தென் இந்திய ரயில்வேயின் நிர்வாகம் முழுவதும் பிராமணமயமாக இருப்பது யாவரும் நன்கறிந்த விஷயம். பிராமணரல்லாதாருக்கு ஒரு வித சுதந்திரமுமில்லாமல், பிராமணர்களாலேயே கொள்ளையிடப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது. பிராமண ரல்லாதாருக்கு ஏஜண்டு ஆபீசிலும், இன்னும் இதர நிர்வாக ஸ்தாபனங்களிலும் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இந்த ரயில்வேயின் நிர்வாகத்தை ஓர் பிராமண அக்கிரகாரமென்று கூறுவது மிகையாகாது. இந்நிலைமைக்கு ரயில்வேக் கம்பெனியின் நிர்வாகஸ்தர்களும் இது வரையிலும் உடந்தையாகவேத்தான் இருந்து கொண்டு வந்திருக்கின்றார்கள்.
ஜனத்தொகையின் வீதாசாரப்படி ரயில்வேக்களில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டுமென சட்டசபைகளில் போராடியதற்கு “அது கம்பெனிகாரர்களின் ஆதிக்கத்துள் அடங்கியிருப்பதால், அவர்களுடைய பிரியத்தைப் பொருத்தது” என இதுவரை கூறப்பட்டு வந்ததையும் சகலரும் அறிவார்கள். ஆனால், இப்பொழுது தென் இந்திய ரயில்வேயின் ஏஜண்டின் மனம் முற்றிலும் மாறுதலடைந்து, பிராமண ரல்லாதாருக்கும், அவர்களுடைய தொகையின் வீதாசாரம் உரிமைகளும், உத்தியோகங்களும் வழங்கப்படவேண்டுமென உறுதி கொண்டு, அதற்கேற்றவாறு “ஸ்டாப் செலக்ஷன் போர்டு” என்னும் ஒரு போர்டை நியமித்திருப்பது மிகவும் போற்றக்கூடியதோர் விஷயமாகும். பிராமணரல்லாதார்களும் ஏஜண்டின் மனமாறுதலை வரவேற்று, தங்களுடைய உரிமைகளைப் பெறவும்; சுதந்திரங்களை அடையவும் முன்னணியில் நிற்பார்களென கருதுகின்றோம்.
ஸ்டாப் செலக்ஷன் போர்டு
இந்த போர்டிலுள்ள அங்கத்தினர்கள் தான் இனி ரயில்வேயின் நிர்வாகத்திற்கு வேண்டிய உத்தியோகஸ்தர்களையும், சிப்பந்திகளையும் தேர்ந்தெடுப்பவர்களாவார்கள். அப்படித் தேர்ந்தெடுப்பதிலும் பிராமண ரல்லாதாரின் உரிமைகள் தான் முதலில் கவனிக்கப்படும். ஆச. மூர்ஹெட் என்பவர் கமிட்டியின் தலைவராவர். இக்கமிட்டியின் காரியதரிசி ஆச. மு.ஞ. வேலுப்பிள்ளை என்பவர், இவ்விரண்டு உத்தியோகஸ்தர்களும் பிராமண ரல்லாதாரின் குறைகளை செவ்வனே ஆராய்ந்து, அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்ட கொஞ்சமும் அஞ்ச மாட்டார்களென கருதுகின்றோம்.
இந்த ரயில்வேயில் ஊழியம் செய்யப்பட்ட எண்ணிறந்த பிராமண ரல்லாதாரின் முன்னேற்றம் இவ்விரண்டு பேருடைய பொறுப்பிலுந் தானிருக் கின்றது. ஆகையால், அவர்கள் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கும், செல்வாக்கிற்கும், கொஞ்சமும் பயப்படாமல், பிராமணரல்லாதாரின் குறைகளை நிவர்த்திக்க முயற்சி செய்வார்களென நினைக்கின்றோம். அவ்வாறே உத்தியோகங்கள் வழங்கப்படுவதிலும், சிப்பந்திகளை தெரிந்தெடுப்பதிலும், பிராமணரல்லாதாரின் உரிமைகள் தான் முதலில் கவனிக்கப்படுமெனவும் நினைக்கிறோம். ஏனெனில் பிராமணர்கள் ஏஜண்டின் ஆபீசிலும், இன்னும் இதர நிர்வாக ஸ்தாபனங்களிலும் 100க்கு 90 பேருக்கு அதிகமாகவே காணப்படுகின்றார்கள்.
ஏஜெண்டின் இம்மனமாறுதலை நாம் முழு மனதுடனும் வரவேற்கின்றோம். இக்கமிட்டியை நியமித்ததுடன் ஏஜண்டின் பொறுப்பு நீங்கி விடவில்லை. ஆனால் இக்கமிட்டியார் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, அதன்படி நடந்து கொண்டு வருகின்றார்களா என்பதை அடிக்கடி கவனித்துக் கொண்டு வருவாரெனவும் நம்புகின்றோம்.
(குடி அரசு - செய்தி விளக்கம் - 19.04.1931)