Periyar 10சுயமரியாதை இயக்கமானது இப்போது நடைமுறையில் இருக்கும் காங்கிரசுக் கொள்கைகளைக் கொண்ட தேசீயத்திற்கும் திரு. காந்தியவர்களின் தத்துவமாகிய காந்தீயத்திற்கும் நேர்மாற்றமானது என்பதை நாம் மறைக்க முயலவில்லை.

எப்படியெனில் இன்றைய காங்கிரசு திட்டங்கள் காகிதத்தில் என்ன இருந்தபோதிலும் தேசீயத்தின் பேரால் நடைமுறை திட்டங்கள் என்பவைகளாக,

  1. கதர்
  1. ஹிந்தி
  1. கள்ளுக்கடை ஜவுளிக்கடை மறியல் என்பவைகளேயாகும்.

மேற்கண்ட இந்த மூன்று திட்டங்களிலும் சுயமரியாதை இயக்கம் மாறுபட்டே யிருக்கின்றது என்கின்ற விபரம் ஏற்கனவே குடி அரசு வாசகர்கள் உணர்ந்ததுவேயாகும்.

கதர் விஷயத்தில் 1928ம் வருஷத்திற்கு முன்னிருந்தே அதாவது திரு. காந்தியவர்கள் தென்னாட்டிற்கு கதர் பண்டு வசூலுக்கு வந்த காலத்திலேயே கதரின் தத்துவத்தைக் கண்டித்து வந்திருக்கின்றோம். அதையே குடி அரசிலும் திராவிடனிலும் பல தடவை எழுதி வந்திருப்பதோடு அனேக மேடைகளிலும் கதர் கொள்கையைக் கண்டித்துப் பேசியும் வந்திருக்கிறோம்.

ஆதலால் கதரைப் பற்றிய நமது அபிப்பிராயம் என்பது இப்போது புதிதாக ஒன்றும் ஏற்பட்டதல்ல. இதை அனுசரித்தேதான் இவ்வாரம் லால்குடியில் நடந்த 3வது சுயமரியாதை மகாநாட்டில் கதர் கொள்கையைக் கண்டித்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது.

அதாவது,

(அ) “தற்காலம் இந்திய தேசியத்தில் காங்கிரஸ் மகா சபையின் ஆதரவில் மகாத்மா காந்தியும் அவரைச் சேர்ந்தவர்களும் செய்துவரும் கதர்ப் பிரசாரமும் கதர் உற்பத்தி, விற்பனை வேலைகளும் இந்திய நாகரீக அபிவிருத்தியை தடைப்படுத்துகிற படியாலும்,

(ஆ) மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கு அவரவர்களே தனித்து நின்று உழைத்து மற்றவர் கூட்டுழைப்பைக் கருதாதிருக்க வேண்டுமென்றும் பிற்போக்கான கொள்கை கதர் வேலைக்கு அடிப்படையாயிருந்து (மற்ற தேசத்து மக்கள் கூட்டுழைப்பு மூலம் தொழில்களை அபிவிருத்தி செய்து முன்னேறும் இக்காலத்தில்) நமது நாட்டு மக்களைத் தனித்த வாழ்க்கையின் மூலம் மிருகப் பிராயத்தையடையும்படி செய்வதாலும்,

(இ) இயந்திர சாலைகளைப் பகைத்து தொழில் விவசாய முறைகளில் இயந்திர வளர்ச்சியைத் தடுத்து மனிதப் பிரயாசையை அதிகப்படுத்தும் முறைகளைக் கையாளுவதின் மூலம் கதர் வேலை மனித வாழ்க்கையில் ஓய்வுக்கும், அறிவு வளர்ச்சிக்குமான நேரத்தைக் குறைப்பதாலும்.

(ஈ) இந்த மகாநாடு கதர் இயக்கத்தைக் கண்டிப்பதோடு இந்திய மில் துணிகளை உடுத்தவும், இயந்திரங்களை வளர்க்கவும், கூட்டுத்தொழில் முறைகளைக் கையாளவும் மக்களிடை தீவிர பிரசாரஞ் செய்யவும் தீர்மானிக்கிறது”

என்பதாகும். ஏனெனில்

காங்கிரசின் கதர் கொள்கையானது இந்திய பொருளாதாரம், கைத் தொழில், வியாபாரம் ஆகிய மூன்றையும் பற்றியதாக இருக்கிறதென்பதோடு ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியதை அவனவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்னும் தத்துவத்திலும் இந்தக் கதரானது இந்திய நாகரீகத்தையும் பண்டையப் பெருமையையும் பற்றியதாகவும் கருதப் பட்டிருக்கின்றது.

ஆகையால் இந்தத் தன்மையிலுள்ள கதரின் ஒவ்வொரு நிலையையும் கவனித்துப் பார்த்தோமானால் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாகரீக வளர்ச்சிக்கும் இந்தவித அபிப்பிராயங்கள் கொண்ட கதர் தத்துவம் எவ்வளவு தூரம் கெடுதியை உண்டு பண்ணத் தக்கதாயிருக்கின்றது என்பது விளங்கும்.

முதலாவதாக பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டு கதர் எந்த விதத்தில் அதற்குப் பயன் அளிக்கக் கூடியதாயிருக்கின்றது என்பதை யோசித்துப் பார்ப்போம். பஞ்சு விலை எவ்வளவுக்கெவ்வளவு குறைகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு விவசாய மக்களுக்கு கஷ்டம் ஒரு புறமிருந்தாலும் பஞ்சு விலையைப் பற்றிய அதாவது மூலப்பொருளைப்பற்றிய லட்சியமே இல்லாமல் கதரின் உற்பத்தி, நூற்புநெசவு ஆகியவற்றின் செலவுகளே அதாவது அசல் விலையே மிகவும் கூடுதலாகவே அடங்கும் படியாக ஆவதோடு அதை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு நிலையும் கஷ்டமானதும் முன்னேற்றத்திற்கு உதவாததுமாகவே இருக்கின்றது.

அதாவது யார் எவ்வளவு பாடுபட்டாலும் கதர் நூல் விஷயத்திலும் நெசவு விஷயத்திலும் துணிரகம் விஷயத்திலும் இன்று காணப்படும் தன்மையிலிருந்து இனி சாதாரணத்தில் எவ்வித மாற்றத்தையாவது செய்து விடக்கூடும் என்று சுலபத்தில் எண்ணுவதற்கில்லை. ஏதாவது ஒரு சிறு மாற்றமாவது ரகம் முற்போக்குத் தன்மையில் செய்யலாம் என்றாலோ அதற்கேற்படும் கூலி முற்போக்கின் தகுதிக்கு மேற்பட்டதாக செலவழித்தாக வேண்டிவரும். இது தவிர விலை விஷயத்தில் இனி இதைவிட குறைக்கும் படியான நிலைமை சுலபத்தில் ஏற்படப்போவதில்லை.

ஏனெனில் கதர் தொழிலோ கதர் வியாபாரமோ மக்களின் சாதாரணப் பழக்கத்தில் உள்ள தொழிலாயும் வியாபாரமாயும் இல்லாமல் வேறு ஏதோ ஒரு தத்துவத்திற்காக தியாகம் செய்து தீர வேண்டிய முறையில் - மற்றவர்கள் நிர்பந்தத்தின் மீது நூற்றல், நெய்தல், விற்பனை வியாபாரம் செய்தல். வாங்கிக் கட்டுதல் ஆகிய காரியங்கள் முழுவதும் நடைபெற வேண்டியதாக இருந்து வருகின்றது. இவ்வளவு கஷ்டப்பட்டும் உத்தேசித்தக் காரியமாகிய பொருளாதாரம் என்பது வாங்கி விற்கின்ற மத்திய மனிதன் என்கின்ற முதலாளி தவிர மற்ற யாருக்கும் அது சிறிதும் பயன்படாததாய் இருப்பதுடன் உண்மையிலேயே வாங்கிக் கட்டுகிறவன் அதிக பொருள் அதாவது 100க்கு 250 பங்கு நஷ்டமடைவதற்கும் தயாராயிருக்க வேண்டியவனாகவே யிருக்கின்றான். அப்படிச் செய்தும் தொழிலாளியாகிய நூற்புக்காரன் மணிக்கு ஒரு தம்பிடி அல்லது ஒன்னரைத் தம்பிடி அதாவது ஒரு அணாவில் 12-ல் ஒரு பாகம் அல்லது 8ல் ஒரு பாகமே பெற முடிகின்றது. நெசவுக்காரனும் சாதா மில் நூல் நெசவு நெய்வதைவிட இரண்டு மடங்கு கஷ்டமும் கவனமும் செலுத்தி வேலை செய்து பழைய கூலியையே தான் பெற வேண்டியதா யிருக்கின்றது.

இவ்வளவும் தவிர முன்குறிப்பிட்டதுபோல் கதர் வாங்குகின்றவனும் ஒன்றுக்கு இரண்டரையாய் விலை கொடுத்தும் சாதாரண சரக்கைவிட மிகக் கேவலமானதென்று சொல்லும்படியான சரக்கையே வாங்கி வேறு ஒரு காரியத்தின் பொருட்டு சமாதானம் செய்து கொள்ள வேண்டியதா யிருக்கின்றது.

ஆகவே பொருளாதாரத் துறையில் கதர் எந்தவிதத்தில் பயன் அளிக்கின்றது என்பது இதிலிருந்தே அறியத் தகுந்ததாகும்.

இனிக் கதர் தத்துவம் கைத்தொழில் துறையில் எப்படிப் பயன்படுகின்றது என்று பார்ப்போம். கதர் கைத்தொழில் உலக கைத்தொழில் முறைக்கு நேர்விரோதமானதாக இருக்கின்றது. எப்படியெனில் கைத் தொழில் என்பது வேலை செய்கின்றவன் கொஞ்ச நேரத்தில் அதிக சரக்கு உற்பத்தி பண்ணக் கூடியதாகவும், அதுவும் சரீரப்பிரயாசை தேவையின் பாகம் நாளுக்குநாள் குறைந்து கஷ்டமில்லாமல் செய்யக் கூடியதாகவும், சாமான் மாதிரியும் நாளுக்கு நாள் உயர்ந்த தரமானதாகவும் இருக்க வேண்டியதோடு அதை வாங்கி உபயோகிக்கும் மக்களுக்கு அந்த சாமான்கள் அதிக சரசமாய் இருப்பதாகக் காணக் கூடியதோடு அச்சாமானின் வேலைப்பாடானது மக்களை வாங்கும்படி தூண்டக் கூடியதாகவும் இருக்க வேண்டியதாகும். இந்த முறையில், பார்த்தாலும் கதர் தத்துவம் முதல் பிரிவுக்கு சொல்லப்பட்ட காரணங்களால் கைத்தொழில் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு நிலையிலும் விபரீதமாகவே இருந்து வருகின்றது.

மூன்றாவதாக வியாபாரத் துறையில் பார்த்தாலும் மூலப் பொருளை அதிகமாக செலவு செய்து அதாவது ஒரு வேஷ்டிக்கு எவ்வளவு மூலப்பொருள் (பஞ்சு) வேண்டுமோ அதற்குமேல் இரண்டு அல்லது மூன்று பங்குவீதம் பஞ்சை செலவு செய்து (அதாவது மொத்தமான நூலில் முரட்டு துணியாகத்தான் பெரிதும் நெய்ய முடிவதால் இரண்டு மூன்று வேஷ்டிக்காகும்படியான பஞ்சு ஒரு வேஷ்டிக்கே செலவாகும்படியாகச் செய்து) அது சம்பந்தப்பட்ட தொழிலாளிகளையும் கசக்கிப் பிழிந்து விற்கின்றவனையும் வாங்குகின்றவனையும் வேறு காரணத்திற்காக அதாவது வியாபாரத்தில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லாமல் நிர்பந்தத்தின் பொருட்டு ஜனங்கள் இந்த விற்றல் வாங்கல் வியாபாரம் செய்யும்படியாக இருப்பதால் கதர் தத்துவம் வியாபார முறைக்கும், அதன் முற்போக்குக்கும் நேர் விரோதமானதாகவே இருக்கின்றது.

தவிர ஒரு நாட்டின் பொருளாதாரம், கைத்தொழில், வியாபாரம் ஆகியவை மூன்றும் முற்போக்கடைய வேண்டுமானால் இம்மூன்றும் மற்ற நாடுகளில் எப்படி முற்போக்கடைந்து இருக்கின்றது? மற்ற நாட்டுக்கும் நமது நாட்டுக்கும் உள்ள வியாபார சௌகரியம் எப்படி இருக்கின்றது? அதன் போட்டியின் தத்துவம் என்ன? உலகப் போக்கு என்ன? என்பவைகளை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாடும் நவீன ஆராய்ச்சி இயந்திர சௌகரியம் வியாபார தந்திரம் ஆகிய காரியங்களைக் கொண்டே யொழிய பண்டைய காலத்தின் கைத்தொழில் முறையை புதுப்பித்ததாலோ ஆராய்ச்சியை அலக்ஷியம் செய்து இயந்திரங்களை வெறுத்ததாலோ அல்லது மறியல் செய்து நிர்பந்தப்படுத்தி வியாபாரம் செய்யச் செய்ததினாலோ அல்லவென்பது விளங்கும்.

இந்திய தேசத்தின் மக்களை ஜாதிவாரியாகப் பிரித்து ஒவ்வொரு ஜாதிக்கு இன்ன இன்ன தொழில் என்று கற்பித்து அந்தத் தொழிலை அந்தந்த ஜாதித் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கின்றதான நிர்பந்தம் இங்கு இருந்து வருவதாலும் இந்தத் தொழிலாளி ஜாதியல்லாதவர்களே “இந்நாட்டின் நலத்தை கோருகின்ற தலைவர்கள்” என்பதாக ஆகிவிட்டதாலும் அதுமாத்திரமல்லாமல் இந்த மாதிரியான வருணாச்சிரமதர்ம தொழில் முறையில் நம்பிக்கை உள்ளவர்களும் அதை மேலும் நிலைநிறுத்தப் பாடுபடுகின்றவர்களுமே தொழில் முறையை சீர்திருத்தம் செய்கின்றவர்களாக இருப்பதினாலும் பண்டைய தொழில் முறையை புதுப்பிக்க வேண்டுமென்றும் புதிய நாகரீக இயந்திரங்கள் கூடாது என்றும் ஒவ்வொருவரும் ஓய்வு நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்றும் அவனவனுக்கு வேண்டியதை அவனவனே செய்துகொண்டு தனித்தனி தொழிலாளியாய் இருக்க வேண்டுமேயொழிய கூட்டுத் தொழிலாளிகளாய் இருக்கக்கூடாதென்றும் சொல்ல வேண்டியதாயிற்று. ஏனெனில் இந்தப்படி ஒவ்வொருவனும் தனித்தனித் தொழிலாளியாக இருந்தால்தான் அதோடு ‘அவனவனுக்கு வேண்டியதை அவனவனே செய்து கொள்ள வேண்டும்’ என்கின்ற வேலையில் அமர்ந்திருந்தால்தான் தொழிலாளிகள் ஒன்று சேரவோ அவர்கள் நிலையைப் பற்றி கலந்து ஆலோசிக்கவோ அல்லது தங்களது யோக்கியதையை சற்று உயர்த்திக்கொண்டு தொழிலாளி தன்மையில் இருந்து நழுவிக் கொள்ளவோ அவர்களது பரம்பரை தர்மத்தில் இருந்து விலகவோ முடியாததாயிருக்கும் என்று கருதியே இச்சூட்சி செய்யப்பட்டிருக்கிறது. ஆதலாலேயேதான் புதிய நாகரீகமும் இயந்திர சௌகரியமும் கூட்டு வேலையும் தொழிலாளிகள் முன்னேற்றமும் கதர் தத்துவத்தில் சிறிதும் இல்லாமலிருக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவே, வருணாச்சிரம கட்டுப்பாட்டை உடைத்து மனித வர்க்கத்தின் சரீரப் பிரயாசையைக் குறைத்து குறைந்த நேரத்தில் அதிகக் கூலி கிடைக்கும் படி செய்து மூலப்பொருள்களை வீணாக்காமல் விவசாயிகளுக்கும் அதிகப் பணம் வரும்படி செய்து எல்லா மனிதருக்கும் எல்லா தொழில் செய்யவும் எல்லாவித பதவியடையவும் தகுந்தபடியாக ஆக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இத்தகைய கதர் திட்டம் ஒழிந்தேயாக வேண்டும் என்பது நமது அபிப்பிராயமாகும்.

தவிர, இந்தியாவுக்கு எந்த விதமான ஆட்சி முறையோ, அல்லது சுயேச்சையோ பூரண சுயேச்சையோ, அல்லது ராம ராஜியமோ, தர்ம ராஜியமோ வருவதானாலும் இந்தியா உலக முற்போக்கில் கலந்து கொள்ளவும் புதிய ஆராய்ச்சியின் பயன்களை அனுபவித்து மனித சமூகம் இன்பமும் திருப்தியும் அடையவும் தகுந்ததாக, ஆவதற்குத் தக்கதாய் இருக்க வேண்டுமே யொழிய மற்றப்படி அவனவன் வயிற்றுப்பாட்டிற்கும் அவனவனுக்கு வேண்டிய இன்றியமையாத அவசியங்களுக்கும் அவனவனே அவனது வாழ்நாள் நேரம் முழுவதையும் செலவு செய்து கொண்டிருக்கும்படியான தத்துவங்கள் கொண்டதாக இருக்கக்கூடாது என்பதே நமது அபிப்பிராயம்.

இந்தக் காரணங்களாலேயே திரு. காந்தியவர்களின் தத்துவமானது இந்தியாவை ஒரு நாளும் விடுதலையுள்ள நாடாகவோ மனித சமூகத்தின் முற்போக்கிற்கும் நாகரீக அபிவிருத்திக்கும் சரீரப் பிரையாசையைக் குறைத்துக் கொண்டு வாழும்படியான நாடாகவோ ஒரு நாளும் ஆக்க முடியாதென்றே சொல்லுவோம்.

ஏனெனில் அவரது நோக்கமெல்லாம் பண்டைய நிலைகளையே பெருமையாய்க் கருதுவதிலும் பண்டைய முறைகளை புதுப்பிப்பதிலும் இருக்கின்றதே யொழிய இன்றைய உலகம் என்பது என்ன என்பதில் கவலையோ, கருத்தோ என்பது சிறிதும் இல்லை. பண்டைய நிலைமையை பெருமைப்படுத்தி, பண்டைய முறைகளை புதுப்பிப்பதில் யாருக்கு அனுகூலம் என்று பார்ப்போமானால் மக்களை ஏமாற்றிக் கொண்டு சோம்பேறி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனர்களுக்கும் பாடுபடுவோரின் பலனை அனுபவிக்கும் பிரபுக்களுக்கும், சரீரப் பிரயாசை இல்லாமல் வாழ்வை நடத்த விரும்பும் படித்த கூட்டத்தார் என்பவர்களுக்கும் அனுகூலமாகவும், தங்கள் ஆதிக்கத்திற்கேற்ற அரசியலை ஸ்தாபித்துக் கொண்டு சுகத்திலிருக்கவும், அதற்கு பயன்படக் கூடியதாகவும் இருக்கலாம். இந்தக் கூட்டத்தார் முன் திரு. காந்தி அவர்களும் மகாத்மாவாய், அவதார புருஷராய், தெய்வத்தன்மை பொருந்தியவராய், உலகம் போற்றும் உத்தமராய் உலகுக்கே பெரியோராய் விளங்கலாம்.

ஆனால் பாடுபட்டும் கூலியில்லாமல் பட்டினி கிடப்பவனுக்கும் தலைமுறை தலைமுறையாய் ஏழையாய், கூலிக்காரனாய் இருப்பவனுக்கும் தெருவில் நடக்க, குளத்தில் குடிக்க யோக்கியதை இல்லாமல் பன்றியிலும், கழுதையிலும், நாயிலும் கேடாய் மதிக்கும் இந்நாட்டுப் பழங்குடி மக்களுக்கும் திரு. காந்தியவர்கள் 'எமனாய்' இல்லாமல் வேறுயாராய் இருக்க முடியும் என்பதைப் பகுத்தறிவுடன் நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.

மற்றது மற்றொரு சமயம்.

(குடி அரசு - தலையங்கம் - 07.06.1931)

Pin It