சென்ற 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்ட மீனவ மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பெரிதும் சீர்குலைய செய்துள்ளது.மீனவ கிராமங்களில் அழுகுரல்கள் இன்றும் கேட்டு கொண்டு தான் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகியிருக்கிறார்கள்.
வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும், சுனாமி வந்த சமயத்திலும் மீனவர்கள் செய்த மீட்புபணிகளும் செய்த சேவைகளும் மிகவும் மகத்தானவை. ஆனால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது எங்களுக்காக ஒருத்தரும் வரலையே என்கிற வேதனையில் இன்று மீனவர்கள் இருக்கிறார்கள்.
பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கும் நபர்களை இழந்திருக்கிறார்கள். கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே இன்னும் தெரியவில்லை.பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு பேசும் போது நம் கண்ணில் இரத்தக் கண்ணீரே வருகிறது.
ஆனால் மீனவர்கள் பலியானதற்கு ஒக்கி புயல் தான் காரணமா என்றால் இல்லை என்பது தான் பதில். மீனவர்களின் மரணத்திற்கு பின்னால் இருப்பது நம் அரசுகளின் பாசிச முகமே. அரசுகளோடு சேர்ந்து கொண்டு நம் இந்தியச் சமூகமும் தன் கோர முகத்தைக் காட்டி மீனவர்களை படுகொலை செய்தது. ஆம்! நடந்திருப்பது ஒர் இனப்படுகொலை. இந்த இனப்படுகொலைக்கு பின்னால் இருக்கும் காரணிகளைப் பற்றி பேச வேண்டியது மிக அவசியமான ஒன்று.
முதலில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மண்டலத்தில் காணப்படும் அரசியல் மற்றும் சமூகநிலையைப் பற்றி பார்ப்போம். பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் கூறும் போது மீனவ கிராமங்களைத் தவிர இம்மாவட்டத்தின் இதர பகுதிகளில் கடலில் உயிருக்கு போராடும் மீனவர்களைப் பற்றி யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை என்றார். இது தான் குமரி மாவட்டத்தின் கள யதார்த்தம். தன் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்படும் போது கூட அதனைப் பற்றிய சிறிய கவலை கூட கொள்ளாமல் இருக்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதற்கு பின்னால் இருப்பது சாதி வெறி மற்றும் மத வெறி.
குமரி மண்டலத்தில் என்று ஆர்.எஸ்.எஸ் சக்திகள் வலுப்பெற ஆரம்பித்ததோ அன்றே அப்பகுதி மக்களிடையே சாதி வெறியும் மத வெறியும் ஆட்டம் போடத் தொடங்கிவிட்டது. வெறுப்பை மூலதனமாக்கி அரசியல் வெற்றிகளைப் பெறுவது ஆர்.எஸ்.எஸின் பாணி. ஆகையால் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த குழந்தையான பிஜேபிக்கு கணிசமான ஒட்டு வங்கி இம்மண்டலத்தில் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு எம்.பி பதவியைக் கொடுத்து பொன்னாரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தது கன்னியாகுமரி தொகுதி. 2016 சட்டமன்ற தேர்தலில் பிஜேபியால் குமரி மண்டலத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றது.பிஜேபியின் மாநில தலைவரான தமிழிசையும் இப்பகுதியைச் சேர்ந்தவரே. குமரி மண்டலத்தில் பெரும்பான்மையாக இருப்பது நாடார்கள்.இவர்களின் ஆதரவால் தான் குமரி மண்டலத்தில் பிஜேபியும் அதன் தாயான ஆர்.எஸ்.எஸ்-ம் உயிர்ப்போடு இருக்கிறது.
இதில் ஒர் ஆறாத வடு என்னவென்றால் குமரி உட்பட தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார்கள் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை மேற்கொண்டிருந்தால் பல மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டிருப்பார்கள் என்பது நிசர்சனமான உண்மை. ஆனால் இவர்களை மீனவர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் தடுத்தது இவர்களின் சாதி வெறி. இந்த சாதி வெறிக்கு உரம் போட்டு வளர்ப்பது அங்கேயிருக்கும் சங்பரிவாரங்களே.
சமீப உதாரணம், திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலின் நாடார்களின் குலத்தொழிலான பனையேறும் தொழிலைக் கூறி நாடார்களை இழிவு செய்து விட்டதாக சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் கிளப்பிய வதந்தியால் நாடார்கள் பலர் உணர்ச்சி பிழம்பாக மாறி ஸ்டாலினுக்கு பல விதங்களில் எதிர்ப்பைக் காட்டினார்கள். ஸ்டாலின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.நாடார் சங்கங்களின் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இது வதந்தி என்று நீருபணம் செய்யப்பட்ட பின்பு தான் அவர்களின் எதிர்ப்பு அடங்கியது. ஒர் வதந்திக்கு பலியாகி எதிர்ப்பை காட்ட தெரிந்த இவர்களுக்கு தங்கள் பகுதியில் இருக்கும் மீனவர்கள் கடலில் உயிருக்கு போராடும் போது அவர்களுக்கு ஆதரவாக ஒர் சிறிய குரலைக் கூட எழுப்ப மனம் வரவில்லை என்பது கசப்பான உண்மை.
சாதி வெறியைப் போலவே மத வெறியும் மக்களின் மனசாட்சியை கொன்று மீனவர்களை பலி கொடுத்தது. சில தினங்களுக்கு முன் பிஜேபியின் மாநிலத் தலைவர் தமிழிசை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து குறித்து பேசுகையில் ஒர் கருத்தைக் கூறினார். அதாவது அங்கே மாற்று மதத்தினரும் கடவுள் மறுப்பாளர்களும் கடை வைத்திருப்பதால் இந்த தீவிபத்தை அவர்கள் நடத்தியிருப்பார்கள் என்பது தான் அவர் பேசிய பேச்சின் கருத்து.தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்கிற வஞ்சக எண்ணம் நிரம்பிய ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களை கூற இயலும். தமிழிசையும் பொன்னாரும் வெளிப்படையாகவே தென் மாவட்ட மக்களிடையே மத வெறியைத் தூண்டி வருகிறார்கள்.
இதுவும் மீனவர்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு பெரிதும் காரணம். தன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் உயிருக்காக உதவிக்குரல் கேட்கும் போது அவர்களுக்காக போராடாமல் அவர்களை மத அடிப்படையில் வேறுபடுத்தி ஒடுக்கினார்கள் இப்பகுதி மக்கள்.
மக்கள் சாதி,மதம் இவற்றை கடந்து போராடியிருந்தால் இன்று பல மீனவர்கள் நம்மிடையே உயிரோடு மீட்கப்பட்டிருப்பார்கள், பல குடும்பங்கள் இப்படி நிலைகுலைந்து போயிருக்காது. உடன் இருக்கும் இருக்கும் மனிதர்களே சாதி,மதம் கொண்டு சக மனிதர்களை ஒடுக்குவது இந்திய சமூகத்தில் காணப்படும் மிகப் பெரிய தீமை.
ஊடகங்களுக்கும் மீனவர்களின் இனப்படுகொலையில் பங்கு உண்டு. ரஜினியும் கமலும் தும்மினால் கூட அதை வைத்து பல வாரங்கள் விவாதங்கள் வைக்கிறது இந்த ஊடகங்கள். ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் அதை தேசிய பிரச்சனையாக மாற்றுகிறது ஊடகங்கள். ஆண்டாள் பிரச்சனையை வைத்து பல நாட்கள் விவாதிக்கிறது ஊடகங்கள். ஆனால் மீனவர்கள் கொத்துக் கொத்தாக மடியும் போது அதை கண்டும் காணாமலும் இருந்து கள்ள மவுனம் காத்தது ஊடகங்கள்.
சமூக வலைத்தளங்களில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக தமிழக ஊடகங்களில் சில இப்பிரச்சனையில் காலம் கடந்தாவது கவனத்தை காட்டினாலும் ஆங்கில ஊடகங்கள் இந்த பிரச்சனையை கண்டு கொள்ளவேயில்லை. சர்வதேச பிரச்சனையாக மாற்றியிருக்க வேண்டிய மீனவர்களின் பிரச்சனையை வெறும் உள்ளூர் பிரச்சனையாக மாற்றி அதை நீர்த்து போகச் செய்ததலில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
சில நூறு பேர்களுடன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய செய்தி இந்திய ஊடகங்களில் முதல் இடத்தை பிடிக்கிறது. ஆனால் பல ஆயிரக்கணக்கான சொந்த நாட்டு மீனவர்கள் காணாமல் போன செய்தி இந்திய ஊடகங்களில் கடைசி இடத்தில் கூட வரவில்லை.
இந்திய அரசு மீனவர்கள் மீது நடத்திய இனப்படுகொலையை ஊடகங்களும் பொது சமூகமும் வேடிக்கை பார்த்தது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் மடிந்ததற்கும் காணாமல் போனதற்கும் மத்திய பிஜேபி அரசு, மாநில அதிமுக அரசு இவை இரண்டுமே இவ்விகாரத்தில் மிக அலட்சியமாக நடந்து கொண்டது தான் காரணம். இவைகள் நினைத்திருந்தால் அனைத்து மீனவர்களையும் மீட்டிருக்க முடியும், ஆனால் மீனவர்கள் மடியட்டும் என்று இவர்கள் செயல்பட்ட விதமும் காட்டிய அலட்சியமும் மீனவர்கள் மீது நடத்தப்பட்டது ஒர் இனப்படுகொலையே என்று உறுதியாக கூறுகிறது.
புயல் வருவதை பற்றி அரசு முன்கூட்டியே மீனவர்களுக்கு தெரிவிக்கவில்லை. மீனவர்களின் உயிர்களைச் சிறிதும் மதியாமல் மீட்பு பணிகளை செய்வதில் அரசுகள் அலட்சியம் காட்டியது.நூறு நாட்டிகல் மைல்களையும் தாண்டி மீன்பிடிக்கச் செல்வது தான் குமரி மாவட்ட மீனவர்களின் வழக்கம். ஆனால் நம் அரசுகள் அனுப்பிய மீட்புபடைகள் வெறும் 50 நாட்டிகல் மைல் வரைதான் பெயரளவில் தேடுதல் நடத்தின. பல நாட்களாக உயிருக்கு போராடிய மீனவர்களைத் தேடி வந்து காப்பாற்றியது சக மீனவர்கள் தான்.அரசு அனுப்பிய மீட்புபடைகள் ஏதுவும் மீனவர்களை மீட்கவில்லை. மத்திய மாநில அமைச்சர்கள் காட்டிய திமிர் அவர்கள் மீனவர்களை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதை காட்டியது. பிரதமர் மோடி புகைப்படத்திலேயே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது அராஜகத்தின் உச்சம். மீனவர்கள் மீதான அலட்சியத்தின் மூலம் இந்திய அரசு மீனவர்கள் மீது ஒர் இனப்படுகொலையை நடத்தியிருக்கிறது.
மத் திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தங்கள் அபயக்குரல் கேட்க வேண்டும் என்பதற்காக பல அறவழிப் போராட்டங்களையும் செய்தார்கள் மீனவர்கள். மீனவர்களின் அபயக்குரல்கள் தங்கள் செவிகளில் விழுந்தாலும் செவிடர்களைப் போல் இருந்தார்கள் மத்திய அரசும் மாநில அரசும்.
சங்கராச்சாரியார் முன்னால் ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் மண்டியிட்டு விழுந்து கிடக்கிறது.ஆனால் மீனவர்கள் மரணத் தின் விளிம்பில் நின்றால் கூட அவர்களுக்கு உதவாமல் அலட்சியம் காட்டுகிறது அரசு நிர்வாகம். நம் நாட்டு அரசு நிர்வாகத்தை கையில் வைத் திருக்கும் இந்துத்துவவாதிகளின் பார்வையில் மீனவர்கள் என்பவர்கள் சூத்திரர்கள். மீனவர்கள் மீது காட்டப்பட்ட அலட்சியத்திற்கு இதுவே காரணம்.
மேலும் சாகர் மாலா திட்டத்தின் படி மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்ட வேண்டும் என்பதால் இந்திய ஏகாதிபத்தியம் ஒக்கி புயலை பயன்படுத்தி மீனவர்கள் மீது இனப்படுகொலையை நடத்தியிருப்பதாக சமூக போராளிகள் பலர் கருதுகிறார்கள்.
இந்துத்துவவாதிகளின் கையில் இருந்து என்று நம் நாட்டு அனைத்து நிலைகளிலும் விடுதலை பெறுகிறதோ அன்று தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையும் உரிமையும் சாத்தியமாகும்.