periyar and EVKSஎவ்வளவுதான் பழமை விரும்பிகளும், வைதீகர்களும், வர்ணாசிரமி களும் தங்கள் சுயநலத்தையும், கொள்கைகளையும், பிடிவாதத்தையும் நிலைநாட்ட பகீரதப் பிரயத்தனப்பட்ட போதிலும், எவ்வகை சூட்சிகள் செய்ய முற்பட்ட போதிலும், எவ்வகை மறைமுகமான எதிர்ப்புகள் உண்டாக்கி வைத்த போதிலும் நடைபெறுகின்ற சம்பவங்கள் அவர்களது மனமுவந்த எண்ணங்களையும் ஆகாயக் கோட்டைகளையும் தவிடு பொடியாக்குவதன்றி நேர்விரோதமாகவும் இருக்கின்றன. இது காலச் சக்கரத்தின் வேகமேயன்றி பிறிதொன்றில்லை. உலகம் தினம் தினம் நிமிஷத்திற்கு நிமிஷம் முற்போக்கடைந்து கொண்டு நவீன மயமாகிக் கொண்டு வருவதுடன் ஒவ்வொரு நாளும் நடைபெறும் அதியற்புத செயல்களினின்று பழமையை மறந்து விடுங்கள்! பழமையை மறந்து விடுங்கள்! என்று அறை கூவியழைப்பதை போன்றிருக்கிறது.

இதற்கு உதாரணம் வேண்டுமாயின் இவ்வாரம் நமதியக்கத் தோழர் விருதுநகர் திரு வி. வி. ராமசாமி அவர்கள் ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தான கமிட்டி ஆலோசனை போர்டின் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தியே போதுமானதாகும். அன்பர் திரு. ராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவர். நாடார் குலத்தவர்கள் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதியார் எனக் கற்பித்து வைதீகர்களும், வருணாசிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப் பட்டிருப்பது நேயர்கள் அறிந்ததொன்றாகும். அவ்வாறிருந்தும் அத்தகைய “புனித தெய்வீகம்” பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராகத் தோழர் ராமசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு மகிழ்வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். வைதீக உலகத்திற்கிதுவோர் நல்ல பாடமாகும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1932)

Pin It