ராமனாதபுரம் ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு. ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி அவர்கள் காலமான பிறகு அந்த ஸ்தானத்திற்கு அந்த ஜில்லாவில் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் சமூகப் பிரமுகர்களில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென்று நியமன அதிகாரங்களை சர்க்கார் தங்களுக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பதே அதற்காகத் தான் என்பதையும் சர்க்காருக்கு கொஞ்ச நாளைக்கு முன்பாக பல பத்திரிகைகள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

periyar karunanidhi and veeramaniஅன்றியும் அச்சில்லாவில் செல்வாக்கும் நாகரீகமும் செல்வமும் அறிவு வளர்ச்சியும் பெற்ற சமூகங்களில் ஒன்றாகிய நாடார் சமூகப் பிரதிநிதிகளான பல கனவான்கள் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவையும் ஸ்தல ஸதாபன இலாக்கா மந்திரியையும் தூது சென்று கண்டு தங்கள் குறைகளை தெரிவித்ததும் அதற்கு அவர்கள் நம்பிக்கையான பதில் அளித்ததும் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

எனவே சர்க்கார் இது விஷயத்தில் பிரதிநிதித்துவப் பத்திரிகைகளினுடைய யோசனைகளை ஏற்றும் பிரதிநிதித் தூதுக் கூட்டத்தாரினுடைய ஆசையை மதித்தும் அந்த ஸ்தானத்திற்கு தென்னிந்திய நாடார் சமூகத்தில் ஒரு பிரமுகரான திருவாளர் சௌந்திரபாண்டிய நாடார் அவர்களை நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

திரு. நாடார் அவர்கள் ஒரு பெரிய செல்வந்தர். ஆங்கில பாஷா ஞானமும் உடையவர். இரண்டு தடவை சென்னை சட்டசபைக்கு அங்கத்தினராக நியமனம் செய்யப்பட்டவர். தற்கால சீர்திருத்த முறையின்படி ஏற்பட்ட அரசாங்க முறையில் பொதுஜனங்களின் பேரால் ஆதிக்கம் பெற்ற கக்ஷியான சுயேச்சைக் கக்ஷியின் முக்கிய பொறுப்பாளியானவர். எனவே இப்பேர்ப்பட்ட கனவான் ஒரு ஜில்லா போர்டுக்கு தலைவராக நியமனம் பெற்றதில் யாதொரு அதிசயமும் இல்லை.

இந்நியமத்தினாலேயே நாடார் சமூகத்திற்கோ அல்லது திரு. சௌந்திர பாண்டிய நாடாருக்கோ பெரிய அனுகூலம் ஒன்றும் ஏற்பட்டுவிட முடியாதானாலும் சர்க்கார் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் விஷயத்தில் நேர்மையான கவனம் செலுத்த தங்கள் கண்களைத் திருப்பி இருக்கிறார்கள் என நம்புவதற்கு ஒருவாறு இடம் உண்டாயிருக்கின்றது. இந்த முறையை சர்க்காரார் பின்பற்றுவார்களேயானால் இந்திய நாட்டிற்கு பிடித்த உள்நாட்டுச் ‘சனி’ ஒருவாறு சீக்கிரத்தில் தொலைந்து விடும் என்று நம்பலாம்.

இவ்விஷயத்திலும் பல இடையூறுகள் ஏற்பட்டு சிறிது காலம் சர்க்கார் கையைப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

இதற்கு உதாரணம் ‘சுதேசமித்திரன்’ என்னும் ஒரு பார்ப்பன பத்திரிகையின் வயிற்றெறிச்சலை பார்த்தாலே தெரிய வரும். அது 26-10-28 தேதி பத்திரிகையில் எழுதுவது என்னவென்றால் :-

“திரு. சவுந்திரபாண்டிய நாடார் சாமான்ய நிலைமையில் இந்தப் பதவி பெற்றிருந்தால் இதைப் பற்றி தோஷங்கூற இடம் ஏற்பட்டிருக்காது.” ஆனால் இதை “மந்திரி கோஷ்ட்டியினர் தங்களுடைய கக்ஷிக்கு பலம் தேடிக் கொள்வதற்காக செய்த காரியமென்று பொது ஜனங்கள் நினைப்பார்கள்.” அன்றியும் “யார் யாருக்கு எந்தெந்த வேலையை கொடுக்க வேண்டும் என்கின்ற சிபாரிசு செய்ய வேண்டிய பொறுப்பு ஏற்பட்ட கொரடாவானவருக்கு அப்பதவி கொடுத்ததில், கொடுத்தவருக்கும் ஏற்றுக் கொண்டவருக்கும் கௌரவமில்லை”

“ஸ்தல ஸ்தாபனத்தில் நெருங்கிய பழக்கமும் அந்த ஜில்லாவில் நேரடியான சம்மந்தமும் அவருக்கு இல்லை.” எனவே இந்த நியமனம் ஆட்சேபிக்கத் தக்கதாம்.

இது எவ்வளவு முன்னுக்கு பின் முரண் என்பதையும் இதில் பார்ப்பனர்கள் தங்கள் ஆத்திரத்தை காட்டிக் கொள்ள எத்தனை விஷம யுக்தியை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும் இவர்கள் உள்ளுக்குள் எவ்வளவு இடைஞ்சல்கள் செய்திருப்பார்கள் என்பதையும் இதிலிருந்தே ஒருவாறு அறிந்து கொள்ளளாம், அதாவது திரு நாடார் தமது சாமன்ய நிலையில் இந்தப் பதவி அடைந்திருந்திருந்தால் தோஷம் கூற இடமிருக்காது என்று சொல்லுகின்றார். சாமான்ய நிலையில் அடைந்ததாக வைத்துக் கொண்டால் அப்போது திரு நாடாருக்கு ஸ்தலஸ்தாபன அனுபோகக் குறைவும் அந்த ஜில்லாவின் நேரிட சம்மந்தமற்ற தன்மையும் மாறிவிடுமா என்று கேட்கின்றோம். முன்பின் பழக்கமில்லாததும் பாஷை தெரியாததுமான ஒரு நாட்டிற்கு திடீரென ஒரு பார்ப்பானை திவானாகவோ மந்திரியாகவோ போட்டு அவனுககு மாதம் 3000, 4000 ரூபாய் கிடைப்பதானால் இந்த பார்ப்பனர்களுக்கு அது நல்ல நியமனமாகி விடும்.

எந்த ஜில்லாவிலோ பஞ்சாங்கம் சொல்லி பிச்சை யெடுத்து எந்த ஊரிலோ முனிசிபல் லாந்தர் வெளிச்சத்தில் படித்து எந்த காரியம் பண்ணியோ பாசானாதாக பெயர் வாங்கி விட்டு எந்த ஊருக்கு போய் எவ்வளவு பெரிய உத்தியோகம் பார்ப்பதானாலும் அது பார்ப்பனருக்கு மாத்திரம் பொருத்தமானதும் திருத்தமானதுமான நியமனமாகி விடும். உதாரணமாக மகாமகாகனம் சீனிவாச சாஸ்த்திரிக்கும் 33 கோடி மக்களுக்கும் தென் ஆப்ரிக்காவுக்கும் 4000 ரூ. சம்பளத்திற்கும் அவர் செய்த வேலைக்கும் பலனுக்கும் உள்ள சம்பந்தத்தை நினைத்தால், 2 தடவை சட்டசபையில் இருந்தவரும், வருஷம் ஏராளமான வருமானமுள்ள செல்வத்தை உடையவராயிருந்து அதை நிர்வாகம் செய்து வருபவரும், சமீப காலம் வரை மதுரையும் ராமநாதபுரமும் ஒரே ஜில்லாவாய் இருந்தபோதும் இப்போதும் மதுரையையே தலைமை ஸ்தானமாக உடையதுமானதாகியதில் அனுபோகம் பெற்றவரும் மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கத்தவராக இருந்தவரும், இந்த ஒரு சாதாரண வேலைக்கு பொருத்தமில்லை என்று இந்த பார்ப்பனர்கள் சொல்லுவது ஒரு அதிசயமல்ல.

அன்றியும் வேறு யாரையாவது நியமித்து இருக்கக் கூடாதா? என்பதன் மூலம் இவர்கள் வேறு சில ஆசாமிகளுக்கும் வக்காலத்து வாங்கி முயற்சித்துப் பார்த்திருக்கின்றார்கள் என்பதும் இவர் இதை அடைந்ததில் தங்களுக்கு இஷ்டமில்லை என்பதும் நன்றாய் விளங்கும்.

எப்படியும் இந்த உலகம் உள்ளவரை இந்த மாதிரி ஒரு பார்ப்பனக் கூட்டம், தங்களுடைய அடிமை அல்லாதவர்களும், தங்களுடைய வைப்பாட்டி மக்கள்தான் மற்றவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாதவர்களும், மற்றும் பார்ப்பனீயத்திற்கு அடிமையாக மறுப்பவர்களும், சுயமரியாதையில் கவலை உள்ளவர்களும் எந்தப் பதவிக்கு வருவதானாலும் அவர்கள் விஷயத்தில் ஏதாவது ஒரு குற்றத்தை கற்பனை செய்தும் அவர்களுக்கு எதிரிகளையும் உள் கலகங்களையும் உற்பத்தி செய்தும் உபத்திரவித்துக் கொண்டே வருவார்கள் என்பது கல்லுப் போன்ற உறுதி.

நிற்க, பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டோ அல்லது தாங்களாக ஆசைப்பட்டோ இந்தப் பதவிக்கு முயற்சி செய்த கனவான்களோ எதிர்பார்த்த கனவான்களோ யாராவது ஒருவர் இருவர் இருக்கலாம். என்றாலும் அவற்றைப் பற்றி இனி கவனம் செலுத்தாமல் ராமநாதபுரம் ஜில்லா போர்ட் மெம்பர்கள் திரு. நாடார் அவர்களுடன் ஒத்துழைத்து அவரது தலைமைப் பதவியை நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும் முறையில் நடத்திக் கொடுக்க உதவி புரிய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். எவ்வளவு பெரிய கூட்டமானாலும் அதில் ஒரு பார்ப்பனர் இருந்து விட்டால் எப்படியாவது கலகத்தை மூட்டிக் காரியத்தைக் கெடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்பது பழமொழியும் அனுபவமும் ஆகும்.

ஆதலால் அப்பழமொழியையும் அனுபவத்தையும் ராமநாதபுரம் ஜில்லா போர்டு மெய்ப்பிக்காமல் இருக்க வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

கடைசியாக இந்நியமனத்திற்காக தமது உறுதியை உபயோகித்த மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

திரு. நாடார் அவர்கள் உறுதியுடன் நின்று அந்தப் பதவியை வெற்றியுற நடத்துவதில் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் தக்கபடி பயன்படுத்துவார்கள் என்று நம்புகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.10.1928)

Pin It