திருவாளர் V. இராமசாமி முதலியார் அவர்கள் வகுப்புவாரித் தொகுதியைப் பற்றி தமது அபிப்பிராயத்தை பத்திரிக்கைகளில் ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டிருக்கிறார். அவ்வறிக்கை வருமாறு:-

periyar karunanidhi and veeramani copy“நான், சைமன் கமிஷன் முன்பாக பார்ப்பனரல்லாதார் கொடுத்த சாட்சியங்களை கவனத்துடன் கவனித்து வந்தேன். பம்பாய் மாகாண பார்ப்பனரல்லாதாரின் குறைகளைப் பற்றி நான் முடிவாக ஒன்றும் கூற முடியாத நிலைமையில் இருக்கிறேன். தனித் தொகுதிகள் பார்ப்பனரல்லாதார் அடைவதற்கு 1919ல் பாராளுமன்றக் கமிட்டியினர் அனுகூலமாக இருக்கவில்லை. என்றாலும் அதைப் பார்ப்பனரல்லாதார் சமாதானத்துடன் சகித்து வந்தனர் என்று எனக்கு நினைவிருக்கிறது. சென்ற பத்து வருடங்களின் நடவடிக்கைகளை ஆய்ந்து பார்க்கையில் முன் செய்த தீர்மானம் இப்போது சைமன் கமிஷனால் மாற்றமடைதல் வேண்டுமென்பதற்கு முதிர்ந்த காரணங்களைக் காட்டியதாக எனக்குத் தென்படவில்லை.

எங்களுடைய கட்சியாவது, நானாவது எவ்வகுப்பேனும் வகுப்புவாரித் தேர்தலடையும் நோக்கத்திற்கு மாறுபட்டிருக்கவில்லை. வகுப்புவாரித் தொகுதித் தேர்தல்களால், பல கெடுதிகள் விளையுமென்ற கூற்றினை நான் நம்பவில்லை. ஐக்கியத் தேர்தலாலும் பிரத்தியேக ஸ்தானங்கள் வழங்கப்படும் உரிமையாலும் வகுப்புப்பேதம் நீங்கி அமைதியும் திருப்தியும் உண்டாகுமென்றும் நான் கருதவில்லை; இப்பொழுது பொது தொகுதியும் ஒதுக்கி வைத்தலும் ஆகியவைகளை பார்ப்பனரல்லாதார் மீது சுமத்தப் பெற்றிருக்கும் சென்னை மாகாணத்தின் நிலைமையே நான் கூறுவதற்குப் போதிய சான்றாகும். நான் இந்த அபிப்பிராயங்களை ஏற்கனவே டில்லி சர்வ கட்சி மகாநாட்டின் முன்பாக எடுத்துரைத்திருக்கின்றேன்.

சென்னைப் பார்ப்பனரல்லாதாரைப் பற்றிய வரையில், நான் அவர்களைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கு உரிமையில்லாவிட்டாலும் கூட, சென்னைப் பார்ப்பனரல்லாதார்களின் எந்தப் பிரசித்தி பெற்றதும் பொது ஜனங்களால் ஒத்துக் கொண்டதுமான மதிப்புள்ள சங்கங்களும் தங்களுக்குத் தனித்தொகுதி வேண்டுமென்று எவர்கள் முன்னிலையிலாவது வேண்டுவரேல் அது ஆச்சரியப்படத்தக்கதாகும். இப்பொழுது சென்னையில் வழங்கி வருவது போல் பிரத்தியேக ஸ்தானங்கள் அளிக்கப்பட்ட கொள்கையினையாவது அளித்த முறையினையாவது சென்னைப் பார்ப்பனரல்லாதார்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பார்ப்பனரல்லாதார் இதைப் பற்றி லக்ஷியம் செய்ய மாட்டார்கள்.

என்றாலும் பார்ப்பனரல்லாதாருக்குச் சென்னையிலாவது பம்பாயிலாவது உரிமைப் பாதுகாப்பு அவசியமில்லையென்று நான் கூற முன் வரவில்லை. இவர்களின் நலத்தினைக் குலைக்கும் எதிரிகளைப் பற்றி நாம் பூனாவில் நடந்த விபரமான சாட்சியங்களில் கவனித்திருக்கின்றோம். நான் சென்ற சின்னாட்களாக பம்பாய் நிலைமையைப் பற்றி அறிந்து வந்த வரையில், பார்ப்பனரல்லாதார்களுக்குள் கட்டுப்பாடும், பரஸ்பர நம்பிக்கையும், உணர்வும் இன்னும் மிகுதியாய் இருக்க வேண்டுமென்னும் முடிவான அபிப்பிராயத்தைக் கொள்ளுகின்றேன். நான் இவ்வாறு மறைக்காமற் கூறுவதை என் பார்ப்பனரல்லாத நண்பர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.”

இவ்வறிக்கையில் எவ்வளவுதான் சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் வார்த்தைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு விஷயங்கள் தெளிவாக அமைந்து விட்டன. அதாவது ஒன்று “செல்வாக்கும் மதிப்பும் பெற்று பொது ஜனங்களால் ஒப்புக் கொள்ளக்கூடியதுமான சென்னையில் உள்ள எந்த பார்ப்பனரல்லாதார் சங்கமும் தனித் தொகுதிகளைக் கேட்டால் நான் மிகுதியும் ஆச்சரியப்படுவேன்” (அதாவது கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்பது) மற்றொன்று, “பொது தொகுதிகளின் மூலம் சில ஸ்தானங்களை ஒதுக்கி வைப்பதையும் சென்னை மாகாணத்தார் லக்ஷியம் செய்ய மாட்டார்கள்” என்பதாகும்.

எனவே இந்த ஸ்டேட்மெண்டிலிருந்து தனித்தொகுதியும் வேண்டாம் ஒதுக்கி வைப்பதும் வேண்டாம் என்பதே அவரது அபிப்பிராயத்தின் சாரமெனக் கொள்ள வேண்டியதாகும். இப்படிச் சொன்னவர் வேறு வழியும் காட்டவில்லை. எனவே பார்ப்பனரல்லாதாராகிய நாம் இவ்விரண்டும் வேண்டியதில்லை என்று முடிவு செய்து விட்டோமானால் பிறகு பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஒரு தனி அரசியல் இயக்கம் எதற்காக இருக்க வேண்டும்? மற்றபடி பார்ப்பனரல்லாதார் பூண்டு உள்ளவரை உத்தியோகத்திற்காகவும் உத்தியோகமற்ற பிரதிநிதித்துவத்திற்காகவும் சதாசர்வகாலம் அரசாங்கத்தின் காலடியில் தொங்கிக் கொண்டிருப்பதற்காகவா என்று கேட்கின்றோம். நிற்க “வகுப்புவாரித் தொகுதி எந்த பார்ப்பனரல்லாத செல்வாக்கும் பொதுஜனப் பிரதிநிதித்துவமும் மதிப்பும் கொண்ட சங்கங்களும் கேட்காது” என்பதானது பொறுப்புள்ள வார்த்தையா என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுமாய்க் கோருகிறோம்.

முதலாவதாக, திரு முதலியார் அவர்கள் மகமதியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலிய சகோதரர்களை பார்ப்பனரல்லாதார் என்கின்ற கூட்டத்தில் சேர்த்திருக்கிறாரா அல்லது அவர்களை ஒதுக்கி விட்டாரா என்பது இதிலிருந்து சந்தேகமாயிருக்கின்றது. எனவே ஒரு சமயம் அவர்களை ஒதுக்கி அந்த ஸ்டேட்மெண்டில் இந்த வார்த்தைகளை வழங்கி இருப்பாரானால் இதுவரை பார்ப்பனரல்லாதார் என்னும் பேரால் அரசியலில் நடத்தி வந்த காரியங்களும் எழுதியும் பேசியும் வந்த காரியங்களும் உண்மையல்லவென்றுதான் ஏற்படும்.

ஒரு சமயம் அவர்களையும் சேர்த்துதான் சொல்லப்பட்டது என்று சொல்வாரானால், கண்டிப்பாய் திரு. முதலியாரின் இந்த ஸ்டேட்மெண்டு முக்கியமாக அச்சமூகத்தாருக்கு பெரும்பாதகத்தையும் அச்சமூகத்தாரின் பிரதிநிதித்துவ சங்கங்களுக்கு அவமானத்தையும் விளைவிப்பதாகும். எப்படியெனில் “எந்த செல்வாக்கும் மதிப்பும் பெற்ற சங்கமும் தனித்தொகுதியையோ ஒதுக்கி வைப்பதையோ கேட்காது” என்று அவர் சொல்வதால் விளங்கும். பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாகச் சென்னை மாகாணத்திலும் உள்ள மகம்மதிய கிருஸ்தவ, ஆதி திராவிட சங்கங்கள், சபைகள், அவற்றின் பிரதிநிதிகள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக் கொண்டே வருகின்றன.

அதுமாத்திரமில்லாமல் மீதியுள்ள பார்ப்பனரல்லாதார்களான முதலியார், செட்டியார், நாயக்கர், நாயுடு முதலாகிய பட்டங்கள் கொண்ட ஒவ்வொரு தனித்தனி வகுப்புச் சங்கங்களும் மகாநாடுகளும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயரால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் ஒதுக்கி வைப்பதையும் கேட்டுத் தங்கள், தங்கள் சமூக மகாநாடுகளில் தீர்மானங்களும் செய்து கொண்டு வருகின்றன. எனவே திரு. முதலியார் அவர்கள் தயவு செய்து எந்த சமூகத்தாராவது தனித்த முறையிலாவது பிரதிநிதித்துவ முறையிலாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவமோ ஒதுக்கி வைப்பதோ வேண்டாம் என்று சொல்லி விட்டதாக தயவு செய்து எடுத்துக் காட்டுவாரா என்று கேட்கின்றோம்.

அன்றியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமோ ஒதுக்கி வைத்தலோ இல்லாவிட்டால் மகமதியர், ஆதித்திராவிடர் ஆகியவர்களின் கதி என்னவாக முடியும் என்பதைப் பற்றி திரு. முதலியார் அவர்கள் சற்றாவது யோசித்து அதற்கு ஏதாவது சமாதானம் அந்த ஸ்டேட்மெண்டில் கூறி இருக்கின்றாரா என்று கேட்கின்றோம்.

அரசியல் உலகில் பார்ப்பனப் பத்திரிகைகளின் செல்வாக்கு காரணத்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கின்ற பேச்சு பேசுபவர்களுக்கு செல்வாக்கு கிடைப்பது கஷ்டம் என்கின்ற காரணம் ஒன்று தவிர வேறுவிதமாக வகுப்புவாரி முக்கியத்துவத்திற்கோ ஒதுக்கி வைப்பதற்கோ விரோதமானதும் அவசியமில்லாததுமான காரணம் ஏதாவது ஒன்றை எடுத்துக் காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்திற்கு தலைவர்களாயிருந்த - ஒருகை விரலை விட்டு எண்ணிவிடக் கூடிய - சில தலைவர்களுக்கு மாத்திரம் உயர்பதவியும் யோக்கியதையும் மதிப்பும் கிடைத்துவிட்ட காரணத்தினாலேயே இனிமேல் அந்த சமூகத்திற்கே எந்த வித குறைவும் இல்லையென்று தீர்மானித்து விட்டார்களா? அல்லது சர்க்கார், எப்படி நமக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்டு விட்டால் மக்கள் தங்களை வந்து தொங்கிக் கொண்டும் தங்களுக்கு சதா சர்வகாலம் அடிமையாய் இருந்து கொண்டும் இருக்கும் தன்மை போய் விடுமே என்று பயப்படுகிறார்களோ அதுபோல் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டுவிட்டால் இந்தத் தலைவர்கள் வீட்டு வாசலில் அதிகாரத்திற்கும் பதவிக்கும் ஆள்கள் வந்து தொங்கிக் கொண்டும் பல்லைக் காட்டி கெஞ்சிக் கொண்டும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தார்களா என்று கேட்கின்றோம்.

சாதாரணமாக திரு. முதலியாரவர்கள், இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆதித்திராவிடர்கள் என்பவர்களுக்கு அரசியலில் மேல்கண்ட இரண்டும் இல்லாமல் வேறு என்ன வழி சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம். தவிர, ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் திராவிடன் பத்திரிகையிலும் அடிக்கடி எழுதி கணக்கு காட்டி வரும் “ஏகபோக” உரிமையை தடுத்து எல்லோருக்கும் “சமசந்தர்ப்பம்” கொடுக்க இந்த இரண்டு வழியுமில்லாமல் வேறு என்ன மார்க்கம் காட்டக்கூடும் என்று கேட்கின்றோம்.

திரு. முதலியாரவர்களின் ஸ்டேட்மெண்டானது, பார்ப்பனரல்லாதார் இயக்கம் இதுவரை அரசியலில் செய்து வந்த வேலையை அடியோடு குழி தோண்டிப் புதைப்பதற்கு இடம் கொடுப்பதுடன் அந்த சமூகத்திற்கே நிரந்தர அரசியல் அடிமைத்தனத்தை நிலைநாட்டுவதற்கு உதவி செய்வதுமாகும் என்றே நாம் சொல்லுவோம்.

இது மாத்திரமல்லாமல் மகமதியர்களையும் ஆதிதிராவிடர்களையும் நசுக்கிவிட ஏதுவானதாகவும் முடியும். அன்றியும் பார்ப்பனர்களும் அவர்தம் கூலிகளும் இரண்டொரு சுயநலக்காரர்களும் போடும் போலிகூப்பாடுகளை மெய்ப்பிக்கவும் உற்ற துணையாகவும் இருக்கும். முடிவாக வகுப்பு வித்தியாசம் நீங்கி எல்லோரும் ஓற்றுமையாய் இருக்க வேண்டும் என்கின்றதைவிட எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்பதே நமது முக்கிய கொள்கை. ஏனெனில் சமஉரிமை கிடைத்துவிட்டால் தானாகவே ஒற்றுமையும் வந்துவிடும். சமஉரிமை இல்லாத இடத்தில் உண்மை ஒற்றுமை இருக்க முடியாது. ஆகவே சமஉரிமைக்காக எவ்வளவு பெரிய கலகமும் ரத்தக் களரியும் ஏற்படுவதானாலும் அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் சுதந்திரமும் சமத்துவமும் இல்லாத ஒற்றுமை வேறு; அவைகள் உள்ள ஒற்றுமை வேறு, ஆதலால், சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்குமாக எவ்வளவு ஒற்றுமையை தியாகம் செய்தாலும் அச்சுதந்திரமும் சமத்துவமும் கிடைத்த பிறகு தானாகவே உண்மையான ஒற்றுமை தோன்றிவிடும். ஆதலால் எந்த முறையிலாவது எவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்டாவது ஒவ்வொரு வகுப்பும் சமத்துவமும் சம உரிமையும் பெறமுயற்சிப்பதே பொறுப்புள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரினுடையவும் கடமையாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 04.11.1928)

Pin It