முன்பெல்லாம் “ஜப்பான் மேக்” என்றால் எல்லோருக்கும் ஒரு நையாண்டி!

“ஓஹோ! இது ஜப்பான் மேக்கா? அது தான் சீவும் போதே ஒடிந்து கொண்டிருக்கிறது!”- என்று ஜப்பான் பென்சிலைப் பற்றிச் சொல்வதுண்டு!

kuthoosi gurusamy 263எல்லாச் சாமான்களும் இதே புகழ் பெற்று விளங்கி வந்தன!

இதனால் ஜப்பான்காரருக்கு நல்ல சாமான் செய்யத் தெரியாது என்று பலர் கருதியிருந்தனர்! அப்பேர்ப்பட்டவர்களுக்கு உண்மை தெரிவதற்காகவே ஆறு கார்பன் காப்பி எடுக்கக்கூடிய “பைலட்” ஃபவுண்டன் பேனாவைச் செய்தனுப்பித் தம் திறமையைக் காட்டினார்கள், ஜப்பானியர்!

இந்தியாவிலிருப்பவர்களில் பெரும்பாலோர் ஏழைகள்! பணம் படைத்தவர்கள் கூட உயர்ந்த விலை கொடுத்து நல்ல பொருள் வாங்க மாட்டார்கள்! “எதையெடுத்தாலும் ஒண்ணரையணா!”- என்று நூறு தினுசு சாமான்களை வைத்துக் கொண்டு விற்றால், உதவாக்கரைச் சாமான்களைக் கூட வாங்கி விடுவார்கள் என்ற இரகசியம் ஜப்பான்காரருக்கு நன்றாகத் தெரியும்! அணாவுக்கு 4-பென்சில் வாங்கி ஒரே வாரத்தில் நான்கையும் சீவிக் கொட்டினாலும் கொட்டுவார்களே தவிர, நாலணாவுக்கு ஒரு நல்ல பென்சில் வாங்கி அதை 4-மாதத்துக்கு வைத்திருக்கிற புத்தி பணக்கார இந்தியருக்கே கிடையாது என்பது குள்ள ஜப்பானியர்களுக்கா தெரியாது?

ஆதலால் தான் “ஜப்பான் மேக்” என்ற புகழ் இந்தியா முழுவதும் பரவியிருந்தது.

இனிமேல் ஜப்பானுக்கு அந்தப் பெயர் கிடைக்காது, நம் பாரதமாதாவாகிய இந்தியாவுக்குத்தான்!

சைக்கிள் முதல் குண்டூசி வரையில், எதை யெடுத்துக் கொண்டாலும் அருமையான வேலைப்பாடு! சுயராஜ்ய சர்க்கார் வெளிநாட்டுச் சரக்கு இறக்குமதிகளை ஏராளமாகக் குறைத்து விட்டபடியால் உள்நாட்டு உற்பத்தி முதலாளிகள் மண்ணைக் கூடப் பொன்னாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஃபவுண்டன் பேனா மைத் தொழிலுக்குச் சர்க்கார் போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை யென்றும், வெளிநாட்டு முதலாளிகள் இங்கேயே மை உற்பத்தி செய்ய முயற்சி செய்வதைத் தடுக்க வேண்டு மென்றும் அகில இந்திய மை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எழுதுகிறார்.

உண்மைதான், உள்நாட்டு உற்பத்திக்குப் பாதுகாப்புத் தர வேண்டியதுதான், ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு? இப்போதே அதிகமான இறக்குமதி வரி விதிக்கிறார்களே! இதற்கு மேல் என்ன செய்வது? வெளிநாட்டுச் சரக்குகளுக்கு ஈடாக இந்திய சரக்குகளையும் கொண்டு வர வேண்டாமா?

சோப் உற்பத்தியை எடுத்துக் கொள்வோம்! ஏதோ சுமாராகத் தேவலாம்! ஆனாலும் 4-5 முதலாளிகளும் முதலாளி கம்பெனிகளுமே சுரண்டிக் கொண்டிருக்கின்றனவே!

மை உற்பத்தியையே கவனிப்போமே! நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்குக் காரணம், இந்த மை வியாபாரிகளும், பால் வியாபாரிகளும், ஹோட்டல்காரர்களுந்தானே? கிடைக்கிற தண்ணீரில் பாதிக்கு மேல் இந்த மூன்று கூட்டத்துக்குந் தான் சரியாகி விடுகிறதே! பிறகு பயிருக்கு எங்கே தண்ணீர் கிடைக்கப் போகிறது?

எந்த மையை வாங்கினாலும் அடியிலே காஃபித் தூள் மாதிரி தங்கி விடுகிறது! மேலே நீர் தனியாக நிற்கிறது! இந்தத் தொழிலுக்குத்தான் பாதுகாப்பு வேண்டுமாம், பாதுகாப்பு! பித்தலாட்டத்துக்குப் பாதுகாப்பாம்!

இந்திய உற்பத்தியாளருக்குப் புத்தியில்லை என்று நான் சொல்ல மாட்டேன், பணமில்லை யென்றும் சொல்லமாட்டேன், இந்த இரண்டும் வெள்கைக்காரருக்கு மட்டுமே சொந்த உடைமைகள் அல்ல.

ஆனால் ஒரே ஒரு சரக்கு மட்டும் நம் உற்பத்தியாளரிடம் சிறிது கூடக் கிடையாது! அது பிறவிக் குணம் என்று கூடக் கூறுவேன்! அதுதான் நாணயம் அதாவது நேர்மை. இது இங்கே சுத்த சுன்னம்! அதனால் தான் “இந்தியன் மேக்” என்பது அகில உலகப் புகழ் பெற்று விளங்குகிறது

என்னென்ன ஏற்றுமதிப் பொருள்களில் என்னென்ன கலப்புப் பொருள்கள் காணப்படுகின்றன என்பது பற்றி வெளிநாட்டுக்காரரைக் கேட்டாலல்லவோ தெரியும்?

பாரதமாதா புத்திரர்களான நாம், இதில் உலகப் புகழே பெற்று விட்டோம்! அதாவது பொருள்களுக்குக் ‘கலப்பு மணம்’ செய்வதில்!

- குத்தூசி குருசாமி (17-03-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It