செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17 - 7 - 32ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசையாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்கமும், மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர் இடத்தில் வெளிவந்திருப்பதைக் காணலாம்.

செட்டி நாட்டில் நடைபெற்ற இம்மகாநாடு நமது இயக்கத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த சின்னமாகும் என்று கூறியும், நினைத்தும் சந்தோஷப் படுவது சிறிதும் தவறாகாது. ஏனெனில், இன்று நமது நாட்டில் பார்ப்பனீயத்திற்கு ஆதரவு அளித்து வருகின்ற மக்கள் நிறைந்த இடம் செட்டிநாடு என்பது உலகமறிந்த விஷயம்.

“வேதங்கள்” என்று சொல்லப்படுகின்றவைகளிலும் இயற்கை நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாததும், வருணாச்சிரம தருமத்திற்கு ஆதரவளிக்கக் கூடியவைகளுமான புராணங்களிலும் நம்பிக்கை வைத்துக் கொண் டும், அவைகளைப் பற்றி பிதற்றுகின்றவர்களின் வலையிற் சிக்கி ஏமாந்து கொண்டும் இருக்கின்ற மக்கள் செட்டி நாட்டில்தான் அதிகமாக இருக்கி றார்கள். பழமை என்பதில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துக் கொண்டு, அவை தீமையை உண்டாக்கக் கூடியவைகளாய் இருந்தாலும் விடாமல் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற மக்களும், செட்டி நாட்டு மக்களேயாவர்கள். பார்ப்பனர்கள் சோம்பேறிகளாக உட்கார்ந்து கொண்டு தின்று கொழுப்பதற்காக அன்னச் சத்திரங்களைக் கட்டி வைக்கின்றவர்களும், பார்ப்பனப் பிள்ளைகளைத் தேடிப் பிடித்துக் கொண்டுபோய் சோறு போட்டு எண்ணைய், துணிமணி முதலிய சகல சௌகரியங்களும் கொடுத்து வளர்த்து ஆட்டு மந்தைகளைப் போல கத்திக் கொண்டிருக்கச் செய்கின்ற வேத பாடசாலைகளை அமைத்திருக்கின்றவர்களும் நன்றாய் இருக்கின்ற கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி கோடிக்கணக்கான பணங்களை செலவிட்டு மீண்டும் அவற்றைக் கட்டி, பிறகு அவைகளுக்கு “கும்பாபிஷேகம்” என்னும் பெயரால் லட்சக்கணக்கான பொருள்களையும் செலவு செய்து பணத்தை வீணாக்கும் “பேரறிஞர்”களும் செட்டி நாட்டில் தான் மிகுதியாக இருக்கிறார்கள்.

periyar and karunanidhi 515உலகமெங்கும் நாகரீக வெள்ளம் புரண்டு, பழய மூடப் பழக்க வழக்கங்களையெல்லாம் அழித்துக் கொண்டு வருகின்ற இக்காலத்திலும் செட்டி நாட்டிலுள்ள முதியோர்கள் அனைவரும் பார்ப்பனர்களைச் “சாமி” என்று அழைத்துக் கொண்டும், அவர்களையே “பூவுலக தெய்வங்கள்” என நம்பிக் கொண்டும், அவர்களையே தங்கள் குடும்பத்தின் சகல வரவு செலவுகளையும் நடத்தும் “சர்வாதிகாரி”களாக வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது அந்நாட்டில் அனுபவமுள்ளவர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயம். ஆனால் அந்நாட்டு இளைஞர்கள் தற்பொழுது சுயமரியாதை உணர்ச்சியுடையவர்களாகி அங்கு குடிகொண்டிருக்கும், பார்ப்பனீயத்தை ஒழிக்கவும், தங்கள் சமூக ஊழல்களைப் போக்கிச் சீர்திருத்தஞ் செய்யவும் சில காலமாக வேலை செய்து வருகின்றனர். இத்தகைய உணர்ச்சி வாலிபர்களிடமும் உண்டான பிறகுதான் இங்கு நமது இயக்கம் அதி தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது என்று கூறலாம்.

அங்கு நமது இயக்கம் பரவ ஆரம்பித்த காலத்தில் அந்நாட்டில் குடிகொண்டிருக்கும் “பழம் பெருச்சாளிகள்” நமது இயக்கத்தை அழிப்பதற்குச் செய்த சூழ்ச்சிகளும், இழி செயல்களும் எண்ணற்றவை. பார்ப்பன அதிகாரிகளும், பார்ப்பனர் பேச்சுக்கு “ஆமாம் சாமி” போடும் பணக்காரர்களும் நமது இயக்கத்தைப் பிரசாரம் பண்ணியவர்களுக்கெல்லாம் எவ்வ ளவோ கெடுதிகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்து பார்த்தார்கள். ஒன்றினாலும், நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கெடுதியோ, நமது இயக்கத்தைப் பரவ வொட்டாமல் தடுக்கவோ முடியவில்லை.

சென்ற ஆண்டில் நமது மகாநாடு பல எதிர்ப்புகளுக்கிடையே திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்கள், பி. ஏ. பி. எல். , எம். எல். ஏ. தலைமையிலும் இவ்வாண்டு புதுச்சேரி அரசாங்க வரவு செலவு இலாக்காத் தலைவர் ஏ. வி. முத்தையா அவர்கள், பி. ஏ. பி. எல். தலைமையில் வெற்றியோடும் நடைபெற்றிருக்கின்றன. சென்ற ஆண்டு மகாநாட்டைப் போலவே (சற்று அதிகமாகவே) இந்த ஆண்டிலும் அதிகாரிகளும் பார்ப்பனர் வசப்பட்ட பணக்காரர்களும் காங்கிரஸ் பேரால் செட்டி நாட்டில் ஜீவனஞ் செய்து கொண்டிருக்கும் அன்னக் காவடிகளும் மகாநாட்டைத் தடைசெய்ய பல சூழ்ச்சிகளைப் புரிந்தார்கள். சென்ற ஆண்டிலாயினும் நமது மகாநாட்டிற்குப் பல பணக்காரர்களின் ஆதரவு இருந்ததாகக் கருதப்பட்டது. இந்த ஆண்டில் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லக் கூடிய எவருடைய ஆதரவும் இல்லை யென்றே கூறலாம். ஆனால் எதிர்ப்பு மாத்திரம், ஒரு சிறிதும் குறைந்த பாடில்லை. அப்படி இருந்தும் நமது மகாநாடு வெற்றியோடு நிறை வேறியதற்குக் காரணம் அந்நாட்டு இளைஞர்களின் ஊக்கமும், தைரியமும், உழைப்பும், சுயமரியாதையும் ஆகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இம்மகாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் திரு. ஏ. வி, முத்தையா அவர்கள் என்பதையும் வரவேற்புத் தலைவராய் இருந்தவர், திரு. எஸ். லக்ஷி மிரதன் எம். ஏ. பி. எல். அவர்கள் என்பதையும் அறிந்த எவரும் மகாநாட்டைப் பொறுப்பற்றவர்களின் கூட்டம் என்றோ, படிக்காதவர்களின் கூட்டமென்றோ, ஒன்றும் தெரியாத இளைஞர்களின் கூட்ட மென்றோ சொல்ல முன் வரமாட்டார்கள். அப்படியும் பொறாமையால், வழக்கம்போல் மேற்கண்ட பல்லவிகளை பாட முன்வருவார்களானால் அவர்களைப் போல வடிகட்டின முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பதைச் சிறு பிள்ளைகளும் அறிவார்கள். இவ்விஷயத்தை வரவேற்புத் தலைவர் திரு. எஸ். லக்ஷிமிரதன் அவர்கள்,

“வயதாலும், கல்வியறிவாலும், உலக அனுபவத்தாலும் முதிர்ந்த இத்தகைய பெரியார் ஒருவர் நமது இயக்கக் கொள்கைகள் அனைத்தையும் அங்கீகரித்து ஆதரிப்பதுடன் அவற்றை நிலை பெறச் செய்வதிலும் இத்தனை ஆர்வத்துடன் கலந்து கொள்ளுதல், இவ்வியக்க விரோதிகளின் வம்புப் பேச்சுகளுக்கு ஒரு வாய்ப் பூட்டாக இருக்கும் என்பது திண்ணம்”

என்று தமது வரவேற்புப் பிரசங்கத்தில் கூறியிருப்பதைக் கொண்டு உணரலாம்.

வரவேற்புத் தலைவர் அவர்கள் பிரசங்கத்தில் நமது இயக்கத்தின் உண்மையான கொள்கைகள் இவைகள் என்பதையும், எதிரிகள் நம்மை “நாஸ்திகர்கள்” என்றும், “பிராமணத் துவேஷிகள்” என்றும், “வகுப்பு வாதிகள்” என்றும், “தேசத் துரோகிகள்” என்றும் பிரசாரஞ் செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டியிருக்கும் பகுதிகள் மிகவும் கவனிக்கத் தக்கவையாகும். அவைகளாவன:-

“பசுவிற்காகவும், உருக்கிவிட்ட ஈயத்தைப் போல் காது களைத் துளைக்கின்ற கொட்டுகளுக்காகவும், தென்கலை, வடகலை நாமங்களுக்காகவும் இன்னும் இத்தகைய இழிந்த காரியங்களுக் காகவும் நம்மைப் பல வகுப்பினராகப் பிரித்து தமது உடல், பொருள், ஆவி யாவற்றையும் ஒருங்கே .இழந்து உலகத்தை எப்பொழுதும் போர்க்களமாக்குவதற்குக் காரணமாயிருக்கும் மதங்களை விட் டொழியுங்கள்” என்றால் நாம் உடனே நாஸ்திகர் என பட்டம் சூட்டப் படுகின்றோம்.

“அறிவை ஒதுக்கிப் பிறப்பைப் பேணி அநீதிகளைப் போதிக்கும் சாத்திரக் குப்பைகளைக் கண்டிப்பதனாலும், வருணாச் சிரம உயர்ச்சி தாழ்ச்சிகளையும், அதனாலாய உரிமைகளையும், கடமைகளையும் தள்ளி விடுவதனாலும் நம்மை பிராமணத் துவேஷிகளாகத் தூற்றுகிறார்கள்”

“உயர்வடைவதற்காக சந்தர்ப்பம் ஏற்படும் வரையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிரத்தியேகமான வசதிகள் அமைக்க வேண்டுமென்றால் நம்மைத் தேசீய விரோதமான வகுப்புவாதச் சச்சரவுகள் செய்பவர்களாகப் பறையறைகின்றனர்.”

“அன்னிய அரசாட்சியை ஒழிப்பது மட்டும் சுயராஜ்யமாகக் கருதி, மக்கள் கட்டுண்டு அடிமைகளாய் வாழ்வதற்கு காரணமாய் இருக்கும் பழக்கவழக்கங்களாகிய இரும்புத் தளைகளை, மத நடுநிலை என்ற பெயரால் இருந்தபடியே என்றும் நின்று நிலவச் செய்யும் காங்கிரசுத் திட்டத்தையும் இன்னும் இன்னோரன்ன அவர்தம் குறைகளையும் நாம் எடுத்துக் கூறுவதனால் நம்மைச் சுதந்திரம் வேண்டாத தேசத்துரோகிகள் என்று முரசறைகிறார்கள்.”

மேற்கூறிய உண்மைகளை அறிந்த எவரும் சுயமரியாதை இயக்கத்தை பழி கூற முன் வருவார்களா என்று கேட்கிறோம்.

எந்த இடங்களில் அடிமைத்தன்மை, ஏமாற்றுந் தன்மை, வஞ்சகம், கொடுமை, புரட்டு, மூடநம்பிக்கை, சுயநலம் முதலியவைகள் குடிகொண்டு இருக்கின்றனவோ அங்கெல்லாம் நமது இயக்கம் தோன்றாமலும், தனது சமதர்ம வேலையைச் செய்யாமலும் போகாது என்ற உண்மையை நாம் அடிக்கடி கூறி வருகிறோம் . மேற்கூறிய பார்ப்பனீயத்தால் கட்டுப்பட்டு வருந்தும் மக்களுக்குச் சமத்துவமும், சுதந்தரமும், விடுதலையும் அளிக்கவே நமது இயக்கம் தோன்றியதாகும். இதனை மகாநாட்டுத் தலைவர் திரு. ஏ. வி. முத்தையா பி.ஏ. பி.எல். அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்திலும் விளக்கிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்பகுதி வருமாறு:-

“ஏழை மக்கள்” - வறிய மக்கள் அறியாமையில் அழுந்தி உண்மை விளங்காது பலபல துறைகளிலும் இன்னல்களுக்கு உட்பட்டுத் தவிக்கின்றார்கள். இது ஒரு காட்சி! இப்படித் தவிக்கும் ஏழை மக்களுக்கு - வறிய சகோதரர்களுக்கு கண்களைத் திறந்து விடாமல், புத்தியைத் துலக்காமல் - வழி காட்டாமல் வேறு சில சகோதரர்கள், அவர்களை மிரட்டி - அதட்டி - பயப்படுத்தி - ஏய்த்துப் பொருள் பறிக்கின்றார்கள். இது மற்றொரு காட்சி.

இவ்விரண்டு காட்சிகளையும் கண்டு மனம் பொறாது - உள்ளம் உடைந்து இவைகளை யகற்ற - வழிதேட - இச்சீர் கேடான நிலையைச் சீர்படுத்த அருள் நோக்கங் கொண்ட - அறிவிற் சிறந்த பெரியார்கள் இவ்வியக்கத்தை ஆரம்பித்திருக்க வேண்டும்; ஆரம்பித்தார்கள்.

அன்பு - அறிவுடைய எவரும் இந்தக் காட்சிகளைக் கண் டால்- இந்த நிலையைப் பார்த்தால் - இதைப்பற்றிக் கேள்விப் பட்டால் சும்மா இரார்; எப்படி இருக்க முடியும்?

மனம் பதைத்து “அந்தோ! அறியாமையின் விபரீதங்கள் எவ்வளவு கொடியன! இப்படிப்பட்ட அநியாயங்களும், அழும்புகளும் உண்டா? இவைகளை அகற்றுவதற்கு வழியொன்றும் கிடையாதோ என ஆழ்ந்து யோசிக்காமலிரார்.

இந்த யோசனை உதித்த ஒருவருக்கு ஆற்றலுமிருந்தால் இயக்கம் ஒன்றில் முற்பட்டுத் தொண்டு செய்யாமலிரார்.

தன்னைப் போன்ற உயிர்கள் இன்னலுற்று, வாடி, வதங்கி ஏங்கி நிற்கும் போது, கல் நெஞ்சம் படைத்தவனாய் சாத்திரங்கள் காட்டி உதவி செய்ய முன்வராமல், வாதம் புரிபவனும் மனிதனாமோ? சொல்லுங்கள்”

மேற்கூறிய தலைவர் பேச்சில் உள்ள உண்மையைச் சிந்திக்கும் எவரும் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்ய முன்வராமல் இருக்க முடியுமா? அவ்வாறு ஏழைகளுக்காக - கஷ்டப்படும் மக்களுக்காக - அடிமையாகிக் கிடக்கும் மக்களுக்காக உண்மையாக உழைக்க விரும்புகின்றவனுக்காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது என்பதை மேற்கூறிய உண்மை உரைகளைக் கொண்டு தெளிவாக உணரலாம்.

கடைசியாக வரவேற்புத் தலைவர் அவர்கள்,

“விருதுநகர் மகாநாட்டுத் தீர்மானத்திற்கு இணங்க நமது இயக்கத்திற்குச் சங்கம் அமைக்க வேண்டும். அதன் சட்ட திட்டங்களும், கொள்கைகளும், நமது இயக்க நோக்கங்களுக்கு இணங்க அவசியம் நேரிடும் பொழுது மாற்றியமைத்துக் கொள்ளக் கூடியனவாக இருத்தல் வேண்டும். அதற்குப் பெரு நிதி திரட்டல் வேண்டும். வளம் நிறைந்த ஓரிடத்தில் சுயமரியாதைப் பல்கலைக் கழகமும், தலைச்சங்கமும் நிறுவ வேண்டும். மேனாட்டுக் கிறிஸ்தவ மிஷன்களைப் போல பொருளீட்டுவதும், மக்கள் முன்னேற்றமே கருதி உழைக்க முன் வரும் ஆசிரியர்களையும், தோழர்களையும், இளைஞர்களையும் ஒன்று சேர்க்கவும் வேண்டும். நமது கொள்கைகளுக்கேற்ற வாழ்க்கை முறையும் சகல விதமான கலைகளும், கைத் தொழில்களும், விவசாய அபிவிருத்தி முறைகளும், அவ்விடத்தில் போதிக்கப்பட வேண்டும். அக்கழகம் நாட்டில் நாம் என்ன மாறுதல்களை விரும்புகிறோமோ அவற்றின் உண்மையையும், மேன்மையையும் வாழ்க்கையில் அனுஷ்டிப்பது மூலமாக விளக்கிக் காட்டுவதாக இருக்க வேண்டும்.”

என்று கூறியிருக்கும் விஷயம் எல்லோருடைய கவனத்தையும் தற்சமயத்தில் கவர்ந்து நிற்கும் ஒரு விஷயமாகும். இது சம்பந்தமாகப் பலமுறை பேசப்பட்டும் தீர்மானங்கள் செய்யப்பட்டும் வருகின்றனவேயொழிய இன்னும் ஒரு காரியமும் செய்யப்படவில்லை. ஆனால் இதனால் நமது வேலைகள் ஒன்றும் தடைப்பட்டு விடவில்லையென்பது மாத்திரம் நிச்சயம். நமக்கென்று ஒரு சரியான ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலே தனிப்பட்ட சிலருடைய உழைப்பினாலும் செல்வாக்கினாலும் நமது இயக்கம் நடைபெறுகிறது என்று பிறர் சொல்லக் கூடிய நிலைமையிலிருந்தாலும், நமது நாட்டில் சங்கங்களும், சட்ட திட்டங்களும் உள்ள இயக்கங்கள் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்து ஏழைகளுக்குச் செய்திருக்கும் நன்மையைக் காட்டிலும், நமது இயக்கம் எவ்வளவோ மாறுதலையும், உணர்ச்சியையும் குறுகிய காலமாகிய இந்த 7 ஆண்டுகளுக்குள் தேசத்தில் உண்டாக்கி யிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயினும் நமக்கென ஒரு ஸ்தாபனம் வேண்டியது அவசியம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆகவே இவ்விஷயம் வெளிநாட்டிலிருக்கும் நமது தலைவர்கள் வந்தவுடன் செய்யப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

இம்மகாநாட்டில் முக்கியமாகச் செய்யப்பட்டிருக்கும் தீர்மானம் ஒன்றேயாகும். அது:-

“தற்பொழுது ஜில்லா அதிகாரிகளான, ஜில்லா கலெக்டர், ஜில்லா நீதிபதி, ஜில்லா வைத்திய அதிகாரி, தேவ கோட்டை சப் கலெக்டர் முதலியவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாயிருப்பதனாலும், தேவ கோட்டைக்கடுத்த கிராமங்களில் அடிக்கடி ஆதிதிராவிடர்கள் தாக்கப் பட்டுக் கொள்ளையடிக்கப் படுவதனாலும், இந்த ஜில்லாவிலுள்ள பிராமண அதிகாரிகளை மாற்றி பிராமணரல்லாத அதிகாரிகளையே நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்தை இம் மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.”

என்னும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்தைக் கொண்டே அப்பக்கங்களில் ஏழைமக்கள் படும் துன்பத்தை அறியலாம். சாதாரணமாகவே, பணக்காரத் தன்மையும், பார்ப்பனீயமும் மிகுந்த உறவுடையது என்பது கண்கூடான விஷயம். பணக்காரர்கள் நிறைந்த நாட்டில் ஏழைமக்கள் சுதந்திரம் வேண்டுமென்று பேச வாயெடுத்தாலே அவர்கள் பாடு கஷ்டத்தில் முடியும். அதோடு பார்ப்பனீயத்தை மேற்கொண்ட அதிகாரிகளும் நிறைந்திருப்பார்களானால் அந்த நாட்டு மக்களின் நிலையை நாம் என்னவென்று சொல்ல முடியும்? ஆகவே இத்தீர்மானம் மிகமிக அவசியமான ஒரு தீர்மானமாகும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய பார்ப்பனீயமும், பணக்காரத் தன்மையும், மூடப் பழக்க வழக்கங்களும் நிறைந்துள்ள நாட்டில் வெற்றியாக நடந்த சுயமரியாதை மகாநாடு குறிப்பிடத் தக்கதொன்றன்றோ? இம் மகாநாட்டை நடத்துவதில் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட வாலிபர்களின் ஊக்கத்தையும், உழைப்பையும், தைரியத்தையும் பாராட்டுகின்றோம். அதோடுங்கூட செட்டிநாட்டைச் சீர்திருத்த இது போல் ஆண்டுக்கொரு மகாநாடு நடத்துவது மட்டும் போதாதென்றும், நாள் தோறும் மகாநாடுகளும் பொதுக் கூட்டங்களும் சங்கிலித் தொடர் போல் நடத்திக் கொண்டே யிருந்தால் தான் அந்நாட்டில் உள்ள பார்ப்பனீயத்தை அடியோடு விரைவில் ஒழிக்க முடியும் எனபதையும் ஞாபகப்படுத்துகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 24.07.1932)

Pin It