அன்புடன் சவுக்கிற்கு...

அந்த புத்தகம்... பற்றி எழுதிய கட்டுரையைப் படித்தேன். தொடக்கத்திலேயே உங்களை சந்தேகிப்பதாகவும், உழைத்த அடிப்படை கொள்கைகளை கேள்விக்குள்ளாக்குவதாகவும் ஆதங்கப்பட்டிருந்தீர்கள். இறுதியில் முடிக்கும்போது "இந்த உறவு தொடர வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். உங்களுக்கும் சவுக்கிற்கும் அன்பு பிணைப்பு இல்லாவிட்டால் நமது உறவு தொடர்வதில் அர்த்தமில்லை" என்று வாசகர்களை கேட்டு முடித்திருக்கிறீர்கள். இது, நெருக்கடி வரும்போது தி.மு.க.-வின் தலைவர் கருணாநிதி, தன் கட்சிக்காரர்களிடம் சொல்லும் 'ராஜினாமா' செய்ய வேண்டுமா வேண்டாமா என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளங்கள் என்று கூறுவதைப் போன்று. இப்படி எழுதுவதற்கு வருத்தமே.

சவுக்கின் நேர்மை மீது..

தமிழீழ பற்று மீது..

அநீதிக்கு எதிரான அயராத உழைப்பின் மீது

இந்த நிமிடம் வரை எனக்கு தீராத நம்பிக்கை. நேரில் சந்தித்துக்கொண்டதில்லை என்றாலும் நேசிப்பவன்தான்....

nalini_301ஆனால் அந்த புத்தகம் ஏன் என்பதற்காக நீங்கள் சொன்ன விளக்கம் கொஞ்சம்கூட ஏற்புடையதே அல்ல. அந்த புத்தகத்தின் 11-வது அத்தியாயத்தில் முதல் பத்தி என்று ஒரே ஒரு காரணத்தை சொல்கிறீர்கள். பத்து வரி. "எஸ்.ஐ.டி நல்ல முறையிலேயே இயங்கியுள்ளனர். ஆனால் விசாரணையை சீக்கிரம் முடித்துக் கொண்டது. ஒரே ஒரு குற்றப்பத்திரிகையை மட்டுமே தாக்கல் செய்து, போதும் என்று மூட்டைக்கட்டி கொண்டது. 1993-ல் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அப்படி இல்லை. முக்கிய குற்றப்பத்திரிகையை அடுத்து 13 துணைக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டது" என்ற பெரிய கண்டுபிடிப்பு மட்டுமே உங்களின் 'அந்த புத்தகத்தின்' பெருமையை தமிழுக்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயம் என்று கூறுகிறீர்கள். '26 பேரும் குற்றவாளிகள், புலிகள்தான் செய்தார்கள்' என்று 'கண்டுபிடித்த' வரைக்கும் சிறப்பாக செயல்பட்டார்கள் என அந்தப் புத்தகம் சி.பி.ஐ.க்கு சர்டிபிகேட் கொடுப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இதை வைத்து சிறையிலிருக்கும் 7 பேரை எப்படி விடுவிக்க முடியும்?

366 பக்கம் கொண்ட அந்த புத்தகத்தில் உங்களால் கோடிட்டுக் காட்ட முடிந்தது வெறுமனே பத்து வரிகளைத்தான். இந்த பத்து வரிகளைப் பற்றித்தான் தோழா, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நம் தலைவர்கள் நாயாய் பேயாய் பிரச்சாரம் செய்தபடி இருந்தார்கள். உங்கள் பாணியிலே எழுத வேண்டும் என்றால் 'அந்த சி.பி.ஐ. விசாரணையே ஒரு பேடித்தனம். அயோக்கியத்தனம்' என்று இன்னும் கேவலமாக போடலாம் வார்த்தைகளை. அந்த விசாரணை நடந்து முடிந்ததில் இருந்தே பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் அதைத்தான் மேடைதோறும் முழங்கினார். வைகோ  அவர்கள் பேசிப் பேசியே களைத்துப் போய்விட்டாரே. தோழர்கள் விடுதலை ராசேந்திரன், தியாகு தொடங்கி இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்த சீமான் அவர்கள் வரையிலும் இதைத்தானே ஐயா சொல்லி வருகிறார்கள். பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் டெல்லி உச்சநீதிமன்றம் வரை போன பின்னணியும் இதைச் சொல்லிதானே. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எப்படியெல்லாம் சுழன்றார்கள்?

அவ்வளவு ஏன் உமக்கு அருகிலேயே இருக்கும் தோழர் புகழேந்தி, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மட்டும் என்ன கூறிவந்தார்களாம். 'இந்த சி.பி.ஐ. விசாரணை ரொம்ப ரொம்ப நேர்மையா நடந்து முடிந்திருக்கு. நளினி, பேரளிவாளன் எல்லாம் குற்றவாளிகள்தான்' என்றா பிரச்சாரம் செய்து வருகிறார்கள்? நீங்களும் நானும் இந்த தமிழகத்தில்தானே தோழா இருக்கிறோம்.? இந்தத் தலைவர்களின் பிரச்சாரம் எல்லாம் நாம் அறியாததா? ஒவ்வொரு தலைவர்களும், தோழர்களும் ஆண்டுக்கு 50 பொதுக்கூட்டங்கள் என்றாலும் பத்தாயிரம் கூட்டங்களை கண்டிருக்கிறோமே. அவர்கள் பேசாத வெளிநாட்டு சதியையா அந்த புத்ககம் புதிதாக சொல்லப் போகிறது? நீங்கள் அறிந்த வழக்கறிஞர்கள் துரைசாமி, அமரராகிப் போன கருப்பன், ராதாகிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் எல்லாம் நளினி, பேரறிவு உட்பட அனைவரும் நிரபராதிகள் என்று சொல்லிவருவதை, கொச்சைப்படுத்துகிறதே இந்த புத்தகம்? அவர்களை எந்த இடத்தில் நிரபராதிகள் என்று இப்புத்தகம் கூறுகிறதென சொல்லுங்கள்.

என்னைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஈழம், இராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக பல உண்மைச் செய்திகளை மக்களுக்கு தொடர்ந்து கொண்டு செல்பவனாக அறியப்படுபவன். அந்த வகையில், புத்தக வெளியீட்டுக்கு முன்பாகவே என்னை சந்தித்த சிலர், இந்தப் புத்தகத்தை சிலாகித்துக் கூறினார்கள். 'ராஜீவ் கொலையிலிருந்து திமுகவை இப்புத்தகம் விடுவித்திருக்கிறது' என்ற உலகமகா கண்டுபிடிப்பைக் கூறினார்கள். பல புதிய உண்மைகளைப் பேசுகிறது என்று கூறி, புத்தகத்தின் நகல் பிரதியைக் கொடுத்தார்கள். படித்துப் பார்த்தேன். ஏற்கனவே சிபிஐ தரப்பிலிருந்து வெளிவந்த இரண்டு புத்தகங்களிலும் கூறப்பட்ட அதே பொய் மூட்டைகள் இதிலும் இருந்தன. ஒரு புதிய தகவலும் இல்லை.

அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அதே நபர் பேசும்போது என்னென்னவோ பேசியிருக்கிறார். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் 'இந்த ஒரு புத்தகம்தான் ராஜீவ் படுகொலையைப் பற்றி வந்திருக்கக் கூடிய ஒரே ஆவணம். இது ஒன்றுதான் தமிழனின் களங்கத்தை துடைக்க ஒரே ஆதாரம்' என்கிற போக்கில் பேசியிருக்கிறார். ஒரு வேளை அந்த நண்பர் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்தவராக இருந்திருப்பாரோ? அதனால்தான் இந்தப் புத்தகம் பற்றி மட்டுமே அவர் அறிந்திருக்கிறார். விசாரித்துப் பாருங்கள்.. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது கூட அவருக்கு நேற்று முன்தினம்தான் தெரிந்திருக்கும். திருச்சி வேலுச்சாமி, பூங்குழலி, விடுதலை ராசேந்திரன், பேரறிவாளன் என்று தமிழில் எழுதி வந்ததெல்லாம் அவருக்கு சரியான பதிலாகத் தெரியவில்லை. அதுவும் 'ரா' பின்னணியில் வந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ?.

சவுக்கினுடைய ஆதங்க அழுகாச்சியில் வரிக்கு வரி 'நளினி, முருகன், பேரறிவு உள்ளட்டவர்களின் விடுதலை' பற்றிய போர்வையை போர்த்திக்கொள்கிறீர்கள். பிறகு நான்கூட சிறை அனுபவத்தை கண்டிருக்கிறேன் என்கிறீர்கள். இதுவெல்லாம் பதிலா தோழா? கழிவிரக்கம் தோன்ற எழுதுவதன்மூலம் வாசகர்களிடம் பரிதாபத்தைத் தேடிக் கொள்ளலாம். தோழர்கள் விடுதலை இராசேந்திரன், கீற்று நந்தன் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதில்? எந்த விதத்தில் இந்தப் புத்தகம் அவர்களை விடுதலை செய்துவிட முடியும்? முதலில் உங்களுடன் இருக்கும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் எடுத்துச் சென்று கொடுங்கள். படித்த பிறகு அவர் முகம்கோணாமல் இருப்பார் என்று நான் நம்பவில்லை.

அந்தப் புத்தகத்தை எழுதிய நபர் ராஜீவ் சர்மா. தமிழர்களின் போராட்டம் பற்றியோ, அல்லது இந்தப் பிரச்சனையின் அடி முனை பற்றியோ தெரிந்திருக்காதவர். அவருக்கு இது பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும். அவ்வளவுதான் நோக்கம். அதற்காக தேடி அலைகிறார்! 'அடடா நாம் எவ்வளவுதான் சொன்னாலும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். இந்த மாதிரி ஒரு நபர் புத்தகமாக போட்டால்.. இன்னும் நன்றாக இருக்குமே' என்று சி.பி.ஐ கூடாரம் நினைத்திருக்கலாம். தன்னிடம் உள்ள ரகசிய ஆவணங்களை எல்லாம் வாரிக் கொடுத்து வாழ்த்தியிருக்கிறார்கள் அந்த எழுத்தாளரை. அதன் வெளிப்பாடுதான் இந்த புத்தகம். இந்த புத்தகத்திற்கு முன்பாகவே சி.பி.ஐ. சிறப்பு அதிகாரி கார்த்திகேயன் புத்தகம் எழுதினார். பிறகு 2009 மே மாதம் நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்தவுடன் 'பிரபாகரன் இறந்துவிட்டார். அதனால் நான் இந்த புத்தகத்தை எழுதுகிறேன்' என்று ராஜீவ் கொலையின் புலன்விசாரணை அதிகாரி ரகோத்தமன் ஒரு புத்தகம் எழுதினார். தயவு செய்து அந்த இரண்டு புத்தகத்தையும் மீண்டும் படியுங்கள். நீங்கள் வெளியிட்ட 'அந்த புத்தகம்...' பற்றியும் மறு வாசிப்பு செய்யுங்கள். அதன் பிறகு திறந்த மனதோடு விவாதம் செய்யுங்கள்.

சி.பி.ஐ. அதிகாரிகள் எப்படியெல்லாம் கண்டுபிடித்தோம், என்ன மாதிரி எல்லாம் நேர்மையாக விசாரித்தோம் என்று கதை அளந்திருந்தார்களோ, அதே திரைக்கதை வசனங்கள் எல்லாம் அப்படியே இந்த புத்தகத்தின் பாதிக்கு மேற்பட்ட பக்கங்களில் இருக்கிறது. அங்கும் அதே ஆவணங்கள். இதிலும் அதே ஆவணங்கள். சேம் ப்ளட்.

நான், நீங்கள் வெளியிட்ட அந்த புத்தகம் பற்றி வருகிறேன். ஏதாவது ஒன்றே ஒன்று நளினி உள்ளிட்ட ஏழுபேருக்கு சாதகமாக இந்த புத்தகத்தில் இருக்கிறது என்று எடுத்துக் காட்ட முடியுமா? இது சவால் அல்ல, பணிவுடன் கேட்பதுதான். அந்தப் புத்தகம் முழுக்க 'இவர்கள்தான் குற்றவாளிகள்' என்று அழுத்தம் திருத்தமாகவே சொல்கிறது. ஒரு பேச்சுக்கு 'தெரியாமல் சிக்கியவர்கள் அல்லது அறியாமலே  உடந்தையாக இருந்தார்கள்' என்றுகூட எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை. முத்திரை என்றால் அக்மார்க் முத்திரை. "இவர்கள்தான் குற்றவாளிகள். இவர்கள்தான் படுகொலையைச் செய்தார்கள். சதி திட்டமெல்லாம் தெரிந்தே நளினி துணை நின்றார்." அந்த புத்தகம் முழுக்க இந்த 'கண்டுபிடிப்புகளே'! அதாவது கார்த்திகேயன், ரகோத்தமன் எழுதிய மாதிரியே...

இதை வைத்து எப்படி வேலூர் சிறையில் இருக்கும் அவர்களை வெளியில் கொண்டு வர முடியும்? தொடர்ந்து எப்படி அந்த வாதத்தையே நீங்கள் முன் வைக்கிறீர்கள்?

இந்த புத்தகத்தில் வேறு என்ன இருக்கிறது? வெளிநாட்டு சதித்திட்டம் இருக்கிறது; மற்ற மாநிலங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் திட்டமிட்டு இருந்தது; சதித்திட்டம் வெளிநாட்டில் தீட்டப்பட்டது என்று அமெரிக்கா மீது சந்தேகம் வரை நீள்கிறது. இந்த கருத்தை நம் விடுதலை ராசேந்திரன் உட்பட பலரும் பேசிவிட்டார்கள்; எழுதிவிட்டார்கள். இந்த பதினைந்து ஆண்டு காலத்தில் நீங்கள் அதையெல்லாம் கேட்காத தூரத்தில் இருந்திருக்கிறீர்கள் போலும். இந்த புத்தகத்தில் இருக்கக்கூடிய ஆவணங்களும் கதைகளும் 'போலியானது'; அவர்களாகவே உருவாக்கிக் கொண்டது.

இந்த நியாயத்தை நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால் இங்கே போலி மோதல் என்று குற்றவாளிகளை போலீஸ் சுட்டுக்கொல்லும் அநீதியை நீங்கள் எதிர்க்கவே கூடாது. போலீஸ் சொல்லும் கதை வசன 'தயாரிப்பு' ஆவணங்களை அப்படியே எடுத்து நீங்கள் புத்தகமாக போட்டு பாராட்டிக் கொண்டிருக்கலாம். பாவம் எதற்கு எதிர்த்து போராடி எழுதி வருகிறீர்கள் என்று தெரியவில்லை.

prabakaran_234விடுதலை மண் வேண்டி விதைகளாகிப் போன ஆயிரம் ஆயிரம் போராளிகளை, அந்த இயக்கத்தை எவ்வளவு மோசமாக சுட்டிக்காட்ட முடியுமோ அந்த அளவிற்கு மோசமாக கூலிப்படையாக சித்தரிக்கிறது அந்த புத்தகம். அந்தப் போராளிகளோடு தங்களையும் விதைத்துக்கொண்ட ஒரு லட்சம் மக்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துகிறது அந்தப் புத்தகம்.

"இலங்கை ராணுவத்தோடு சண்டை. பிறகு 1987- முதல் இந்திய அமைதிப்படையோடு சண்டை. இந்திய ராணுவத்தோடு மோதுவதற்குக் கூட இலங்கை ராணுவம்தான் ஆயுதம் கொடுக்கிறது. அப்படியெல்லாம் கஷ்டப்பட்ட புலிகளுக்கு திடீரென்று பெருமளவில் ஆயுதம் எங்கிருந்து எப்படி வந்தது? எந்த நாடு கொடுத்தது? அதுவும் ராஜீவ்காந்தி படுகொலை நடந்த 1991-க்குப் பிறகுதான் அவர்களுக்கு கப்பல் கப்பலாக ஆயுதம் வந்து குவிகிறதென்றால் யார் கொடுத்தது" என்று போகிறது அந்த புத்தகத்தின் போக்கு. சுருக்கமாக ராஜீவ்காந்தியை போட்டுத் தள்ளியதற்கு ஏதோ ஒரு நாடு அல்லது சில நாடுகள் கூலி கொடுத்திருக்கிறது என்று கூறுகிறது அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தை எழுதியவனுக்கு வேண்டுமானால் நோக்கம்  சரியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு..?

அடுத்து இன்னொரு கோணத்தில் கண்டுபிடிப்பு. "ராஜீவ் படுகொலைக்கு முன்பு கே.பி. என்கிற குமரன் பத்மநாபன் தூர நாட்டில் இருந்துகொண்டு ஆயுதத்தைக் கடத்தினார். படுகொலைக்கு பின்பு பக்கத்து பகை நாடான பாகிஸ்தானில் வந்து உட்கார்ந்துகொண்டார். அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யோடு தொடர்பை வைத்துக் கொண்டார். அங்கிருந்தபடியே போதைப் பொருளை கடத்தினார். அப்படி போதைப் போருள் கடத்தியதில்தான் அவர்களின் பெருமளவு ஆயத சேமிப்பு நடந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை கூட அந்த பணத்தில் வாங்கியதுதான்" என்று போகிறது கண்டுபிடிப்பு. இது எப்படி தோழா? ஒன்று ராஜீவை கொன்ற கூலிக்காக சம்மந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியிருக்க வேண்டும் அல்லது போதைப் பொருட்களை கடத்திய பணத்தில் ஆயுதங்களை வாங்கியிருக்க வேண்டும். எது உண்மை?

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தம் உழைப்பில் ஒரு பகுதியை விடுதலை போராட்டத்திற்காகவே கொடுத்தார்களே... ஒரு நாளை மூன்றாகப் பிரித்துக்கொண்டு ஒரு பகுதி உழைப்பை குடும்பத்திற்கும், ஒரு பகுதி உழைப்பை விடுதலை போராட்டத்திற்கும் என்று ஒதுக்கி கொடுத்ததையெல்லாம் கொச்சைப்படுத்துகிறதே... என்ன பதிலை சொல்லப் போகிறீர்கள்? யாரோ சில நபர்கள் மட்டும் சொன்ன 'மிரட்டி வசூல் செய்தார்கள்' என்ற வாதம் இதில் மிகைப்படுத்தப்படுகிறதே... விடுதலைப் புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்களை எல்லாம் முதலில் நீங்கள் ஏற்கிறீர்களா?

அந்தப் புத்தகத்தை எழுதியவர் பற்றிய பில்டப்பிலும் பொருத்தம் இல்லை தோழா. இப்படி ஒரு புத்தகம் வருவதற்கு அவர் தீவிரமாக உழைத்தார்; ஜெயின் கமிஷன் முன்பு தினமும் போய் நின்றார்; குறிப்புகளை எடுத்தார்; தீவிரமாக கவனித்தார்; இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட அறிக்கை‌களை, ஆவணங்களைப் பார்த்தார்; பல அதிகாரிகளிடம் நேரிலும் விசாரித்தார்; அதன் பிறகே இந்தப் புத்தகத்தை எழுதினார் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? உண்மையில் அப்படித்தானா? அப்படியென்றால், சந்தனக்காட்டு வீரப்பனை எப்படியெல்லாம் கண்காணித்தோம்; எப்படியெல்லாம் உள்நுழைந்தோம்; எப்படி நட்புறவை வளர்த்தோம்; புலிகளின் தொடர்பாளர் என எப்படி வெள்ளைதுரையை அனுப்பினோம் என்று ஒரு ஆறுமாத கதை வசனத்தை நீங்களும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்வீர்களா? வீரப்பனை சட்ட விரோமாகத்தான் போட்டுத் தள்ளிவிட்டார்கள் என்று குமுறவாவது செய்வீர்களா?

சொல்ல வந்த இடத்திற்கு வருகிறேன். ராஜீவ் கொலை சம்பந்தமாக நடந்த ஜெயின் கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி நூற்றுக்கணக்கானோர் வாக்குமூலம் கொடுத்தார்கள். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஒன்பது நபர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளது.

சீக்கிய அமைப்பின் தலைவராக இருந்த மகந்த் வோதாஸ் சிங், முன்னாள் பிரதமர் சந்திரசேகர், சாமியார் சந்திராசாமி, அப்போது சட்டம் நீதித் துறை அமைச்சரான சுப்ரமணியசுவாமி, முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவான், ஓய்வுபெற்ற லெப். ஜெனரல் அமர்ஜித் கல்கத், அப்போது மத்திய உள்துறை செயலாளராக இருந்த நரேஷ்சந்திரா, மத்திய உளவுத்துறையான ஐ.பி-யின் டைரக்டர் எம்.கே. நாராயணன், மற்றொரு உளவுத்துறையின் உயரதிகாரி கே.என். தாக்கூர்....

இவர்களின் வாக்குலம் எல்லாம், 'திட்டம் வெளிநாட்டில்தான் நடந்தது. ஆனால் படுகொலையைச் செய்தது புலிகள்தான்.' இல்லையென்றால் 'செய்தது புலிகள்தான், ஆனால் திட்டமெல்லாம் வெளிநாட்டுச் சதிதான்' என்றிருக்கிறது. (அதாவது மாப்பிள்ளை அவர்தான்; பேண்ட் சட்டை மட்டும் என்னுடையது என்கிற திரைப்பட காமெடி மாதிரி) இதை தமிழில் கொண்டு வந்து யாரை விடுதலை செய்யப் போகிறீர்கள்? மக்களிடம்  ஆதரவு கருத்தை உருவாக்க வேண்டும் என்றால் நம் தமிழீழ ஆதரவாளர்கள் வெளியிட்ட புத்தகங்கள், பேசிய பேச்சுக்கள் எல்லாம் இருக்கிறதே... அதை வெளிக்கொண்டுவந்து பெருமைப்பட்டிருக்கலாமே சவுக்கு. தினந்தோரும் ஜெயின் கமிஷனில் உட்கார்ந்து குறிப்பெடுத்த அந்த எழுத்தாளருக்கு உங்க பாஷையில் எழுதுவதென்றால் 'அந்த புடுங்கிக்கு, அந்த நாயிக்கு, அந்த வெண்ணை வெட்டிக்கு' ஏன் முக்கியமானது மறந்துபோனது? அல்லது விட்டுப் போனது?

ராஜீவ் படுகொலைக்கான ஜெயின் கமிஷன் தனது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் கொடுக்கும்போது, 'சந்திராசாமி, சுப்ரமணியசுவாமி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் போதிய ஒத்துழைப்பை இந்த கமிஷனுக்குத் தரவில்லை. இதில் மேலும் விசாரிக்க வேண்டிய கட்டங்கள் இருக்கிறது' என்றெல்லாம் விரிவாக குறிப்பிட்டு எழுதி, கமிஷன் இப்படி ஒரு முடிவுக்கு வரக் காரணம் ஒன் ஆப்த பர்சன், மிஸ்டர் திருச்சி வேலுசாமி ப்ரம் தமிழ்நாடு என்றே குறிப்பிடுகிறது. அந்தப் பகுதி ஏன் மறைக்கப்பட்டது? சுப்ரமணியசுவாமியை திருச்சி வேலுசாமி மூன்று நாள் குறுக்கு விசாரணை செய்கிறார். அந்த மூன்று நாள் மட்டுமே பிரியங்கா வந்து உட்கார்ந்து கவனிக்கிறார். கடைசி நாள் சுவாமியை பிரியங்கா ஆவேசமாக பார்த்தபடியே எழுந்து சென்றாரே. இது மட்டும் சர்மாவுக்கு தெரியாமல் போனதேன்? 'தயாரிப்பு ஆவணங்களை' வாங்கி எழுதினாரா அல்லது நேரில் விசாரித்து எழுதினாரா என்பது தெரிகிறதா? எழுதுவதற்கு ஆவணங்களைக் கொடுத்த அந்த சதிகாரக் கூட்டத்திற்கு அந்தவித விசாரணைப் படலங்களும் வாக்குமூலங்களும் அலர்ஜி. அதனால் மறைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பேசப்பட்டதும் புத்தகமாக வெளிவந்ததுமான திருச்சி வேலுசாமியிடமிருந்து...

திருச்சி வேலுச்சாமி"தேர்தல் உச்சகட்ட பிரச்சார நேரம் அது. சுப்ரமணியசுவாமிக்கு நான்தான் மொழிபெயர்ப்பாளர். சிறீபெரும்புதூர் வழியாக காரில் செல்கிறோம். அந்த இடத்தை கடக்கும்போது 'இந்த இடத்திலதான் ராஜீவ்காந்தி கூட்டம் நடக்கப்போகிறதா' என்றபடியே சிரித்தீர்களே, என்னது இந்த பொட்டல் காட்டிலா என்றபோது பேசி மழுப்பினீர்களே ஏன்? மே-21-க்கும் முதல் நாள் இருபதாம் தேதி காலை நாங்கள் சேலத்தில் இருந்தோம். 'இன்னும் சில நாட்களே இருக்கிறது. நமக்கு பணம் வரவில்லையே' என்று நிர்வாகிகள் கேட்டார்கள். 'தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம்' என்று சாமி சொன்னார். என்ன இப்படி சொல்கிறார் என்று என்னிடம் வந்து சொன்னார்கள். நான் கேட்டபோது நீங்கள் ஏதேதோ கூறி மழுப்பியதேன்?

அன்றைய இரவு, அதாவது மே-20ம் தேதி இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம் முடிந்தது. அவசரமாக டெல்லி போயாக வேண்டும் என்று திடீரென்று புறப்பட்டீர்கள். 'அடுத்தடுத்த கூட்டம் எல்லாம் இருக்கிறது, இப்படி கிளம்பினால் எப்படி' என்ற கேள்விக்கு 'முக்கிய வேலை. உடனே வந்துவிடுகிறேன்' என்றபடியே கிளம்பினீர்கள். கூடவே நிர்வாகிகளும் பின்தொடர்ந்து வந்தார்கள். அச்சிறுபாக்கம் அருகே நிர்வாகிகளின் கார் விபத்துக்குள் சிக்கியது. அதைப் பொருட்படுத்தாமல், திரும்பி வந்து உதவாமல்கூட ப்ளைட் பிடிக்க சென்னை பறந்தீர்கள். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிர்வாகிகள் என்னிடம் இப்படி நடந்துவிட்டது என்று வருத்தப்பட்டார்கள்.

அவர்களைக் கவனிக்காமல்கூட சென்றீர்களே என்று கேட்பதற்காக காலை ஒன்பது முப்பது மணிக்கு டெல்லி வீட்டிற்கு போன் செய்தேன். உங்கள் மனைவி ரொக்ஷானா எடுத்தார். 'என்ன வேலுசாமி! அவர் சென்னையில்தானே இருக்கிறார். இங்க கேட்கிறீர்களே' என்று கேட்டு ஆச்சர்யப்பட்டார். ஒருவேளை வீட்டிற்குப் போகாமல் நேராக அலுவலகம் சென்றிருப்பாரோ என்று அமைச்சர் அலுவலகத்திற்கு போட்டேன். அங்கிருந்தும் அதே பதில். சுவாமி சென்னையிலேயே இருக்கிறார் என்று. சென்னைக்கு போன் செய்தால் 'சுவாமி டெல்லியில் இருக்கிறார்' என்ற பதில். அன்றைய தினம் எங்கே இருந்தீர்கள்? அமைச்சர்களுக்கு தினசரி மூவ்மெண்ட் ரிப்போர்ட் என்ற ரகசிய பைல் இருக்குமே அதைக் கொண்டுவாருங்கள் என்றபோது 'தொலைந்துவிட்டது' என்று சொன்னீர்களே அது எப்படி?

அன்றைய தினம் நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்றால் சென்னையின் பிரபலமான மருத்துவனையின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில், பெயர் பதிவு செய்யப்படாத அறையில் சந்திராசாமி தங்கியிருந்தார். நீங்களும் அவருடன் இருந்தீர்கள். இருவரும் கார் மூலமாகவே பெங்களூரு சென்றீர்கள். வேறு ஒருவரின் பெயரில் எடுக்கப்பட்ட விமான டிக்கெட்டில் சென்றீர்கள். அதுதான் உண்மை. அன்று  மாலை சந்திராசாமியின் ஆசிரமத்தில் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தாரா இல்லையா? கேட்டால் ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது என்றாரே... அது என்ன?

மே, 21-ம் தேதி இரவு 10.25 மணி. டெல்லியில் இருந்த உங்களுக்கு அடுத்தடுத்த பிரச்சாரம் குறித்து தகவலை கேட்பதற்காக போன் செய்தேன். எடுத்த எடுப்பிலேயே 'என்ன ராஜீவ்காந்தி செத்துட்டார். அதைத்தானே சொல்ல வர்றேள்' என்றீர்களே எப்படி? உடனே நான் திருச்சியில் இருந்த உளவுப் பிரிவு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி ஒரு தகவலும் இல்லையே என்றார்கள். ராஜீவ் படுகொலை இரவு 10.10 மணிக்கு நடக்கிறது. அதிலிருந்து ஒரே பதட்டம். புகை மூட்டம். ஓயாத அலறல் சத்தம். கொஞ்ச நேரம் கழித்தே ராஜீவின் ஒரு கால் தனியே கிடப்பதைப் பார்த்து அலறியபடியே மூப்பனாரை அழைத்தார் ஜெயந்தி நடராஜன். மூப்பனாரும் அருகில் வந்து பார்க்கிறார். மேலும் கொஞ்ச நேரம் போனது. வயிறு முகம் எல்லாம் சிதறியபடி ஒரு உடல். அதன் தலைபாகம் ராஜீவ் என்ற எல்லாவற்றையும் நன்கு கவனித்து திரும்பத் திரும்ப பார்த்த பிறகுதான் மூப்பனார் 'நாம் மோசம் போயிட்டோமே' என்று அலறினார். அடையாளம் கண்டுபிடிக்க அரை மணிநேரம் ஆனது. அடுத்த நாள் மாலை நாளேடுகளில் ஜெயந்தி நடராஜன் பேட்டி இப்படி வந்தது. அப்படியென்றால் அந்த இடத்தில் உறுதிப்படுத்திய நேரமே சுமார் 10.40. அதன் பிறகுதான் அதிகாரிகளின் உறுதியான தகவல் டெல்லிக்கு வந்திருக்கும். அதற்கு இன்னும் ஒரு பத்து நிமிடம் கூட ஆகியிருக்கலாம். ஆக 10.50 அல்லது 11 மணிக்குத்தான் ராஜீவ் படுகொலை உறுதிப்படுத்தப்படுகிறது.

அப்படியிருக்கும்போது உங்களுக்கு மட்டும் அந்தத் தகவல் எப்படி முன்கூட்டியே தெரிந்தது? யார் சொன்னார்கள்? அப்போது செல்பேசி வசதிகள் எல்லாம் கிடையாது. அது மட்டுமல்ல. அந்த படுகொலை குறித்து மீடியாவிற்கு தகவல் தருகிறீர்கள். அப்போது 'படுகொலையைச் செய்தது விடுதலைப் புலிகள்தான்' என்றீர்களே எப்படி? யார் உங்களுக்கு சொன்னது? விசாரணையே அடுத்த நாள் காலையில்தான் தொடங்குகிறது. அதற்குள்ளாகவே புலிகள்தான் குற்றவாளி என்றீர்களே எப்படி? எங்கிருந்து தகவல் வந்தது? சிலோனில் இருந்து நண்பர் சொன்னார் என்றால் அவருக்கு மட்டும் எப்படி அது தெரிந்தது? யார் அவர் என்றால் மௌனம் ஏன்?

மே 23ம் தேதி மதுரையில் உங்கள் கட்சியின் சார்பாக பெரிய கூட்டம். நாளேடு விளம்பரம் எல்லாம் பெரிதாக வந்தது. சரிதானே. அதற்கு டெல்லியில் இருந்து போக வேண்டிய விமான டிக்கட் எங்கே? எடுத்தீர்களா? ஆம் என்றால் படுகொலை செய்தி கிடைத்தவுடன் அவசர ஏற்பாடு செய்ய டெல்லியிலேயே தங்க பயணத்தை ரத்து செய்திருப்பீர்கள் அப்படித்தானே. அந்த ரத்து செய்த விமான டிக்கெட் எங்கே.? இல்லை! காரணம் நீங்கள் மதுரைக்குப் போக வேண்டும் என்று திட்டமிடவேயில்லை. அந்த கூட்டம் நடக்காது என்று உறுதியாக தெரிந்து வைத்திருந்தீர்கள். அதற்கு என்ன காரணம்? ராஜீவ்கொலை நடக்கப் போவது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். ஜெயின் கமிஷன் முன்னால் குறுக்கு விசாரணை நடக்கிறது. சுவாமிக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. சட்டையெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது. கைவிரல்களின் வழியே வியர்வை நீர் சொட்டுகிறது. இதற்காக மட்டுமே தொடர்ந்து மூன்று நாட்கள் தவறாமல் அங்கு வந்து குறிப்பெடுத்தபடி இருந்த பிரியங்கா கண்களில் அனல் பறக்கும் கோபம். 'நீதானா அந்த துரோகி' என்பதைப் போன்று ஒரு ஆவேசப் பார்வை பார்த்தபடியே இருக்கிறார். நீதிபதி ஜெயின் 'கோர்ட் கலைகிறது' என்று வழக்கமாக சொல்லக்கூட இயலாமல் அப்படியே முறைத்துப் பார்த்தபடியே எழுந்து சென்று விட்டார்" என்று பல தகவல்கள் - எல்லாம் அதிர்ச்சித் தகவல்களாகவே - அங்கு பதிவானவற்றை திருச்சி வேலுசாமி புத்தகத்தில் பார்க்க முடிகிறது. பல மேடைகளிலும் பேசியிருக்கிறார். இவரின் வாக்குமூலத்தை பலமாகக் கொண்டுதான் கமிஷன் முழுவிசாரணை வேண்டும் என்றது. பிறகு பல்முனை நோக்கு புலன்விசாரணை குழு அமைக்கப்பட்டது. அங்கும் பத்து நாட்கள் நேரில் சென்று நடந்தவைகளை எல்லாம் திருச்சி வேலுசாமி பதிவு செய்திருக்கிறார்.

படுகொலைக்கு முன்புவரை சுப்ரமணிய சுவாமியோடு ஒரு பெண் நெருக்கமாக சுற்றியபடி இருந்தார். அவர் ஈழத்தைச் சேர்ந்தவர். வேறு ஒரு போராளி குழு அமைப்பைச் சேர்ந்தவர். அந்த பெண்மணியுடன் மேலும் சிலர் இருந்தார்கள். ஒரு முறை திருச்சிக்கும் வந்திருந்தார்கள். மே 21க்குப் பிறகு அவர்களை சுவாமியுடன் சேர்ந்து பார்க்கவே முடியவில்லை. தலைமறைவாகிவிட்டார்கள். எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அது எப்படி? அதாவது இந்த கொலை வேறு சில நாடுகளின் சதி திட்டத்துடனே நடந்தேறியிருக்கிறது. அதற்கு புலிகளின் பெயரில் வேறு ஒரு போராளி குழு பயன்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இங்கே சந்திராசாமியும், சுப்ரமணியசுவாமியும் துணை நின்றிருக்கிறார்கள் என்பதே திருச்சி வேலுசாமியின் வாதம்; வாக்குமூலம். இதுவெல்லாமும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் தோழா. புத்தகத்தில் அது காணவில்லையே என்று வழக்கமான புலனாய்வு பாணியில் யோசிப்பீர்களே, ஏன் செய்யவில்லை?

அடுத்து இன்னொரு விஷயத்திற்கு வருவோம். உங்களின் அந்தப் புத்தகத்தில் பெங்களூரு ரங்கநாத், அதாவது ஒற்றைக்கண் சிவராசன், சுபா ஆகியோருக்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செய்தவர். 2009, மே 19க்குப் பிறகு - ராஜீவ்காந்தி படுகொலை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் ஒரு புத்தகம் எழுதினாரே - அதற்குப் பிறகு ரங்கநாத்தை சந்தித்தேன். "புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த போக்கை உங்கள் மனைவி ஆதரிக்கவில்லையாமே? பிறகு உங்களுக்கு எதிராக முழு விபரத்தையும் சொன்னது அவர்தானே? விசாரணைக்கு பல தகவல்களை சொன்னதும் உங்களது மனைவிதான் என்று சொல்லியிருக்கிறாரே விசாரணை அதிகாரி?" என்று கேட்டபோது அவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? "அப்படி சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை என் மனைவி செருப்பாலேயே அடிப்பாள். நான் தமிழ். அவர் கன்னடத்துக்காரர். தமிழே தெரியாது. மிக மோசமாக... (அப்படி சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கிவிடுகிறது) விசாரணை நடத்தி கண்டதையும் எழுதி கையெழுத்து வாங்கினார்கள். நான் சாதாரணமான ஒரு மெஷினை வைத்துக்கொண்டு தினக்கூலி மாதிரி வேலையை செய்துகொண்டிருந்தேன். என்னைப் போய் பெரிய தொழிலதிபர் என்று சித்தரித்தார்கள். அதாவது புலிகளின் பணத்தில் நான் வளர்ந்தவன் என்கிற மாதிரி காட்டினார்கள். பெரிய ஆள் என்பதைக் காட்டவே என்னை ஹெலிகாப்டரில் அதிரடிப்படை வீரர்களோடு காண்பித்து பில்டப் செய்தார்கள்.

subramaniyan_swamyசிவராசன் சந்திராசுவாமியோடு பேசியது உட்பட பல ரகசியங்களை சொல்ல முன்வந்தும் கார்த்திகேயன் உண்மையைச் சொல்லாதே என்று என்னை அடித்து துவைத்தார். கோடியக்கரை சண்முகத்தின் தூக்கில் தொங்கும் படத்தை எடுத்துப் போட்டு, 'சந்திராசாமி, சுப்ரமணிசுவாமி பெயரை எல்லாம் சொல்லாதே. சொன்னால் உனக்கும் இதே கதிதான்' என்றதோடு ஆத்திரத்தில் பேப்பர் வெயிட்டை தூக்கி அடித்தார். எனக்கு பல் உடைந்தது" என்று கொடூரமாக நீண்டது அவரது பதில். ஆனால் ரங்கநாத்தையும், அவர் மனைவியையும் 'அக்மார்க் குற்றவாளிகள்' என்று சொல்கிறது உங்களது 'அந்தப் புத்தகம்'.

இப்படி பல பதிவுகள் உள்ளும் புறமும் இருக்கிறது. தமிழகம் தாண்டியும் இந்தவித குரல் எதிரொலித்துள்ளது. உங்களின் அந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் அந்த கட்டுக்கதைகளை தாண்டிய பல உண்மைகளும் நம் தலைவர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லாம் பேசியாகிவிட்டார்கள். தமிழகத்தில் அப்படி ஒரு பதிவே இல்லை, குரலே இல்லை என்று இந்த 'போலீஸ் பைல்' நாதாரியை கொண்டு வந்துள்ளீர்கள்.

யாரோ ஒருவன் ஐ.பி. மற்றும் ராவின் கைக்கூலியாக எழுதிய புத்தகத்தை இங்கே கொண்டு வந்து புதியதாக என்ன செய்துவிடப்போகிறீர்கள்? முதலில் அந்த புத்தகம் யாருக்கு என்பதில் தெளிவான முடிவை சொல்லுங்கள். நளினி விடுதலைக்குத்தான் என்பதை எப்படி கூறுகிறீர்கள்? எந்த இடத்திலாவது 26 பேரையும் குற்றமற்றவர்கள் என்று அந்தப் புத்தகம் கூறுகிறதா? அவர்களுக்கு சாதகமான ஒரு வரியையாவது காட்டுங்கள்...

நீங்கள் சொல்லும் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஏற்கனவே நம் தலைவர்கள் இங்கு உண்மையாகவே பேசி வந்ததுதான் என்பதையும் சேர்த்துப் பாருங்கள். மிச்சம் இருப்பது புலிகள் கூலிப்படை, ஆயுத கூலிக்காகத்தான் இந்த படுகொலையை செய்தார்கள் என்பது மட்டுமே. இதை மக்களிடம் கொண்டு செல்வதுதான் சவுக்கின் பணி என்றால்.. மன்னிக்கவும். படைத்ததாக சொன்ன கடவுளையே 'என் மயிர் சாமி' என்று சொல்லும் கூட்டம் நாம். தவறுகள் செய்த சில தலைவர்கள், அந்தத் தவறை மூடி மறைப்பதற்காகவே ஆரியம், பார்ப்பனீயம் என்று பேசுவதைப் போல் நீங்கள் தமிழீழப் படுகொலை, இனவிடுதலை என்று பேசி வருகிறீர்களோ என்று குற்றம் சாட்ட வரவில்லை; ஆனால் அதற்கான தூரம் அதிகமில்லை.

1991-க்குப் பிறகு ஏனோ தமிழகத்தில் ஈழ ஆதரவு என்று பேசுவதற்கே அச்சப்படும் நிலை உருவானது. அதற்குக் காரணம் விசாரணை என்ற பெயரில் இங்கே சிபிஐ ஆடிய ஆட்டத்தின் நடுக்கம். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு இங்கு தடைகளற்ற ஆவேசம் இளைஞர்கள் மத்தியில்... ஒரு பதினைந்து ஆண்டு காலம் முடக்கி வைத்திருந்த ஈழ ஆதரவுப் பிரச்சாரம் இன்று ஒங்கி ஒலிக்கிறது. “அது நடந்தேறக் கூடாது. உலகிலேயே ஒழுக்கத்தோடு வளர்ந்தெழுந்த புலிகள் இயக்கம் 'ஒரு மோசமான கூலிப்படை' என்பதை அவர்களின் மனதில் விதைக்க வேண்டும். அதன் மூலம் இளைஞர்களின் ஒன்றுபட்ட கோபத்தை சிதைக்க வேண்டும், நீதிக்கான கதவுகளை தட்டும் போர்க்குரலை முடக்க வேண்டும்” என்று 'எவனோ' திட்டமிடுகிறான். அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகிறோம். நம் கைவிரலை எடுத்து நம் கண்களை குத்துகிற சதி இது. சவுக்கு என் கைவிரல். அதனால்தான் புருட்டஸ் நீயுமா என்று கேட்கத் தோன்றவில்லை. எம்மையும் சேர்த்தே புருட்டஸ் நாமுமா என்றே கேட்டுக்கொள்கிறேன்.

இனியும் பழையபடி சப்புக்கட்டு காரணங்களை அடுக்காதீர்கள். போராளி இயக்கத்தின் மீது விமர்சனமே வேண்டாம் என்று கூறவில்லை. அந்தப் புத்தகம் அப்படியானதல்ல. நம் ஊர் தாதாக்களை போட்டுத்தள்ளும்போது ஒரு பக்க அளவிற்கு 'அவன் இப்படியானவன், அப்படியானவன்' என்று கதையை உருவாக்குவார்களே அது மாதிரிதான் என்பதை மறைக்காதீர்கள். ஒப்புக்கொண்டு அந்த புத்தகத்தை புறம் தள்ளுங்கள். தூக்கிப்பிடிக்காதீர்கள். பதிவு செய்ய வேண்டியதற்கு நிறைய இருக்கிறது. அதை நோக்கி பயணிப்போம்....

-      பா.ஏகலைவன், பத்திரிக்கையாளர், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

***

தோழர் சவுக்கிற்கு...

உங்களது நேர்மையில் இங்கு யாருக்கும் சந்தேகமில்லை. நீங்களே கூறியதுபோல், இதை வெளியிட்டவரும் நீங்கள் இல்லை; இலாபம் அடையப் போகிறவரும் நீங்கள் இல்லை. புத்தக தயாரிப்பு செலவும், வெளியீட்டு செலவும்கூட‌ உங்களுடையதல்ல. இந்தப் புத்தகம் பற்றி மிதமிஞ்சிக் கூறப்பட்ட வார்த்தைகளை நம்பி உங்களது பெயரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறீர்கள். ஒரு வகையில் 'பினாமி'யாக்கப்பட்டிருக்கிறீர்கள்.

வெளியீட்டு விழாவுக்கு முன்பு என்னிடமும் இப்புத்தகம் தரப்பட்டது. படித்துவிட்டு மொழிபெயர்ப்பாளரிடம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தேன். புத்தகத்தைப் படிக்கும் யாரும், என்னுடைய அல்லது தோழர்கள் விடுதலை இராசேந்திரன், பா.ஏகலைவன் முடிவுக்குத்தான் வர முடியும். அவ்வளவு 'பொக்கை'யான புத்தகம் அது. படித்திருந்தால் நீங்கள் வெளியிட்டிருக்கவே மாட்டீர்கள். இந்தப் புத்தகத்தைக் 'கண்டு'பிடித்தவரும், அதைப் பற்றி பிரமாண்டமாகப் பேசி, மொழிபெயர்த்தவரும் அதன் 'அருமை பெருமை'களைத் தூக்கி சுமக்கட்டும்.. தயவு செய்து மேலும் மேலும் அந்தப் புத்தகத்தை காப்பாற்ற நினைக்காமல், உங்கள் பெயரை அதிலிருந்து விடுவித்துக் கொண்டு, பயணத்தைத் தொடருங்கள்...

என்றும் தோழ‌மையுட‌ன்

கீற்று ந‌ந்த‌ன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)