Periyarr 450நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டசபைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் தென் இந்திய நல உரிமைச் சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது.

ஒரு ஓட்டில் தோல்வியடைந்தாலும் அது சரியான தோல்வியே என்பதில் யாதொரு ஆட்சேபனையுமில்லை. ஓட்டு சேகரித்த முறை எவ்வளவு ஒழுங்கற்றதென்று சொல்லுவதானாலும் முடிவை மாற்றிக் கொள்வதற்கு அந்த சமாதானம் சிறிதும் பயன்படாதாகையால் அது உபயோகமற்ற சமாதானமாகும். அன்றியும், ஒரு கட்சியார் மாத்திரம் தான் ஓட்டு சேகரிக்கும் முறையில் சரியாக நடக்கவில்லை என்று சொல்லவும் முடியாது.

தீர்மானம் ஒரு சமயம் வெற்றி பெற்றிருந்தாலும் தோல்வியுற்றவர்களும் இதே சமாதானத்தைத்தான் சொல்லக்கூடும்; ஆதலால் தோல்விக்கு சரியான சமாதானம் சொல்ல வேண்டியது எமது கடமையாகும்.

முதலாவது இந்தத் தீர்மானமானது அவசியமில்லாததும் அர்த்தமற்றதுமான தீர்மானமாகும். எப்படியெனில் இத்தீர்மானம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் தீர்மானத்தின் உண்மையான தத்துவம் அமுலில் தானாகவே நடந்துதான் தீரும்.

அதாவது, இது நிறைவேறினால்தான் பார்ப்பனர் சட்டசபையில் நம்முடன் இருக்கக் கூடுமென்றோ நிறைவேறாவிட்டால் நம்முடன் இருக்க முடியாமல் போகுமென்றோ சொல்லிவிட முடியாது. மந்திரி சபையை நாமாகவே நடத்திக் கொண்டு போக முடியும் என்கின்ற உறுதியான பலம் கொண்ட நிலைமை நமக்கு வரும்போது பார்ப்பனர்களை நாம் சேர்க்கவே மாட்டோம்.

நமக்கு பலமில்லை என்று தெரியும்போது பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளவும் அவர்களுக்கு உத்தியோகம் கொடுக்கவும், சிறிதும் பின் வாங்கவும் மாட்டோம். சில சமயத்தில் நமக்குப் பலமும் கட்டுப்பாடும் இருந்தாலும் தைரியக்குறைவு ஏற்பட்டால் பார்ப்பனர்களை நாமாகவே தேடிக் கொண்டும் போகின்றோம். இதுதான் ஜஸ்டிஸ் கட்சியின் அனுபவமுமாகும்.

உதாரணமாக, எத்தனையோ பார்ப்பனர்கள் தேவஸ்தான சட்டத்தை எதிர்த்தும் மற்றும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தும் அது நிறைவேறிய பின் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் தேவஸ்தான போர்டு தலைமைப்பதவியை ஒரு பார்ப்பனருக்கும் தேவஸ்தானக் கமிஷனர் பதவிகளில் ஒன்றை ஒரு பார்ப்பனருக்கும் வலிய கொண்டுபோய் கொடுத்தார்கள்.

இதன் காரணம் என்னவென்றால் அந்தப் படி செய்திருக்காத பட்சம் அதுசமயம் கக்ஷி நிர்வாகம் கஷ்டமானதாயிருந்திருக்கும் என்பதுதான். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்து பார்ப்பனக் கட்சி மந்திரி அதிகாரத்திற்கு வந்த சமயத்தில் அதே போர்டு தலைவர் பதவி காலியானதும் பார்ப்பனக் கக்ஷி மந்திரிகளாலேயே அதை ஒரு பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுக்கப்பட்டது.

இதைக் குறித்து ஒரு பார்ப்பனராவது சத்தம் போடவே இல்லை. இதன் காரணம் என்ன? இந்தப்படி செய்திருக்கவில்லையானால் அந்த மந்திரிகளின் நிர்வாகமானது அப்போது சற்று கஷ்டமானதாயிருந்திருக்கும். தவிர, காங்கிரசின் சார்பாக பார்ப்பனரல்லாத மந்திரிமார்களே மூவர் இருந்த காலத்தில் தான் ஜஸ்டிஸ் கட்சி அந்த மந்திரிகளை கவிழ்க்க முயற்சி செய்தது.

காரணமென்னவென்றால், அந்த மந்திரிகளின் நிர்வாகமானது பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு கஷ்டத்தை உண்டாக்கும் என்பதுதான். தவிர, அந்த பார்ப்பனரல்லாத மந்திரி சபையை கவிழ்த்த பார்ப்பனரல்லாதார் கட்சியானது ஒரு பார்ப்பனரல்லாத மந்திரியை ஒழித்து அந்த ஸ்தானத்தில் ஒரு பார்ப்பன மந்திரியை வைத்து ஆதரித்து அதற்கு எவ்வித ஆபத்தும் நேரிடாமல் இன்றும் காப்பாற்றிக் கொண்டுதான் வருகின்றது.

இதன் காரணமென்னவென்றால் இந்தப்படி செய்யாவிட்டால் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு போதிய அனுகூலம் கிடைக்காது என்கின்ற கவலைதானே ஒழிய, கனம் சேதுரத்தினம் அய்யரைக் காப்பாற்றாவிட்டால் பார்ப்பனரல்லாதார் கட்சியே அடியோடு அழிந்து போகும் என்கின்ற பயம் அல்லவே அல்ல.

அன்றியும் சென்னை அரசாங்க நிர்வாக சபையில் மெம்பரா யிருந்த திரு.கே.சீனிவாசய்யங்கார் காலம் சென்றதும் அந்த ஸ்தானத்திற்குத் திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்காரும், சர்.சி.பி.ராமசாமி அய்யரும் சர்.தியாக ராயர் வீட்டிற்கு நடந்ததில் சர்.தியாகராயர், சர்.சி.பி. அய்யரையே சர்க்காருக்கு சிபார்சு செய்தார்.

அந்தக் காலத்தில், சர்.தியாகராயர் செல்வாக்கு அவ்வளவு பலமாயிருந்தும் ஏன் ஒரு பார்ப்பனரை சிபார்சு செய்தார் என்றால், அந்த காலத்தில் அது ஒரு பார்ப்பனருக்குக் கொடுத்துத்தான் தீர வேண்டிய நிலையில் சர்க்கார் இருந்ததுதான்.

அதே வேலை மறுபடியும் காலியானதும் பார்ப்பனரல்லாதார் கட்சி அபிப்பிராயத்தை எதிர்பாராமலே ஒரு வருணாச்சிரம சாஸ்திரிக்குக் கொடுக்கப்படுவானேன்? அவர் கோபித்து வேண்டாம் என்ற பிறகுகூட அந்த வேலை பார்ப்பனரல்லாதார் கட்சியைத் தேடிக் கொண்டு வந்து சரண் புகுவானேன்? அன்றியும் அந்த சமயம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு அவ்வளவு பலமிருந்தும் கனம் சேதுரத்தினமாகிய ஒரு பார்ப்பனருக்கு மந்திரி பதவியை கொடுப்பானேன்?

நம்மில் ஆள்கள் இல்லையா? அல்லது யாரும் ஆசைப்படவில்லையா? எனவே, மேற்கண்ட இந்த நடவடிக்கைகளை யெல்லாம் கவனித்துப் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட தீர்மானத்தின் தத்துவம் என்ன? என்பது ஒரு சாதாரண மனிதருக்கும் விளங்காமல் போகாது.

நிற்க, இதற்காக நான் ஏன் இந்தத் தீர்மானத்தில் இவ்வளவு கவலை கொண்டு ஆமோதித்தேன்? நான் ஏன் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன்? என்று பொதுஜனங்கள் அறிய ஆவல் கொள்வார்களானதால் அதற்கும் பதில் சொல்லியாக வேண்டியவனாக இருக்கின்றேன்.

அதாவது பனகால் அரசர் இறந்த காலத்தில் மந்திரி கட்சியார் நம்முடன் சேர வேண்டுமென்று ஆசைப் பட்டதற்கு அவர்கள் நம்மைக் கேட்டுக் கொண்ட குறைந்த நிபந்தனை இதுவாக இருந்ததும், அதாவது சட்டசபைக் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதும், இந்தக் குறைந்த நிபந்தனையும், அது சமயம் தென் இந்திய நல உரிமைச் சங்க பிரமுகர்களும் அடியேனைக் கேட்டே முடிவு சொல்ல வேண்டியிருப்பதாக சொன்னதாலும், மந்திரி கட்சியாரும் அடியேன் ஒப்புக் கொள்ளும் தைரியத்தாலேயே நம்பி சம்மதிக்கப் போவதாக சொன்னதாலும், அடியேனும் ஒப்புக்கொண்டு சம்மதமும் வாக்குத்தத்தமும் செய்ய வேண்டியதாய்விட்டதால் அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனது தலையிலும் சிறிது விழுந்துவிட்டது.

எதிர்பாராத கஷ்ட சம்பவம். இரு கட்சியின் தனித்தனி நன்மையோ அல்லது இருகட்சியில் உள்ளவர்களின் தனித்தனி நன்மையோ நெல்லூர் மகாநாட்டில் இந்த நிபந்தனையின் முடிவைப் பொறுத்தே இருப்பதாக இரு கட்சியாரும் தெரியா மல் நினைத்துக் கொண்டதால் இத்தீர்மானத்தை நிறைவேற்ற ஒரு கட்சியும், தோற்கடிக்க ஒரு கட்சியும் முனைந்து முயற்சி செய்ய வேண்டியதாய் ஏற்பட்டு விட்டது.

ஆகையால் முனிசிபல் தேர்தல்களில் ஓட்டு சேகரிப்பது போலவே சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படடுவிட்டது என்றாலும் இந்த நிலையில் எனது கடமை என்ன என்பதை பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்க வேண்டுமாய் ஆசைப்படுகின்றேன்.

நடு நிலைமை வகிக்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டதால் ஏதாவது ஒரு கட்சியின் நிஷ்டூரத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாய்ப் போய்விட்டதில் எந்தப்படி நடந்தால் நிஷ்டூரம் வந்தாலும் நாணயத்தைப் பாதிக்காது என்று நினைத்தேனோ, அந்தப்படி செய்ய வேண்டிய தொண்டில் இறங்க முடிவு செய்துவிட்டேன்.

அன்றியும் இந்த முடிவானது என்னை நன்றாய் அறிந்த எனது நண்பர்களின் கருத்துக்கு விரோதமாயிருந்தாலும் என்னை அன்னியனாய்க் கொண்டு இருந்து பிறகு துணிந்து நம்பியவர்களுக்கு தாங்கள் நம்பின நபரிடத்தில் மோசமில்லை என்று கருதும் படியாகவும் இருந்ததால் நிறைவேற்றி வைக்க மனதார முயற்சி செய்தேன்.

ஆனால் முயற்சி பலிக்கவில்லை; தோல்வியே அடைந்தேன். என்றாலும் இந்த தோல்வி எனது நாணயத்தையாவது நான் செய்த முடிவையாவது சிறிதும் பாதிக்கவில்லை. ஏன் தோல்வி அடைந்தேன் என்றால் முதலாவது மகாநாட்டுத் தலைவர் ஒழுங்காய் காரியங்களை நடத்தவில்லை.

விஷயாலோசனைக் கமிட்டி நியமன விதியை அடிக்கடி மாற்றிக் கொண்டார். அவர் வாக்குக் கொடுத்தது போல் நடக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால் தலைவருக்கு மன உறுதி போய்விட்டது. அப்படி இருந்தாலும் இந்தத் தீர்மானம் விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோற்றுப் போயிருந்தும் அந்த முடிவை மகாநாட்டிற்குக் கொண்டு வர காலையில் சம்மதித்தவர், பிறகு கொண்டு வரவில்லை.

அன்றியும் இத் தீர்மானத்தைப் பற்றியும் ஓட்டுச் சேகரித்தவர்கள் செய்வித்தக் குழப்பங்களால் ஏற்பட்டக் குழப்பங்களையும் விளக்க சந்தர்ப்பம் கொடுப்பதாய் வாக்குக் கொடுத்து அதற்காகவே கமிட்டியை ஒத்திப்போட்டவர். மறுபடியும் கமிட்டிக் கூடினதும் அக்குழப்பத்துடனேயே ஓட்டு எடுத்து விட்டார்.

இவைகள் ஒருபுறமிருக்க, இத்தீர்மான விஷயத்தில் எனக்கு உள் எண்ணம் கற்பித்து பிரசாரம் செய்ததும் என்னை ‘குரு’ என்றும் ‘தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருந்தவர்களே இவ்விதப் பிரசாரத்தில் பலமாக ஈடுபட்டிருந்ததும், அதிலும் சிலருக்கு தீர்மானத்தைப் பற்றிக் கவலையே இல்லாமல் எனக்கு விரோதமாய் முயற்சி செய்வதை தங்களுக்கு ஒரு பெரிய உற்சாகமாய்க் கொண்டதும் ஆகிய காரியங்கள் எனது நம்பிக்கைக்கு விரோதமான பலனைக் கொடுக்க நேர்ந்துவிட்டது.

இந்தத்தீர்மானத்தில் தமிழ் ஜில்லாக்கள் 13-ல் 10 ஜில்லாக்கள் எனக்கு விரோதமாக ஓட்டு செய்ததும், அனுகூலமாக ஓட்டு செய்த 3 ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா நமது சம்பந்தமில்லாமல் எதிர்க்கட்சிப் பிரசாரத்தால் ஓட்டுச் செய்ததும், ஒரே ஒரு ஜில்லா அதுவும் கோயமுத்தூர் ஜில்லா மாத்திரம் எனக்கு அனுகூலமாய் எனது சொந்த தாட்சண்யத்திற்காக ஓட்டு செய்ததுமான நடவடிக்கையைப் பார்க்கும் போது எனக்குத் தமிழ்நாட்டில் உள்ள செல்வாக்கு எவ்வளவு என்பதும் எனது “தலைமை” ஸ்தானத்தின் யோக்கியதை எவ்வளவு என்பதும் குருடனுக்கும் விளங்காமல் போதாது.

மேலும், “குதிரை கீழே தூக்கிப் போட்டது மட்டுமல்லாமல் புதைப்பதற்குக் குழியும் பறித்தது” என்கிற பழமொழிபோல், நமது தீர்மானத்தையும் விருப்பத் தையும் இக்கெதியாக்கியதுமல்லாமல் “ஈ.வெ.ராமசாமியும், கண்ணப்பரும் மந்திரிகளுடன் சேர்ந்து கொண்டு பார்ப்பனர்களை தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள நெல்லூர் மகா நாட்டில் முயற்சி செய்தார்கள்.

நாங்கள் ஒரே அடியாய் அடித்து விட்டோம்” என்றும் மற்றும் சில கற்பனைகளைக் கொண்டும் திண்ணைப் பிரசாரமும் செய்வதில் சிலர் ஊக்கமாக இருப்பதைப் பார்த்தால், அவர்களைப் பற்றி ஒரு புறம் வேடிக்கையும் மற்றொரு புறம் பரிதாபமும் படவேண்டியிருக்கின்றது.

ஏனெனில் கட்சியின் நலத்தைத் தவிர வேறு எந்தக் காரியத்தை உத்தேசித்தும் பார்ப்பனர்கள் சம்பந்தம் நமக்கு வேண்டியதில்லை என்றும், அதனால் எனது சொந்தத்திற்கு எவ்வளவு கெடுதி ஏற்படுவதாயிருந்தாலும் நமக்கும் கவலை இல்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் நான், பார்ப்பனர்களைத் தென்னிந்திய நலஉரிமைக் கட்சியில் சேர்க்க வேண்டுமென்று நினைத்து விட்டால், கட்சியின் நன்மை தீமைகளைப் பற்றி கவலை இல்லாமல் தமது சொந்த நன்மை தீமையை உத்தேசித்தே சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கும் தலைவர்களும் பின்பற்றுபவர்களும் பெரும்பான்மையாய் உள்ள கட்சியில் அது எப்படி நிறைவேறாமல் போகும் என்பது பரிகாசமாயிருப்பதுடன், இம்முயற்சியில் எவ்விதம் வெற்றி அடைவார்கள் என்பதில் பரிதாபமாயுமிருக்கின்றது.

நானும் திரு.ராஜன் அவர்களும் தமிழ் ஜில்லாக்களில் சமீபத்தில் சுற்றுப் பிரயாணம் செய்த காலத்தில் ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் இவ்விஷயத்தில் அவர்கள் கொண்ட அபிப்பிராயம் நமக்கும் நான் கொண்ட அபிப்பிராயம் அவர்களுக் கும் நன்றாய் தெரிந்ததும், பிறகு கடைசியாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட முடிவும், நடுநிலைமையில் உள்ள யாவருக்கும் இதற்குள் மறந்து போயிருக்காது.

ஏதோ சமய சந்தர்ப்பத்தினால் இம்மாதிரி நடக்க முடிந்தது என்றும், இவ்வித முடிவு ஏற்பட வேண்டியிருந்ததென்றும் உண்மையை ஒப்புக்கொண்டு இருப்ப வர்களைப் பற்றி எவ்விதத்திலும் நமக்கும், நம்மைப் பற்றி அவர்களுக்கும். கடுகளவு அபிப்பிராய பேதமும் ஏற்பட நியாயம் கிடையாது என்பதும்; இவ் விதம் ஒரு சம்பவம் நடந்ததாகவே ஒருவருக் கொருவர் மறுபடியும் ஞாபகத்திற்கே கொண்டுவர வேண்டியதில்லை என்பதும் முடிவான காரியமாகும்.

ஆனால் இந்த விஷயத்தை பொறுப்பற்ற சிலர்கள் ஆயுதமாக வைத்துக் கொண்டு கூலிப்பிரசாரம் செய்வதாக தெரிய வருவதால் பாமர மக்களுக்கு இதை விளக்காமல் இருக்க முடியவில்லை. ஆதலால், இதை இவ்வளவு தூரம் எழுதித் தீர வேண்டியிருந்ததற்கு நானே வருந்துகின்றேன்.

மற்றபடி நான் ஏன் தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கு ஒரு தலைவரை நியமிப்பதற்குப் பதிலாக கமிட்டி நியமிக்கவேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தேன் என்பதற்கு உள்ள காரணத்தை பின்னால் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.10.1929)

Pin It