குருகுல விஷயமாய் எனது அபிப்பிராயம் என்ன என்பதைப்பற்றி நான் தெளிவாய்க் கூறவில்லை என்றும், வேண்டுமென்றே அவ்விதம் கூறாமலிருக்கின்றேன் என்றும், முக்கியமான சில கனவான்கள் என்னை, எழுதியும் நேரிலும் கேட்கிறார்கள். இவர்கள் என்னைப் பற்றிச் சரியாய் உணர்ந்து கொள்ளாதவர்கள் என்றுதான் நான் சொல்லக்கூடும். அதோடு தமிழ்நாட்டு நடப்புகளையும் சரிவர கவனித்திருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.

குருகுல விஷயமாய் டாக்டர் வரதராஜுலு நாயுடு பத்திரிகையின் வாயிலாக எழுதுவதற்கு ஒரு வருஷகால முன்னிருந்தே இதைப் பற்றிய சகல விஷயங்களையும் அநேகக் கூட்டங்களில் தெரியப்படுத்தியிருக்கிறேன். (சென்ற வருஷம் விருதுப்பட்டியில் ரத்தினசாமி நாடார் ஞாபகச்சின்ன வாசகசாலை ஆண்டு விழாவிலும் பேசியிருக்கிறேன்.) குருகுலத்திற்கு தமிழர்கள் பணம் கொடுக்கக் காரணங்களாயிருந்த நவசக்தி, தமிழ்நாடு முதலிய பத்திரிகை ஆசிரியர்களிடமும், அவர்கள் குருகுலத்திற்குப் பணம் கொடுக்கும்படியாயும், பாரத மாதா கோவில் கட்டுவதற்குப் பணம் கொடுக்கும்படியாயும் தங்கள் பத்திரிகைகளில் எழுதி வருவதைப் பலமாய்க் கண்டித்தும் வந்திருக்கிறேன். ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் அவர்கள் நான் சொன்ன காலத்தில் நிரம்பவும் பரிதாபமாய் ஏதோ தேசத்திற்காகக் கஷ்டப்பட்டவர்கள்; அவர்கள் விஷயத்தில் நாம் இவ்வளவு கணக்குப் பார்க்கக்கூடாது; பொது ஜனங்களுக்கே இவையெல்லாம் தெரியும்; நாம் இவர்கள் காரியத்திற்குத் தடையாய் நிற்பதாய் அவர்கள் ஏன் நினைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

டாக்டர் நாயுடு சொன்னதாவது: பாரத மாதா கோவில் கட்டுகிற விஷயத்தில் நான் தெரிந்தேதான் செய்து வருகிறேன். குருகுல விஷயத்தில் நீங்கள் சொல்லுகிற மாதிரி ஸ்ரீமான் அய்யர் அவர்கள் அவ்வளவு மோசமாயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஸ்ரீமான் அய்யர் அவர்கள் ஏற்படுத்தியிருக்கிற மாதிரி ஒரு ஆசிரமம் நம் தமிழ்நாட்டிற்கு வேண்டியதுதான். நீங்கள் சொல்லுகிற மாதிரி வித்தியாசங்கள் அங்கு நடக்குமேயானால், அதை 5 நிமிஷத்தில் நிறுத்திவிட என்னால் முடியும் என்று சொல்லிவிட்டார். நான் கொஞ்சம் மன வருத்தத்தையும் காட்டிக் கொண்டு சிநேக முறையில் சில கடின பதங்களை உபயோகித்தேன். பிறகு கொஞ்ச நாளைக்குள் திருச்சியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான் வ.வெ.சு. அய்யர் அவர்கள் மறுபடி 5000 ரூபாய் காங்கிரசிலிருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, நானும் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை அவர்களும் கண்டிப்பாய் பணம் கொடுக்கக்கூடாது; முன் கொடுத்த பணமே தமிழர்களின் இழிவுக்கு உபயோகப்படுகிறது என்று சொல்லி அங்கு நடக்கும் சில கொடுமைகளை எடுத்துச் சொன்னோம்.

ஸ்ரீமான் வ.வெ.சு. அய்யர் அவர்கள் நான் அப்படிச் செய்வேனா, அந்த இடம் நிரம்பவும் வைதீகர்கள் நிறைந்துள்ள இடமானதாலும், சமையல் செய்கிறவர்கள் ஒப்புக்கொள்ளாததாலும், இவ்வித வித்தியாசங்கள் இனிக் கொஞ்ச நாளைக்கு இருக்கும்; சீக்கிரம் மாற்றி விடுகிறேன். அதுவரையில் நானும் சாதம் சாப்பிடுவதில்லை. அதற்காகத்தான் நிலக்கடலை சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வரும்போது, ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தாங்கள் நிலக்கடலை சாப்பிடுவதால் நாயக்கர் சொல்லுகிற ஆட்சேபனை தீர்ந்து போகுமா? இவ்வளவு தூரம் இவர்கள் சொல்லும்படியாய் வைத்துக் கொள்ளக் கூடாது; அதனால் தங்கள் பேருக்குக் கெடுதல் வந்துசேரும். என் குழந்தைகளைக்கூட ஆசிரமத்திற்கு அனுப்பலாம் என்றிருந்தேன். இவைகளைக் கேட்ட பின் நானும் அனுப்பப் போவதில்லை. இந்த ஆவலாதிகளைச் சரி செய்து விட்டு, மேல் கொண்டு காங்கிரசைப் பணம் கேளுங்கள் என்று சொன்னார்கள்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் நாயுடு, எனக்கும் இம்மாதிரி ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சீக்கிரத்தில் ஆவலாதிகளுக்குக் காரணமான வித்தியாசங்களையெல்லாம் ஒழித்து விடுவதாய்ச் சொன்னார். ஸ்ரீமான் அய்யர் அவர்கள் இவ்வித வித்தியாசமெல்லாம் பாராட்டுகிறவர்கள் அல்ல. ஆனால் எப்படியோ திருநெல்வேலி பிராமணர் செல்வாக்குள்ள இடத்தில் குருகுலம் அமைக்கப்பட்டுப் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சொல்கிறபடி நடக்கும் என்கிற நம்பிக்கையின் மேல்தான் நான் சும்மாயிருக்கிறேன் என்று சொன்னார்.

நான், இவையாவும் ஒழுங்கான பிறகுதான் மேல்கொண்டு ரூபாய் கொடுப்பதைப் பற்றி யோசிக்கப்படும். இந்த நிலைமையில் யோசித்தால் முன் ரூபாய் கொடுத்ததே தப்பு. தங்களுக்கு ரூபாய் கொடுக்கத் தீர்மானித்த மீட்டிங்கில் நான் இல்லை. இருந்திருந்தால் சரியானபடி ரிக்கார்டு செய்து கொண்டுதான் ரூபாய் கொடுத்திருப்பேன். அதுசமயம் செக்கில் கையெழுத்துப்போடும் வேலை எனக்கென்று ஒதுக்கப்பட்டு வைத்திருந்தும், இந்த ஒரு செக்கு மாத்திரம் ஏற்பாட்டுக்கு விரோதமாய் எப்படியோ என் கூட்டுக் காரியதரிசியால் கையெழுத்துப் போட்டு செக்கு வெளியாகிப் பணம் வெளிப்பட்டு போய்விட்டது. கிரமமாய்ப் பார்த்தால் அந்தப் பணத்தைத் திருப்பி வாங்க வேண்டும் என்று சொன்னேன். ஸ்ரீமான் அய்யர் அவர்கள் மனவருத்தத்துடன் உலகில் எல்லாரும் தர்மம் செய்வார்கள், நமது நாயக்கரோ செய்த தர்மத்தைத் திருப்பி வாங்க வேண்டுமென்கிறார் என்று சொன்னார்கள்.

நிற்க, பின்னால் கொஞ்ச நாளைக்குள்ளாகவே மறுபடியும், “தமிழ்நாடு” பத்திரிகை குருகுலத்தைப் பற்றிய விளம்பரங்களும் வசூல் குறிப்புகளும் பிரசுரித்து வந்தது. இதனால் இழிவுபடும் பிராமணரல்லாதாரே தமிழ் நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் பணம் கொடுத்து வருவதாய் அறிந்து டாக்டர் நாயுடு இந்த மாதிரி தமிழர்களின் இழிவுக்காக நடத்தப்படும் குருகுலத்திற்குப் பண உதவி செய்யும்படி எழுதுகிறார். அதனால் ஏமாந்த வெகுஜனங்கள் பணம் கொடுத்துவிடுகிறார்கள். இதைப் பற்றிப் பல தடவைகளில் நான் சொல்லியும் கேட்கவில்லை என்று பல பேரிடம் நான் டாக்டர் நாயுடு பேரில் குற்றம் சொல்லிக் கொண்டு அதற்கு ஓர் எண்ணத்தையும் கற்பித்து வந்தேன். டாக்டர் நாயுடுவுக்கும் எனக்கும் பொதுவான ஒரு சினேகிதர் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது டாக்டர் நாயுடுவிடம் உங்களுக்கு ஏன் தப்பபிப்பிராயமிருக்கிறது? நீங்கள் இரண்டு பேரும் இப்படி இருக்கலாமா என்று கேட்டார். நான் குருகுலத்தை விளம்பரம் செய்வதைப் பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்லி குருகுலத்திலிருந்து வெளியான ஒரு பையன் சொன்ன சில விஷயங்களையும் சொல்லி மலேயா நாட்டில் குருகுலத்திற்குத் தமிழர் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாய் வெளியான ஒரு பத்திரிகையையும் காட்டினேன். அதோடு தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சி சூழ்ச்சிகளையும் சொல்லி அதையும் டாக்டர் நாயுடு ஆதரிக்கிற விஷயத்தையும் சொன்னேன்.

அதற்கு அவர் 'டாக்டர் நாயுடு அவர்களுக்கு இவ் விஷயங்களை எடுத்துச்சொல்லி வேண்டியது செய்கிறேன். ஆனால் சில பிராமணர் தந்திரம் தங்களுக்குத் தெரியாததா? டாக்டர் நாயுடு இதை வெளிப்படுத்தினால், வேறு சில பிராமணரல்லாதாரையே டாக்டர் நாயுடுவுக்கு விரோதமாய்க் கிளப்பிவிட்டு நமக்குள்ளேயே சண்டைபிடித்துக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டுத் தாங்கள் காரியத்தை நடத்தி கொள்வார்களே பிறகு எழுதினவர்தான் தனியாக நிற்க வேண்டும்' என்று சொன்னார். உடனே 'நவசக்தி முதலிய பிராமணரல்லாத பத்திரிகைகள் எல்லாம் கண்டிப்பாய் நாயுடுவை ஆதரிக்கும். அநேக பிராமணரல்லாத பத்திரிகைள் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் யார் முன்னே எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால் இந்த விஷயத்திற்கு எதிரிடையாய் யோக்கியப் பொறுப்புள்ள பிராமணரல்லாத பத்திரிகைகளோ, பிராமணரல்லாத பிரமுகர்களோ முன்வர மாட்டார்கள் என்பது எனது உறுதி' என்று சொல்லி உடனே குருகுல நடவடிக்கையை வெளிப்படுத்தும்படி ³ நண்பரைக் கேட்டுக்கொண்டேன்.

அதற்கேற்றாப் போல் டாக்டர் நாயுடுக்கும், குருகுலவாசி ஒருவரிடமிருந்து ஒரு கடிதமும், மலேயா நாட்டிலிருந்து ஒரு கடிதமும் வந்திருந்த சமயமும் ஒத்துக் கொண்டது; உடனே உண்மையை வெளியிட்டார்; நானும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்களுக்கு இது விஷயத்தில் நியாயம் செய்யும்படி எழுதினேன். அவர்களும் மற்றும் நான் எழுதாத சில பத்திரிகை கனவான்களும் இந்த முதல் வியாசத்தை தமிழ்நாடு பத்திரிகையிலிருந்து தங்கள் பத்திரிகையில் எடுத்துப் போட்டும், மற்றும் தங்கள் மனசாட்சிக் கொப்ப ஆதரித்தும் வந்தனர். இவை எல்லாவற்றிலும் ‘தனவைசிய ஊழியன்’, ‘குமரன்’ இவ்விரு பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தங்கள் மனசாட்சிப்படி தைரியமாய் உதவி செய்ததைத் தமிழ் மக்கள் மறக்கமுடியாது. இவற்றின் பலனாய், தமிழர் வசிக்கும் வெளிநாடுகளிலும் இவ்விஷயங்கள் பரவி தற்காலம் குருகுல விஷயமாய் மாத்திரம் அல்லாமல் பிராமணர் பிராமணரல்லாதார் என்போருக்குள் வெகுகாலமாய் அடங்கிக் கிடந்த வேதனைகள் எல்லாம் வெளிக்கிளம்பின. இவைகளை எல்லாம் நான் திருவண்ணாமலையில் கூடிய தமிழ்நாடு மாகாண காங்கிரஸில் தலைமை வகித்த காலத்தில் முகவுரையிலும், முடிவுரையிலும் தெளிவாய் சொல்லியிருக்கிறேன்.

(அதற்கேற்றாற்போல் மகாத்மாவும், இவை ஒழியாமல் வெறும் ‘ஒத்துழையாமை ஒத்துழையாமை’ என்று வாயில் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனமென்று கருதி கதர், தீண்டாமை இவை இரண்டும் மாத்திரம் நடக்கட்டும், மற்றதெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிடலாம் என்று பெல்காம் காங்கிரசில் காலம் குறிப்பிடாமல் ஒத்துழையாமையை ஒத்தி வைத்துவிட்டார். இனி ஒத்துழையாமையை ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, காங்கிரஸில் காரியத்திலோ, தத்துவத்திலோ, கொள்கையிலோ இல்லை. )

இதோடு கூடவே ‘தேவஸ்தான ஆக்ட்’ என்று சொல்லப்படும் இந்துமத தர்மபரிபாலன மசோதா ஒன்றும் வந்தது. இதைப்பற்றியும் ஜனங்கள் ஒன்றும் அறியாதபடி ‘மதம் போய்விட்டது,’ ‘மடம் போய் விட்டது’, ‘கோயில் போய் விட்டது’என்று வெறும் பச்சை அழுகை அழுதுகொண்டு மந்திரிகளையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மாத்திரம் திட்டுவதோடல்லாமல், அந்த மசோதாவையே தொலைத்துப் போட பிராமண பத்திரிகைகளும் பிராமண ராஜீயத் தலைவர்கள் என்போர் பலரும் தங்கள் பத்திரிகைகளில் எழுதவும், மேடைகளில் நின்று பேசவுமாய் அட்டகாசம் செய்துவந்தனர். இதை நம்பிக்கொண்டு பிராமணரல்லாத ராஜீயத் தலைவர் என்போர்கள் பலரும் ஒத்துப்பாடிக் கொண்டு வந்தார்கள். இதையும் பார்த்துச் சகிக்காமல் ஒத்துழையாமையோ ஒத்திப்போடப்பட்டாய் விட்டது. இனி இதைப்பற்றி சும்மா இருப்பது ஒழுங்கல்லவென்று நினைத்தே டாக்டர் நாயுடுவுக்கும், ஸ்ரீ கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் நான் காயலாவாய்ப் படுக்கையில் இருந்துகொண்டே சொந்தமாய் இனி நீங்கள் வாய்மூடிக் கொண்டிருக்கக் கூடாது, மந்திரிகளையும் ஜஸ்டிஸ் கட்சியையும் பிராமணர்கள் வைவதைப் பற்றி நமக்கு ஒன்றும் அவ்வளவு வருத்தமில்லை, ஆனால் நல்ல சட்டத்தைப் பாழடிக்கப் பார்க்கிறார்கள். இதை நீங்கள் சகித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கண்டிப்பான கடிதம் ஒன்று எழுதிவிட்டு, நானும் என் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்த “திராவிடன்” பத்திராதிபருக்கு பதில் எழுதுகின்ற முறையில் எழுதிவிட்டேன்.

டாக்டர் நாயுடுவும் உடனே தனது அபிப்பி ராயத்தை எழுதிவிட்டார். மறுபடியும் சில பிராமணர்கள் சென்னையில் ஒரு கூட்டம் கூட்டி மசோதாவை கட்டுப்பாடாய் எதிர்ப்பதற்கென்று ஒரு சபை அமைத்ததைப் பார்த்து ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் டாக்டர் நாயுடுவுக்கும் ‘ஒரு பகிரங்கக் கடிதம்’ என்று ஒன்று எழுதி எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி அவர்களுக்கும் அனுப்பினேன். அதற்கு இவ்விரண்டு தலைவர்களும் பதிலெழுதவேயில்லை. (அதன் காரணத்தைப் பற்றிச் சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம்) மாறுதல் வேண்டாதார் என்று சொல்லப்படும் அநேக பிரமுகர்கள் இதை ஆதரித்து இது சம்பந்தமான எவ்வித பிரசாரத்திற்கும் தாங்கள் உதவி செய்வதாய் எனக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.

பிறகு, டாக்டர் நாயுடு குருகுலத்தைப் பற்றி வெளியில் பிரசாரத்திற்குப் போயிருந்த காலத்தில் அங்கு நடந்த சம்பவங்களும், பத்திரிகைகளில் வெளிவந்த சம்பவங்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டன. அந்தக் கூட்டத்திலும் பலவித தீர்மானங்கள் வந்தன. அவைகளில் ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக் கூட்டத்தாரால் கொண்டு வரப்பட்டது. அதாவது குருகுலம் ஒரு குறிப்பிட்ட கொள்கைப்படி நடக்காததால் அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 5,000 ரூபாய் கொடுத்ததற்காக வருந்துகிறது என்பது. இது நிர்வாகக் கமிட்டியில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் அவர்களால் திருத்திச் சொல்லப்பட்டு எழுதியது.

இரண்டாவது, ஆசிரம நிர்வாகங்களில் மற்றவர்கள் பிரவேசிக்கக் கூடாது. ஆச்சாரியார் சொல்லுகிறபடியே விட்டுவிட வேண்டும். ஆனால் இவ்வளவு தூரம் குருகுல விஷயம் விவாதத்திற்கிடமாய் விட்டதால் அங்கு சமபந்தி போஜனம் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வது போல் ஒரு திருத்தப் பிரேரேபனை ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு டாக்டர் ராஜன் அவர்களால் ஆமோதிக்கப்பட்டது.

மூன்றாவது, மனிதன் பிறவியினால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளக்கூடாது, இந்தக் கொள்கைகளை தேசீய விஷயங்களிலும் தேசீய ஸ்தாபனங்களில் பொருள் பெற்று தேசீய உணர்ச்சியுடன் நடத்திவரும் குருகுலத்திலும் நடைபெறும்படி செய்ய வேண்டுமென்றும் இது நடைபெற சப் கமிட்டி ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்றும் என்பது போன்ற ஒரு திருத்தப் பிரேரேபனை ஸ்ரீமான் எஸ். ராமநாதன் அவர்களால் கொண்டுவரப் பட்டது. இது நானும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களுமாய் சேர்ந்து எழுதப் பட்டதாகும்.

இவைகளில் ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்கள் தீர்மானம்தான் நிறை வேறியது. உடனே டாக்டர் நாயுடுவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் கமிட்டிக்கு நம்பிக்கை இருப்பதாய் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் நடக்கும்போதும், நடந்து முடிவடைந்து கொண்டிருக்கும்போதும் சிலர் ராஜினாமாச் செய்துவிட்டார்கள். பிறகு, இவர்களைப் பின்பற்றி 4, 5 பேர் ராஜினாமாக் கொடுத்து விட்டார்கள். இதற்குப் பிறகு குருகுல வாதம் ஒரு விதமாய் முடிவு பெறுமா என்கிற கவலையுடன் நானும், ஸ்ரீமான்கள் எஸ்.ராமநாதன், எ.வி.தியாகராஜா ஆகிய மூவருமாய் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் கமிட்டியாரால் நியமிக்கப்பட்ட சப் கமிட்டியார் என்கிற தன்மையில் ஒரு தடவையும், குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்த தமிழர் கூட்டத்து நிர்வாக சபையார் * அழைப்புக்கிணங்கி, அவர்களுடன் ஒரு தடவையுமாக இரண்டு தடவை குருகுலத்திற்குப் போயும் வந்திருக்கிறேன். இதன் ரிப்போர்ட்டுகள் பின்னால் வரும். வாசகர்களும் நண்பர்களும் இதிலிருந்து குருகுல விஷயமாய் எனதபிப் பிராயத்தையும் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளக்கூடும் என்று நினைக்கிறேன்.

(குடி அரசு - கட்டுரை - 12.07.1925)