறிஸ்தவ ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. இவை சிறீலங்கா இராணுவத்தை ‘மனித உரிமை மீறுபவர்கள்’ என சித்தரிப்பதோடு அதன் ‘போர்க்குத்றங்களையும் பகிரங்கப்படுத்துகின்றனர்.

போர்க்குற்றங்களுக்காக சிறீலங்கா ராணுவத்தை விசாரிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் கடுங்கோட்பாட்டாளர்கள் ஐ.நாவையும், மேற்குலகையும் நெருக்குகின்றனர். இதுபோன்ற முயற்சிகளை தடுத்து நிறுத்த இந்தியாவின் ஹிந்துமத தலைவர்கள் பௌத்த தலைமையுடன் உடனடியாகத் தொடர்புகளை உண்டாக்குவதோடு, ஹிந்து அமைப்புகளை சிறீலங்காவினுள் அனுமதிப்பதை சாத்தியமாக்க வேண்டும். இது நம்மிரு சமூகத்திற்கும் நன்மையளிக்கக் கூடியது.

தமிழ்நாட்டின் ஹிந்து தலைவர்கள் சிறீலங்காவிலுள்ள தங்களது பௌத்த சகாக்களை தூண்டிக்கொண்டேயிருக்க வேண்டும். தென் கொரியா போன்ற பௌத்த நாடுகள் கிறிஸ்தவமயமானது குறித்து நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். பௌத்த மதக்குருக்களிடம் பௌத்த ஹிந்து ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து விளக்க வேண்டும்.

3. விடுதலைப்புலிகள் - ஒரு தோல்வியடைந்த கிறிஸ்தவ சதி

இந்தியாவின் தென்புறமாக உள்ள சிறீலங்கா தீவில் ஒரு இந்திய எதிர்ப்பு பிராந்தியத்தை உருவாக்கி, அந்த பகை புலத்தை அப்படியே இந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கு விரிவாக்க முயலும் பரந்துபட்ட அனைத்துலக கிறிஸ்தவ சதித்திட்டத்தின் சதிகாரனும், தலைமை நிறைவேற்றாளருமாகவே பிரபாகரன் உண்மையில் விளங்கினார்.

இம்மாதிரியான சீர்குலைவுத்திட்டமானது தமிழ் வெறியைத் தான் தூண்டும். எனவே விடுதலைப்புலிகளின் தமிழ்முகமானது கிறிஸ்தவ துப்பாக்கிகளையும், எறிகுண்டுகளையும் மறைக்கும் ஒரு முகமூடியேயன்றி வேறில்லை.

4. தலைதூக்கும் சிங்கள வெறி

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புக்குப்பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்ஷே தமிழ் மன்னர்களை தோற்கடித்த சிங்கள மன்னர்களின் (துட்டகைமுனு, வளகம்ப, தாதுஸேன, விஜயபாஹூ) பெயர்களை குறியிட்டுச் சொன்னார். அவர் தமிழ் மன்னர்களை ‘படையெடுப்பாளர்கள்’ எனச் சொன்னார். ‘தேசியவாதம்’ என்றதொரு சித்திரத்தை அவர் வரைய முயற்சிக்கலாம்; ஆனால் சிறீலங்காவின் தேசியத்தன்மையின் ஒரு அங்கமாக தமிழர்கள் விளங்குவதால், இந்த வரலாற்றை அவர் தொட்டுக்காட்டியிருக்க வேண்டியதில்லை.

தமிழர்கள் சிறீலங்காவின் இயல்பான குடிமக்களாவர். வாழ்வின் எல்லா துறைகளிலும் அவர்களுக்கு சமஉரிமை கொடுத்தாக வேண்டும். மிகப்பெரிய சிறுபான்மையினரின் சுதந்திரத்திற்கும், சம உரிமைக்கும் உண்மையாகவே பாடுபடக்கூடிய எந்த தலைவரும் இது போலதொரு துவேஷமிக்க பிரிவினைப் பேச்சை பேசமாட்டார். இந்தியா, தமிழகத்திலிருந்து மத, ஆன்மீக அமைப்புகளை சிறீலங்கா அரசும், ராணுவமும் வரவேற்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிங்களர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் வரம்பை மீறிய ஒன்றாகும். விடுதலைப் புலிகளின் தோல்விகுறித்தும், பிரபாகரனின் இறப்பு குறித்தும் வெளிப்படும் மகிழ்ச்சி என்பது புரிந்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் அது எல்லை தாண்டக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக, அதிபரின் உரையும், அரசின் நடவடிக்கைகளும், மக்களின் மனோநிலையும் தமிழ் சிறுபான்மையினரின் மனதில் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது.

5. சீனா, பாக்கிஸ்தான் பூச்சாண்டி

பாக்கிஸ்தான், சீனா போன்ற வெளிசக்திகளினால் சிறீலங்காவுடன் நெருங்கிவர இந்தியா எடுக்கும் முயற்சிகள் பாழாகிவிடும். சிறீலங்காவிற்கும் பாக்கிஸ்தானிற்கு மிடையேயான ராணுவ ஒத்துழைப்பை அனைவரும் அறிவர். லங்காவிற்கு பாக்கிஸ்தான் ஆயுத தளவாடங்களை 1980 முதலே வினியோகித்து வருகிறது.

அமெரிக்கா, சீனாவிடமிருந்து கிட்டும் கணக்கற்ற உதவிகளை இந்தியாவிற்கு எதிரான பகையுணர்விற்காக பாக்கிஸ்தான் பயன்படுத்திக் கொள்கிறது. சீனாவுடனான அதன் உறவு என்பது இயல்பானது. சீனாவின் ஆதிக்கத்தில்தான் அது சிறீலங்காவிற்கும் உதவுகின்றது. இரு வருடங்களுக்கு முன்னர் பெய்ஜிங்கிற்கு வருகை புரிந்த அதிபர் ராஜபக்ஷே ‘ஹம்பாந் தோட்டை திட்டம்’ ஒன்றிற்காக கையெழுத்திட்டார்.

அத்திட்டத்தின்படி ஹம்பாந்தோட்டையில் சீன அரசு கப்பல் துறை, கப்பல் எரிபொருள் கிடங்கு, எண்ணெய் தூய்மை ஆலை, விமானத்துறை போன்றவற்றை கட்டிக்கொடுக்கும். சிறீலங்காவின் ஹம்பாந்தோட்டை திட்டம் வாயிலாக இந்தியாவை சுற்றிலும் சீனா தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும். அத்துடன் இந்தியப் பெருங்கடலில் சீனாவிற்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பையும் பெற்றுத்தரும். எனவே வெளிச்சக்திகளை தடுக்க பௌத்த ஹிந்து ஒற்றுமை இன்றியமையாததாகிறது.

ஆதாரம்: http://www.haindavakeralam.com/ListPage.aspx?SKIN=B 

- பஷீர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It