periyar 288இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார், “திரு. ராமசாமி நாயக்கர் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்து, பிரசாரம் செய்தது, சர்க்காருக்குத் தெரியுமா? அந்தப்படி அவரைப் பிரசாரம் செய்ய விடலாமா” என்பதாக சர்க்காரை ஒரு கேள்வி கேட்டிருப்பதாய் தெரிய வருகின்றது. அதற்கு சர்க்கார் “திரு. நாயக்கர் மதத்தையும், சமூகத்தையும் தூஷித்து பிரசாரம் செய்தது எங்களுக்குத் தெரியாது” என்பதாகப் பதில் சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த விஷயத்தில் சர்க்கார், உண்டு அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றைச் சொல்லாமல் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லியிருப்பது சர்க்காரின் தந்திரத் தன்மையைக் காட்டுகின்றது. ஏனெனில், திரு.நாயக்கர் சென்ற மாதத்தில் வேலூரில் சுமார் 5, 6 கூட்டங்களில் பேசி இருக்கின்றார். வேலூர் மகாநாட்டிலும், சுமார் 15, 20 தீர்மானங்களுக்கு மேலாகவே நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இவ்வளவு சங்கதிகளையும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களான சுமார், 4, 5 தமிழ் சுருக்கெழுத்துப் போலீஸ் அதிகாரிகள் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டு போயிருக்கின்றார்கள். அவைகள் சர்க்கார் குப்பைத் தொட்டியில் இன்னமும் இருக்கக் கூடுமென்றே நினைக்கின்றோம். அப்படியிருக்க, திரு. நாயக்கர் பேசியவைகள் சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லி விட்டது நாணயமான பதிலாகாது என்றே மறுபடியும் சொல்லுவோம்.

அன்றியும், திரு.சத்தியமூர்த்தி கேள்வி கேட்ட பிறகாவது சர்க்கார், சி.ஐ.டி. ரிப்போர்ட்டுகளைப் பார்த்து பதில் சொல்லியிருக்கலாம். அப்படிக்கொன்றுமில்லாமல் ஒரேயடியாய் தங்களுக்குத் தெரியாது என்று சொன்னதிலிருந்து சமயம் வரும்போது, அதாவது திரு. நாயக்கர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் வரும்போது திடீரென்று அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் தெரிந்தவர்கள் போல் பாவனை காட்டி பிடித்து உள்ளே போட சவுகரியம் வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயேதான் இப்படித் தந்திரமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பதைத் தவிர அதற்கு நம்மால் வேறு காரணங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரிகளும் கூட, திரு.நாயக்கர் வேலூரில் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்தார் என்பதைப் பற்றிச் சட்டசபையாரிடம் போய் முட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் நேராகவே அவருக்கு நமது கருத்தை வெளிப்படுத்தி விடுகிறோம். இதன்மேல் அவர் என்ன வேண்டு மானாலும் செய்து கொள்ள அவருக்குப் பூரண சுதந்திரம் உண்டு என்ப தையும் அவருக்கு ஞாபகப் படுத்துகிறோம்.

மத விஷயம்

மத விஷயத்தில் நாம் இந்து மதமென்பதாக ஒரு மதமே கிடையாது என்பதோடு இந்து மதம் என்பதாக ஒன்று உண்டு என்றும் தாங்கள் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்ச்சியையே அடியோடு ஒழித்து, மனித சமூகத்தின் வாழ்வு, அறிவு, மானம், அன்பு, இரக்கம், பரோபகாரம் முதலிய ஒழுக்கங்கள் ஆகியவைகளே முக்கியமானவை என்பதை உணரச் செய்ய வேண்டும் என்பதும், இதற்கு விரோதமாக போலி விதமான இந்து மதம் மாத்திரமல்லாமல், வேறு எந்த மதம் தடையாயிருந்தாலும் அவற்றையும் வெளியாக்குவதே நமது முக்கிய நோக்கமாகும்.

சமூக விஷயம்

சமூக விஷயங்களில். எந்த சமூகம் மற்றொரு சமூகத்தை விட தாங்கள் பிறவியால் உயர்ந்தவர்கள் என்றும், எந்த சமூகமும் பொது வாழ்க்கையில் மற்ற சமூகத்தை விடத் தங்களுக்குச் சற்றாகிலும் உயர் பதவியும் அதிக சுதந்திரமும் அடைய பிறவியால் உரிமை உண்டு என்று பாத்தியம் கொண்டாடுகின்றதோ, எந்தச் சமூகம் மற்றொன்றின் சுயமரியாதைக்கு இடையூறாய் இருக்கின்றதோ அதைத் திருத்திச் சமநிலையை ஒப்புக் கொள்ளச் செய்வதும், அது முடியாவிட்டால் அவற்றை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுமே எல்லாவற்றையும் விட முக்கிய நோக்கம் என்பதை வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்றியும் இம்முயற்சியில் ஈடுபடுவதில் கெஞ்சுவதையோ, அன்னியர் மனம் நோகுமே என்பதான கவலை கொள்வதையோ, கொள்கையாய்க் கொள்ளாமல், உண்மையுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்ட யாரும் சற்றும் பின் வாங்கக் கூடாது என்பதுவும் நமது முக்கிய நோக்கமாகும். நன்மைகளிடத்தில் விருப்பும், தீமைகளிடத்தில் வெறுப்பும் கொள்ள வேண்டியது பரிசுத்தமான மனித உணர்ச்சியெனக் கருதுவதால் அதையும் வலியுறுத்துவது அவசியமாகும். ஆனால் இவைகள் வெற்றிபெற பலாத்காரத்தையோ, குரோதத்தையோ உபயோகிக்கக் கூடாது என்பது என்னிலையிலும் ஞாபகக் குறிப்புக் கொள்கையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.     

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.02.1929)

Pin It