‘அல்வாவினால் அடித்தால்கூட பயப்பட மாட்டேன்’ என்றானாம் ஒரு வீரன்! மெத்தைமீது தலையணைகளை வரிசையாக அடுக்கி அதன்மீது பல்டி போடும் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள்! அவ்வளவு ஜாக்கிரதை அந்தக் குழந்தைக்கு!

kuthoosi gurusamyபல்டி அடிப்பது இருக்கிறதே, அது சாதாரணமாய் எல்லோருக்குமே வராது. சிறு வயதிலிருந்தே பழக வேண்டும். திடீரென்று ஒரு நாளைக்கு 38ஆவது வயதில் கையை ஊன்றி பல்டியடிக்க ஆரம்பித்தால் கை ஒடியும் அல்லது கழுத்து முறியும்!

முதலில் மணலில் பல்டி அடித்து பழக வேண்டும். அப்புறந்தான் நினைத்த இடத்தில் அநாயாசமாக பல்டியடிக்க வரும். தலையை ஊன்றாத பல்டி, தலையை ஊன்றிய ‘பல்டி’ என்று பல்டியில் இரண்டு விதம் உண்டு. எந்த பல்டியை அடித்தாலும் ‘மடார்’ என்று உடம்பைப் போடக் கூடாது, முதுகில் அடிபட்டு விடும்.

“அது சரியய்யா! இதெல்லாம் பசங்களுக்கல்லவா வேணும்? அரசியல் சிக்கல்கள் எத்தனையோ இருக்கும்போது ‘பல்டி’ அடிப்பதைப் பற்றி பிரமாதமாக பிரசங்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறீரே! இது யாருக்குத் தேவை?” என்று உங்களிற் சிலர் ஆத்திரப்படலாம்.

நான் மேலே சொன்னது பையன்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்குக் கூடத்தான். அவர்களை யார் பல்டி போட வேண்டாம் என்று தடுத்தார்கள்? தாங்களாகவே வெட்கப்பட்டுக் கொண்டு தாயமும் பல்லாங்குழியுமே விளையாடிக் கொண்டிருந்தால் அதற்கு நானென்ன செய்ய முடியும்?

நான் சொன்ன பல்டி பெண்களுக்கும் பொதுவானது போலவே, அரசியல்வாதிகளுக்குக்கூட பொருத்தமாயிருக்கும்.

எந்த அசியல்வாதியாவது அரசியல் பல்டி அத்துப் பழக வேண்டும் என்று கருதினால், அவர்கள் முதன் முதல் ஆபத்தில்லாத ஒரு கட்சியில் தான் பழக வேண்டும். இன்றுள்ள நிலைமையில் என்னைக் கேட்டால் அந்த மாதிரி யோக்கியதையும் பெருமையும் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தவிர வேறு எந்தக் கட்சிக்குமே கிடையாது.

மற்றக் கட்சிகள் என்மீது கோபப்பட்டாலுஞ்சரி, பரவாயில்லை. “இயற்கையோடு இயைந்த வாழ்வு” என்பார்களே, அது அந்தக் கட்சியில்தான் இருக்கிறது! காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ அந்தப் பக்கந்தானே மரம், செடி, கொடிகள் சாய்கின்றன? காற்றை எதிர்த்து சாய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? இதுதான் ‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்பது. இதைப் போலத்தான் இந்தக் கட்சியும்!

கடந்த உலகப் போரில் காங்கிரஸை எதிர்த்து போருக்கு உதவி செய்தது! ஆகஸ்ட் கலவரத்தில் காங்கிரசைக் கண்டித்தது. பிறகு காங்கிரஸ்காரர் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மந்திரிகளாகவும் வந்தார்கள். கம்யூனிஸ்டுகளைத் துரோகிகள் என்றார்கள். “மாஸ்கோ கூலிகள்” என்றார்கள். உள்ளே தள்ளி கம்பி எண்ணச் சொன்னார்கள். கம்யூனிஸ்ட் நிலையங்களைப் பூட்டி முத்திரை போட்டார்கள்.

அதன் பிறகு வெள்ளையனைச் சரிப்படுத்திக் கொண்டு அதிகாரத்தைப் பெற்றார்கள். வெள்ளையர் ஆட்சி வெளியேறிற்று. ஆகஸ்ட் 15-ந் தேதியும் வந்தது. சிறைக் கதவுகள் திறந்தன. கம்யூனிஸ்ட் தோழர்கள் வெளியே வந்தார்கள். உடனே தலைகீழாக நின்றார்கள்! (பல்டியடிப்பதற்கு இதுதான் முதற்படி!) இரு கொடி ஏந்தினார்கள். சுதந்திரத் திருநாள் என்றார்கள். கும்மாளம் போட்டார்கள். கொக்கரித்தார்கள். அந்த நாளில் கலக்காமல் ஒதுங்கி நின்றவர்களைக் கள்ளுக்கடை பாஷையில் திட்டினார்கள்.

"அதெல்லாம் சரி! அதற்கென்ன இப்போது" என்று தானே கேட்கிறீர்கள்..

“நாம் சுதந்திரமடையவில்லை என்பதை இந்த சுதந்திர தினத்தில் (ஜனவரி 26) நாம் உணர வேண்டும். உண்மையான சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களுக்குத் தலைமை தாங்கி பரிபூரண சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்குப் பதிலாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரஸம் செய்து கொண்டு பேரளவு சுதந்திரத்தை நிலை நாட்டியுள்ளனர். ஆகஸ்ம் 15 -ந் தேதி தம்பட்டம் அடிக்கப்பட்ட “சுதந்திரம்” எப்பேர்ப்பட்ட சுதந்திரமென்பது இன்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது. முதலாளிக் கூட்டமும், சமஸ்தான ராஜாக்களும் ஜமீன்தாரிகளும், தேச விரோதிகளான வகுப்புவாதிகளுந்தான் மக்களைச் சுரண்டிக் கொழுத்து இன்று சுதந்திரமடைந்து நிற்கின்றனர்.”

யார் இப்படிச் சொன்னது என்றுதானே கேட்கிறீர்கள்?

“ஜனசக்தி” அச்சுக் கூடத்தில் அச்சுயேற்றப் பெற்று ஜனவரி 26-ந் தேதியன்று வழங்கப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் துண்டு வெளியீட்டில் உள்ளதுதான், இது!

பல்டி அடிப்பதில் பழக்கமில்லாதவர்கள் முதலில் மணல்மீது அடித்துப் பழகுங்கள்! அரசியல் பல்டி அடித்துப் பழக வேண்டும் என்பவர்கள் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதலாம்: கம்யூனிஸ்ட் ஆபிஸ், 6, டேவிட்ஸன் தெரு, ஜி. டி., சென்னை.

காசு பணமில்லை, இலவசமாகக் கற்றுக் கொடுக்கப்படும்! “கையை ஊன்றித்தானே கரணம் போட வேண்டும்” என்பார்களே! அதுகூடத் தேவையில்லை. கையை ஊன்றக் கூட வேண்டாம். சேர்ந்து பழகினாலே போதும் தானாக வந்துவிடும். அதன் பிறகும் ஓடுகிற டிராமிலும், பறக்கிற ஏரோப்ளேனிலும் கூட பல்டி அடிக்கலாம்!

பல்டிப் பயிற்சியே அரசியல் உடலுக்கு உறுதி இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் திட்டம்!

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It