காங்கிரசுக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம் சிற்சில ஊர்களில் இருந்து கொண்டு காலித்தனம் செய்து வருவதைப் பற்றி இதற்கு முன் பல தடவை "குடி அரசு", "புரட்சி" பத்திரிக்கைகளில் எழுதப்பட்டிருந்தது வாசகர்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறோம்.

இந்தக் கூட்டங்களுக்கு ஏற்பட்ட வேலையெல்லாம் காங்கிரஸ் பேரால் வயிறு வளர்ப்பதும், அதற்குக் கூலியாகக் காங்கிரஸ் காரர்களல்லாதார் என்பவர்கள் போடும் கூட்டங்களில் போய் காலித்தனம் செய்வதும், சரிசமமான காலித்தனத்தையோ, போலீசாரையோ கண்டால் ஓட்டமெடுப்பதும் வழக்கமாயிருந்து வருகிறது.

தேசியப் பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்ளும் சில, அதாவது காலித்தனத்தில் பிரியமும், ஆசையும் உள்ள சில பத்திரிக்கைகள் "போலீசார் பந்தோபஸ்தில் கூட்டம் நடந்தது" என்றும் "கூட்டத்தில் கலவரம், குழப்பம்" என்றும் எழுதி அவற்றை ஆதரிப்பதுமாய் இருந்து வருவதும், காங்கிரசுக்கும், தேசியத்துக்கும் வெட்கக் கேடு என்பதுடன் தங்களுடைய யோக்கியதையானது வெளியாகக் கூடாத அவ்வளவு இழிவானது என்று அவர்களே கருதி காலித்தனத்தின் மூலம் எதிரிகளின் கூட்டத்தைக் கலைக்க நினைக்கிறார்கள் என்றும் கருதக் கூடியதாகவே இருக்கிறது.

periyar rajajiதோழர் வரதராஜுலு நாயுடு வேலூரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அக் கூட்டத்தில் அக்கூட்ட நடவடிக்கைகளுக்குச் சம்மந்தமில்லாத கூச்சல்களை சிலர் கிளப்பினார்களாம். அதாவது காந்திக்கு ஜே! அவனாசிலிங்கம் செட்டியாருக்கு ஜே! என்று கூப்பாடு போட்டார்களாம். போலீசார் வந்த பிறகு ஓட்டம் பிடித்தார்களாம். (இந்த விஷயம் "இந்தியா" "தமிழ்நாடு" "சமதர்மம்" முதலிய பத்திரிக்கைகளில் காணப்படுகின்றது.)

பிறகு தோழர் வரதராஜுலு அவர்கள் சொல்ல வேண்டியது முழுவதையும் சொல்லி முடித்த பின்பே கூட்டம் முடிந்ததாம். இம் மாதிரி காலித்தனமும், இதைவிட மோசமான காலித்தனமும் வேலூரில் இதற்கு முன் இரண்டொரு தடவையும் நடந்திருக்கின்றது. இதன் பயனாய் ஏற்பட்ட பலன் என்ன? அதாவது வேலூருக்கு போகின்றவர்கள் அங்குள்ள சில காலிகளுக்குப் புத்தி கற்பிக்கத்தக்க அளவு அதிகமான காலித்தனத்துடன் செல்ல வேண்டும். அல்லது போலீசுக்காரர்களை அவர்கள் கடமையைச் செய்ய எதிர்பார்க்க வேண்டும் என்ற பலன் தானே ஏற்படுகின்றது. காலித்தனங்களின் பயனாய் கூடிய சீக்கிரத்தில் பேச்சு சுதந்திரம் கூட நிறுத்தப்பட வேண்டியதாய் ஏற்பட்டுவிடும் என்றே பயப்படுகின்றோம்.

வேறு சில அரசாங்கங்களில் பொதுக்கூட்டங்கள் போட வேண்டுமானால் 24 மணி நேரத்துக்கு முன்பாகவே அதிகாரிகளுக்கு எழுதி உத்திரவும், பந்தோபஸ்துக்கு உதவியும் பெற வேண்டும் என்கின்ற ஒரு முறை இருந்து வருகின்றது. ஆனால் நமது பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அந்த தொல்லை இல்லை. இனிமேல் அது போலவே தான் இங்கும் ஏற்பட வேண்டிவரும் என்றே நினைக்கிறோம்.

காங்கிரசு ஏற்பட்ட பிறகு அனேக சுதந்தரங்கள் பறிக்கப்பட்டுப் போய்விட்டன. அதற்கு காங்கிரசின் இப்படிப்பட்ட நடத்தையே ஒரு அளவுக்கு ஜவாப்தாரி என்று தயங்காமல் கூறுவோம்.

கூப்பாடு போட்டவர்கள் கலகமும், காலித்தனமும் செய்தவர்கள் அவை அவசியமென்றும், தங்களின் யோக்கியதையான கடமை என்றும் கருதி இருப்பார்களே ஆனால் போலீசார் வந்த பிறகும் "காந்திக்கு ஜே" சொல்லிக் கொண்டு அங்கு நின்று இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உண்மையான வீரர்கள் ஆவார்கள். அப்படிக்கில்லாமல் சிகப்புக் குல்லாயைக் கண்டவுடன் ஓட்டமெடுக்கும் காங்கிரசு எவ்வளவு வீரமும் மானமும் உடையது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

இதைப் பற்றி சில பத்திரிக்கைகள் பெருக்கி எழுதி மகிழ்கின்றன. இப்பத்திரிக்கைகளுக்கு பொறுப்போ, "தேசிய" மானமோ இருக்குமானால் கண்டிப்பாய் இவ்வித நடவடிக்கைகளுக்கு வெட்கப்பட்டு அப்படிப்பட்ட காலிகளுக்கும் புத்தி சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த முயற்சித்து இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் இவர்களை உசுப்படுத்துகிற மாதிரி எழுதுவதால், குட்டி குலைத்து நாய்க்கு ஆபத்து ஏற்பட்டது என்பது போல் இப்படிப்பட்ட பத்திரிக்கைக்காரர்களுடையவும், காலிகளுடையவும் செய்கைகளால், "போலீஸ் நிர்வாகம் இந்தியர்கள் கையில் கொடுப்பதற்கு இந்தியாவுக்கு யோக்கியதை இல்லை. வெள்ளைக்காரனிடம் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லும்படியாய் ஏற்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட ஆட்களையும், பத்திரிகைக்காரர்களையும் தன்னைப் பின்பற்று கின்றவர்களாய்க் கொண்ட தோழர் காந்தி "இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் வந்தால் பட்டாளம், ராணுவம் இல்லாமல் ராஜ்ஜிய பாரம் நடைபெறும்" என்று சொன்னார் என்றால் இதில் சிறிதாவது உண்மையோ, அறிவுடமையோ இருந்திருக்க முடியுமா என்றும், இவர்கள் உண்மையில் நாணையத்தில் அஹிம்சைவாதிகள் என்று சொல்லிக் கொள்ளத் தகுந்தவர்களா என்றும் கேட்கின்றோம்.

சுயமரியாதைக்காரர்களால் இப்படிப்பட்ட காலித்தனம் எங்காவது நடந்ததாகத் தெரிய வந்த சமயத்தில் நாம் வெட்கப்பட்டும், கண்டித்தும் இருக்கிறோமே ஒழிய எதிரி போலீசு பந்தோபஸ்தில் இருந்து பேச வேண்டியிருந்ததற்கு வெட்கப்படாமலோ அதைப் பற்றிப் பெருமையாய் பேசிக்கொண்டோ இருந்ததில்லை.

கேள்விகள் கேட்டால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதுதான். இஷ்டமில்லையானால் இப்போது சொல்ல சௌகரியமில்லை என்று சொன்னால், கேள்வி கேட்பவர்கள் திருப்தி அடைய வேண்டியது தான். அல்லது சொன்ன பதிலை வைத்துக் கொண்டு தான் வேறு ஒரு கூட்டம் கூட்டி அதில் உள்ள தவறுதல்களை வெளிப்படுத்த வேண்டியதுதான். அப்படிக்கெல்லாம் இல்லாமல் கலகம், காலித்தனம் செய்வதும் பிறர் பேசுவது காது கேட்காமல் இருப்பதற்காக "காந்திக்கு ஜே" என்பது போல் கூவுவதுமான இழிவான செயல்களை ஒழிக்க வேண்டியது தான் என்பதை பலமுறை வற்புறுத்தி வந்திருக்கிறோம்.

இது எழுதினது காங்கிரசுக்காரருக்கு மட்டும் என்று நாம் எழுதவில்லை. சுயமரியாதைக்காரர் என்பவர்கள் எங்காவது இப்படிப்பட்ட காலித்தனம் செய்திருந்த போதிலும் அவர்களுக்கும் சேர்த்துத்தான் எழுதுகின்றோம். 40000, 50000 பேர் உள்ள கூட்டங்களில் அவ்வளவு பேருக்கும் மாறுதலான எவ்வளவோ எதிரிடையான அபிப்பிராயங்களைப் பற்றிப் பேசின போதிலும் ஜனங்கள் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த பிறகு தங்களுக்கு இஷ்டமான கேள்விகளை அதுவும் பேசிய விஷயத்தைப் பொருத்த கேள்விகளையே கேட்பதும் உபன்யாசகர் பதில் உரைப்பதும், உரைத்த பதிலை மரியாதையுடன் கேட்ப்பதுமான காரியங்களை மேல் நாடுகளில் பார்த்திருக்கிறோம்.

அப்படிக்கெல்லாம் இல்லாமல் இம்மாதிரி கோழைத்தனமாக காலித்தனம் செய்வதைக் காங்கிரஸ் தேசிய பக்தர்கள் பெரிதும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டிருப்பதும், அதை காங்கிரசு தேசியப் பத்திரிகைகள் ஆதரிப்பதும் வெட்கம்! வெட்கம்!! வெட்கம்!!! என்று மும்முறை கூறி இனியாவது புத்தி வரட்டும் என்று ஆசைப்படுகிறோம்.

(பகுத்தறிவு கட்டுரை 16.09.1934)

Pin It