சென்ற 7, 8-5-32 இல் திருச்சிராப்பள்ளி ஜில்லா பார்ப்பனரல்லாதார் ஆறாவது மகாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம் மகாநாட்டை அங்கு எந்த விஷயத்திற்குக் கூட்டப்பட்டதோ அந்த விஷயத்தைத் தவிர மற்றவைகளெல்லாம் வெற்றியோடு நடைபெற்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்சமயம், பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி ஆராய்ந்து ஒரு முடிவு செய்யவே இம்மகாநாடு கூட்டப்பட்டதாகும். ஆனால் இவ்விஷயம் விஷயாலோசனைக் கமிட்டியில் விவாதத்திற்கு வந்துங்கூட தலைவர்களின் பிடிவாதத்தினால் நிராகரிக்கப்பட்டதென அறிகிறோம். மற்றபடி அரசியல் சுதந்தரம் சம்பந்தமாகவே பெரும்பாலும் தீர்மானங்கள் நடைபெற்றன. மகாநாட்டின் தலைவர் சர். ஏ. பி. பாத்ரோ அவர்களும், மற்றும் திறப்பாளர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களும், பெரும்பாலும் அரசியல் உரிமை சம்பந்தமாகவே ஊக்கங் காட்டிப் பேசினார்கள்.

periyar 694சர். பாத்ரோ, சர், கே. வி. ரெட்டி போன்ற பிரபல தலைவர்கள் அனை வரும் காங்கிரசின் போக்கையும், சட்ட மறுப்பின் தீமையையும் பலமாகக் கண்டித்துப் பேசிய விஷயம் தேச மக்களால் கவனிக்கக் கூடியதாகும்.

பார்ப்பனரல்லாதார் கட்சியை அகில இந்திய இயக்கமாக்க வேண்டு மென்னும் விஷயத்தில் எல்லாத் தலைவர்களும் ஒன்றுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தனர் என்றே கூறலாம்.

உண்மையில் பார்த்தால், நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் தற்சமயம் கட்டுப்பாடானதும் நிதானத்தோடு காரியம் செய்யக் கூடியதுமான அரசியல் கட்சி ஜஸ்டிஸ் கட்சி ஒன்றேயென்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்விஷயங்களை திருச்சி ஜில்லா மகாநாட்டின் நிகழ்ச்சிகளைக் கவனிப் போர் அறியலாம்.

திருச்சி மகாநாட்டில் நடைபெற்ற ஒரு முக்கியத் தீர்மானம் அரசியல் வாதிகளால் கவனிக்கக் கூடியதொன்றாகும் அதாவது:- “மத்தியப் பொறுப் பாட்சியுடன் கூடிய மாகாண சுயாட்சி கொடுக்க வேண்டு” மென்று தீர்மானம் செய்திருப்பதேயாகும். வட்ட மேஜை மகாநாட்டிலும் நமது நாட்டிலும், எல்லா அரசியல்வாதிகளும் ஐக்கிய ஆட்சியே வேண்டுமென்று கேட்டனர். இன்னும் பலரும் ஐக்கிய ஆட்சியைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். வட்ட மேஜை மகாநாட்டிற்குச் சென்ற ஜஸ்டிஸ் கட்சி கட்சியின் அங்கத்தினர்கள் கூட ஐக்கிய ஆட்சியையே ஆதரித்தனர். இப்படியிருந்தும் திருச்சி மகாநாட்டில், மத்தியப் பொறுப்பாட்சியும், முழு மாகாண சுயாட்சியும் வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்ற முன் வந்தது. மிகுந்த சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் சாத்யமான வழியில் தடையின்றி சுதந்திரம் பெற்றுத் தேசத்தை முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணமும் ஆகுமென்றே கூறலாம். சுதேச சமஸ்தானங்களும் ஒன்றுபட்டு அமையக்கூடிய ஐக்கிய ஆட்சி ஏற்படுத்துவது அசாத்தியமான காரிய மென்பதை அறிந்த பின், தைரியமாக இவ்வாறு தீர்மானம் பண்ண முன் வந்ததைப் பாராட்டுகிறோம்.

சமூகச் சீர்த்திருத்தம் சம்பந்தமாக ஜஸ்டிஸ் கட்சி இது வரையிலும் அதிக ஊக்கம் செலுத்தாமல் இருந்தது போலவே இந்த மகாநாட்டிலும் இருந்தது என்று சொல்லுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தக் காரணத்தினாலேயே இதற்குமுன் நடைபெற்ற பார்ப்பனரல் லாதார் மகாநாடுகளில் காணப்பட்ட ஒரு ஊக்கமும் கிளர்ச்சியும் இந்த மகா நாட்டில் கொஞ்சங் கூட காணப்படாமலிருந்தது. இம் மகாநாட்டுடன் சர். கே. வி. ரெட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் இளைஞர் மகாநாட்டில் காணப்பட்ட ஒரு ஊக்கம் பார்ப்பனரல்லாதார் மகா நாட்டில் இல்லையென்று கூறலாம். ஆயினும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் ஒரு மகாநாட்டைக் கூட்டி காங்கிரசின் போக்கைத் தைரியமாகக் கண்டித்து தீர்மானங்களும் பிரசங்கங்களும் செய்த இந்த மகாநாட்டைப் போற்றாமலிருக்க முடியாது.

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு திருச்சி மகாநாடு ஒரு வழிகாட்டி யாக இருந்ததென்றே கூறலாம். பார்ப்பனரல்லாதார் கட்சியைத் தேசமெங்கும் பரப்பவும், கட்சியின் கொள்கைகளைத் தவறில்லாமல் நிறைவேற்றவும், கட்சித் தலைவர்கள் பொதுஜனங்களின் அபிப்பிராயப்படி நடக்கவும் மகாநாடு மிகவும் முயற்சியெடுத்துக் கொண்டது என்று சொல்லலாம். இந்த வகையில் இனி வரப்போகும் மாகாணப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டிற்குத் திருச்சி மகாநாடு ஒரு வழிகாட்டியாக இருந்தது என்பது உண்மையாகும். ஆகவே இவ்வகையில் மகாநாட்டை வெற்றிபெற நடத்திய தலைவர்களையும் நிர்வாகிகளையும் நாம் பாராட்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.05.1932)

Pin It