“ஏண்டா என் பிராணனை எடுக்கிறே? ஏதாவது ஒரு வேலைக்குப் போய்த் தொலையக் கூடாதா? பீ. ஏ. வரையில் படிச்சுட்டு இப்படி ஏண்டா ஊர் சுத்தீண்டிருக்கே!”

kuthoosi gurusamy 263“என்னை என்னப்பா பண்ணச் சொல்றேள்? எந்த ஆபிசுக்குப் போனாலும் வேலை காலி இல்லை என்கிறா. இந்தப் பாழாப்போன கம்யூனல் ஜி.ஒ. ஒழிஞ்சால்தான் ஏதாவது வேலை கிடைக்கும். பிரகாசம்காரு மந்திரியாய் வருகிற வரையில் இந்தப் பீடை ஒழியாது போலிருக்கே! ஸி.ஆர் வந்தாலும் ஒழியுமேண்ணு பார்த்தா அவர் அக்கடாண்ணு போய் கவர்னரா உட்கார்ந்துட்டார்! நம்மளவா கதி என்னாவது என்கிற கவலைகூட இல்லையே! அவரே இப்படிச் செய்தால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்?”

“நீ சொல்றது கொஞ்சங் கூட னேக்குப் பிடிக்கலே! நீ ஏண்டா வேலைக்குப் போகாமே தெண்டச்சோறு தின்னுண்டு இருக்கேண்ணு கேட்டா, ஸி.அர். கவர்னராய்ப் போயிட்டார் என்கிறையே! அடுத்தாத்து கிட்டுவைப் பார்! என்ன சமர்த்து! இண்டர்மெடியட் தான் படிச்சான்! திவான்பகதூர் சு.மு. செட்டியாரைப் பிடிச்சு 150 ரூபாயிலே பாங்கிலே ஒரு நல்ல வேலையை வாங்கீட்டானே! எத்தனையோ சூத்திரன்கள் எம். ஏ. - பீ. ஏ. பாஸ் பண்ணினவனெல்லாம் அப்ளிகேஷன் போட்டிருந்தான்களாம். அவனுக்கெல்லாம் இல்லாமே கிட்டுவுக்குத் தானே கிடைச்சுது?”

“அதெப்படிக் கிடைச்சுது! ஓஹோ! அங்கே கம்யூனல் ஜி.ஓ. இல்லையோன்னோ; அதனாலேதான்!”

“போடா போ! புத்தி இருக்கிறவா எப்படியும் பிழைச்சுக்குவா. எந்த ஜி.ஓ. இருந்தாலென்ன? திடீரென்று நல்ல ஆள் கிடைக்குலேண்ணு சொல்லிவிட்டு டெம்பரரியா மூணு மாசத்துக்கு முதலிலே நுழைச்சுப்பிடுவா! அப்புறம் நல்ல ஆள் கிடக்கிறபோது, அவனுக்கு அநுபவமில்லைண்ணு சொல்லிப்பிடுவா! இப்படி நீட்டீண்டே போய் எத்தனையோ ஆபீசுகளிலே நம்பளவா உத்யோகஸ்தர்கள் எமகாதக வேலை செய்தீண்டிருக்கா! னோக்கு என்னடா தெரியும்? வெறும் புஸ்தகப் பூச்சி தானே! அது கிடக்கட்டும். அந்த சு. மு. செட்டியைப் போய் பார்த்துக் கேளேன். ஆரம்பத்திலே 30-40 ரூபாயிலே புகுந்திண்டாக் கூடப் போறுமே! அந்தப் பாங்க் செக்ரட்டரி இருக்கானே, அவனைப் போய்க் கேளேன்! ஆடுதுறை அண்ணாசாமி அய்யரின் அத்திம்பேர்தானே அவன்! கேட்டுப் பாரேன்!”

“அதெல்லாம் முடியாது அப்பா! 30 இம் 40 இம் வாங்கினா சிகரெட்டுக்குக் கூட (சும்மா, பேச்சுக்கு சொல்றேன்! நான் சிகரெட் குடிப்பதே யில்லை) காணாது அப்பா! நான் ஒரு புதுயோசனை செய்திருக்கேன். இது வரையில் யாரும் செய்யாத யோசனை! அது முடிஞ்சுதோ! அடாடா! தாராளமான பணம்! நல்ல செல்வாக்கு! நல்ல மரியாதை!”

“என்னடாப்பா, உன் புது யோசனை?”

“மகாத்மா இருந்தாரோன்னோ...........

“டேய்! நிறுத்து போதும்! அதுதான் ஆர்.எஸ்.எஸ்., ஆர்.எஸ்.எஸ். என்று ஆட்டமா ஆடி தலைக்கு வந்தது தலைப்பாயோடு போச்சே! நம்பளவா தலையிடாமே இருந்திருந்தா இந்தச் சர்க்காரிலே நீயும் நானும் இன்னும் ஜெயிலுக்குள்ளேதானே இருக்கணும்! போதும்! போதும்! அவர் பேரையே நம்பளவா கொஞ்ச காலத்துக்கு உச்சரிக்கக் கூடாது, தெரியுமோ!”

“என்ன அப்பா இப்படி அவசரப்படுறேளே! மகாத்மாதான் போய்ட்டாரே! நம்பளவாளைத்தான் விடுதலை செய்துட்டாளே! இனிமேல் மகாத்மா பெயரைச் சொல்லியே பல நல்ல காரியங்களைச் செய்வதென்று யோசிச்சிண்டிருக்கேன். அதிலே முதல் திட்டம் என்ன தெரியுமோ? பிள்ளையார் கோவில் மாதிரி ஒரு சின்னக் கோயில் கட்டறது; அதற்குப் பத்தாயிரம் ரூபா வேணும் என்று சொல்லி நோட்டீஸ் போட்டா, ஒரே வாரத்திலே வசூலாகிவிடும். எவனாவது கொடுக்க மாட்டேனுண்ணு சொன்னா அவனை மகாத்மா விரோதி, தேசத் துரோகி என்று சொல்லி விடலாம். பத்தாயிர ரூபாய் வசூல் செய்து மூவாயிர ரூபாயில் கோவிலைக் கட்டிட்டாப் போறது! கோயிலுக்குள்ளே மகாத்மா விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து, ஏதாவது நல்ல வேலை கிடைக்கிற வரையில் நானே அர்ச்சகராகக் கூட இருப்பதாக முடிவு செய்திருக்கேன். நீங்கள் நன்னா சமஸ்கிருதம் படிச்சவராச்சே! இதோ பாருங்கள்! ஒரு காந்தி நாமாவளி கூட எழுதி வெச்சிருக்கேன்! படிக்கட்டுமா? ... (பையன் படிக்கின்றான்)-

ஓம் !!!

(1) ஓம். ஸ்ரீ மஹாத்மா காந்தியே நமஹ! (2) ஓம். ஸ்ரீ ஸதீகஸ்துதூரீ நாதாய நமஹ! (3) ஓம். ஸ்ரீ பூலோக விபாகராய நமஹ! (4) ஓம். ஸ்ரீ சாந்த ஸ்வரூபாய நமஹ! (5) ஓம். ஸ்ரீ ப்ரபஞ்ச பூஜித பாதாய நமஹ! (6) ஓம். ஸ்ரீ நிர் விசாராய நமஹ! (7) ஓம். ஸ்ரீ ஜகத்ஜயோதி ஸ்வ ரூபாய நமஹ! (8) ஓம். ஸ்வேதத் வீபாஜன ஸேவிதாய நமஹ! (9) ஓம். ஸ்ரீ ஸர்வஜன வாத்ஸல்யாய நமஹ! (10) ஓம். ஸ்ரீநிராஹாரவிர்த பிரேமிதாய நமஹ! (11) ஓம். ஸ்ரீ ஸபர்மதி ஆஸ்ரமநிவாஸாய நமஹ! (12) ஓம். ஸ்ரீஸத்யாக்ரஹ வரத தீக்ஷhய நமஹ! (13) ஓம். ஸ்ரீ அஜஷீர ப்ரேமிதாய நமஹ! (14) ஓம். ஸ்ரீ ஜகத்ரக்ஷண தீக்ஷிதாய நமஹ! (15) ஓம். ஸ்ரீ காராக்ருக பிரேமிதாய நமஹ! (16) ஓம். ஸ்ரீ ஜீவன் முக்தி ஸ்வரூபாய நமஹ! (17) ஓம். ஸ்ரீ அபேதஞான மூர்த்தியே நமஹ! (18) ஓம். ஸ்ரீ காதீவஸ்திரப் பிரேமிதாய நமஹ! (19) ஓம். ஸ்ரீ ஹரிஜன ரக்ஷக தீக்ஷhய நமஹ! (20) ஓம். ஸ்ரீ லோக பாவனே ஸ்வரூபா நமஹ! (21) ஓம். ஸ்ரீ ச்ருதயுக தர்மதேவதா ஸ்வரூபாய நமஹ! (22) ஓம். ஸ்ரீமத் ரதாயாம் ராம சுந்தராய நமஹ! (23) ஓம். ஸ்ரீத்வாபரே கிருஷ்ண ஜன்மாய நமஹ!

எப்படி இருக்கு பார்த்தேளா? புலிக்குப் பிறந்தது பூனையாயிடுமா?”

“பலே பேஷ்! நன்னா யிருக்கே! வெகு சீக்கிரத்திலே அஷ்டோத்திரம் வேணுமானாலும் எழுதித் தாரேன்! ஆனால் 24 அவது நாமாவளியாக இதையும் சேர்த்துக்கோ! நம்ப பெரியவாளை மறக்கலாமா?

“ஓம்! ஸ்ரீ! கோட்ஸே ஸம்ஹார மோக்ஷ ப்ரேமிதாய நமஹ!”

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It