கிருஷ்ண பக்தர்களான திரு. வெங்கிடசாமி நாயுடு அல்லது ராஜகோபாலாச்சாரியார் வீட்டுப் பையன்களில் ஒருவன் பெண்கள் குளிக்கின்ற இடத்துக்குச் சென்று அவர்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் திருடிக்கொண்டு மரத்தின்மீது உட்கார்ந்து கொள்கிறான்! பெண்கள் துணிகளைக் கேட்கிறார்கள்! “இரண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டால்தான் தருவேன்”, என்று கூறுகிறான்!

kuthoosi gurusamyஎன்ன நடக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்! போலீசாருக்குத் தகவல் தெரிவிப்பார்கள், மந்திரிகளுக்குக் காவல் புரிந்தும், மதுவிலக்குச் சட்டத்தை மீறுகிறவர்களை விரட்டிக் கொண்டும், கிழவிகள் கொண்டு போகின்ற அரைப்படித் திருட்டரிசியைப் பறிமுதல் செய்து கொண்டும், பெரும் பணியாற்றுகின்றவர்கள் போக மீதியாயுள்ள போலீசார் யாராவது இருந்தால் மேற்படி சேலை திருடனைக் கைது செய்வார்கள்!

உடனே, தான் இன்னார் வீட்டுப் பையன் என்பதை போலீசாரிடம் கூறுவான்.

இதற்குள்ளாக சம்பந்தப்பட்ட மந்திரிக்குச் செய்தி எட்டும், மந்திரி போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டனுப்புவார்!

“ஓய்! போலீஸ்காரரே! உமக்குக் கடுகளவாவது புத்தி யிருக்கிறதா? பையன் செய்தது தப்பா? நம் கிருஷ்ண பரமாத்மா என்ன செய்தாரோ அதைத்தானே செய்தான்? இதென்ன, நாஸ்திக ஆட்சி என்றா நினைத்துக் கொண்டீர்கள்? எத்தனையோ கிருஷ்ண லீலைகளில் இதுவுமொன்று! நீங்கள் அந்தப் பையனைத் தொட்டதே தப்பு! அவன் கலியுகத்துக் கிருஷ்ணாவதாரம்! இல்லாவிட்டால் சடுகுடுவோ, கிரிக்கெட்டோ விளையாடுவதை விட்டு விட்டு இந்தக் கிருஷ்ணலீலையில் இறங்குவானா? மடையர்களே! அவனை மீண்டும் மரத்தின்மேலேயே கொண்டுபோய் விட்டுவிட்டுப் போங்கள்! இது முதல் தடவையானபடியால் உங்களை “டிஸ்மிஸ்” செய்யாமல் “வார்னிங்” கோடு விடுகிறேன்” என்று கூறுவார் மதி மந்திரி!

ஆனால் அமெரிக்காவில் நேர் விரோதமாக நடக்கிறது!

ஆக்லஹாமா! பல்கலைக் கழகத்திலுள்ள மாணவர்கள் தங்களுடன் படிக்கும் மாணவிகளின் உள் ஆடைகளைத் திருடிக் கொண்டுபோய் விட்டார்களாம்! இதற்காக 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களாம்! ஜார்ஜியா பல்கலைக் கழகத்திலும் இதே மாதிரி நடந்ததாம்! இதுவரையில் சுமார் 40 பல்கலைக் கழகங்களில் (யூனிவர்சிட்டி) இந்தக் கிருஷ்ணலீலை நடந்து கொண்டிருக்கிறதாம்! மாணவிகளின் அறைகளில் புகுந்து உள் ஆடைகளைத் திருடிக் கொண்டு போகிறார்களாம்!

இதற்காகவா அவர்களைக் கைது செய்வது? அமெரிக்க அதிகாரிகள் சுத்த நாஸ்திக பிண்டங்கள்!

கல்லூரி மாணவர்களாயிருப்பவர்கள் சாதாரண கிருஷ்ணலீலை கூடவா செய்யக் கூடாது?

“பூதகிவதம்” போன்ற லீலைகளைத்தான் (எப்படி பூதகியை வதஞ் செய்தார் கிருஷ்ணன், என்பதை ஆச்சாரியார் போன்ற புராண காலட்சேபக்காரர்களிடமிருந்து தெரிந்து கொள்க!) மாணவர்கள் செய்யக் கூடாதென்றாலும் பெண்கள் ரவிக்கை போன்ற உள் ஆடைகளைக் கூடவா திருடக் கூடாது?

அமெரிக்க அதிகாரிகளின் நடத்தை நாஸ்திகமா? ஆஸ்திகமா? எனக்குப் புரியவில்லை! நமது மந்திரிகளைத்தான் கேட்க வேண்டும்!

பெண்களின் உள் ஆடைகளையோ, வெளி ஆடைகளையோ திருடு வதன் மூலம் அமெரிக்க மாணவர்கள் மகாவிஷ்ணுவின் அவதார மூர்த்தி செய்ததைத் தானே செய்திருக்கிறார்கள்? அதுவுங்கூட அறைகுறையாக! நிர்வாணமான பெண்களை நோக்கி “இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டால்தான் துணியைத் தருவேன்,” என்று கூட அமெரிக்க மாணவர்கள் கூறவில்லையே!

கிருஷ்ண பக்தர்களின் வீடுகளைப் பாருங்கள்! கிருஷ்ணனின் இந்த லீலையைக் காட்டும் படம் மாட்டப்பட்டிருக்கும்! அந்தப் படத்தைப் பார்த்ததுமே பக்திரசம் டம்ளர் டம்ளராகக் கொட்டும்!

ஆனால் ஒரு விசேஷம்! இந்தப் படம் இரண்டு வகையில் பயன்படக் கூடியதாகும்! பூஜை அறையிலும் மாட்டிக் கொள்ளலாம்! கணவனும் மனைவியும் உறங்குகின்ற படுக்கை அறையிலும் மாட்டிக் கொள்ளலாம்!

- குத்தூசி குருசாமி (27-05-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It