பாபிலோனிய நீர் சமையல் ஓர் கண்டுபிடிப்பு..!
வணக்கம். நம் பாட்டியைக் கேட்டால், இப்போதுள்ள பெண்கள், சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை என நக்கல் அடிக்கின்றனர்; குறைபட்டு கொள்கின்றனர். நெசம்மாவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? அதெல்லாம் இல்லை. சுமார் 3,௦௦700 ஆண்டுகளுக்கு முன்பே கூட இந்த சாதாரண விஷயங்களெல்லாம் கூட பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால கற்படிமங்கள் கதைக்கின்றன.
உலகின் பழமையான சமையல் புத்தகம்..!
உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர். ஆனால் அது இன்றுள்ள புத்தகம் போல காகிதத் தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகைகளால் ஆனது. 2004ல் யேல் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள், கியூனிபார்ம் எழுத்துக்கள் உள்ள மூன்று களிமண் பலகைகளை கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சமையல் குறிப்புகள் உள்ள தகவல்களே காணப்படுகிறன. மூன்றிலும் மொத்தமாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. இவை பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப் பட்டதாகும். இதுதான் உலகிலேயே மிகப் பழமையான சமையல் கலை புத்தகம். இதன் வயது சுமார் 3 ,700 ஆண்டுகள்.
புரியாத மொழியும்.. தெரிந்த தகவலும்..!
இந்த களிமண் சமையல் புத்தகத்திலுள்ள விஷயங்களை மாற்றி எழுதி, மொழியாக்கம் செய்தவர் ஜீன் போட்டாரோ மற்றும் தெரசா லேவாண்டர் பாகன் ஆவார்கள். இதனை கடந்த 2004ல் மெசபடோமிய சமையல் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் என்ன தெரியுமா? இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்குப் புரியாததாக உள்ளது. மேலும் உண்மையாகவே, அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் ஏதும் அறிய மாட்டோம். அதிலுள்ள சமையல் முறை என்பது துல்லியமாக குறிக்கப் படவில்லை. அமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு எனபதும் அதில் காணவில்லை.
புதிய கண்டுபிடிப்பு நீர் சமையலும் சுவையும்.. !
அதில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கறி, கோழி, காய்கள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப்பட்டன. உங்களுக்கெல்லாம் ஒரு அற்புதமான, ஆச்சரியமான, சுவையான விஷயம் சொல்லலமா? அதுதான் நீரில் சமைப்பது. இது என்னப்பா அதிசயம். நாம் சாதாரணமாய் செய்வது தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. நீரில் சமைப்பது என்பது, சமையல் அறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல். அதுவரை மக்கள், நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்தனர்; பின், சுட்டனர்; பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர்; வறுத்தனர். நெருப்பு தணல்/ தீயில் வாட்டினர்; லேசாக புரட்டி புரட்டி வாட்டினர். இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது, சுவையான வசதியான சமையலாகும்.
நீரில் போடுவதன் மூலம், உணவின் சுவை கூடுகிறது. அதன் மணத்தை அதிகரிப்பதும், சமையலை வளமாக்குவதும், பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது. இந்த சுவையை வறுத்தல் சுடுதல், புரட்டுதல் மூலம் செய்ய முடியாது. எனவே நண்பர்களே,, தண்ணீரில் உணவுக்கான பொருட்களை போட்டு, வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை. இதனை பாபிலோனியர்கள் முதன்முதலாக துவக்கி வைத்ததுடன், மறக்காமல் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர் என்றால் பாராட்டும் அம்சம்தானே.
- பேரா.சோ.மோகனா (