மாதவிடாய் காலங்களில் நிகழும் உதிரப்போக்கிற்காக துணியினை பயன்படுத்துவது மெல்ல மெல்லக் குறைந்து sanitary napkins என்ற பேடுகளை நமது சமூகம் பயன்படுத்தப் பழகும் இவ்வேளையில், சுற்றுச் சூழல் பேணல் என்ற நிலையில் இருந்து பேடுகள் பயன்படுத்துவது சுற்றுச் சூழலை மாசுபடுத்தும், அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டது, எளிதில் மக்காது என்ற காரணத்தினை முன்னிறுத்தி, பேடுகளுக்கு பதில் reusable menstrual cups (மறு உபயோகம் செய்யக்கூடிய மாதவிடாய் கப்) பயன்படுத்தலாமே என்று ஒரு சிலர் இப்பொழுது குரல் கொடுத்து வருகின்றனர். மாதவிடாய் கப்புகள் 50-60 வருடங்களுக்கு முன்பாகவே உலகில் பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், அதைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களால் பெரும்பான்மையான பயன்பாட்டிற்கு அது வரவில்லை. அதனால் தான் மேலை நாடுகளில் மாதவிடாயினை எதிர்கொள்ள பெண்களுக்கு இருக்கும் சாதனங்களின் பயன்பாடென்பது பேடுகளில் இருந்து நேராக tampon என்ற யோனியில் வழி உட்செலுத்தும் உறிஞ்சு பஞ்சினை நோக்கிச் சென்றது.
சமூக வலைத்தளங்களில் அண்மையில் மாதவிடாய் கப் குறித்து ஊடகப் பிரபலங்கள் நற்சான்றிதழ் கொடுத்து காணொளிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, பெண்கள் பலருக்கு மாதவிடாய் கப் என்பது மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டதா, நமது சூழலுக்கு ஏற்றதா, மறு உபயோகம் செய்யக்கூடியது என்பதால் இது நோய்த் தொற்று உருவாக வழிவகுக்குமா போன்ற போன்ற கேள்விகள் மனதினுள் எழும்பி, தங்கள் மருத்துவ நண்பர்களைக் கேட்க ஆரம்பித்தனர். அப்படி என் தோழி கேட்ட கேள்வியின் விளைவாக அமைந்தது தான் இந்த சிறு கட்டுரை.
மாதவிடாய் கப் என்று இணையத்தில் தட்டினால் பல விலைகளில், பல பிராண்டுகளில் இவை விற்பனைக்கு இருக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆக, இவற்றில் எது சிறந்தது ஏற்றது என்ற கேள்விக்கு பதில், பொதுவாய் இவை சிலிக்கோன் மற்றும் இயற்கை ரப்பரினால் செய்யப்பட்டவையாக இருக்கின்றது. இவ்விரண்டில் இயற்கை ரப்பர் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதனால் சிலிகோனால் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் கப்பினை நாம் பயன்படுத்தலாம். இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் மார்க்கெட்டில் மலிவான, தரமற்ற சிலிகோன் மாதவிடாய் கப்கள் பல இருக்கின்றன என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். வழிகாட்டுதலுக்கு, உங்கள் மருத்துவரை அணுகுதல் நலம். 200 - 300 ரூபாய்க்கு விற்கப்படும் இவை, மருத்துவ உபயோகத்திற்கான தரத்துடனானவையாக இருப்பதில்லை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
மாதவிடாய் கப்கள் பயன்படுத்தும் பொழுது, கையினை சோப் கொண்டு நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலிகோன் தன்னளவில் எவ்வித நுண்ணுயிர்களும் பல்கிப் பெருக விடாது என்றாலும் நாம் நமது கையினால் தொடும் பல பரப்புகள் (surface) எ.கா. கைப்பிடிகள், மேசை போன்றவை பல விதமான நுண்ணுயிரிகளால் நிறைந்தது. எனவே, மிக சுத்தமாக நமது கைகளை கழுவிக் கொள்வதும், மாதவிடாய் கப்களை பயன்படுத்தியப்பின், அதில் உள்ள உதிரத்தைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தியப்பிறகு, அதனை சுத்தப்படுத்தி பயன்படுத்துதலும் மாதவிடாய் நாட்களுக்குப் பின்னர் அதனை உற்பத்தியாளர் சொல்லியிருப்பது போன்று, பாதுகாப்பாய் வைத்திருத்தலும் மிக முக்கியம்.
அதோடு முக்கியமான விஷயம், உதிரப்போக்கு ஏற்படும் போது அது மாதவிடாய் கப்பினில் வந்து சேர்ந்துவிடும், அந்த உதிரம் 12 மணிநேரத்திற்கு மேலாக கப்பினில் தங்கவிடுவது நல்லதல்ல. காரணம், அதுவே ஈஸ்ட் (yeast) தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பாய் அமைந்துவிடும். எனவே உதிரப்போக்கு குறைவாய் இருந்தாலும் அவ்வப்போது சுத்தம் செய்து உபயோகிப்பது நல்லது. கடும் உதிரப்போக்கு இருக்கும் போது ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையும் குறைவாக இருக்கும் பொழுது 2 முதல் 3 முறையும்.
உதிரம் 12 மணிநேரத்துக்கும் மேல் சுத்தப்படுத்தப்படாமல் உடம்பில் இருந்தால், அந்த உதிரமே தொற்று உண்டாக்கும் நுண்ணுயிர்களை பல்கிப் பெருகச் செய்யும் உணவாய் அமைந்துவிடும். இது, Staphylococcus aureus என்ற கொடிய தொற்று பிறப்புறுப்பினில் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தும், அதோடு யோனியில் இருக்கும் அமிலத்தன்மை கொண்ட சூழலை (acidic microenvironment in vagina) அது சமநிலை இழக்கச் செய்து, நுண்ணுயிர்கள் தங்காதபடிக்கு இருக்கும் சூழலை பாழ் செய்து புதிய நோய்த் தொற்று ஏற்பட வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
ஆக, மாதவிடாய் கப்பினைப் பயன்படுத்த நினைப்பவர்கள், நீங்கள் உங்கள் உடலினுள் ஒரு பொருளினை வைக்கப் போகிறீர்கள் என்ற புரிதலோடு இதனை அணுகுதல் வேண்டும். தக்க ஆராய்ந்து, மாதவிடாய் கப்பினை தொடர்ந்து உபயோகப்படுத்துபவர்களின் அனுபவத்தினைக் கேட்டு அறிந்து பின் ஒரு முடிவினை எடுப்பது சாலச் சிறந்தது. அதோடு, உங்கள் மருத்துவரிடம் இது குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, முறையாய் எப்படி இக் கப்புகளை அணியவேண்டும் என்பதனையும், மறு உபயோகம் செய்யும் முன் எவ்வாறு அதனை சுத்தம் செய்வது, எந்த solution கொண்டு சுத்தம் செய்வது போன்ற கேள்விகளுக்கு பதிலினைத் தெளிவுபடுத்திக்கொண்டு, தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஆலோசனைப் பெற்றுக்கொண்டு, உபயோகப்படுத்திய பிறகு எச்சூழலில் இதனைப் பத்திரப்படுத்துவது என்பதனை அறிந்து, மாதவிடாய் கப்பினை அணிய முற்படலாம்.
பேடுகள் அணிவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகின்றதே என்று குற்ற உணர்வு கொள்வோர் கவனத்திற்கு: பேடுகளை முறையாக அதற்குரிய குப்பைத்தொட்டியில் சேர்ப்பித்து, பேடுகளை எரித்து சாம்பலாக்கும் இயந்திரம் இருக்குமானால் (Incinerators) அதனில் சேர்ப்பித்து, முறைத்தவறி கழிவறையில் பேடினை அப்புறப்படுத்தாமல் இருந்தாலே முக்கால் வாசி பிரச்சனை என்பது இது குறித்து ஆய்வு செய்பவர்களின் கருத்து. அதனையும் மீறி, சூழல் மேல் அக்கறைக் கொண்டு மாதவிடாய் கப்பினைப் பயன்படுத்தலாமே என்று எண்ணினால், உங்கள் ஆரோக்கியத்தின் மீது சிரத்தை எடுத்து மேற்சொன்னவற்றை மனதில் கொண்டு, சந்தேகங்களைத் தெளிவுப் படுத்திக்கொண்டு முறையாக பயன்படுத்தவும். ஆக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்று தான், தரமான மாதவிடாய் கப்பினைத் தேர்ந்தெடுத்தல் மிக மிக முக்கியம்.