கண்ணபிரான் மைனர் செயின் பேர்வழி! பாரசூட் சில்க் ஜிப்பா பைக்குள்ளிருக்கும் கரன்சி நோட் வெளியே தெரியும்! அமெரிக்கன் கிராப்! வாயில் சிகரெட்! இடுப்பில் மல் வேட்டி! கணுக்காலுக்குக் கீழே 6 அங்குலம் தொங்கும்படியாக பண்ணையாள் மனைவி பச்சையை வெறிக்க வெறிக்கப் பார்த்தான்! அவள் முகத்தைச் சுளித்து முறுக்கைப் போலச் சுற்றி வெறுப்பைக் காட்டினாள். மைனர் பிள்ளை யாண்டான் பிடிவாதம் செய்தான்! நெருங்கினான்! முகத்தை உற்று நோக்கினான்! காம விழிகளால் விழுங்கப் பார்த்தான்! அவள் கையில் ஒன்றுமில்லை. தன்னந் தனியா யிருந்தாள். கூச்சலிடாமல் புத்தி கற்பிக்க எண்ணினாள். மெல்ல அடுக்குப் பானையை அடைந்தாள். கலயத்தில் கை விட்டாள். மிளகாய் பொடியை அள்ளினாள். கண்ணபிரான் கண்களில் தூவினாள்!

kuthoosi gurusamy 263சிறுகதை எழுதும் நோக்கமல்ல. ஆகையால் நிறுத்தி விட்டேன்!

கண்ணில் விழுந்தது மிளகாய்ப் பொடிதான்! ஆனாலும் ‘பொடி’ விஷயம் என்று அலட்சியப் படுத்திவிட முடியுமா?

பார்ப்பனர் பண்ணுகிற அட்டகாசங்களை அம்பலப் படுத்துகிறேனே, இதெல்லாம் பொடி விஷயம் என்று எழுதியிருக்கிறார், திருச்சி இளைஞர் ஒருவர்.

கண்ணபிரானைக் கேட்டால் தெரியும், பொடி விஷயம் எப்படி யிருக்கிறது, என்பதை.

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு வழக்கமுண்டு. மிராசுதார் வீட்டுப் பையனுக்கு எட்டு வயதுதான் இருக்கும். கோவணம் கட்டாமல் கூடத் திரிந்து கொண்டிருப்பான். 40, 50 வயதுள்ளவர்களை யெல்லாம் “டேய்! சுப்பா! வண்டி கட்டேண்டா!” என்றும், “எய், தம்புசாமி இலை அறுத்து வாடா,” என்றும்தான் கூப்பிடுவான். ஆனால் அந்தப் பையனை மட்டும் யாராயிருந்தாலும் “தம்பி வந்தாங்க! சின்னத் தம்பி தூங்குறாங்க! கடைசித் தம்பி அழுகுறாங்க!” என்றுதான் சொல்ல வேண்டும். இது வெறும் ஜாதி அகம்பாவம் மட்டுமல்ல. மிராசுதார் என்ற பணக்காரத் திமிரும் கலந்த ஒரு ஆணவ மனப்பான்மை. மற்றவர்கள் மரியாதையாய்க் கூப்பிட வேண்டும் என்பதற்காக அந்தச் சிறு பயலின் வீட்டுப் பெரியவர்கள் மரியாதை முறையைக் கையாள்வார்கள். அதாவது மற்றவர்களுக்காக நடத்திக் காட்டும் ஒத்திகை அது!

50 வயதுத் தகப்பன் தன் 8 வயதுப் பையனைப் பற்றிப் பேசும் போது, “சின்னத் தம்பி சாப்பிட்டுச்சோ?” என்றுதான் கேட்பார். அதாவது நாளே ‘அவன்’ என்று சொல்வதில்லை பார்! உலகமே ஜாக்கிரதை! என்று எச்சரிப்பது போன்ற அகம்பாவ அறிவிப்பு! இந்த முறை பார்ப்பனரிடத்தில் சர்வ சாதாரணமாய் இருப்பதைக் காணலாம். சாதாரண ஒரு சோம்பேறிப் பார்ப்பனனை ஹைகோர்ட் ஜட்ஜ் அய்யர், “சாஸ்திரிகளே! வாருங்களேன்!” என்றுதான் அழைப்பார். சமையற்காரப் பார்ப்பானைக்கூட மரியாதையாகத்தான் அழைப்பது வழக்கம். பேஷாக அழைக்கட்டும்! ஆனால் வண்டியோட்டுகிற நம்மளவனை மட்டும், “டேய் அண்ணாசாமி! அதட்டி ஓட்டேண்டா!” என்று கூப்பிடுவானேன்? மோட்டார் ஓட்டும் ராமய்யரை மட்டும், "ராமய்யரே! காரை எடுங்காணும் போகலாம்!” என்று கூப்பிடுவானேன்? ஜாதி அகம்பாவந்தானே? நீங்களே சொல்லுங்கள்.

ஒரே ஒரு ஊரில் ஒரு ஹைஸ்கூல். அதில் 4 ப்யூன்கள் இருக்கிறார்கள். அவரில் ஒருவன் மட்டும் பார்ப்பனன். மற்ற மூவரும் நம்மவர்கள். அந்தப் பள்ளியிலுள்ள பார்ப்பன ஆசிரியர்கள் ப்யூன்களை எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?

“டேய்! அரியான், வாடா இங்கே! “

“டேய்! கிருஷ்ணா, போடா அங்கே!”

“டேய்! வீராசாமி, எடுடா அதை!”

ஆனால் பார்ப்பன ப்யூனை அழைக்கும் விதம் எப்படித் தெரியுமா?

“ஒய்! சுப்பையரே! இங்கே வாங்கோ?”

இந்த வித்தியாசம் ஏன்? எல்லோரும் ப்யூன்கள் தானே? இந்த ஆணவத்திற்கு எப்படித்தான் மண்டையிலடிப்பது? இந்தப் பள்ளிக் கூடம் சேலம் ஜில்லாவில் தானிருக்கிறது. ப்யூன்களின் பெயர்கள்கூட உண்மைதான். கற்பனையல்ல.

ஆனால் அவர்கள்மீது குற்றஞ் சொல்லமாட்டேன். நம்மளவன் தான் ஹோட்டல்காரப் பார்ப்பானையும் டிக்கெட் கொடுப்பவனையுங் கூட ‘சாமி’ என்று கூப்பிடுகிறானே! பஸ் கண்டக்டர் பஷீர் அஹமத் கூட பார்ப்பன ட்ரைவராயிருந்தால் "சாமி ! கொஞ்சம் மெள்ளப் போங்க!” என்றுதான் சொல்கிறாரே தவிர, “ரெகுநாதா! மெள்ளப் போடா!” என்று சொல்ல அஞ்சுகிறாரே!

செருப்புக் கடை வைத்திருக்கும் பார்ப்பானைக்கூட, “சாமி! நல்ல செருப்பா ஒரு ஜோடி எடுங்க! அதோ உங்க தலை மேலே இருக்கே, அந்தச் செருப்பு எனக்குச் சரியாயிருக்கும்!” என்றுதானே சொல்கிறார்கள், நம்ம மக்கு பிளாஸ்திரிகள்! அவனைக் குற்றஞ் சொல்வது தப்பு. நம்ம ஆட்கள் மூளைக்குத்தான் தினம் கொஞ்சம் ‘பினைல்’ ஊற்றிக் கழுவ வேண்டும். அவ்வளவு நாற்றம் பிடித்துப் போயிருக்கிறது, போங்கள்!

நான் சொன்னால் இதெல்லாம் பொடி விஷயம் என்பீர்கள்! உங்களுக்குப் பொடி விஷயமாயிருக்கலாம்! ஆனால் எதிரிகளின் கண்களுக்கு மூக்குப் பொடியாகவும், மிளகாய்ப் பொடியாகவும் அல்லவா இருக்கின்றன? இல்லாவிட்டால் நாள் தோறும் ‘குத்தூசி’க்கு இத்தனை அர்ச்சனைகள் நடக்குமா? உளுத்த சரக்குகளை அம்பலப்படுத்துவதை விட “குத்தூசி”க்கு வேறு வேலைதான் என்ன இருக்கிறது?

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It