மேலூர் கிராமம் மிக்க வளமுள்ளது; மிக்க பணக்காரர் நிறைந்த ஊர். அவ்வூரில் பல சந்தர்ப்பங்களில் சரியாய் ஒரு வருடகாலத்தில் ஒரு லக்ஷத்து முப்பதினாயிரம் ரூபாய் திருட்டுப் போயிருக்கிறது. ரொக்க வகையிலும் நகை வகையிலும்.

இதற்கு மேலும் ஒருநாள் அதிகாலை முதற் கோழி கூவிற்று. கண்ணு ரெட்டியார் வீட்டு வேலைக்காரி தெருக்கதவைத் திறந்தாள். வீட்டிற்கெதிரிலிருக்கும் மாட்டுக் கொட்டகையில் சாணம் எடுக்கப் போனாள். அச்சமயம் வீட்டின் உள்ளிலிருந்து ஓர் ஆள் கையில் ஒரு சிறு மூட்டையோடு வெளிப்பட்டான்.

temple 600

அவன் கிழக்கு வீதியை நோக்கி விரைவாக நடந்தான். வேலைக்காரி, வீட்டு ரெட்டியார் போகிறார் என்று நினைத்தாள். அடுத்த நிமிஷம் வீட்டு ரெட்டியார் வெளியில் வந்தார்! வேலைக்காரிக்குச் சந்தேகம். அதோ _ வீட்டிலிருந்து கீழ வீதியாக ஓர் ஆள் போகிறார். அவர் யார் பாருங்கள்!

இதைக் கேட்டதும் ரெட்டியார் திடுக்கிட்டார். ஆளைத் தொடர்ந்து ஓடினார். திருடன் பெத்த பெருமாள் ஆலயத்தில் நுழைந்தான். அவன் மூலஸ்தானத்தில் நுழைந்ததையும் ரெட்டியார் இரண்டு கண்களாலேயும் நன்றாய்ப் பார்த்தார். மூலஸ்தானம் திறந்திருந்தது. விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. பரபரப்போடு, அய்யரே, அய்யரே! மூலஸ்தானத்தில் திருடன் வந்து நுழைந்தான்.

அவனைப் பிடியுங்கள் என்றார். மூலஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதவர் போகக் கூடாதல்லவா?

அய்யர், என்ன ரெட்டியார்வாள்! நான்தான் இருக்கிறேன். பெருமாள்தான் இருக்கிறார்; தினம் இப்படித்தான் பலர் வந்து கேட்கிறார்கள். விஷயம் இன்னதென்று புரியவில்லை. காற்று சேஷ்டையாய் இருக்கலாம்; அந்தக் காற்றானது கோவில் மூலஸ்தானத்தில் நுழைவது விந்தை என்றார். ரெட்டியாரின் சந்தர்ப்பம் சாஸ்திரத்தை மீறச் செய்துவிட்டது.

அவர் உடனே மூலஸ்தானத்தில் நுழைந்து திருடனைத் தேடினார். திருடன் இல்லை. உள் நுழைந்தவன் தப்பியோட வேறு வழியுமில்லை. திகைப்படைந்த ரெட்டியார் வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மற்றும் அநேக ரெட்டிமார் - போலீஸ்காரர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மூலஸ்தானத்து அய்யர் வெளியிற் போகாமலும், வெளி மனிதர் மூலஸ்தானத்திற்குப் போகாமலும் காப்பு ஏற்படுத்தப்பட்டது. பிறகு மூலஸ்தானம் நன்றாய்ச் சோதிக்கப்பட்டது.

மேலும் ஆராய்ச்சி; மற்றும் நடவடிக்கை! ஒன்றும் பயனில்லை. திருடன் கோவிலின் மூலஸ்தானத்திற்குள் புகுந்தான் என்பதே சுத்தப் பொய் என்று ஏற்பட்டது. ஆனால் இம்முடிவு ஜனங்களுடையது, பறிகொடுத்த ரெட்டியாருக்கோ கெட்ட காற்றின்மேல் (பசாசின் மேல்) அதிக சந்தேகம். சில நாட்கள் சென்றன.

பெத்த பெருமாள் என்ற தொடரில் பெத்த என்பது தெலுங்குப்பதம். பெரிய என்பது அதன் அர்த்தம். அந்தப் பெரிய பெருமாள் விக்ரகம் மிகப் பெரியதுதான். அது கிடந்த கோலமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது. 50 வருடங்கட்கு முன் அது பூமியில் கிடந்தது. அப்போது _ தற்கால அர்ச்சகப் பிராமணரின் தகப்பனார் இருந்தார். அவர் செத்துப் போன பின் தற்காலத்தார் அமைந்தார். பெரிய நாராயண அய்யங்கார்.

சனிக்கிழமை வந்தது. காலை 10 மணி, கோவிலில் கூட்டம். நாராயண அய்யங்கார் _ பெத்த பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணுகிறார். அய்யங்கார் வீட்டைப் பரிசோதனை செய்த சர்க்கார், கோவிலுக்குள் புகுந்தார்கள். வெள்ளைக்கார உத்தியோகஸ்தர் உட்பட! ஓர் உத்தியோகஸ்தர், அய்யங்கார் சுவாமிகளே! மூலஸ்தானத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார். இது பயனற்ற வார்த்தை அய்யர் சாத்திரம் படிக்கத் தொடங்கினார். சர்க்கார் உட்புகுந்து ஆராயத் தொடங்கினார்கள். பக்தர்கள் முணுமுணுத்தார்கள். அர்ச்சகர், அக்ரமம், அக்ரமம் என்றார். சர்க்கார் செய்கை அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. உண்மையறிவதே நோக்கமாக வந்த உத்தியோகஸ்தர்கள் மேலும் சொன்னதாவது: பெத்த பெருமாள் விக்ரகத்தின் உட்புறத்தை ஆராய வேண்டும்.

இதற்கு, பெத்த பெருமாள் கடவுள் என்று மாத்திரம் அறிந்துள்ள ஜனங்கள், சாமியை _ உடைப்பதோ! _ என்று சொல்லி வருந்தினர்.

பிறகு, பெத்த பெருமாளின் தலை திருகப்-பட்டது. திருவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாமான்கள்; நோட்டுகள்; நகைகள்; கத்திரிக்கோல் ஒன்று; 6 தோட்டா போட்ட ரிவால்வர் ஒன்று; கடைசியாய்க் களவு போன ரெட்டியார் வீட்டுப் பணமுடிப்பு. இதன் பின் பக்தர்களின் கோபத்திலிருந்து அய்யங்காரைக் காப்பாற்றுவது அருமையாகிவிட்டது.

இத்தனை நாள் கடவுள் _ சாமி _ தெய்வம் _ என்ற பெயர் மயக்கத்தால் அப்பெயர்-களையுடைய மனிதன் _ பொருள் _செயல் _இவைகளின் உட்புறத்தை அலசிப் பார்க்க இந்திய மக்கள் கருதவில்லை. பகுத்தறிவு செத்துப் போனதற்கு கடவுட் கொள்கை காரணம் என்க.

பூமியை பூமிதேவியென்றும், ஆகாயத்தை ஆகாய வாணியென்றும், ஜலத்தை வருணபகவான் என்றும், நெருப்பை அக்கினி பகவான் என்றும், காற்றை வாயு பகவான் என்றும் கொண்டாடும் இந்திய மக்கள் அப்பஞ்ச பூதங்களின் தத்துவத்தை உட்புகுந்து ஆராய, அவர்கள் கருத்தைச் செலுத்த முயன்றதேயில்லை. பஞ்சபூதங்களுக்குத் தொண்டர் ஆனார்கள். ஆனால் பகுத்துப் பகுத்துப் பொருளின் உண்மையறியும் கூட்டத்தினருக்கு அப்பஞ்ச பூதங்கள் வேலை செய்யும் விதத்தைக் காண்கிறோம்.

தந்தித் தபால், புகைவண்டி, ஆகாய விமானம், தூர தரிசனம், போலி மனிதன், இமயமலை ஆராய்ச்சி, செயற்கை மழை, செயற்கை வெயில் ஆகிய இன்றைய அபூர்வ வாழ்க்கை விநோதங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் உள்ளும் புறமும் ஆராய்ந்து அவைகளை அடிமையாக்கியவர்களால் ஏற்பட்டவை.

திருடன் தான் திருடிய பணம் வைக்கும் பெட்டிக்குப் பெத்த பெருமாள் என்று பெயர் இருந்தால் பகுத்தறிவுள்ளவன் பெத்த பெருமாளின் தலையைத் திருக வேண்டியது ஞாயம். ஊரிற் கொள்ளை போன பொருள்கள் உடையவர்களிடம் கணக்குப் பார்த்து ஒப்புவிக்கப்பட்டது.

-------------------------------

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்- "புதுவை முரசு", 2.2.1931

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It