periyar 898உலகத்தில், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் ஆழ்த்தி வைப்பதற்குரிய சான்றுகள் ஆழ்த்தும் சமூகத்திற்றான் காணப்படுவது வழக்கம்.

ஆனால் தமிழ் மக்களை மிருகங்கள், குரங்குகள், பேய்கள், இராக்கதர்கள், கொடியவர்கள், குடிகாரர்கள், சோரம் புரிபவர்கள், கொலை நிகழ்த்துபவர்கள், அநாகரிகர்கள், வரன்முறையற்றவர்கள், தாசி மக்கள், அடிமைகள், குரூபிகள் என்ற வகையில் திரித்துக் கூற ஆரியர்கள் இராமாயணம் என்னும் ஒரு கட்டுக் கதையை வரைந்து, அது ஒரு மதியின்மிக்க ஆரிய முனிவனால் எழுதப்பட்டது என்று அதனைப் போற்றி, அண்டமுகடு முட்டும் வரையிற் புகழ்ந்து, அதற்கோர் மொழி பெயர்ப்பு போன்ற கம்பராமாயணத்தையும் வரைந்து இத் தென்னிந்தியாவில் புதுக்கியதும், இத்தென்னிந்திய மக்கள் தம் இழிவையே அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்ற இராமாயணத்தை ஒரு இதிகாசம் என ஏற்று அதனை மெய் என்று நம்பி அவ்விதிகாச கதாநாயக, நாயகிகளை தெய்வங்களாக ஏற்றதும் வருந்தத்தக்கதோர் உண்மையாகும்.

அறிவுடைய திராவிட மக்கள் சூழ்ச்சியில் மிகுந்த ஆரியக் கதையாம் இராமாயணத்தை நம்பி பார்ப்பனர் வலையிற் சிக்கியதற்குக் காரணம், சிந்திக்குந்தோறும் சிந்திக்கும் தோறும் எளிதில் தோற்றக் கூடியதாயில்லை.

என்றாலும் பொருள் காப்பாளன் அறிவிலும் வலிவிலும் மற்றும் உள்ள எல்லாத் துறைகளிலும் மிகுந்த ஆற்றல் உடையவனாய் இருப்பினும், அறிவிலும் சீலத்திலும் குன்றிய ஓர் கள்வன், அப்பொருளை ஏகதேசம் கவர்ந்து செல்லுவது போல, அறிவுடைய நம் திராவிட மக்கள் இப்பார்ப்பன ஆபாசக் கதையாகிய இராமாயணக் கதையை ஏற்று மதிமோசம் போயினர்.

பார்ப்பனர் சூழ்ச்சியை பத்து கோடி முறை வலியுறுத்தினும் நாம் ஏமாற்றம் அடைந்தது அடைந்ததுதான்.

எனவே, நம்மை இப்பார்ப்பனர்கள் இற்றை வரையில் ஆழ்த்தி அவர் நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும், கடவுள்களையும் நம்மவை என்று ஏற்று நடக்குமாறு செய்ததற்கு இத்தகைய கதைகளே சீவநாடிகளாய் இருக்கின்றன.

பார்ப்பன வேதங்களையும் வேதாந்தங்களையும் பார்ப்பனரே அறியாதவர்களாய் இருக்க, நம்மவர்கள் பெரும்பாலும் அறிவதற்கு இல்லை. நம்மவர்கள் தெய்வங்கட்கும்; சமூக ஒழுக்கங்கட்கும்; மற்றும் எல்லாவிதமான இயல்கட்கும் இப்பொழுது நமக்கு ஆதாரமாய் உள்ளவை பார்ப்பனப் புத்தகங்களேயாம் என்பதில் தடையுளதோ? இல்லை.

எனவே, நாம் நம்முடைய உண்மை நிலைமையை அறியவும், பார்ப்பனர்கள் நம்மை தாழ்மைப்படுத்த இன்று வரை நம்மை அடர்ந்தரசு புரியும் சூழ்ச்சி முறையை தெரிந்து அதனை கத்தரித்து சுயமரியாதை உணர்ச்சிப் படைக்கவும், இராமாயணத்தில் உள்ள ஆபாசங்களை “இராமாயணத்தின் ஆபாசம்” என்னும் நூல் நமக்கு கண்ணளிக்கும் என்பதில் ஐயமின்று.

இந்நூலில் நம் அறிய குடியரசில் வாரந்தொறும் வெளிப் போந்த கட்டுரைகளே மிளிர்வதனால், கட்டுரை ஆசிரியர் திரு.சந்திரசேகரப் பாவலரின் ஆராய்ச்சிக்கு, நாம் ஒரு ஆராய்ச்சி வெளியிடுதல் மிகையாகும்.

ஆதலின் உண்மை திராவிட மக்கள் தொடர்ச்சியாக நம் பதிப்பகத்தால் வெளியிடப்படும் ‘இராமாயணத்தின் ஆபாசம்’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை வாங்கிப் படித்து உண்மை உணர்ந்து எதிரிகட்குத் தக்க ஆப்பிறுத்துவது இன்றியமையாததாகும்.

(குடி அரசு - நூல் மதிப்புரை - 03.11.1929)