"இதென்ன, அநியாயக் கிராக்கியாயிருக்கே இந்தப் பஞ்ச காலத்தில் சோறு போட்டால் போதும் என்றிருக்கும்போது நாலு பேர் விலை ஒன்றரையணாவா?” என்று நீங்கள் யோசிக்கிறீர்களல்லவா?

kuthoosi gurusamy 263இது நாலு ஆட்களின் விலையல்ல. நாலு ஆட்கள் இந்தக் காலத்தில் சும்மாவே கிடைப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். சோற்றுப் பஞ்சம் அவ்வளவு மோசமாயிருக்கிறது! நான் சொல்லுவது அவர்கள் விலையல்ல, அவர்கள் சாப்பிட்டுப் போன தின்பண்டங்களின் விலை! பேப்பர் - பென்சில் தொல்லையில்லாமல் இந்த மாதிரிக் கூவுவது பல காஃபி கிளப்புகளில் இன்றுகூட வழக்கமாயிருப்பதைப் பார்த்திருப்பீர்களே! சாப்பிட்டவர் பண மேஜை அருகில் வருவதற்கும், இந்தச் சத்தம் ஹோட்டல்காரர் காதில் விழுவதற்குப் சரியாயிருக்கும்.

நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தடவை ஹோட்டலில் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தேன். என் எதிர் மேஜையிலிருந்த 4 பேர் ஏதோ தின்றுவிட்டு மேஜை அருகில் சென்றார்கள், பணம் கொடுப்பதற்காக, “நாலு பேர் ஒண்ணரையணா!” என்று சத்தம் போட்டான் பொடியன்! ஆச்சரியத்தால் திரும்பிப் பார்த்தேன். நான் மட்டுமா? சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருமே அந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார்கள். பலர் ‘கொல்’லென்று சிரித்து விட்டார்கள்!

நாலு பேரும் என்னதான் சாப்பிட்டார்களோ? எப்படித்தான் பசி தணிந்ததோ, என்று ஆச்சரியப் பட்டேன். பிறகு வெளியில் போனபோது விசாரித்ததில், கிடைத்த தகவல் இது. அந்த ஹோட்டல் பொடியன் தினம் இராத்திரியில் நாடகத்துக்குப் போகிறவனாம். அவனுக்கு டிக்கட் கிடையாதாம்! ஆனால் ‘ரிசர்வ் சீட்டில்’ தான் உட்காருவானாம். அதற்குப் பிரதி உபகாரமாக நான்கு ஆக்டர்கள் தினம் அவன் மேஜைக்கே வந்து அமர்ந்து, இரண்டு ரூபாய் மூன்று ரூபாய்க்குச் சிற்றுண்டி அருந்திவிட்டு அய்ந்தரையணா, ஏழரையணா, ஒண்ணரையணா - இப்படிப் பலவிதமாகக் கொடுத்துப் போவார்களாம்!

பரஸ்பர உதவி எப்படி? பார்த்தீர்களா?

இந்த விஷயத்தை எத்தனை நாளைக்குத்தான் மறைத்து வைக்க முடியும்? ஒரு நாள் ஹோட்டல்காரர் நேரிலேயே கண்டுகொண்டார். அவனை நையப் புடைத்துத் துரத்தி விட்டார்.

நான் அவருக்கு அநுதாபம் கூறினேன். “இத்தனை நாளாக உங்களுக்கு ரொம்ப நஷ்டமாகியிருக்குமே, பாவம்” என்றேன்!

அதற்கு அவர் கூறியதைக் கேளுங்கள்:-

 “நஷ்டமா? எனக்கா? நானா ஏமாறுகிறவன்? அதிலும் நாள் ஒன்றுக்கு இரண்டணா லாபமிருக்கிறது என்றாலும் எவ்வளவு அயோக்கியத்தனம் பாருங்கள்!"

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! “இதென்ன அத்தர் வியாபாரத்தை விடப் பெரிய மோசடியாயிருக்கே,” என்று நினைத்துக் கொண்டேன். அது முதல் ஹோட்டலுக்குள்ளே நுழைவதென்றாலே மனம் வருவதில்லை.

பிராமண ஹோட்டல்காரரைப் போன்ற தேச பக்தர்களை நான் பார்த்ததேயில்லை. மூவர்ணக் கொடி! தேசத் தலைவர்களின் படங்கள்! கதருடை! அடடா! என்ன தேசபக்தி, போங்கள்! இவ்வளவு சமயோசிதவாதிகள் இந்த ஹிந்து மகா சபையிலா சேர்ந்து தொலைக்க வேண்டும்? என்ன அக்கிரமம் பாருங்கள்! திருப்பூரிலும், திருச்சியிலும், நாகையிலும், மதுரையிலும், கோவையிலும் சில இ. மா. சபைக்கார பிராமண ஹோட்டல்களுக்குள் பொதுமக்கள் புகுந்தார்களாம்! வயிறார உண்டார்களாம்! “இரண்டு பேர் மூணரை ரூபாய்!” “மூணு பேர் இரண்டே முக்கால் ரூபாய்!” “நாலு பேர் ஐந்து ரூபாய் ஏழணா!” என்று பயல்கள் வறா வறா என்று கத்திக் கொண்டே யிருந்தான்களாம்! அன்றைக்கு மவுன விரதம் போலிருக்கு, சாப்பிட்டவர்களுக்கு! பேச்சு மூச்சு இல்லாமல் நேரே வீட்டுக்குப் போய் விட்டார்களாம்! என்ன அக்கிரமம் போங்கள்! போகிறபோது "ரொம்ப தாங்க்ஸ்,” என்றாவது ப்ரோப்ரைட்டரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகக் கூடாதா? ‘மானர்ஸ்’ தெரியாத ஆசாமிகள்! இவர்களில் சில பேராவது யோக்கியமாக நடந்திருக்கிறார்களே! அதுவரையில் பரம சந்தோஷம்!

“ஹிந்து மகா சபைக் கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள்,” என்று கூறிவிட்டுப் போனார்களாம். இவர்கள்!

'ஹிந்து மதத்தை வளர்ப்பதற்கு இந்த அற்பத் தியாகம் கூடவா செய்ய மாட்டார்கள், ஹோட்டல்காரர்கள்,’ என்று நினைத்தார்களா இவர்கள் என்று கேட்கிறேன். ஆனால் நுழைவதற்கு முன்னாடியே ஒரு பேச்சு சொல்லி அனுப்பியிருக்கக் கூடாதா? பலகாரமெல்லாம் தயாராக எடுத்து வைத்திருப்பார்களே!

எவ்வளவோ லட்சம் லட்சமாய் சம்பாதித்தவர்கள் ஏதோ ஒரு நாளைக்கு ஆயிரம் - இரண்டாயிரம் பேருக்கு இனாமாக ‘டீ பார்ட்டி’ கொடுப்பதற்கா கஞ்சத்தனம் செய்வார்கள்? ஆனால் எதையும் முறையோடு, சட்ட விரோதமில்லாமல் செய்ய வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும்.

“நான் ஹோட்டலுக்குள் போனது என்னவோ உண்மைதான். வெறும் தண்ணீர் மாத்திரம் ஒரு டம்ளர் வாங்கிக் குடித்தேனே தவிர, ஏதாவது சாப்பிட்டதாக ருசுபிக்க முடியுமா?” என்றெல்லாம் முரட்டு வாதம் பேசக்கூடாது.

ஏதோ ஒரு சிலர் இப்படித் தவறாக நடந்ததற்காக மற்ற ஊர் ஹோட்டல்காரர்கள் பயந்து கொண்டு கடையை மூடித் தொலைக்கப் போகிறார்கள், பாவம்! ஹோட்டலை நம்பியிருக்கும் பொது மக்கள் ரொம்பக் கஷ்டப்படுவார்கள்!

"எத்தனையோ பேர் பிராமண போஜனம் செய்து வைக்கிறார்களே! ஏதோ ஒரு நாளைக்குப் பிராமண ஹோட்டல்காரர்கள் இலவச பொதுஜன போஜனம் செய்து வைத்தால் புண்ணியந்தானே!” என்று என்னைக் கேட்காதீர்கள்!

உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியாது.

- குத்தூசி குருசாமி (06-02-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It