சென்னையிலும் மற்றும் பல வெளியிடங்களிலும் சுயராஜ்யக் கட்சி காங்கிரஸ் என்கிற தேசீய வார்த்தைகளின் பெயரால் நமது பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சிகளுக்கு இவ்வாரத்தில் பெருந் தோல்வியென்றே சொல்ல வேண்டும். சென்னையில் சென்ற 4-ம் தேதி நடந்த தேர்தல்களின் முடிவானது நமது பார்ப்பனர்களுக்கு முற்றும் விரோதமாகவே போனதோடு, அங்குள்ள பாமர ஜனங்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அறிந்து கொண்டோம், அறிந்து கொண்டோம் என்று ஆரவாரம் செய்து விட்டார்கள். சென்னைத் தேர்தல்களில் முக்கியமாய் டாக்டர் நடேச முதலியாரை ஒழிக்க வேண்டுமென்பதுதான் நமது பார்ப்பனர்களுக்குப் பெரிய ஆத்திரமாயிருந்தது. அதற்காக வேண்டி ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியார் அவர்களைப் பிடித்து, அவருடைய ராவ்பகதூர் பட்டத்தையும் விடச் செய்து, டாக்டர் நடேச முதலியாருக்கு விரோதமாய் நிறுத்தி, எவ்வளவோ பொய்ப் பிரசாரங்களையும் இழிவுப் பிரசாரங்களையும் செய்து, ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யத் துணிந்தும் கடைசியாய் ஓட்டர்களை ஏமாற்ற முடியாமல் போய்விட்டது.

periyar karunanidhi veeramaniஇதுபோலவே ஸ்ரீமான் குமாரசாமி செட்டியார் அவர்களையும் தோற்கடிக்க வேண்டுமென்கிற எண்ணங் கொண்டு அங்கும் ஸ்ரீமான் இராமலிங்கம் பிள்ளை என்கிற ஒருவரை நிறுத்தி எவ்வளவோ சூழ்ச்சிப் பிரசாரங்களெல்லாம் நடத்தியும் பயன்படாமல் அளவுக்கு மிஞ்சிய தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

டாக்டர் நடேச முதலியார், குமாரசாமி செட்டியார் ஆகிய இரு தலைவர்களையும் தோற்கடித்து விட்டால் பார்ப்பனரல்லாதாரையே ஒழித்து விட்டதாகுமென நினைத்துக்கொண்டு செய்த பகீரத பிரயத்தினத்தின் பலன், நமது பார்ப்பனர்களை மறுபடியும் இவ்விதக் கெட்ட எண்ணத்தில் தலையிடுவதற்கே கருதுவதற்கில்லாமல் செய்து விட்டதென்றே சொல்லலாம். பார்ப்பனரல்லாத கட்சியின் பெயரால் நின்ற ஸ்ரீமான் குமாரசாமி செட்டியாருக்கு 614 ஓட்டுகளும் பார்ப்பனக்கட்சியான சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் நின்ற ஸ்ரீ இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு 47 ஓட்டுகளுந்தான் கிடைத்திருக்கிறது. டாக்டர் நடேச முதலியார் அவர்களுக்கு 454 ஓட்டுகளும் ராவ் பஹதூர் பட்டத்தை விட்ட ஸ்ரீ கந்தசாமி செட்டியாருக்கு 194 ஓட்டுகளுமே கிடைத்திருக்கிறது. சென்ற வருஷங்களில் பார்ப்பனரல்லாதார் கட்சிக்குப் பார்ப்பனர்களால் சென்னைத் தேர்தல்களில் பெரும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும், பார்ப்பனக் கூலிகளால் வசைமொழிகளும், அடிதடிகளும், கல்லடிகளும், காலித்தனங்களும் நடந்திருந்தாலும் பார்ப்பனரல்லாதார் போதுமான பிரசாரம் செய்யாததாலும், பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளைத் தைரியமாய் எடுத்துச் சொல்லாததாலும் பாமர ஜனங்கள் ஏமாந்து போக நேரிட்டதென்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். இது போலவே வெளியிலும் அனேக இடங்களில் பார்ப்பன ரல்லாதாருக்குப் பூரண வெற்றி கிடைத்துக் கொண்டு வருவதுடன் பார்ப்பனக் கட்சிக்கு சாவு குறியும் காணப்பட்டு வருகிறது.

பார்ப்பனர் கட்சிக்கு எங்கு வெற்றி ஏற்பட்ட போதிலும் அவைகளெல்லாம் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை பார்ப்பனரல்லாதார் தைரியமாய் எடுத்துச் சொல்லப் பின் வாங்கி நின்ற காரணங்களினாலும் பார்ப்பனர்களைப்போல் பார்ப்பனரல்லாதார் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாய் வேலை செய்ய முன் வராததாலுமேயல்லாமல் வேறல்ல. அல்லாமலும் பார்ப்பனர்களுக்குப் பிரசாரம் செய்வதற்கு மகந்துகளும் மடாதிபதிகளும் தாராளமாய்ப் பணம் கொடுப்பதாலும், கூலிக்கு உழைப்பதற்குப் பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோத்து பிரசாரகர்கள் எளிதில் கிடைப்பதனாலும் பார்ப்பனர் சூழ்ச்சி செல்வாக்குப் பெற இடமேற்பட்டுவிடுகிறது. அதை எதிர்த்து நிற்க வேண்டுமானால் பார்ப்பனரல்லாதாரிலேயும் பார்ப்பனரல்லாதார்களும் பிரசாரத்திற்குப் பணமும் உண்மையான பிரசாரர்களும் ஏற்பாடு செய்து தானாக வேண்டும்.

இவ்வொரு வருஷத்தில் பார்ப்பனரல்லாதார் கொஞ்சமாவது துணிந்து பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளியிட்டதன் பலனாலும் ஸ்ரீமான்கள் ஆரியா, தண்டபாணி பிள்ளை, சக்கரை செட்டியார், வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களுக்கு பார்ப்பனர்களின் சாவகாசத்தை விட்டும் காங்கிரசின் ஊழல்களை அறிந்து அவற்றின் நிர்வாகங்களிலிருந்து விலகவும் தைரியம் ஏற்பட்டதன் பலனாகவே பார்ப்பன சூழ்ச்சி தோல்வி அடைய சௌகரியமேற்பட்டது. சென்னையிலாகட்டும் மற்றும் வெளியிடங்களிலாகட்டும், சட்டசபை முதலிய ஸ்தாபனங்களுக்கு அபேட்சகர்களாகக் கூட நிறுத்துவதற்கு ஆளில்லாமல் பார்ப்பனர்கள் திண்டாடவும் இவர்களை நம்பி ஏமாந்து இவர்கள் சார்பாய் அபேட்சகர்களாய் நின்ற இரண்டொருவர்களும் இப்பொழுது ஒவ்வொருவராய் விலகிக்கொண்டு போவதையும் பார்த்தால் இந்த பிரசாரங்கள் சென்ற வருஷத்திலேயே தொடங்கியும் இப்பொழுது விலகிய கனவான்களுக்கு சென்ற வருஷத்திலேயே விலகும்படியான தைரியம் இருந்தும் இருக்குமானால் இதுவரையில் பார்ப்பனர் சூழ்ச்சியும் அதன் பலனாய் ஏற்பட்ட காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சிகளும் மாண்டு ஒழிந்து போயிருக்குமென்பதுடன் மகாத்மாவின் ஒத்துழையாமைக் காங்கிரஸ் மறுபடியும் தொடங்கப்பட்டிருக்குமென்றே சொல்லலாம். மகாத்மாவின் காங்கிரஸ் தொலைவதற்கு அப்பார்ப்பனர்களே முக்கிய காரணஸ்தர்களென்று சொல்ல வேண்டுமானாலும் கூட, அக்காரணங்களுக்கு மேற்சொன்ன பார்ப்பனரல்லாத தலைவர்களும் இதுவரை உதவியாயிருந்து வந்ததும் ஒரு காரணமென்பதையே நாம் வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இனியும் பார்ப்பன சூழ்ச்சியோ சுயராஜ்யக் கட்சியோ பார்ப்பன காங்கிரசோ ஒரு கடுகளவு நமது நாட்டில் ஒரு க்ஷணம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது நமது பார்ப்பனரல்லாதாரின் சுயநலமும் சமூகத் துரோகமும் வயிற்றுப் பிழைப்பு தேசபக்தியுமே காரணமேயல்லாமல் வேறல்லவென்பதை உறுதியாய்ச் சொல்லுவோம்.

குடி அரசு - தலையங்கம் - 08.08.1926

Pin It