தோழர் காந்தியவர்கள் தனது 35-சகாக்களுடன் ஆமதாபாத்தில் வைத்து சிறைப்படுத்தப்பட்டு விட்டார். இதைப்பற்றி சுதேசமித்திரனும், தமிழ் நாடும் ஹிந்துவும் எழுதி இருப்பதுபோல் இதில் ஒன்றும் அதிசய மில்லை. ஆனால் அப் பத்திரிகைகளுக்கு காங்கிரசின் குற்றத்தையும், காந்தியார் குற்றத்தையும், அவ்விருவர்களுடைய பயனற்ற வேலைக ளையும், எடுத்துக் காட்ட இப்பொழுதாவது ஓரளவு தைரியத்துடன் வெளி வந்தது ஒரு பெரிய ஆச்சரியமேயாகும்.

இதில் சுதேசமித்திரன் பத்திரிக்கையானது காந்தி அரஸ்டைப் பற்றி தனது ஆகஸ்டு 1-ந் தேதி தலையங்கத்தில் “மரண தண்டனைக்கு உள் பட்டிருக்கையில் ஜனங்களின் மதிப்புக்கு பாத்திரரான தலைவர்கள் காரிய சாத்தியமானவைகளாவும், பலன் தரத்தக்கவைகளாகவுமுள்ள வழிகளை விட்டுவிட்டு தங்களுடைய கொள்கையின் விசேஷத்தை மெய்பிப்பதி லேயே கருத்துடையவர்களாக இருக்கிறார்களென்றும், காங்கிரசை பின்பற்றுவோரான சாமான்ய ஜனங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் உடனே - கைதியாகி சிறை செல்லுவதை விட்டுவிட்டு அனுபவ சாத்தியமான காரியங்களை கவனிக்கவேண்டும்” என்பதாகவும் எழுதியிருக்கிறது.

இதன் கருத்து என்னவென்பதை நாம் அதிகம் விளக்க வேண்டியதில்லை. காங்கிரசின் பேரால் காந்தியார் செய்துவந்த காரியங்கள் சாத்தியப் படக்கூடிய காரியமில்லையென்றும், அனுபவத்தில் எவ்வித பலனையும் தரத்தக்கது அல்லவென்றும், காங்கிரஸ் மரணதண்டனை அடைந்துவிட்ட தென்றும், காந்தியார் அதைக் கவனிக்காமல் பயனற்றதும், சாத்தியமற்றதுமான தன்னுடைய கொள்கைக்கு பெருமை உண்டாக்குவதற்காக வேண்டி மறுபடியும் பாடுபடுகிறார் என்றும் ஆதலால் அதையாரும் பின்பற்றக் கூடாதென்றும் அதற்காக ஒருவரும் ஜெயிலுக்கு போகக்கூடாதென்றும் தெளி வாய் விளக்கி எழுதியிருக்கிறது. தமிழ் நாடு பத்திரிகையும், காந்தி தவறு செய்துவிட்டார். காங்கிரஸ் தவறான வழியில் போய்விட்டது என்று குறிப்புக் காட்டிக் கொண்டும் வந்திருக்கிறது.gandhi 474காங்கிரஸ் கலைக்கப்பட்டு, காந்தியாரின் கொள்கைகளுக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்துபோன பிறகு இவ்வளவு தூரம் கண்டித்து எழுதும் “தைரியம்” வாய்ந்த பத்திரிகைகள், காந்தியார் உப்பு சத்தியாக்கிரஹம் ஆரம்பித்த காலத்தில் இம்மாதிரி தைரியம் கொண்டு “காந்தியாரின் கொள்கைகள் பயனற்றது. யாரும் பின் பற்றக் கூடாது” என்று எழுதி பிரசாரம் செய்து வந்திருந்தால் அதனால் எவ்வளவோ பயன் ஏற்பட்டிருக்கும். அப்படிக்கில்லாமல் அந்தக் காலத் தில் கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டு காந்தியாரைப் பற்றி விகார மான முறையிலும், அருவெறுக்கத்தக்க முறையிலும் விளம்பரப்படுத்திக் கொண்டும், ஒரு சாதாரண மனிதன்கூட செய்வதற்கு வெட்கப்படும்படியான மாதிரியில் அவரைப் புகழ்ந்து கொண்டும், அவருடைய காரியங்களை ஒவ்வொன்றையும் ஜனங்கள் பின்பற்றும்படியான மாதிரியில் பாமர ஜனங் களை ஏமாற்றி உற்சாகப் படுத்திக் கொண்டுமிருந்து விட்டு, இன்றையதினம் தானாய் வெட்டவெளியான பிறகு, தாங்களும் ஆளுக்கு ஒரு கல்லெடுத்துப் போட வந்து விட்டார்களென்றால் இவர்களின் தைரியத்துக்கு எதை ஒப்பிடு வது? இவ்விஷயத்தின் தமது மாகாணத் தேசீய பத்திரிக்கைகள் என்று சொல்லிக் கொள்பவை மாத்திரமல்லாமல் இந்தியாவிலுள்ள அநேக தேசியப் பத்திரிகைகள் என்பவைகளும் இதே மாதிரியாகவே முன் நடந்து விட்டு, இப்போது காந்தியாரையும், காங்கிரசின் யோக்கியதையும் வன்மையாகக் கண்டித்து எழுதுகின்றன.

“மொகுடு சச்சினதரவாத்த முண்டகு புத்தி வச்சினதி” என்று தெலுங்கில் ஒரு பழமொழியுண்டு. அதற்கு புருஷன் (காந்தீயம்) இறந்தபிறகு “முண்டை”க்கு அதாவது விதவைக்கு (தேசீயப் பத்திரிகைகட்கு) புத்தி வந்தது என்பது அதின் அருத்தம். அதுபோல் காரியங்களெல்லாம் நடந்து விட்ட பிறகும், இயற்கையிலேயே அதன் யோக்கியதைகள் வெளியான பிறகும், அதைப்பற்றி எடுத்துச் சொல்லுவதற்கும் அதிக தைரியம் ஒன்றும் வேண்டியதில்லை. அதனால் விசேஷ பலன்களும் ஏற்பட்டு விடப் போவதில்லை. ஆனால் இனி மேலாவது தேசிய பத்திரிகைகள் எழுதுவதுதான் “வேதவாக்கு” என்று நினைத்துக் கொண்டிருக்கிற மூடப் பாமர மக்களுக்கு இப்பத்திரிகைகள் என்ன வழி காட்டப் போகின்றன? என்பது தான் அவர்களைப் பற்றிய பிரச்சினைகளாகும்.

“தமிழ் நாடு பத்திரிகை ஒரு அளவுக்கு சமதர்மக் கொள்கைகளை பயங்காளி பாஷையிலாவது எழுதி வருவது பற்றி யாவரும் மகிழ்வார்கள்.” “சுதேசமித்திரன்” பத்திரிகையோ உலகம் எப்படி யானாலும் சரி, யார் எக்கேடு கெட்டாலும் சரி, ஸ்தல ஸ்தாபனங்கள், சட்ட சபைகள் முதலியவைகளெல்லாம் முன்போல் பார்ப்பனர்களே கைப்பற்ற வேண்டும். பார்ப்பன ஆதிக்கமே நிலைத்திருக்கவேண்டும். மனிதர்கள் எல்லாம் புராணக் குப்பைகளிலே புரண்டு பார்ப்பனர்களின் காலைக் கழுவின ஜலத்தைச் சாப்பிடுவதன் மூலமாகவே “மோட்சத்திற்குப் போக வேண்டும்” என்கின்ற பிரச்சாரமே செய்து வருகின்றதே தவிர கடுகள வாவது பொது ஜனங்களுடைய நன்மையைப்பற்றின கவலையே இல்லா மல் நடந்து கொண்டு வருகின்றது. தமிழ் நாட்டு தேசியத் தலைவர்களான தோழர் சத்தியமூர்த்தி முதலியோர்களும், காந்தியாரின் தவறுதலைப் பற்றியும், காங்கிரசின் தவறுதலைப் பற்றியும் பேசும்போதெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்களையும், சட்டசபைகளையும், கைப்பற்ற காந்தியார் உதவி புரிய வில்லையே என்கின்ற ஒரு காரணத்தைத்தான் பிரதானமாக வைத்துப் பேசு கின்றார்களே தவிர வேறில்லை.

இப்பொழுது சமீபத்தில் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் காந்தி யாரின் ஆலோசனைப்படி காங்கிரஸ் தலைவரான தோழர் ஆனே அவர்கள் பிறப்பித்த அறிக்கையை எதிர்த்து வேலை செய்யப்போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சட்டசபை ஆவலுள்ளவர்களும் ஸ்தல ஸ்தாபன ஆவலுள்ளவர்களும் இந்த அறிக்கைக்குச் சாதகமாக ஆதரவளிப் பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

நமது நாட்டைப் பொறுத்தவரையிலும், தேசீயமென்பதன் அர்த்த மெல்லாம் அரசாங்கத்தையும், அதிகாரத்திலிருப்பவர்களையும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் வைவதும், அதன் மூலம் மூடப் பாமர மக்களிடம் செல்வாக்குப் பெறுவதும், அதன் பயனாய் சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் பதவிபெறுவதும் அப்பதவியையே தங்களது வாழ்க் கைக்கு ஆதாரமாய் வைத்துக் கொள்ளுவதும் என்பது தான் இன்று நமது நாட்டில் தேசியமாய் விளங்கி வருகிறது. இதற்கு உதாரணம் வேண்டும hனால் இந்தியா வெங்கும் “மாசற்ற” தேசீயவாதியெனப் பேர் பெற்ற தோழர் சத்திய மூர்த்தியவர்களின் வாழ்க்கையையும், “ஜாதகத்தையும்” எடுத்துக் கொண்டு பார்த்தாலே மேலேகண்டபடி நாம் சொல்லுவது சரியா? தப்பா? என்பது யாவருக்கும் சுலபத்தில் விளங்கிவிடும். பிரசித்திப்பெற்ற இப்பெரிய தேசீயவாதியின் போக்கே இப்படியிருக்கும்போது மற்றபடி குட்டி தேசீயவாதிகளான மாகாண, ஜில்லா, தாலூகாக்களில் மாத்திரம் விளம்பரம் பெற்ற தேசீயவாதிகளைப் பற்றி நாம் விவரித்துக் கூறவேண்டியதில்லை.

நிற்க, இந்தியாவிலுள்ள இன்றைய தேசீயத்திற்கு என்ன கொள்கை இருக்கின்றது என்று எவருக்குத் திட்டமாய்ச் சொல்ல முடியும்? என்று யோசித்துப் பார்த்தால் மற்றொரு புரத்தில் காங்கிரஸ் தேசீயத்தின் யோக்கியதை என்ன என்பதும் வெளியாகும். உலகம் பூராவுமுள்ள தேசீயத் தில் என்ன இருக்கிறதோ அது தான் இந்தியாவிலுள்ள தேசியத்திலுமிருந்து வருகிறது. அது என்னவென்றால் தேசீயம் பேசி, பாமர மக்களை ஏமாற்றி ஒரு கட்சி அதிகாரத்திலிருப்பதும் மற்றொரு கட்சி தோன்றி தேசீயம் பேசி அதிகாரத்திலிருப்பவர்களைத் தள்ளி விட்டு தாங்கள் போய் அதிகாரத் திலிருக்க முயற்சிப்பதும், அப்படி முயற்சிக்கும் கட்சி ஒவ்வொன்றும் தங்களைத் தேசீயக் கட்சி என்று சொல்லிக் கொண்டு அதிகாரத்திலும் பதவியிலுமிருப் பவர்களை சதா வைது கொண்டிருப்பதும் தான் தேசீயக் கட்சி என்பதன் திட்டங்களாயிருந்து வருகின்றன.

ஆனால் எல்லா தேசீயக் கட்சியும் பாமர ஜனங்கள் நம்மைக்காகவும் ஏழை ஜனங்கள் நன்மைக்காவும் பாடுபடுவதாகவே சொல்லிக்கொண்டு பாமர ஜனங்களுக்கும், ஏழை ஜனங்களுக்கு முள்ள குறைகளை எடுத்து வர்ணித்து ஏமாற்றுவதையே பிரசாரமாய் கொள்வதாய் இருக்குமானாலும், கக்ஷி ஜெயித்து அதிகாரமும், பதவியும் பெற்று விட்டால் அவர்களுக்காக என்ன செய்வது என்பதற்கே திட்டமில்லாமல், அதன் பயன் முழுவதும் மேல் நிலையிலுள்ளவர்களும், தனிப்பட்ட நபர்களும் மாத்திரம் பயன் அனுபவிப் பதாய் இருந்து வருவதையேதான் நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

இந்திய தேசீய காங்கிரசும், காந்தீயமும் இந்தக் கொள்கையிலும், திட்டத்திலிருந்து சிறிது விலகினதல்ல என்பதே நமது முடிபு.

உதாரணமாக, காந்தியாரின் கதர் திட்டத்தைப் பற்றி நாம் அதிகம் விளக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஏழைகளைக் காப்பாற்ற இது தான் வழி என்று அவர் முடிவு செய்து விட்டார். ஆகவே அதன் யோக்கியதை தானாக விளங்கும். தீண்டாமை விலக்கு என்பதின் தத்துவம் எல்லாம் காந்தி யாருக்கு ஹிந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதையே பிரதான மாய்க் கொண்டது என்பது யாரும் அறிந்ததேயொழிய இதில் ரகசியம் ஒன்றுமில்லை.

மதுவிலக்கு என்பது ஏழைக் கூலி ஜனங்களின் செல்வாக்கைப் பெறச் செய்யப்படும் சூழ்ச்சியேயல்லாமல், தோழர் காந்தியார் மதுவிலக்குக் காகக் கையாளும் முறையால் மதுவிலக்கு ஏற்படாது என்பதும், மதுவை அடியோடு ஒழித்துவிட முடியாது என்பதும் அதுவிஷயத்தில் அவர் இது வரை கையாண்ட முறைகள் எல்லாம் தோல்வியே அடைந்திருக்கிறது என்பதும், அவரே நன்றாய் உணர்ந்ததாகும்.

மற்றப்படி அன்னியத் துணி பகிஷ்காரம் என்பதெல்லாம் ஆலை முதலாளிகளுக்கு லாபம் கொடுத்து வந்திருக்கிறது என்பதைத் தவிர, அதற்குப் பதிலாக முதலாளிகள், பகிஷ்காரப் பிரசாரத்துக்கு ஏராளமாய் பணம் உதவி வருகிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒரு பயனும் கண்டு விடவில்லை.

மற்றும் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைப் பிரசாரத்தின் தத்துவமும், ஒவ்வொரு மதமும் தன் தன் சுயநலத்தையே பிரதானமாய்க் கருதவும் மதவெறியை அதிகமாக்கவும் ஒன்றுக்கொன்று அவநம்பிக்கை கொண்டு என்றும் ஒற்றுமையாவதற்கு மார்க்கமில்லாமல் தனித் தனியே தலைவிரித் தாட ஏற்பட்டதல்லாமல் அதிலும் எவ்வித பயனும் ஏற்படுவதற்கில்லை.

இவை ஒரு புரமிருக்க சாத்தான் தன்மைகொண்ட சர்க்காரை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்து அதையொழித்து விடுவது என்று சொல்லிக் கொண்டு, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்களெல்லாம் காந்தியாரைப் பற்றிய ஒரு விளம்பரத்துக்கும் பாமர ஜனங்களிடையே ஒருபோலி - உயிரற்ற கிளர்ச்சி ஏற்பட்டு யேற்றப்பட்டு சோர்வும், அவ நம்பிக்கையும் அடைய வுந்தான் பயன்பட்டதே தவிர ஒரு அளவுக்காவது சாத்தான் அரசாங்கத்தை அசைக்கவோ, அல்லது அது இக்கிளர்ச்சிகளை லட்சியம் செய்யவோ தக்க மாதிரியில் இதுவரை பயன்படவில்லை. ஒரு சமயம் சர்க்கார் ஏதாவது தாங்கள் இதை லட்சியம் செய்ததாக காட்டிக் கொண்டிருப்பார்களே யானால் அது போலித்தனமாய் பாமர மக்கள் ஏமாறு கின்றதற்காக காட்டிக்கொண்டிருக்கக் கூடியதாய் இருக்குமே தவிர வேறில்லை. ஏனென்றால் இந்த சத்தியாக்கிரகத்தால் தாங்கள் மிகவும் பயந்துவிட்டதாகக் காட்டிக் கொண்டால் தான் கஷ்டப்படும் மக்கள் வேறு வழியில் பிரவேசிக்காமல் இந்தப் பைத்தியக்காரத் தனத்திலேயே முழுகி இருப்பார்கள் என்கின்ற எண்ணத்தைக் கொண்டு அவர்கள் பயந்தவர்கள் போல் நடித்திருக்கலாம். அல்லது தங்களை ஆதரித்து நிற்கும் ஜனங்களுக்கு ஒரு போலித் திருப்தியை உண்டாக்க வெண்ணி அப்படி நடந்து இருக்கலாமே ஒழிய ஒரு நாளும் சத்தியாக்கிரகக் கொள்கையோ, தேசீயக் கொள்கையோ எதுவும் இது வரையில் சர்க்காரை லட்சியம் செய்யும்படி செய்யவே யில்லை என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.

அன்றியும் இம்மாதிரி ஒரு போலி இயக்கம் நாட்டில் இருந்துகொண்டு ஜனங்களின் உணர்ச்சிகளையும், ஊக்கத்தையும் கவர்ந்து பாழாக்கிக்கொண்டு வருவதில் சர்க்காருக்கும், முதலாளிமாருக்கும் எவ்வளவோ லாபகரமான காரியம் என்று சொல்ல வேண்டும். ஆனால், இதற்காகக் கஷ்டப்படுவதும், நஷ்டப்படுவதும் பாமர ஜனங்களே ஒழிய மற்றபடி முதலாளிமார்களோ உத்தியோகஸ்தர்களோ சர்க்காரோ சிறிதுகூட இல்லவே இல்லை.

இந்தப் போலிக் கிளர்ச்சியை அடக்க அரசாங்கத்தார் எடுத்துக் கொள்ளும் போலி முயற்சிக்கு செலவழிக்கப்படும் காரியங்களுக்குச் செய்யப் படும் செலவுகளுக்கு ஆக ஜனங்களின் வரிப்பணமே செலவழிக் கப்படுகின்றது. இந்த வரியால் பணக்காரர்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் புதிய வரிகளாலும் ஜனங்களுக்குச் சர்க்கார் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைப்பதாலும் ஏழை ஜனங் களும் நடுத்தர ஜனங்களுமே கஷ்டப்படுகிறார்கள்.

ஆதலால் பாமர ஜனங்கள் இது வரை தாங்கள் முட்டாள்தனமாய் ஏமாந்து முதலாளி ஆதிக்கத்துக்கு தூணான தேசீயப் பித்துக் கொண்டு அலைந்த முட்டாள் தனத்தை விட்டுவிட்டு எப்படி நடந்தால் முதலாளி தத்துவம் ஒழிக்கப்படும் என்றும், எப்படி நடந்தால் முதலாளி தத்துவ ஆட்சி அழிக்கப்படும் என்பதையும் கவனித்துப் பார்த்து அதற்கு ஏற்ற கொள்கை கொண்ட இயக்கத்துக்குப் பாடுபடும்படியும் அதற்குத் தங்களால் கூடிய சர்வ தியாகங்களையும் செய்யும் படியும் வலியுறுத்துகின்றோம்.

மற்றபடி ஒரு காதொடிந்த ஊசிக்கும் பயனில்லாமல் காந்தியாருக்கு உலக விளம்பரம் சம்பாதித்துக் கொடுப்பதிலும் சோம்பேறிகளாய் இருந்து ஒரு சிலர் வாழ வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் தேசீயத்துக்கு ஆக்கம் தேடிக் கொடுப்பதிலும் ஏழைமக்களும் சரீரத்தால் உழைத்து பாடுபட்டுப் பிழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுவது என்பது தற்கொலையே ஆகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 06.08.1933)

Pin It