உலகத்திலுள்ள மக்கள் மனித சக்தியை உணராததற்கும், அறிவின் அற்புதத்தின் கரை காணாததற்கும் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து ஒற்றுமையை கெடுத்திருப்பதற்கும், சுயநலம், பிற நல அலக்ஷியம், துவேஷம் முதலியவைகள் ஏற்பட்டு பரோபகாரம், இரக்கம், அன்பு முதலியவைகள் அருகிப் போனதற்கும், இயற்கை இன்பங்களும் சுதந்திர உரிமைகளும் மாறி துக்கத்தையும், நிபந்தனை அற்ற அடிமைத் தனத்தையும் இன்பமாகவும், சுதந்திரமாகவும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டியதற்கும் முக்கிய காரணம் மதங்கள் என்பதே எமது அபிப்பிராயம்.

periyar with krishnamoorthyஇந்த மதங்களேதான் மக்களுக்கு கொடுங்கோன்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் காரணமாயிருந்ததென்றுகூட சொல்ல வேண்டியிருக் கின்றது.

உலகத்தில் பல காரணங்களால் ஏற்படும் பூகம்பம், எரிமலைக் குழம்பு, பூமிப்பிளவு, மண்மாரி, மழை, வெள்ளம், புயல்காற்று, இடி, மின்னல் ஆகியவைகள் போலவும், காலரா, பிளேக்கு முதலிய ரோகங்கள் போலவும் மனித சமூக வீழ்ச்சிக்கு அடிக்கடி வேறு வேறு வேஷத்தின் பேரால் மதங்கள் என்பவைகளும் தோன்றிக் கொண்டே வருவதுமுண்டு.

இம்மதக் கேடுகளை உணர்ந்த அனேகரும், உண்மையிலேயே அக்கெடுதல்களை ஒழிப்பதற்கென்று வேலை செய்தவர்கள் அநேகரும், அந்த மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு கொள்கைகளுக்கு வேறு வித வியாக்கியானம் செய்தும், மற்றும் அம்மதத்திற்கு வேறு கொள்கைகளைப் புகுத்தியும், மற்றும் வேறு மதத்தை ஏற்படுத்தி பழய கொள்கைகளையே வேறு ரூபத்தில் வைக்கும் பலவித மாயவேலை செய்தும் வந்து ஒரு விதத்திலும் வெற்றி பெறாமல் பழய நிலையிலேயே இருந்திருக்கின்றார்கள்.

மற்றும் சிலர் சுயநலம் கொண்டு தங்கள் சமூக உயர்வுக்கும் வகுப்பு ஆதிக்கத்திற்கும் ஆதாரமாக சூழ்ச்சிகள் செய்து மக்களை ஏமாற்றி பல தந்திரங்கள் மூலம் பழய கொள்கைகளையே நிலைநிறுத்தி வஞ்சித்து வருகின்றார்கள். இந்த இரண்டிற்கும் தோற்றத்தில் வித்தியாசமிருந்தாலும் காரியத்தில் ஒரே பலனைத்தான் கொடுத்து வந்திருக்கின்றன.

இந்த நிலையிலேயே, அதாவது மக்களை அறியாமையில் ஆழ்த்தவும் சிலரின் ஆதிக்கத்தை வலுப்படுத்தவுமாக இது சமயம் நமது நாட்டில், சிறப்பாக தமிழ் நாட்டில், கற்றறிந்த கூட்டத்தார் என்னும் பார்ப்பனரது உதவி கொண்டு ஒருவாறு நாட்டில் உலவுகின்ற புதிய மத தோற்றங்களில் பிரம்ம ஞான சங்கம் அல்லது தியாசபிகல் சொசைட்டி என்பதும் ஒன்று. அது தலைமைப் பேராசையும் கீர்த்தி வெறியும் கொண்ட ஒரு ஐரோப்பிய மாதின் ஆதிக்கத்திலும் வெள்ளைக்காரர்களின் பண வலிமையிலும் ஒருவாறு செல்வாக்குப் பெற்று உலவுவதுடன் ஏற்கனவே பல காரணங்களால் உயர்வு தாழ்வு கொள்கையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மூடநம்பிக்கையால் அறிவு வளர்ச்சி பெறாத மக்களுக்கும் பெரிதும் இடையூறாக தோன்றி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இச்சபை செல்வமும் செல்வாக்கும் கொண்ட ஒரு ஸ்தாபனமாயிருப்பதால் மேல் கண்ட இரண்டிலும் ஆசையுடையவர்களான பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு இதை ஒரு சாதனமாய் உபயோகித்துக் கொள்ளக் கருதி ஒருவாறு அதில் போய் குவிந்து கொள்ளுகின்றார்கள் - அதனால் பலனும் அடைந்து வருகின்றார்கள்.

நிற்க, இதன் கொள்கைகள் என்ன என்று பார்ப்போமானால், சத்தியம், சகோதரத்தன்மை ஆகியவைகள் முக்கியமானவையாம்.

அன்றியும் கடவுள்கள், ராம, கிருஷ்ணாதி அவதாரங்கள், தேவர்கள், மகாத்மாக்கள், தேவாத்மாக்கள், உலகத்தை ரக்ஷிக்க உலக குரு தோன்றப் போகிறார் என்பது, மகாத்மாக்களுடனும், தேவர்களுடனும் சம்பாஷனை நடத்துவது என்பது, புராணம், இதிகாசம், கீதை ஆகியவைகளில் சிலவற்றை முழுதும் சிலவற்றை ஒரு அளவுக்கும் ஒப்புக் கொள்வது, முன் ஜென்மம், அதன் நடவடிக்கைகளை அறிவது, மற்றும் இது போன்றவைகளில் நம்பிக்கையுடையவர்களும் இதை நேரில் தினம் அனுபவிக்கின்றவர்கள் என்பவர்களும் இம்மதஸ்தராவார்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஆனால், காரியத்தில் இவர்கள் நடவடிக்கை எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டுமானால், அதை இந்த சங்கத்தில் சேர்ந்து இருக்கும் நபர்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதில் சேர்ந்திருப்பவர்களில் பார்ப்பனர்களே முக்கியமானவர்கள். அதிலும் வருணாசிரமக்காரரும், வேத சாஸ்திர, இதிகாச, புராண முதலியவைகளில் நம்பிக்கையும் பக்தியும் உடையவர்களாம். அவர்கள் நடவடிக்கைகளை கவனிப்போமானால் போக்குக்கும் நடவடிக்கைக்கும் சிறிதும் சம்பந்தமற்றவர்கள் என்பதும் மக்களை ஏய்க்க வெளியில் ஒரு கொள்கையும் தங்கள் ஆதிக்கத்துக்கு உள்ளுக்குள் ஒரு கொள்கையும் உடையவர்கள் என்பதும் விளங்காமல் போகாது.

சுமார் இரண்டு வருஷத்திற்கு முன்பாக திருநெல்வேலியில் கூட்டப்பட்ட திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் கொண்டு வரப்பட்ட “எல்லா இந்துக்களுக்கும் கோவில் பிரவேசம் கொடுக்க வேண்டும்” என்கின்ற தீர்மானத்தை உரமாய் எதிர்த்தவர் பிர்ம்ம ஞானசங்கத்தில் அதிக பக்தியும் நம்பிக்கையும் பற்றுதலும் யுடையவரான நண்பர் திருவாளர் நெல்லையப்ப பிள்ளையே ஆவார்கள். அவர்கள் சொன்ன ஆட்சேபம் என்னவென்றால், “ஆதி திராவிடர்கள் முதலியவர்கள் அசுத்தமுள்ளவர்களானதால் கடவுளின் அருகில் செல்லவோ பூஜை முதலியவைகள் புரியவோ அருகதை அற்றவர்கள்” என்றும், “கடவுளின் அருகில் அவர்களைச் செல்லவிடக் கூடாது என்றும் சொன்னார்கள். அதை ஆnக்ஷபித்து அவ்வூர் பிரபல சைவ மக்களும், சைவ தேசிகர்களும் தக்க காரணம் காட்டி மறுத்தார்கள். முடிவில் ஓட்டு எடுக்கும் போது பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த பிரபலஸ்தரான திருவாளர் பென்ஷன் தாசீல்தார் நெல்லையப்ப பிள்ளை அவர்கள் ஒருவர் மாத்திரமே எதிரிடையாக கை தூக்கினார். இந்த விஷயத்தில் அச்சங்கத்தின் ஏக தலைவரான ஸ்ரீமதி பெசண்டம்மாள் அவர்களும் அதே அபிப்பிராயத்தையே சொல்லி இருக்கின்றார்கள். அதாவது, “ஆதிதிராவிடர் முதலியவர்கள் பரிசுத்தமற்றவர்களானதால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் ஆனார்கள்” என்று சொன்னார்.

அது மாத்திரமல்லாமல் இவர்கள் சமீபத்தில் காசியில் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களின் முன்பு பேசிய காலத்தில் ஜாதிப்பிரிவுகளை அதாவது வருணாசிரமத்தை ஆதரித்து ‘தேச நன்மையை உத்தேசித்து அது அவசியம்’ என்றும் பேசியிருக்கின்றார்கள்.

ஆகவே வருணாசிரம தர்மமும் தீண்டாமையும் ஆதரிக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தால் நாட்டுக்கு எந்த விதத்தில் சகோதரத்தன்மையும் ஒற்றுமையும் அன்பும் சத்தியமும் உண்டாக்கக் கூடும் என்பதை அறிவாளிகள் யோசித்துப் பார்க்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.

மற்றப்படி இந்த ஸ்தாபனத்தில் நடைபெறும் மற்ற விஷயங்களை நாம் இந்த வியாசத்தில் புகுத்த இஷ்டப்படவில்லை. ஆதலால் அதைப் பற்றி நாம் எழுத வரவில்லை. அரசியல் துறையில் பார்ப்பனரல்லாதார்களுக்கு இந்த சங்கத்திலுள்ள வருணாசிரமப் பார்ப்பனர்களின் தொல்லையும் வகுப்பு ஆதிக்கப் பேராசையும் தலைவியால் பார்ப்பனரல்லாதார்களுக்கு ஏற்படும் கொடுமையும் அளவிடற்பாலதல்ல.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பிரம்ம ஞான சங்கம் என்பது ஆரிய தர்மப் பிரசாரம், வருணாசிரம தர்ம பரிபாலனம், பிராமண மகா சபை என்பன போன்ற பார்ப்பனாதிக்க பிரசார சபைகளில் ஒன்றே ஒழிய வேறல்ல, அதில் மேல் கண்ட சபைகளாவது வெளிப்படையாய் நம்முடன் போர் புரிகின்றன என்று ஒருவாறு சொல்லலாம். ஆனால் இந்த பிரம்மஞான சங்கம் என்பதோ சூழ்ச்சியின் மூலம் நம்மைக் கழுத்தறுத்து வருகின்றது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் பிரம்மஞான சங்கத்தில் சேருவது தற்கொலைத் தன்மை பொருந்தியது என்றே சொல்லுவோம்.

சமத்துவக் கொள்கையை அழித்துப் பார்ப்பனீயத்தைப் புகுத்தி திருஞானசம்பந்தர் என்ற பார்ப்பனர் உதித்து “சைவத்தைக் காப்பாற்றிய கதை”யைப் போலவே நமது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பனீயத்தை பரப்ப பெசண்டம்மை என்னும் “லோக மாதா” வந்து பிரம்மஞான சங்கத்தால் “மக்களுக்கு பிரம்மஞானம் புகட்டுகின்றார்” என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சமயம் அந்த ஸ்தாபனத்திற்கு ஏற்பட்டிருக்கிற செல்வாக்கால், தங்களது சுயநலத்திற்கு ஏதாவது வழி செய்து கொள்ளலாம் எனக் கருதி பார்ப்பனரல்லாதாரில் சிலர் அதில் சேருவதானாலும் சுயமரியாதைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுபவர்கள் அதில் கலந்து கொள்ளுவது சிறிதும் பொருந்தாததாகும். அதில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர்களின் மனப்பான்மையும் முக்கியஸ்தர்களில் தனித்தனி நபர்களின் மனப்பான்மையையும் அறிந்தே நாம் இந்தப்படி எழுதுகின்றோம். மற்றொரு சமயம் இதைப் பற்றி விரிவாய் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 09.12.1928)

Pin It