உயர் திருவாளர் ஏழையவர்கள் பின்வரும் கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறார்:-

அய்யா!

kuthoosi gurusamy 300“ஏழையாகிய நான் என்றுமில்லாமல் இப்போது, அதாவது கடந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக, இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை, “கனவு” என்று சொல்வதே தப்பு!

ஏழைக்கேது கனவு? நல்ல தூக்கமில்லாதவனுக்குத் தானே கனவு வரும்? எங்களுக்குத்தான் எப்போதும் அயர்ந்த தூக்கமாச்சே! வெட்டிப் போட்ட மரம் போலக் கிடக்கின்ற எங்களுக்குப் பட்டு மெத்தையும் வெல்வட் தலையணையுமில்லாமலே நிம்மதியாக உறக்கம் வந்து விடுகிறதே! அடாடா! உறக்கத்தை நினைத்தாலே எவ்வளவு மகிழ்ச்சியா யிருக்கிறது! அது ஒன்றுதானே எங்கள் மனவேதனையைத் தீர்க்கும் மருந்து? வறுமையை மறக்கடிக்கின்ற போதை! துயரத்தை நினைவு படுத்தாத மயக்கப் பொருள்!

அது போகட்டும்! ஏழையாகிய எனக்கு இப்பேர்ப்பட்ட சுக்கிரதசை எப்படி அய்யா வந்தது! என்னைப் போன்றவர்களுக்காகத்தான், ‘சுக்கிரதசை’- ‘அதிர்ஷ்டம்’ என்ற சொற்களை யெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்களென்று நினைக்கிறேன். முதலாளித்துவத்தின் மீது மோதாமல், தலைவிதியையும், அதிர்ஷ்டத்தையும், ஆரூடத்தையும் எதிர்பாத்துக் கொண்டே யிருக்கலாமல்லவா? நல்ல வேலை செய்தார்கள்!

கடந்த 5 ஆண்டுகளாக என்னைப் பற்றிப் பேசாதவர்களே இந்தியாவில் கிடையாது! கடவுளை விட ஆயிரம் மடங்கு அதிகமாக என்னைப் பற்றியே தான் எல்லோருமே பேசுகிறார்கள்! இந்திய முதலமைச்சர் முதல் சிறிய நகரசபை அபேட்சகர் வரையில் எல்லோருமே என்னைப் பற்றியே பேசுகிறார்கள்! நேற்றுப் பேசியிருக்கின்ற எல்லாத் தலைவர்களும் ஏழை-ஏழை-ஏழை என்றே பேசிக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள்!! கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஏழையைப் பற்றிப் பேசியிருக்கின்ற பேச்சுக்கள் அவ்வளவையும் வார்த்தைகளாகக் கணக்கிட்டு, ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செங்கல்லாக ஆக்கினால் இந்த நாட்டிலுள்ள ஏழைகள் அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு வீடு சொந்தமாகவே கட்டித் தந்திருக்கலாம்!

ஏழை-ஏழை-ஏழை எங்கு மிதுவே பேச்சு!

இதைத் தவிர எல்லோருக்கும் வேறில்லையே மூச்சு!

- திடீரென்று ஏன் எல்லோருமே என்னைப் பற்றி இவ்வளவு அக்கறையோடு புகழ்ந்து பேசுகிறார்கள் என்று எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது. உடனே எனக்கு அடுத்தபடியாகப் புகழ்ந்து பேசப்படுகின்ற கடவுளைப் பேட்டி கண்டு பேசினேன்! ஏழை மீது திடீர்க் காதல் ஏற்பட்ட காரணத்தை விளக்க முடியுமா, கருணையங்கடலே, என்று கேட்டேன். கடவுள் கூறிய பதில் இது:-

 “ஓ! ஏழையே! உன் சந்தேகம் சரிதான்! உன்னைக் காட்டி உலகத்தை ஏமாற்றுவது போலத்தான் என்னைக் காட்டியும் உலகத்தை ஏமாற்றுகிறான்கள், திருட்டுப் பயல்கள்! நான் எவனையாவது எனக்கு வக்கீல் வேலை செய்யும்படி கூப்பிட்டேனா? என்னைக் காப்பாற்றுவதற்காக எவனையாவது அழைத்தேனா? அவனவன் அவனவன் காரியத்தைப் பார்க்காமல், என்னை ஏன் குறுக்கே மந்திரிகள் வரையில் - எல்லோருமே என்னைத் துணைக்கழைக்கிறான்களே! அவனவன் சுரண்டலுக்கும் அவனவன் சுயநலத்துக்குமே என் பெயரைச் சொல்கிறான்கள்! எல்லாம் தகிடுதத்தம்! இதே போலத்தான் உன் பெயரையும் உபயோகப்படுத்தி வருகிறான்கள்! உள்ளபடியே உன் மீது கவலையிருக்குமானால் எல்லாப் பேர்வழிகளும் ஒன்று கூடி உனக்கு ஒரு சொந்த வீடாவது கட்டித் தர மாட்டான்களா? என் பெயரால், எனக்குத் தேவையில்லாத அளவுக்கு ஊரில் சரிபாதி அளவுக்கு வீடுகட்டி வைத்திருக்கிறான்களே! நான் அந்த வீட்டிலேயா இருக்கிறேன்? அந்த “விபசார விடுதி”க்குள்ளே நான் நுழைவதே யில்லையே! என் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பேறிகள் தானே என் வீட்டைச் சுற்றிக் கொண்டு திரிகிறான்கள்? அது போலத்தான் உன் பெயரையும் சொல்லி ஊராரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்கள்! நீ அவர்களை நம்பாதே! நீ உன்னையே நம்பு! ஏழ்மையைப் போக்கிக் கொள்ள நீயே முயற்சி செய்! புரட்சி செய்”- என்று கூறினார், கடவுள்!

இதென்ன? கடவுளே இப்படிச் சொல்கிறாரே!- என்று எனக்கு வியப்பாயிருக்கிறது. எது உண்மை? கடவுள் என்னிடம் சொன்னதா? அல்லது இங்கே குளம் குளமாக, கடல் கடலாக, எனக்காகக் கண்ணீர் வடிக்கிறார்களே! இதுவா? இரண்டில் எது உண்மையென்பதை விளக்குவீர்களா?

இப்படிக்குத் தங்கள் உடன்பிறந்தான்,

 ஏழை.

இக்”கடிதம்” என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தி விட்டது. ஆமாம்! ஏழைகளுக்காக எல்லோருமே தான் கண்ணீர் விடுகிறார்கள்! இதில் எது மனிதன் கண்ணீர், எது முதலைக் கண்ணீர், என்று எப்படிக் கண்டு பிடிப்பது? எல்லாக் கண்ணீரையும் ஒன்று சேர்த்தால் இந்த நாட்டு நன்செய் நிலங்களுக்கே போதும் போலத் தோன்றுகிறது.

ஏ! கடவுளே! ஏ! ஏழையே!

உங்களைக் காட்டி இன்னும் என்னென்ன திருக்கூத்துக்கள் நடை பெறப் போகின்றனவோ? ஓம் தத்ஸத் ஓம் ஏழை!

குத்தூசி குருசாமி (16-08-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It