நமது "பகுத்தறிவு" தினசரியானது நாம் எதிர்பார்த்ததற்கு அதிகம் வளர்ச்சியடைந்து வருகிறது. நேற்றுடன் ஒவ்வொரு நாளும் 3200 காப்பிகள் வெளிவந்தது. தமிழ்நாட்டில் நமதியக்க சம்பந்தமாக உள்ள சகல செய்திகளும் பிரதி தினமும் தாராளமாக வெளிவர வேண்டு மென்பதற்காகவே இத்தினசரி ஆரம்பிக்கப்பட்டது. தினசரி தனது கடமையை தைரியமாகச் செய்ய ஊக்கம் காட்டிய வெளியூர் சந்தாதாரர்களையும் ஏஜண்டுகளையும் பாராட்டுகிறோம். மூவாயிரத்து இருநூறாக இருப்பது இன்னம் அதிகமாகாததற்கு காரணம் சந்தா அனுப்பாத சந்தாதாரர்களுக்கும் முன்பணம் அனுப்பாத ஏஜண்டுகளுக்கும் நாம் பத்திரிகை அனுப்பாததேயாகும். இன்னும் இரண்டு தினத்துக்குள் சேலம், திருச்சி, திருப்பத்தூர், பொள்ளாச்சி, கோவை இவ்வூர் ஏஜண்டுகள் கேட்டுக் கொண்டபடியால் அன்றாடம் பேப்பர் மாலைக்குள் கிடைக்கும்படி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

(புரட்சி அறிவிப்பு 29.04.1934)periyar police***

காளியப்பன்

நாகை தோழர் காளியப்பன் அவர்கள் மலாய் நாடு சுற்றுப் பிரயாணம் இவ்வாரமில்லை. இன்னும் இரண்டு வாரத்திற்குள் அவர் மலாய் நாட்டிற்குப் புறப்படுவார்.

தோழர் காளியப்பனின் "டார்வின்" என்ற குழந்தை இறந்ததென்று தெரிய விசனிக்கிறோம். குழந்தையை இழந்த வருத்தத்திலுள்ள அவருக்கு ஆறுதல் கூறுகிறோம். அடுத்த வாரம் ஈரோட்டிற்கு வருவார்.

(புரட்சி இரங்கல் செய்தி 29.04.1934)

***

தொழிலாளர்

மாமூல் சம்பளத்தில் பாதிக்குக் குறைவாகக் குறைப்பதை பம்பாய் நெசவு ஆலைத் தொழிலாளர்கள் கண்டிக்கிறார்கள். இதற்கறிகுறியாகவே ஒரு மாத நோட்டீஸ் கொடுத்து நேற்று 23ந் தேதியிலிருந்து இன்றுடன் ஏழு தினங்கள் பொது வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வேலை நிறுத்தக்காரர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரமேயாகும். இன்றுவரை சுமார் ஒரு லக்ஷத்துக்கு மேல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்திருக்கிறார்கள். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டும் இதுவரையில் மில் முதலாளிகளோ சர்க்காரோ சமாதானம் செய்ய முன் வரவில்லை. பம்பாய் கார்ப்பரேஷன் தலைவர் இன்று சமாதானத்துக்கு முயல்கிறார். டெல்லியிலும், நாகபுரியிலும், கராச்சியிலும் உள்ள நெசவுத் தொழிலாளிகள் அனுதாபங் காட்டுகிறார்கள். விரைவில் பரிகாரம் ஒரு முடிவேற்படுமா?

(புரட்சி துணைத் தலையங்கம் 29.04.1934)

Pin It