periyar 468தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் முதல் தேதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தலில் அபேட்சகராக நிற்க உத்தேசித்திருந்தவர்கள் திருவாளர்கள் வாண்டையார், சாமியப்ப முதலியார், நாடிமுத்துப்பிள்ளை, மருதவனம்பிள்ளை, இராஜப்பா போன்ற பார்ப்பன ரல்லாதார்களும் 1000, 2000, 3000, 5000 ஏக்கர் நஞ்சை பூமியும், 10 லக்ஷம் 20 லக்ஷம் சொத்தும் பெருமானமுடையவர்களான பிரபுக்களுமாவார்கள்.

இப்படியிருந்த போதிலும் இவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றங்களுக்கு என்று ஏற்பட்ட கிளர்ச்சியின் பயனாகவே மனிதர்கள் என்று வெளியானவர்கள்.

இந்தக் கனவான்கள் தாங்கள் தான் பார்ப்பனரல்லாத சமூகத்திற்குப் பிரதிநிதியாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு பொது வாழ்வில் இரங்கி பல கௌரவ ஸ்தானம் பெற்றவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் பார்ப்பனரல்லாதாரியக்கம், அதாவது சமதர்ம இயக்கத்தின் பெயரால் பதவி, பட்டம், அதிகாரம் சில விஷயங்களில் பணம் முதலியவைகளும் கூட்டுக் கொள்ளை போல் அடைந்தவர்கள்.

இப்படி யெல்லாம் இருந்தும் இவர்களுக்கு இந்தப் பதவிகள் கிடைத்தவுடன் யாருக்காக, யாரால் அடைந்தோமென்ற நன்றியறிதல் குணமும் நாணயமும் சற்றுமில்லாமல் இந்தப் பதவிகளும், பட்டமும், அதிகாரமும், பணமும் தங்கள் சொந்தத்திற்காகவே தங்கள் சொந்த முயற்சியாலேயே அடைந்ததாக சுயநலப்பித்துக் கொண்டு எல்லாக் கொள்கைகளையும் மறந்து தம் சொந்தப் பெரியவர்கள் வீட்டுச் சொத்து போல் பாவித்து ஒருவருக்கொருவர் சொந்தத்தில் சுயநலமே கொண்டு கொள்கையேயில்லாமல் சண்டை போட்டு அடி யோடு கோட்டையை விட்டு விட்டு பழைய குருடி கதவைத் திரடி என்கின்ற யோக்கியதையில் “சூத்திரர்” நிலைக்கே அதாவது பார்ப்பனர்களுக்கு அடிமையாயிருக்கவே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்கின்ற தன்மைக்கே வந்து விட்டார்கள்.

இன்றைய தினம் தஞ்சை ஜில்லா நிலைமை பழையபடி “பிராமண” ஆதிக்கத்திற்குப் போய்விட்டது. பார்ப்பனரல்லா தார் பிரதிநிதிகள் என்று சொல்லி அதிகாரம் பெற்ற பிரபுக்கள் தங்கள் அதிகாரப் பெருமையைச் செங்கற்பட்டு தீர்மானங்களை மறுத்து தாலூகா போர்டில் தீர்மானம் செய்ய ஒரு கூட்டமும், சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்து சைவப் பிரசாரம் செய்ய மற்றொரு கூட்டமும், சுயமரியாதை இயக்கங்களில் கலந்துள்ள உபாத்தியாயர்களை மாற்றவும், தண்டிக்கவும், நீக்கவும் ஒரு கூட்டமும், எது எக்கேடு கெட்டாலும் ‘பகவான் கிருஷ்ண னைப்போல்’ லீலை நடத்திக் கொண்டிருக்க ஒருகூட்டமும், மற்றும் சில கூட்டம் மற்றும் சில சில வேலைகளை செய்து கொண்டு அடியோடு கோட் டையை விட்டு விட்டார்கள்.

இதிலிருந்து பார்ப்பனரல்லாதாயிருந்தாலும், பணக்காரர்களாயிருந்தால் அவர்கள் பொதுஜன பிரதிநிதியாக லாயக்கற்ற வர்கள் என்றும் இந்த மாதிரி பணக்காரர்களை அழித்தா லொழிய பார்ப்பன ரல்லாதாரியக்கம் - சமதர்ம இயக்கம் உருப்படி ஆகாது என்பதுமான எண்ணம் வலுக்கவே இடம் கொடுத்து வருகிறது.

என்ன சுயராஜ்யம் வந்தாலும் என்ன குடியேற்ற ஆட்சி வந்தாலும், என்ன பூரண சுயேச்சை வந்தாலும் இந்தக் கூட்டங்கள் தான் பங்கு போட்டுக் கொண்டு இந்தப்படி சந்தி சிரிக்க மானங்கெட்டுத்திரிய முடியுமே ஒழிய கஷ்டப் படுகின்ற தாழ்த்தப்பட்டு மிதிபட்டுக் கிடக்கின்ற இந்திய மக்களாகிய 100க்கு 95பேர்கள் கொண்ட மனித சமூகத்திற்கு ஒரு பயனும் உண்டாகப் போவ தில்லை என்பது உறுதியென்றே தோன்றுகின்றது.

நினைத்தால் மனம் பதருகின்றது. கும்பகோணம் சேர்மென் ஒரு அய்யங்கார், கும்பகோணம் தாலூகா போர்டு பிரசிடெண்ட் ஒரு அய்யங்கார். பாபனாசம் தாலூகா போர்டு பிரசிடெண்ட் ஒரு அய்யர். மன்னார்குடி தாலூகா போர்டு பிரசி டெண்டு ஒரு அய்யர்.

கடைசியாக தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் ஒரு அய்யர். அதுவும் ஏகமனதாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர். தஞ்சை தாலூகா போர்டு தலைவர், தாலுகா போர்டு மெம்பர் பதவிக்குக் கூட தேர்தலில் தோற்றுப் போகத்தக்க செல்வாக்கு உடைத்தானவர்.

இதுபோலவே இனி மற்றதுகளும் ஆட்டத்தில் இருக்கின்றன. ஆட்டத்தில் இல்லாவிட்டாலும் ‘சூத்திரர்களாய்’ அதாவது பார்ப்பன அடிமைகளாய் இருக்க வேண்டியவர்கள். ஏன் சற்றேரக்குறைய அந்தப் படியே இருக்கிறார்கள் என்று சொல்லத்தக்கவர்களை விட வேறில்லை என்று சொல்லப்பட வேண்டியவர்களாக இருக்கின்றவர்கள்.

இந்த நிலை தஞ்சை ஜில்லாவுக்கு வந்து சேர வேண்டிய காரணமே தஞ்சைப் பிரபுக்கள் மாஜி மந்திரி திரு. முத்தையா முதலியாரை ஒழிக்கவேண்டும் என்று ஆரம்பித்த சூட்சியே இந்த கதிக்குக் காரணமாகும்.

அதில் தஞ்சை பிரபுக்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அதனால் அவர்கள் ‘சற்சூத்திரர்’கள் பதவிக்கு வந்துவிட்டார்கள்.
இது அந்த ஜில்லா பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்தே யொழிய போட்டி போட்ட பிரபுக்களுக்கு ஒன்றும் மூழ்கிப் போகவில்லை.

பார்ப்பனரல்லாத பாமர ஜனங்களுக்கு இந்தக் கதி நேரவேண்டியதும் ஒரு விதத்தில் கிரமம்தான். ஏனெனில் அவர்களுக்கு பணக்காரர்களிடத்தில் இருக்கும் பக்தியும், மரியாதையும் என்றைக்கிருந்தாலும் இந்தப் பலனைத் தான் கொடுக்கும்.

ஆனால் இதனால் பிரபுக்களுக்கு ஒன்றும் முழுகிப் போகாது. ஏனெனில் அவர்களுக்கு தாலூகா போர்டாபீசிலும், ஜில்லா போர்டு ஆபீசிலும், முனிசிபாலிட்டியிலும் வேலை இல்லாமல் போய்விட்ட தினாலேயே அவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடப் போவதில்லை.

லாபமில்லாமல் போய்விடப் போவதில்லை. வேறு எத்தனையோ வழி இருக்கிறது. ஆனால் பார்ப்பனரல்லாத சமூகம் இன்னும் 5 வருஷத்திற்குள் அந்த ஜில்லாவில் தலை தூக்க முடியாமல் போய்விடும் என்றே சொல்லுவோம். திரு பன்னீர் செல்வம் அவர்கள் செய்த வேலை எல்லாம் பாழாய் போகப் போகிறது என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டிய தில்லை.

திரு. முத்தையா முதலியார் அவர்களை ஒழித்த பலன் தஞ்சாவூர் ஜில்லாவுடன் மாத்திரம் போகாமல் இந்த மாகாணமெங்குமே கஷ்ட்டமான நிலையை உண்டாக்கி விட்டது. அதாவது மாஜி மந்திரி திரு. முத்தையா முதலியார் அவர்களது முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வகுப்பு வாரி உத்தியோக வினியோக சம்மந்தமான உத்திரவுகள் கூட மார ஆரம் பித்து சிலதுகள் மாறியும் விட்டன.

நாணயமாய் இருந்த தலைவருக்கு திரு. பன்னீர் செல்வத்திற்கு ஹைகோர்ட்டில் அயோக்கியப் பட்டம் வாங்கிக் கொடுத்து அதை சீமையிலும் வினியோகிக்க தக்க இழிவான காரியங்கள் செய்யப்பட்டுவிட்டன.

ஆகவே மிராசுதாரர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் சண்டையும் பணக் கொழுப்புமானது இந்த நாட்டு மக்களுக்கு எவ்வளவு துன்பத்தை விளைவிக்கின்றன என்பதற்கு இவை உதாரணங்களாகும்.

இந்த மாகாணத்தில் 24 ஜில்லா போர்டு தலைமையும் பார்ப்பனரல்லாதார்களிடமே இருந்து வந்ததானது நெல்லூர் நடவடிக்கையில் ஒவ்வொன்றாக நழுவ ஆரம்பித்து விட்டது. மேலும் ஒவ்வொன்றாக நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் வரவும் ஆரம்பித்து வந்தும் விட்டது.

ஆகவே தமிழ்நாட்டில் தஞ்சாவூர் ஜில்லா இந்த கதி அடைந்தது பற்றி மனம் வேதனையடையாமல் இருக்க முடியவில்லை. ஆனபோதிலும் உண்மை உணர்ச்சியுடைய திரு. காயாரோகனம் பிள்ளை அவர்கள் சற்று கவனிப்பார்களானால் மறுபடியும் தலைதூக்க இடம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று கருதுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 07.12.1930)

Pin It