periyar with cadres 640சமீபத்தில் விருதுநகரில் நடந்த 3-வது சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களில் மதங்களைப் பற்றிச் செய்யப்பட்ட தீர்மானத்தைப் பற்றி அதாவது, “மதத்தின் பேரால் அனுஷ்டிக்கப்படும் பழக்கங்களும் பயிற்சிகளும் சமூக சீர்திருத்தத்திற்கு தடையாயிருந்து வருவதால், மதங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதங்கள் ஒழியாமல் சகோதரத்துவம் ஏற்படா தென்றும் மதச்சண்டை ஒழிய வேண்டுமானால் மக்களுக்குள் மதத்தைப் பற்றிய உணர்ச்சி ஏற்படுவதை நிராகரிக்க வேண்டுமென்றும்” செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது வங்காளத்தில் வெகுகாலமாய் நடைபெற்று வரும் “மாடர்ன் ரிவ்யூ” என்னும் பிரபல பத்திரிகையின் ஆசிரியராகிய உயர்திரு இராமானந்த சட்டர்ஜீ அவர்கள் மேற்படி பத்திரிகையில் சில ஆnக்ஷபணைக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்.

அதன் சாராம்சமாவது:-

“மக்களுக்குள் எப்பிரிவினராயினும் சுயமரியாதையைப் பெற விரும்புவறேல் அதற்கு ஒவ்வொருவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மான விஷயத்தில் நாம் பின்வருமாறு நினைப்பது தவறாயிருந்தால் திருத்த வேண்டுமாய் கோருகிறோம்.

தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தார் சொல்லும் எல்லாக் கொள்கைகளிலும் நியாயம் இருக்கின்றதென்று நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

விருதுநகர் மகாநாட்டின் தலைவர் திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்கள் பேசியதாக நமக்கு எட்டிய செய்தியில்,

“இந்தியாவில் மதம் என்று சொல்லப்படும் பலம் பொருந்திய ஸ்தாபனம் மக்கள் முற்போக்கிற்கு தடையாகயிருந்து வருகின்றது” என்று பேசி யிருக்கின்றார்.

இதை அனுசரித்து மதங்கள் மறைய வேண்டும் என்பதாக ஒரு தீர்மானமும் அம்மகாநாட்டில் செய்யப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து சுயமரியாதைக்காரர்களின் நோக்கம் தெளிவாக விளங்குகின்றது.

திரு. ஷண்முகம் இந்தியாவின் நிலையைப் பற்றி பேசியதால் இந்தியாவின் பண்டை கால மத நிலையைப் பற்றி சற்று ஆராய்வோம் என்று ஆரம்பித்து,

முற்காலத்தில்

வேதங்களை ஏற்படுத்திய ரிஷிகளும் அது யாருக்கு ஏற்படுத்தப் பட்டதோ அவர்களும் பிறவியில் பிராமணர்களாய் இல்லாமலிருந்தும் அனைவராலும் பிராமணர்கள் என்றே கருதப்பட்டிருக்கின்றார்கள்.

பிரம்மத்தை வழிபடுபவர்கள் என்ற காரணத்தாலே பலர் பிராமணரானார்கள். கீதாச்சாரியாரும் கீதை கேட்டவரும் பிராமணராகக் கருதப் பட்டார். ஆதலால் மக்கள் சீர்திருத்தமடைய அக்காலத்தில் மதம் தடுக்கவில்லை.

மத்திய காலத்தில்

புத்தரால் “புத்த மதம் ஜாதி முறையைத் தகர்த்தது. நானக்கரும் குரு கோவிந்தரும் தாழ்ந்தோர்களை உயர்த்தி அவர்களைச் சகோதரர்களாக்கினார்கள். வங்காளத்தில் சைதன்னியர் முஸ்லீம்கள் உள்பட பலரை ஜாதி மத பேதமின்றி சிஷ்யராக்கிக் கொண்டார். கபீர்தாஸ் பல உயர்ந்த உபதேசங்களைச் செய்திருக்கிறார்.

தற்காலத்திலும்

ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை உண்டாக்கினார். கேசப் சந்திரசேனர் அதை விர்த்தி செய்தார். ஜாதியை விட வேண்டுமென்றும் சொன்னார். தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜம் உண்டாக்கினார். ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர் விதவா விவாகத்தை புகுத்தினார். வீரேசலிங்கம் பந்துலு சமூக சீர்திருத்தம் செய்தார். விவேகானந்தர் அரிய உபதேசங்களைச் செய்தார். மகாத்மா காந்தி பிராமணர் பிராமணரல்லாதாருக்கும் ஒரே மாதிரி போதிக்கிறார். ரவீந்திரநாதர் ஒரு பெரியார். இவர்கள் எல்லோரும் செய்த காரியங்கள் மதவுணர்ச்சியை நீக்கி செய்யப்பட்டவைகளல்ல. இப்படி யிருக்க இனி மத நம்பிக்கையில்லாதவர்கள் செய்த காரியம் என்ன என்பதை யோசனை செய்து பார்க்கட்டும். சுயமரியாதைக்காரர் ருஷியாவைப் பின்பற்றுவதாகத் தெரிகின்றது. அங்கும் மதம் அடியோடு அற்றுப் போகவில்லை”

என்பவை கருத்தாக எழுதியிருக்கிறார்.

இவற்றிற்கு நாம் சமாதானம் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். திரு.இராமாநந்த சட்டர்ஜீ அவர்கள் ஒரு உண்மை சீர்திருத்தவாதி என்பதாகவே நாம் கருதி இருக்கின்றோம். சுயமரியாதை மகாநாட்டுக்கு அவரைத் தலைமை வகிக்கச் செய்ய வேண்டுமென்று ஒரு பிரச்சினை கூட இருந்து வந்தது யாவருக்கும் தெரிந்ததேயாகும்.

ஆகவே அவரது நல்லெண்ணங்களில் நமக்கு சந்தேகம் கொள்ள இதுவரையில் எவ்விதத்திலும் இடமில்லை.

ஆனால் திரு.சட்டர்ஜீ அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்கள் மக்களுக்குள் ஒரு செல்வாக்குப் பெற்ற அபிப்பிராயமும் சிறிதும் யோசித்துப் பார்க்காமல் சப்த மாத்திரத்திலேயே ஒப்புக் கொள்ளக்கூடிய அளவுக்கு பழக்கமும் விளம்பரமும் கொண்டதாகும். ஆதலால் அவ்வபிப் பிராயங்கள் கொள்கின்றவர்களுக்கெல்லாம் உள் எண்ணம் கற்பிக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ளுகின்றோம்.

முற்காலம்

ஆனால், திரு.சட்டர்ஜீ அவர்கள் காட்டிய முற்கால கதைகளை அப்படியே ஒப்புக் கொண்டு பார்த்தாலும் கூட முற்காலத்தில் ரிஷிகள், தீர்க்கதரிசிகளான பெரியார்கள், கீழ் ஜாதியிலிருந்து பிராமணர்களாகப் பாவிக்கப்பட்டவர்கள் என்பவர்கள் எல்லோருமே மதத்தினாலேயே அந் நிலையை அடைந்தார்கள் என்றாலும் தனித்தனி மனிதர்கள் என்கின்ற முறையில் தனித்தனியான “தெய்வீக” அதாவது மனித சக்திக்கு மீறியதான காரியங்கள் செய்தவர்கள் என்கின்ற நம்பிக்கை காரணத்தினால் தான் பெரியவர்களானார்கள் என்பதோடு அந்த மாதிரி தெய்வீக சக்தி என்பது அவர்களிடம் இருக்கின்றது என்று பாவிக்கப்பட்ட காரணமே அவர்கள் பெரியவர்களாவதை - ஆனதை யாராலும் தடுக்க முடியாமல் செய்து விட்டதே தவிர மற்றபடி யெல்லோருக்கும் அந்த முறை பயன்பட்டதாக இல்லை என்றும் இப்போதும் எல்லோருக்கும் பயன்படாதென்றும் சொல்லுகின்றோம்.

மத்திய காலம்

மத்திய காலத்தில் பல பெரியார்கள், பல சீர்திருத்தங்கள் செய்திருக்கின்றார்கள் என்றால் அவற்றுள் புத்தர் ஒருவர் செய்த சீர்திருத்தத்தால் தான் இன்று அனேக மக்கள் ஒன்றுபட்டிருப்பதை காணலாம். ஆனால் புத்தர் ஒரு கடவுளையோ ஒரு மதத்தையோ ஆதாரமாய் வைத்துக் கொண்டு தனது சீர்திருத்தத்தைச் செய்தார் என்று சொல்லி விடமுடியாது. ஆதலாலேயே அவர் சுயமரியாதைக்காரர்கள் போல் இந்துக்கள் முதலிய எல்லா மதக்காரர்களாலும் இந்துக்களின் புராண இதிகாசங்களாலும், நாஸ்திகர் என்றும், மதமற்றவர் என்றும் இன்றும் சொல்லப்பட்டே வருகிறார்.

மற்றபடி நானக், குரு கோவிந்தர், கபீர், சைதன்னியர் முதலியவர்களும் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர அவர்களது உபதேசங்கள், முயர்ச்சிகள் ஆகியவைகள் மக்களில் சிறு சிறு கூட்டம் கொண்ட பலப் பல பிரிவுகளை உண்டாக்கிற்று என்பதைத் தவிர இந்திய பொதுமக்களுக்கு என்ன சீர்திருத்தம் செய்தது என்பது நமக்கு விளங்கவில்லை.

ஒவ்வொரு பெரியார் என்பவர்களின் பேரால் ஒவ்வொரு கூட்டம் தனித்து இருந்து கொண்டு மற்றக் கூட்டத்தினரிடம் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றன என்பதை பிரத்தியக்ஷமாய்க் காண்கின்றோம்.

தற்காலத்திலும்

ராஜாராம்மோகன் ராய் அவர்களால் செய்யப்பட்ட சீர்திருத்தத்தின் பயனாய் சிற்சில இடங்களில் மாத்திரம் பிரம்ம சமாஜம் என்னும் பேரால் சில லக்ஷம் பேர்களும், தயானந்த சரஸ்வதி அவர்களால் செய்யப்பட்ட சீர்திருத்ததத்தின் பயனாய் ஆரிய சமாஜத்தின் பேரால் சில இடங்களில் சில லக்ஷம் பேர்களும் ஒரு தனித்தனிப் பிரிவினராக இருந்து வருகிறார்கள்.

விவேகாநந்தர் உபதேசம் எவ்வளவு மேன்மையானது என்று சொல்லப்பட்டாலும் அது பெரும்பாலும் தர்க்கவாதத்திற்கு இந்தியப் புராதனப் பெருமையை பேசுகின்ற சந்தோஷ சமயத்திற்கும் மாத்திரம் பயன்படுவதன்றி காரியத்தில் என்ன பயன் ஏற்பட்டது என்பதை சென்னை மைலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா ஹோமை போய்ப் பார்த்தால் விளங்கும். அதாவது, ஊராரிடம் பணம் பறித்து பிள்ளைகளுக்கு பட்டை நாமமும், சாம்பலும் பூசப்பட்டு தனித்தனி அரைகளில் உட்கார வைத்து சாப்பாடு போட்டு, ஜாதி வித்தியாசம் கற்பிக்கப்பட்டு உயர்வு தாழ்வு நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. திரு.காந்தி அவர்கள் பிராமணருக்கும், பிராமணரல்லாதாருக்கும் செய்யும் உபதேசம் தென்னிந்திய பிராமணரல்லாதாரால் எப்படி கருதப்படுகின்றது என்பதும், காந்தி அவர்கள் மக்களை எந்தக் கால உலகத்திற்கு கொண்டு போக பாடுபடுகின்றார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தென்னிந்தியாவில் உள்ள காந்தி சீஷர்களில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் திரு.காந்தியை மத சம்பந்தமான விஷயங்களில் ஏற்றுக் கொள்ளுகின்றார்களா? என்பதும் நடு நிலைமை விசாரணை செய்து பார்த்தால் உண்மை விளங்கும்.

அன்றியும் அவரது சீர்திருத்த உபதேசம் இன்றைய கெடுதிகளில் எதை மாற்றக் கூடியதாயிருக்கின்றது என்ற விஷயத்தை முடிவு செய்ய திரு.சட்டர்ஜீ அவர்களுக்கே விட்டு விடுகின்றோம்.

ஆகவே முற்காலம் - மத்தியகாலம் - தற்காலம் என்று சொல்லப்பட்ட காலங்களில் எத்தனையோ பெரியார்கள் ஏற்பட்டு மதத்தின் பேரால் அல்லது மதத்தை தள்ளிவிடாமல் மத உணர்ச்சியால் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் என்னப்பட்டவைகள் செய்த காரியங்கள் என்னவாய் இருந்தபோதிலும் இச் சீர்திருத்தவாதிகள் தோன்றுவதற்கு முன் இந்தியா இருந்த நிலைமையைவிட இன்று என்ன துறையில் எவ்வித மாறுதல் அடைந்திருக்கின்றது என்கின்றதான பிரத்தியக்ஷ அனுபவங்களைக் கொண்டுதான் நாம் மதத்தை சேர்த்து செய்யப்படும் சீர்திருத்த வேலைக்கும் மதத்தை நீக்கி செய்யப்படும் சீர்திருத்த வேலைக்கும் வித்தியாசங்கள் பார்க்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

திரு. சட்டர்ஜீ அவர்கள் எடுத்துக்காட்டிய பெரியார்களின் வாக்கை - கொள்கையை இன்று ஒப்புக்கொண்டு நடக்கும் மக்கள் எத்தனை பேர்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பதை கவனிக்குமுன், இப்பெரியார்களை பெரியார்களாக, தெய்வாம்சம் பொருந்தியவர்களாக கருதி வணங்கும் மக்களில் ஆயிரத்தில் ஒருவராவது அவர்களது கொள்கையை ஒப்புக் கொண்டு நடக்கிறார்களா என்று கேட்கின்றோம். இதற்குக் காரணம் மதமா? அல்லது அப்பெரியார்களின் மீதுள்ள அலட்சிய புத்தியா? அல்லது மனிதனின் முட்டாள்தனமா? என்றும் தெரிய விரும்புகிறோம்.

முற்கால மத்தியகால தற்கால தெய்வீகப் பெரியார்கள், தீர்க்கதரிசிகள், சுவாமிகள், மகாத்மாக்கள் ஆகியவர்கள் மதத்தின் பேரால் செய்து வந்த சீர்திருத்த வேலையின் பலனை ஒரு வாக்கியத்தில் அடக்க வேண்டுமானால் இந்தியாவில் இந்து மதத்தின் பேரால் எத்தனை ஆயிரம் ஜாதிகள்? எத்தனை லட்சம் பிரிவுகள்? எத்தனை கோடி தீண்டக்கூடாத - கிட்ட வரக் கூடாத - கண்ணில் தென்படக்கூடாத மக்கள், எத்தனை பத்துக் கோடி கீழ் ஜாதி “சூத்ரஜாதி” மக்கள்? எத்தனை பத்துக்கோடி தற்குறிகள்? என்பவற்றை கவனித்து பார்க்கும்படி திரு.சட்டர்ஜீ அவர்களை வணக்கமாய்க் கேட்கின்றோம்.

திரு. சட்டர்ஜீ அவர்களால் எடுத்துக் காட்டப்பட்ட பெரியார்களில் யாராவது நாம் சொல்லும் மதத்தை அடியோடு ஒழித்து வேலை செய்திருப்பார்களானால், அப்பெரியார்கள் வேலை வெற்றி பெற்று இருக்குமானால், வெற்றி பெற அறிஞர்கள் உதவி இருப்பார்களானால் இன்று நாம் மேல் எடுத்துக்காட்டியதான இத்தனை ஆயிரக்கணக்காகவும் லட்சக்கணக்காகவும் கோடிக்கணக்காகவும் பத்துக் கோடிக்கணக்காகவும் வித்தியாசங்களும் மேல்கீழ்படிகளும், மாச்சரியங்களும், இழிவுகளும்,கொடுமைகளும், காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சிகளும் இருந்து வருமா? என்று பின்னும் பின்னும் வணக்கமாய் கேட்கின்றோம். மதத்தில் ஆழ்ந்திருக்கும் எண்ணமானது அதன் பயனாய் ஏற்பட்ட இவ்வளவு பயங்கரமான பலன்களையும் அலட்சியமாய் எண்ணியிருக்கும்படி மனதை அவ்வளவு இரும்பாக்கி விட்டது.

மேலும் திரு.சட்டர்ஜீ அவர்கள் மதத்தில் நம்பிக்கை அற்றவர்கள் இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்? என்று ஒரு கேள்வி கேட்கின்றார். அது மிகவும் சரியான கேள்வியேயாகும். ஆனால் மத நம்பிக்கை அற்றவர்களின் வேலையானது எப்படி இருந்தபோதிலும் மதநம்பிக்கை உள்ளவர்கள் வேலையின் பயன் அவர்கள் செய்யும் வேலையின் சௌகரியத்தைப் போல அவ்வளவு சுலபமான வேலையாயில்லை.

ஏனெனில் முற்சொன்னவர்களது வேலையானது திரு.ராமானந்த சட்டர்ஜீ போன்ற பெரியார் முதல் கொண்டு அதிர்ப்தி படவேண்டியதும் சங்கடப்பட வேண்டியதுமான ஒரு எதிர் நீச்சல் வேலையாய் இருக்கின்றது. இவ்வேலை செய்பவர்களோ, பெரியார்கள், சீர்திருத்தக்காரர்கள் அறிஞர்கள், கற்றவர்கள், செல்வவான்கள், ஏழைகள், “பெரிய ஜாதியார்கள்” “இழி மக்கள்” என்று சொல்லப்பட்டவர்கள் எல்லோராலும் வெறுக்கப்பட வேண்டியவர்களாகவும் எதிர்க்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். மதத்தினால் தங்கள் தங்கள் யோக்கியதைக்கு மீறின சௌகரியமும், மேன்மையும் அடைந்து வருகின்றவர்கள் மாத்திரமல்லாமல் கஷ்டமும் இழிவும் அடைகின்றவர்களும் தங்களை இக்கெதிக்கு ஆளாக்கியதின் பயனை அனுபவிக்கின்றவர்களுடன் சேர்ந்து கொண்டு நம்மை நமது வேலை நடக்கவொட்டாமல் தடுக்கின்றார்கள் என்றால் மதத்தின் கொடுமைக்கு வேறு எதை சமானமாகச் சொல்லலாம் என்பதும், இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆதாரமான மதத்தை ஒழிப்பது என்பதானது தீர்மானம் செய்யப்பட்ட மறுநாளே பலன் பார்க்கக் கூடியதா என்பதும் திரு.சட்டர்ஜி அவர்களால் தர்ம சிந்தனையோடு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மதமற்றவர்களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன என்பதை கணக்கு பார்க்க இன்னமும் காலம் வரவில்லை என்றுதான் சொல்லுகின்றோம். மதத்தின் பேரால் கட்டிப் போடப்பட்டிருக்கும் மக்களுக்கு சுயஞானம் ஏற்பட்ட பிறகும் மதத்தின் பேரால் பயனடைந்து வருகின்றவர்களுடைய எதிர்ப்புகளை சமாளிக்க சௌகரியம் செய்து கொண்ட பிறகும் தான் மத நம்பிக்கை அற்றவர்களின் வேலையை கணக்குப் பார்க்க வேண்டும் என்று வணக்கமாய் தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம்.

மத நம்பிக்கை அற்றவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெருவார்களா? என்கின்ற விஷயத்தில் நாம் உறுதிகூற துணியவில்லை. ஆனால் நாம் கூறும் மதநம்பிக்கை அற்றால்தான் அதன் பேரால் இழிவுபடுத்தப் பட்ட - பிரிவுபடுத்தப்பட்ட - சூக்ஷி செய்து ஏமாற்றப்பட்ட மக்கள் விடுதலை பெற்று சமத்துவமடைந்து உலக சகோதரத்துவம் கொண்டாட முடியும் என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு இதுவே வைரம் போன்ற நமது உறுதியான எண்ணமாகும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தவிர “தென்இந்திய சுயமரியாதைக்காரர்கள் ரஷியாவை பார்க்கிறார்கள்” என்று எழுதி இருப்பதைப் பற்றி சுயமரியாதைக்காரர்கள் அவமான மடையவில்லை. ஏனெனில் ரஷியா எவ்வித இழிவான வேலையையும் மகாபாதகமான வேலையையும் செய்வதாக நாம் கருதவில்லை. ஒரு சமயம் ரஷியா முட்டாள்தனமான வேலை செய்வதாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும். முட்டாள்தனமான காரியம் சூக்ஷியான வேலையைவிட கெட்ட காரியமாகி விடாது. திரு. ராமானந்த சட்டர்ஜீ அவர்கள் தென் இந்தியாவை, தென்இந்தியப் பார்ப்பனரைக் கொண்டும், அவர்களது பத்திரிகையைக் கொண்டும், அவர்களது அரசியல் இயக்கங்களைக் கொண்டும் பார்க்காமல் வாழ்க்கையில் சகல துறைகளிலும் கீழ் ஜாதியார்களாகவும் சூத்திரர்களாகவும், நாஸ்தீகர்களாகவும், தேசத்துரோகி களாகவும், பிராமணத் துவேஷிகளாகவும், சர்க்கார் தாசர்களாகவும் பெயர் சூட்டி ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் மூன்றே முக்கால் கோடி மக்களின் மூலமாக பார்ப்பாரேயானால் ருஷியாவைப் பற்றிய அபிப்பிராயம் அந்த நாட்டுக்கு சரியென்றோ, தப்பென்றோ பட்டாலும் தென் இந்தியாவுக்கு அவசியம் என்று உணருவதோடு ருஷியாவுக்கு வழிகாட்டக் கூடிய சக்தியைக்கூட பெற்று விடுவார் என்றே கருதுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 20.09.1931)

Pin It