தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளில் கண்பார்வையில்லாதவர் போல் ‘கூலிங் கிளாஸ்' அணிந்த நடுத்தர வயதுடைய ஒரு மர்ம ஆசாமி ஒரு கைத்தடியுடன் ஜன சந்தடி உள்ள இடத்தில் குறிப்பிட்ட சிலரைத் தேடிப் பிடித்து ஒரு தீப்பெட்டியைக் கொடுத்துவிட்டு கூட்டத்தில் மறைந்து விடுவான். அதை வாங்குபவரின் கை நடுங்கும். தீப்பெட்டியைத் திறந்தால் உள்ளே ஒரு பொம்மைப் படம் ஒட்டியிருக்கும். அவ்வளவுதான் அதை வாங்கியவருக்கு கிலி பிடித்து எப்படியடா தப்பிப்பது என்றிருக்கும்.

இப்படித்தான் ரயில்வே நிலையங்களில், நெரிசல் மிகுந்த சாலைகளில், ஆளைப் பார்த்துப் பார்த்து சீட்டு கொடுக்கிறார்கள் சிலர். குறிப்பாகத் தொந்தி போட்ட நபர்களிடம்தான் இந்த சீட்டு வந்து சேரும். அதில் ஆங்கிலத்தில், ‘இப்போதே குறைக்கணுமா எடையை, என்னைக் கேளு வழியை!' என்று எழுதப்பட்டிருக்கும். தொப்பையை நசுக்க முடியாத கோபம், சீட்டை நசுக்கித் தூர எறிந்து போடும். ‘எனக்கு தொப்பை இருந்தா உனக்கென்னய்யா, உன் சோலிய பாத்துட்டுப் போவியா?' என்று சொல்லிவிடத் தோன்றும். அப்படியான அலட்சியம் கூடாது என்பதுதான் நாம் விவாதிக்கப் போவது.

தொப்பை ஒரு அந்தஸ்து அடையாளமாகப் பார்க்கப்பட்ட காலம் வேறு, இப்போது அது உடல்நலத்திற்குக் கேடு என்பதன் அறிகுறி. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் உட்கார்ந்த இடத்தில் மேசை உழைப்பு செய்பவர்களுக்கே பெரும்பாலும் தொந்தி போடுகிறது. அதிகக் கொழுப்புள்ள பதார்த்தங்கள், எந்த உடல்பயிற்சியுமற்ற அன்றாட வாழ்க்கை எல்லாம் சேர்ந்து நல்லதொரு வடிவமாக பரிணமித்துத் தொப்பையாக வந்து நின்று ‘ஓகே' யா என்று நம்மிடமே கேட்கிறது.

ஒரு வயதிற்குப் பிறகு மரியாதை மிக்க உருவ லட்சணங்களில் ஒன்றாகப் புரிந்து கொண்டு ‘சரி, அதுவும் ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டுமே', என்று தொப்பையை செல்லப்பிள்ளை மாதிரி தடவிக் கொடுத்து ரசிப்பவர்கள் உண்டு. குழந்தைகள் குதித்து ‘தொம் தொம்' என்று விளையாட தோதாக இருப்பதாக சிலாகிப்பவர்களும் உண்டு. ‘கண்ணாடியில்தான் ஏதோ கோளாறு. அவ்வளவு பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை' என்று நம்ப நினைப்பவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அடுத்த ரகம் ‘சைகாலஜி'படி செயல்படுபவர்கள். தெருவில் நடக்கையிலோ, விருந்திலோ, அலுவலகத்திலோ தமது வயதையொத்த வேறு இரண்டு, மூன்று பேர் ஏறத்தாழ சம பரிமாணங்களுடன் தென்பட்டுவிட்டால் போதும், திருப்தியோடு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.

"என்னங்க பேண்ட்டை இன்னும் மேல ஏத்திப் போடலாமில்ல, எதுக்கு சட்டையை வெளியே இழுத்து உடுறீங்க, `இன்' பண்ணிட்டு வந்தா அவ்வளவா தெரியாதுல்ல" என்று திருமண வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குப் புறப்படும் போதான நேரத்து எச்சரிக்கைக் குறிப்புகள் காதில் விழும்போது எரிச்சல் வரும். என்ன, புகைப்படத்திற்கு நிற்கும் போது பக்க வாட்டிலோ, இப்படி, அப்படியோ, சரி செய்து நின்றுவிட்டால் விகாரமாகத் தெரியாது என்ற உணர்வுகள் எல்லாம் விருந்து மேசைக்குப் போன மாத்திரத்தில் மாறி விடும்.

அப்புறம் என்ன, அதே இனிப்பு வகையறா, அதே எண்ணெய் பதார்த்தம், வெளுத்துக் கட்டுவார் மனிதர். இன்னொரு பங்கு கொழுப்பு!

தொப்பை, ஆண்களுக்கு இருதய நோய் வரக்கூடிய காரணங்களில் ஒன்றாக இருந்துவிடக்கூடும். அதற்கான வாய்ப்பு அதிகம். ‘எக்ஸ் சிண்ட்ரோம்' என்கின்றனர்.

பெண்களுக்கு மாதவிடாய் சீரற்ற முறையில் அமைவதற்கும், கருப்பையில் சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Overies) வருவதற்கும் தொப்பை ஒரு காரணமாகி விடுகிறது. சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சைகளுக்குப் பின் தொப்பை போடுவது குடல் இறக்கம் எனப்படும் `ஹெர்னியா' (`இரண்யா' அல்ல!) ஏற்படுவதற்கும், ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னும் மீண்டும் அது ஏற்படுவதற்கும் கூட தொப்பை காரணமாகிறது. தொப்பை என்பதை உபரி கொழுப்பு என்று வாசிக்கவும்.

தொப்பை வந்த பிறகு, வடிவேலு' மாதிரி 'நாங்க எதையும் பிடிச்சுக்காம நிப்போம்ல' என்று சவால் எல்லாம் விட முடியாது. நமது உடல் சாதாரணமாய் இருப்பதற்கும், தொப்பை போட்ட நிலைக்கும் வேறுபாடு என்னவென்றால் புவி ஈர்ப்பு மையம் (Centre of Gravity) மாறி விடுகிறது. அதனால், இடுப்பு வலி, முதுகு வலி, முட்டி வலி இலவச இணைப்பாக வந்து சேருகிறது.

சரிவிகித உணவு, கொஞ்சம் நடை, எளிமையான உடற்பயிற்சி போன்றவைதான் தொப்பையைத் தவிர்க்கும் வழி. தொப்பையைக் கரைக்க? ஏராளமான காய்கறிகள், பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி இன்னும் சிறந்தது.

`லிப்ட்' காலியாக இருந்தாலும் மாடிப் படிகள்தான் நமது தோழன் என்று உணர வேண்டும். வீட்டை விட்டு இறங்கினால் வாகனம், வாகனத்திலிருந்து இறங்கியதும் வீடு என்றிருப்பதைக் கொஞ்சம் மாற்றி காலார நடப்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்களை விட, குழந்தைகளிடம் இந்தத் தொப்பை (OBESITY) பெரிய பிரச்சினையாகி வருகிறது. ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பலவற்றில் விளையாட்டுத் திடல் என்ற பேச்சே கிடையாது. ஆனால் பள்ளி தவறாமல் கான்டீனுக்கு மட்டும் குறைவு கிடையாது. குழந்தைகளுக்கு வீட்டிலோ டி.வி. பார்த்துக் கொண்டே சிப்ஸ். ஓட்டலிலும் கொழுப்புச் சத்து மிக்க உணவு வகை. படித்தால் மட்டும் போதுமா என்ற கேள்வியை உடற்பயிற்சி கோணத்திலும் கேட்க வேண்டியிருக்கிறது.

எதுவுமே செய்யாமல் விட்டால் போதும் - சுலபமாகத் தொந்தி விழுந்துவிடும். என்ன செய்தால் அதைக் கரைப்பது என்பதற்குத்தான் அலைந்து திரிய வேண்டியிருக்கும். அதற்கும் சுலபமான வழி இருக்கிறது என்று வரும் விளம்பரங்கள் ஏராளம்.

‘ஒரு வாரத்தில் இத்தனை கிலோ குறையும்' என்று படிக்க ஆசையாகத் தான் இருக்கும். அதில் படிக்க முடியாத சிறு எழுத்தில் ‘உணவுக் கட்டுப்பாடு' என்று எழுதப் பட்டிருக்கும். உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால்,உடல் அசர வேலை செய்தால் (Physical Exertion) தொப்பை தானே கரையும். எதற்கு காசு கொடுத்து பெல்ட், ஸ்டிக்கர், வைப்ரேட்டர் என்ற ஏமாற வேண்டும்? அது விளம்பரக் கம்பெனி ஆசாமிகள் தொப்பைக்குத்தானே போகும்!

-டாக்டர். பி.வி. வெங்கட்ராமன், M.D., (ஓமியோபதி) அவர்களது ஆலோசனைக் குறிப்புகளிலிருந்து

(நன்றி : வங்கி ஊழியர் திங்களிதழ் அக்டோபர் 2007)

Pin It