periyar03விருதுநகர் சுயமரியாதை மகாநாடு ஜூன் முதல் வாரத்திலாவது இரண்டாவது வாரத்திலாவது நடத்துவதாக உறுதி செய்யப்பட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததில் மகாநாட்டுத் தலைவர் திரு. சர் ஹரிசிங்கவர் அவர்கள் நீலகிரியில் இருந்து உடல் நலமில்லாமல் திரும்பிப் போய் விட்ட தாலும் வெய்யில் கடுமையை உத்தேசித்து வேறு தக்க தலைவர் சமீபத்தில் கிடைப்பதற்கில்லாமல் இருப்பதால் மகாநாட்டை ஆகஸ்டு வாக்கில் நடத்துவதாக தள்ளிப் போட்டு விட்டதாய் விருதுநகர் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டியார் தீர்மானம் செய்திருப்பதாக தெரிவித்து விட்டார்கள்.

மகாநாட்டு விஷயமானது இந்தப்படி அடிக்கடி மக்கள் ஏமாற்றமடையும் படி நடந்து வருவது பலருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் அதற்கு அனுகூலமாக சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் மறுப்பதற்கில்லை என்பதையும் ஒருவாறு தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு நமது இயக்க எதிரிகள் விசமப் பிரசாரம் செய்யக்கூடும். ஆனாலும் வரவேற்புக் கமிட்டியார் இதை உணராதவர்கள் என்று சொல்லி விட முடியாது. இதற்காக அவர்கள் மகாநாட்டை எந்த முறையில் நடத்த வேண்டுமென்று கருதி இருக்கின்றார்களோ அதை மாற்றிக் கொள்ள அவர்கள் இஷ்டப்படவில்லை. ஆகையால் நண்பர்கள் இந்த ஒரு தவணையையும் பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.05.1931)

வருந்துகிறோம்

பச்சையப்பன் கலாசாலை தமிழ் புலவரும் 'திராவிடன்' பத்திராதிபருமான உயர்திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள் திடீரென முடிவெய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம். இவர் ஓர் தமிழ் பண்டிதராய் விளங்கியதுடன், சமூதாயச் சீர்திருத்தத்தில் ஆர்வங் கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக பல உபன்யாசத் தொண்டுகளும் புரிந்திருக்கிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பாடுபட்டவர்களில் ஒருவராவார். பொதுவாக தமிழுலகமும், சிறப்பாக பிராமணரல்லாத உலகமும் ஓர் நண்பரை இழந்து விட்டார்களெனக் கூறுவது மிகையாகாது. ஆகவே அவரது பிரிவுக்கு வருந்துவதோடு, நமது வருத்தத்தை அவருடைய குடும்பத்தாருக்கும் முக்கியமாக அவரது உடற்பிறந்த பின்னோர் திருவாளர் மணி கோடீஸ்வர முதலியார் B.A.L.T., அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(குடி அரசு - இரங்கல் செய்தி - 31.05.1931)

Pin It