மனுதர்மத்தின் வழியில் இந்திய நிலப்பரப்பை ஆட்சிசெய்த பல்வேறு அரசர்களையும் பிரபுக்களையும் மிரட்டி, விரட்டி இந்த தேசத்திற்கு இந்தியா என்று வடிவம் தந்த ஆங்கிலேயர்களே இந்து மதத்தின் வர்ணாசிரமப் பிரிவுகளைக் கண்டு சற்று kalaingar_300விலகியே நின்றார்கள். மதம் என்ற பெயரில் மனித வளத்தைக் கூறுபோட்ட இந்திய சாதி, மதவாதிகள், நீக்ரோக்களை அடிமைப்படுத்தி ஒரு மிருகத்தை விடவும் கேவலமாக நடத்திய தென் அமெரிக்க பருத்தி விவசாயிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது உலகம் அறிந்தது. அமெரிக்காவில் கூட அப்ரகாம் லிஙகன், மார்டின் லூதர் கிங், தற்போது  பராக் ஒபாமா என கருப்பின மக்களின் விடுதலை நாயகர்கள் தொடற்கிறாகள். ஆனால் இந்த தேசத்தில் தலித் மக்கள் விடுதலைக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த மானுட விடுதலைக்காக பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களையே, சாதியத் தலைவனாக பார்க்க பார்ப்பன அடிவருடிகள் வெட்கப்படுவதில்லை.

இந்தியாவில் தலித் மக்களின் எழச்சிக்காக ஆங்கியேயர்கள் காலத்தில்தான் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது, 1845 ல் கொத்தடிமை ஒழிப்பு சட்டம் (The Slavery Abolition Act) கொண்டு வந்ததன் மூலம் வரி பாக்கிக்காக தலித் அடிமைகளை விற்பனை செய்வது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது, 1861ல் The Indian Penal Code ஐ நிறைவேற்றி அதுவரையில் இருந்த பிராமண சட்டத்தை காலாவதியாக்கினார்கள், இப்படி கல்வி உரிமை, தெருக்களில் நடமாடும் உரிமை, நில உரிமை என தலித் மக்கள் ஓரளவு சுதந்திரமாக வாழ ஆங்கியேயர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.

இந்திய விடுதலைக்கு பிறகு நாட்டின் ஆட்சி வெள்ளையர்களிடமிருந்து காங்கிரஸ்காரர்கள் கைப்பற்றி இன்றுவரை தொடர்கிறார்கள், இடைப்பட்ட 63 ஆண்டுகளில் இந்த தேசத்தில் வாழம் 30 சதவிகித தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என யோசித்தால் கோபமும் குற்றவுண‌ர்வும் தான் மிஞ்சுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸின் ஆதிக்கத்தை 1967ல் முடிவுக்கு கொண்டுவந்தார் அண்ணாத்துரை, பின்பு 1969 முதல் இன்றுவரை ஐந்தாவது முறையாக முதல்வராக உள்ளார் திரு.கருணாநிதி, இததனை ஆண்டு கால தி.மு.க  ஆட்சியில் தமிழக தலித் மக்களுக்கு எந்த ஒரு திடமான திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது கிடையாது.

1937 வாக்கில் நீதிக்கட்சியால் தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே ஓர் ஆயுதமாக்க் கையான்டு அரசியலில் வெற்றிகண்ட அண்ணாத்துரை, இந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என தமிழக தலித் மக்க‌ளின் மொழி இனச் சிந்தனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இவர்களை அரசியல் மைய நீரோட்டத்தில் சேர்க்காமல் கொடிபிடிக்கவும், கோஷம் போடவும் மட்டுமே பயன்படுத்தினார். திராவிட கட்சிகளால் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற உணர்வு இன்றுவரை தலித் மக்களுக்கு ஏற்படாததற்க்கு இம்மக்களின் இயற்கையான மொழி இனப் பற்றே காரணம்.

கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய 44 தலித் விவசாய கூலித் தொழிலார்களை கூண்டோடு வைத்துக் கொளுத்திய கொடுமை 1968ல் அண்ணா ஆட்சியில் தான் நடந்தது, இதைப்பற்றி சட்டசபையில் விவாதிக்க மறுத்த அண்ணா இதை ஓர் கனவாக நினைத்து மற‌ந்துவிடுங்கள் என கேட்டுக்கொன்டார். தலித் மக்களின் உயிரின்மேல் அவர் வைத்திருந்த பற்றைப் பாருங்கள். இது போன்ற நிலப்பிரச்சனையில் 1997ல் பிகாரில் லாலுப்பிரசாத் ஆட்சிகாலத்தில் 58 தலித் மக்கள் சாதி இந்துக்களால் குருவியைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்ணா மற்றும் லாலுபிரசாத் ஆகிய இருவரும் பார்ப்பன எதிர்பாளர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுமட்டுமல்லாமல் கருணாநிதியின் முந்தைய ஆட்சிக்காலத்திலும், தற்போதும் சாதி மோதல்கள், படுகொலைகள், கழ்பழிப்பு என தலித் மக்கள் மீது எண்ணற்ற வன்கொடுமைகள் தொடர்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் தலித் மக்களுக்கான திட்டங்களை ஆய்வுசெய்த தேசிய SC/ST கமிஷனின் துணைத் தலைவர் கும்ளே, கருணாநிதி அரசை மிக வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தேசிய SC/ST கமிஷனுக்கு தமிழக அரசு எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காதது மட்டுமல்ல, தலித் மக்களுக்கான திட்ட விவரங்களை கொடுக்காதது, கமிஷனை கலந்தாலோசிக்காமல் உள் ஒதுக்கீடு செய்தது என தேசிய SC/ST கமிஷனை கருணாநிதி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

சுமார் 60 ஆயிரம் கோடியளவில் நிதியறிக்கை தாக்கல் செய்யும் தமிழக நிதியமைச்சர், தலித் மக்களுக்கு வெறும் 600 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளார், இந்த நிதியில் 90 சதவிகிதம் ஆதி திராவிட ப‌ள்ளி ஆசிரியர்களின் ஊதியம், மற்றும் மாணவர் விடுதி செலவுகளுக்குத்தான் பயன்படுகிறது, தலித் காலனிகளின் உள் கட்டமைப்பிற்காக எதுவும் செய்வதில்லை, இப்படி நடத்தப்படும் ஆதி திராவிட ப‌ள்ளிகளின் தரம் மிக கேவலமாகவே இருக்கிறது, அரசாங்க பள்ளியின் சராசரி தேர்ச்சி விகிதம் 65 சதவிகிதமாக இருக்கையில் ஆதி திராவிட ப‌ள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் வெறும் 45 சதவிகிதத்திற்க்கும் கீழ்தான்.

தலித் மக்களுக்கு நிதி ஒதுக்கி அதில் சமத்துவபுரம் கட்டியது, பஞ்சமி நிலங்களை திட்டமிட்டே பிற்படுத்தப்பட்ட‌ மக்களுக்கு இலவச நிலமாக கொடுத்தது, SC/ST பாதுகாப்பு சட்டம் 1989 ஐ நடைமுறைப்படுத்தாமை, எட்டாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பஞ்சமி நில வழக்குகளை விசாரிக்காமை என தி.மு.க அரசு தலித் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது.

இதுபோன்ற‌ பல்வேறு உள்குத்து வேலைகளை மிகத் தெளிவாக செய்யும் கருணாநிதி, தந்தை பெரியார் சொன்ன கலப்பு திருமணத்திலும் கைவைத்திருக்கிறார் என்பதுதான் வேதனை, தமிழக அரசின் கலப்பு திருமண உதவி ரூ.20 ஆயிரம் வழங்க தகுதியாக தமிழக அரசு கூறியுள்ளதை சற்று கவனிக்கவும், அதாவது ஒருவர் தலித் சமுகத்தில் திருமண உறவு வைத்துக் கொண்டாலோ அல்லது ஓர் பிற்படுத்தப்பட்டவர் முற்படுத்தப்பட்ட சமுகத்தில் திருமண உறவு வைத்துக் கொண்டாலோ அரசின் கலப்பு திருமண உதவிக்கு தகுதியானவர்கள் எனக் கூறுகிறது, இது தந்தை பெரியார் சொன்ன கலப்பு திருமனத்திற்க்கு எதிரானது. தந்தை பெரியார் சொன்ன கலப்பு திருமணம் என்பது பிற சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் திருமண உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அது கலப்புத் திருமனம் என்பதாகும்.

கடந்த நிதியாண்டில் சுமார் 23 லட்சம் தமிழக விவசாயிகள் (சாதி இந்துக்கள்) பெற்ற 7000 கோடி ரூபாயை முழுவதுமாக தள்ளுபடி செய்த கருணாநிதி, தலித் மக்கள் பெற்ற தாட்கோ கடன் 74 கோடியை தள்ளுபடி செய்ய மறுத்தார், பின்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட்  கட்சி  போன்ற கட்சிகளைச் சேர்ந்த MLA க்கள் தாட்கோ கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வரிடம் கடிதம் கொடுத்தும், ஓர் ஆண்டுகாலம் கழித்தபின் சென்ற நிதியாண்டின் இறுதியில் தான் தாட்கோ கடன் 74 கோடியும் அதனுடன் மீன‌வர்கள் கடன் 72 கோடியும் சேர்த்து தள்ளுபடி செய்வதாக கருணாநிதி அறிவித்தார். தலித் குடும்பத்தில் சம்மந்தம் செய்த முதல்வரின் தலித் பற்றை பாருங்கள்!

சிறப்பு உட்கூறு திட்டத்தைச் இதுவரை செயல்படுத்தாமல் இருந்த தமிழக அரசு, இந்த நிதியாண்டில் (2010-11) ரூ.3,828 சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது, மெலும் இதில் எந்தெந்த துறைகள், எத்தனை சதவிகிதம், எதற்க்காக ஒதுக்கியுள்ளார்கள் என்பதை இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை.

இதுபோன்று எண்ண‌ற்ற துரோகங்களை தலித் மக்களுக்கு செய்த தமிழக அரசு, பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை சற்று கவனித்தால் நல்லது, குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைமுறையில் உள்ள உயர்கல்வி செலவை திரும்பக் கொடுக்கும் திட்டம் என்பது அங்குள்ள தலித் மாணவர்களுக்கு மிக உதவியாக உள்ளது, அதாவது ஓர் தலித் மாணவன் தனியார் பொறியியல், மருத்துவம் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க நேர்ந்தால் அவனுடைய படிப்புச் செலவை அதிகபட்சம் ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை மாநில அரசு திரும்பக் கொடுத்து விடுகிறது, ஆனால் உயர்கல்வியை முழுவதுமாக தனியார் மயமாக்கிவிட்ட தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் பல்லாயிரக்கணக்கான தமிழக ஏழை தலித் இளைஞர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் மாறியிருப்பார்கள்.

மத்திய அரசு தயாரித்து, நடிகர் மம்முட்டி நடித்த டாக்டர்.அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட ரூ.10 லட்சம் கொடுத்துதவ தமிழக அரசு மறுத்ததால் அப்படம் இன்னும் தமிழக மக்களை சென்று சேரவில்லை, அதே நேரத்தில் பெரியார் திரைப்படத்திற்காக 92 லட்சம் மானியமாக தமிழக அரசு அளித்துள்ளது.

1810 போன்ற காலங்களில் "பெரிய பறைச்சேரி" என்னும், பிற்காலங்களில் "கருப்பு நகரம்"(Black Town) என்னும் அழைக்கப்பட்ட சென்னை ஜார்ஜ் டவுனில் இன்று கூவம் நதியை தூய்மைப்படுத்தும் திட்டம், மேம்பாலம் கட்டுதல், அகலப்பாதை அமைத்தல், குடிசை மாற்று வாரியம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரால், சென்னையில் வசித்த கிட்ட்த்தட்ட 3 லட்சம் சேரி குடும்பங்கள் கருணாநிதியின் இந்த ஆட்சிகாலத்தில் மட்டும் முகவரியிழந்துள்ளார்கள்.

எத்தனை துரோகங்கள், எத்தனை எத்தனை இழப்புக்கள் இப்படி திராவிட கழகங்கள் தலித் மக்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம், ஆனால் அது வீண் வேலையாகத்தான் இருக்கும், இன்று தலித் மக்கள் தங்களுக்கென்று மிகத் தெளிவாக அரசியல் தளத்தை உருவாக்க முடியாமல் தவிக்கிறார்கள், ஏனெனில் தலைவன் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களெல்லாம் தமிழக தலித் மகளுக்கு துரோகத்தை தவிர வேறொன்றும் செய்து விடவில்லை, இதனால் இம்மக்கள் திடாவிடக் கட்சிகளின் காலடியில் கிடப்பதை தவிர வேறு வழியில்லை. அயோத்திதாச பண்டிதர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற பல்வேறு தலைவர்களை கண்ட இந்த சமூகம் இன்று பாதை தெறியாமல் பரிதவிக்கிறது.  திராவிடக் கட்சிகளை எதிர்த்தும், அடிப்படை உரிமைக்காகவும் போராட தமிழக தலித்துக்கள் முன்வந்தால் மட்டுமே விடுதலை சாத்தியம் என தமிழக தலித் மக்கள் உணர்வார்களா?

-அப்ரகாம் லிங்கன்.ப‌ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It