kuthoosi guruஅதாவது ஒழிக என்பது வாழ்க என்று பொருள்.
ஒழிய வேண்டியது ஒழிந்தால் தான் வாழ வேண்டியது வாழும்!
நோய் ஒழிந்தால் தானே மனிதன் வாழ முடியும்?
தீமை ஒழிந்தால் தானே நன்மை வாழ முடியும்?

2-ந் தேதியன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் மந்திரி மாதவ மேனன் பேசுகையில், “உச்சிக் குடுமி ஒழிக!” என்று சிலர் கூச்சலிடுகின்றனர்; எதையும் ஒழிக, என்று கூறுவதற்குப் பதிலாக, வாழ்க என்று கூறுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்,” -என்று கூறினாராம்!

“உச்சிக்குடுமி ஒழிந்தால் அந்த இடத்தில் மீண்டும் மயிர் முளைத்து விடுமே!” என்றாராம்! அருமையான விவாதம்! அடுத்த அட்வேட் ஜெனரல் பதவியை மாதவமேனனுக்கு (மந்திரி பதவி போனபிறகு) தரவேண்டு மென்று சிபார்சு செய்கிறேன். நீதிபதிகளின் சிந்தனைக்குத் தொல்லை தரமாட்டார் என்பதற்காக!

“சினையாகு பெயர்” என்று தமிழ் இலக்கணத்தில் ஒன்றுண்டு. அது தான் “உச்சிக்குடுமி ஒழிக!” என்பது. அதாவது அசல் உச்சிக்குடுமியல்ல, ஒழிய வேண்டியது! அதை உடையவருக்குள்ளே அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் வைதீகம் ஒழிக, என்று தான் பொருள்!

‘இ மலையாள வக்கீன்மார் மாதவனாரு, இ இலக்கணத்தை அறியாம் பாடில்லா! எந்தா செய்யி? வலிய கஷ்டமாணு!’

“தலைக்கு ஒன்று கொடு!” என்றால், தலையிலே போலீஸ் தடியினால் அடி என்றா பொருள்? கதர்ச்சட்டை ஆட்சியில் தான் அப்படிப் பொருள்! ஆனால் தமிழ் இலக்கணப்படி, “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று கொடு!” என்றுதான் பொருள். இதுவும் சினையாகு பெயருக்கு ஓர் உதாரணம்!

உச்சிக்குடுமியின் மேல் மாதவனாருக்கு அவ்வளவு காதல் இருந்தால், இவரும் அதை வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபனை யில்லை! அறியாமை ஒழிக! அறிவு வாழ்க! என்று கூறினால் கூட கல்வி மந்திரி சண்டைக்கு வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்! போகட்டும்! லட்சத்திற்கு ஒன்றுகூட இல்லாத இந்த உச்சுக்குடுமிக்காவது வக்காலத்து வாங்கிக் கொண்டு வாதாடியது பற்றி உச்சுக்குடுமியின் சார்பில் (ஏன் கிராப்பின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல்) வக்கீல் மந்திரியாருக்கு நன்றி செலுத்துகிறேன்!

இந்தச் சமயத்தில் நம் கழகத் தோழர்களுக்கும் ஒரு வார்த்தை! ஒழிக! வாழ்க! - ஒலிகள் கட்டுப்பாடாகவும், ஒரே மாதிரியாகவும் மிகமிகக் கம்பீரமாகவும் (சிலர் அழுவதுபோலச் சொல்கிறார்கள்!) இருக்கவேண்டும்! முக்கியமாக கீழ்க்கண்டவைகளைச் சிபார்சு செய்கிறேன்!

ஒழிக!
பார்ப்பனீயம் ஒழிக! ஜாதிகள் ஒழிக!
மதங்கள் ஒழிக! புரோகிதம் ஒழிக!
மூடநம்பிக்கை ஒழிக! பார்ப்பனச் சுரண்டல் ஒழிக!
பெண் அடிமை ஒழிக! அறியாமை ஒழிக!
முதலாளித்துவம் ஒழிக! ஏகபோக உரிமை ஒழிக!
வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! அடக்குமுறை ஒழிக!
வாழ்க!
சமதர்மம் வாழ்க! சமத்துவம் வாழ்க!
திராவிடம் வாழ்க! பேச்சுரிமை வாழ்க!
இன உணர்ச்சி வாழ்க! ஒற்றுமை வாழ்க!
பெண் உரிமை ஓங்குக! பகுத்தறிவு ஓங்குக!

- இவைகளை இடைவிடாது ஊர்வலங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் முழங்கினால் நம் கொள்கைகள் பொது மக்களுக்கு நன்கு விளங்கும்.

இவைகளுக்கிடையே “திராவிட நாடு ஆரியர்க்கில்லை!” என்பதையும் இடைவிடாது பல முறை ஒலிக்க வேண்டும்.

- குத்தூசி குருசாமி (6-10-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It