அருப்புக்கோட்டையில் நாடார் சமூக மகாநாடு சென்ற வாரம் 4, 5, 6 தேதிகளில் மிகவும் விமரிசையாக நடந்தேறிய விவரங்களை மற்ற பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் விஷயங்களிலிருந்து அறியலாம்.

சமூக மகாநாட்டை திறந்து வைத்த டாக்டர். சுப்பராயன் அவர்கள் வகுப்பு மகாநாடுகளின் அவசியம் என்றது பற்றியும், ஒவ்வொரு வகுப்பும் முன்னேறினால்தான் நாடு விடுதலை அடைய முடியும் என்றது பற்றியும், இந்த விஷயங்கள் வெற்றி பெற தன்னால் கூடியதை செய்யக் காத்திருப்பதாக வாக்களித்ததைப் பற்றியும் நாம் மிகுதியும் பாராட்டுகின்றோம்.

periyar and EVKSமகாநாட்டு அக்கிராசனர் திரு. கனகசபை நாடார் அவர்கள் தமது அக்கிராசனப் பிரசங்கத்தில் குறித்துள்ள பல விஷயங்கள் பொன்னே போல் போற்றத் தக்கன.

“நாம் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றிருந்தும், நமது யோக்கியதைக்கு தகுந்த கவுரவம் நமக்கு அளிக்கவில்லை; பகிரங்கமாய் அவர்கள் (பிற வகுப்பார்கள்) கூறிவரும் கொள்கைகள் யாவையாயிருப்பினும் சரி, பொதுக்கூட்டங்கள் மூலமாயும் பத்திரிகை மூலமாகவும் அவர்கள் கூறும் செய்திகள் எவையாயிருப்பினும் சரி, காரியத்தில் மாத்திரம் ஒவ்வொரு வகுப்பினரும் தாங்கள் விட்டுக் கொடுக்காது வெகு ஜாக்கிரதையாக இருக்கின்றார்கள்”.

“ஒரு சிறுபான்மையோர் தாங்கள் ஏதோ மேற்குலத்தவர் என்பதை ஆதாரமாகக் கொண்டு எல்லா உரிமைகளையும் கவர்ந்து லக்ஷக்கணக்கான மற்றையோரைத் தாழ்மையாக நடத்தி அவர்களை விரோதங் கொள்வது முறையா? இது நியாயமா? தேசத்தின் பொதுநலத்திற்கு இது சாதகமாகுமா?”

“இந்தியர்களுக்கு நெட்டாலிலும் கேப் காலனியிலும் நடக்கும் கொடுமைகளை நாம் வெகுவாகக் கண்டிக்கின்றோம். ஆனால் நாமோ இவைகளிலும் மேம்பட்ட குற்றம் செய்கின்றோம் என்பதை மறக்கவோ, அல்லது அசட்டை செய்யவோ செய்கிறோம்”.

“இந்தியர்களுக்குச் சமத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், முழுதும் ஆங்கிலேயர் நிறைந்த ஒரு கமிஷன் அனுப்பப்பட்டிருப்பது இந்தியாவை அவமதித்ததாகுமென்றும், ஆகையால் அந்த கமிஷனை பகிஷ்காரம் செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் செய்யும் நம் தேசத்தாரில் சிலர் தங்கள் சகோதரர்களுக்கே சமத்துவம் இல்லையென்று மறுப்பது என்ன விந்தை? நமக்குள்ளிருக்கும் பல ஜனசமூக வித்தியாசங்களையும் வேற்றுமைகளையும் களைந்தெறிந்தாலல்லாமல் நமது தேசத்தின் முன்னேற்றத்தில் நாம் அவாவுறுவது நியாயமன்று, இதற்கிடையில் எவ்வித நன் முயற்சிகள் செய்யப்பட்டிருப்பினும் அவைகள் வீண் முயற்சிகளேயாகும்.”

இன்னோரென்ன பல அருமையான வாக்கியங்கள் திகழ்கின்றன. தேசீயவாதிகள் என்போர்களையும் சுயராஜ்யவாதிகள் என்போர்களையும் இவற்றிற்கு என்ன சமாதானம் சொல்லுகின்றீர்கள் என்று கேட்கின்றோம். இதிலிருந்து தேசீயம் என்பதும் கமிஷன் பஹிஷ்காரம் என்பதும் எவ்வளவு புரட்டும் சுயநலமும் கொண்டது என்பது யாவருக்கும் வெட்ட வெளிச்சமாயிருக்குமென்றே நினைக்கின்றோம். அன்றியும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் பல மிகவும் குறிப்பிடத் தக்கனவும் பாராட்டத் தக்கனவுமாகும். அவையாவன:-

கல்யாண காலங்களில் வீண் செலவுகளும் அனாவசியமான சடங்குகளும் இல்லாமல் ஒரே நாளில் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்றும், சடங்குகளிலும் கோவில்களிலும் நாடார் வகுப்பார்களையே கொண்டு முறையே சடங்கு, பூசை முதலியவைகள் நடத்திக் கொள்ள வேண்டு மென்றும் ஏழை மாணவர் ஸ்காலர்ஷிப்புக்காக ஒரு லக்ஷச ரூபாய் சேகரிக்க லாட்டரி சீட்டு போட வேண்டுமென்றும் நாடார் காலேஜ் என்பதாக ஒரு காலேஜ் ஏற்படுத்த வேண்டும் என்றும், தென் இந்திய ரெயில்வே தொழிலாளர் கஷ்டத்திற்கு அனுதாபப் படுவதாகவும், அவர் நடத்தும் சத்தியாக்கிரகத்தை ஆதரிப்பதாகவும், இன்னும் இதுபோன்ற பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

அன்றியும் இத்தீர்மானங்களை அமுலுக்கு கொண்டு வருவதற்கு தக்க கனவான்கள் இவ்வருஷ நிர்வாக சபைக்குத் தெரிந்தெடுக்கப் பட்டிருப்பதானது மற்றொரு விசேஷம் என்றே சொல்ல வேண்டும். அதாவது பொரையார் திரு.வி.கனகசபை நாடார் அவர்கள் அக்கிராசனராகவும், விருதுப்பட்டி திரு.செந்தில்குமார நாடார் அவர்கள் உபஅக்கிராசனராகவும், திருவாளர்கள் பட்டிவீரன்பட்டி சட்டசபை மெம்பர் ஊ. பு. அ. சௌந்தர பாண்டிய நாடார், கூ.சா.பி. பெரியதம்பி நாடார் ஆகிய கனவான்கள் காரிய தரிசிகளாகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். மற்றபடி நடைமுதல் வருஷத்திற்கு அச்சங்க வேலைகள் நாடார் சமூகத்திற்கு மாத்திரமல்லாமல் இதர சமூகத்திற்கும் பலனளிக்கத்தக்க அனேக முற்போக்கான வகையில் நடைபெறுமென்றே எதிர்பார்க்கின்றோம்.

தற்காலம் நமது தென்னாட்டில் உள்ள பல சமூகங்களில் நாடார் சமூகமே தக்க அளவுக்கு முற்போக்கடைந்தும் பொதுக்காரியங்களில் பகுத்தறிவை உபயோகித்து தக்கது செய்வதுமான காரியங்களில் தலையிட்டிருக்கிறார்கள் என்று சொல்லுவது மிகையாகாது. சாதாரணமாக நாட்டுக் கோட்டை நகரத்தார்களும் இது போலவே முற்போக்கடைந்து வருகின்றார்கள் என்றாலும், அவர்கள் பணம் சம்பாதிப்பதில் மாத்திரம் பகுத்தறிவை உபயோகித்து எப்படியாவது சம்பாதிக்கப் பழகியிருக்கின்றார்களே யல்லாமல் இப்படி சம்பாதிக்கிற பணத்தை சரியான வழியில் செலவு செய்யப் பழகவில்லையென்றே சொல்ல வேண்டும். அதாவது பாறைக் கற்களில் இறைத்து கோவில்களை கட்டுவதும், வாகனங்கள் செய்வதும், உற்சவம் செய்வதும், பார்ப்பனர்களுக்கு இறைப்பதும், வேத பாடசாலை சமஸ்கிருத பாடசாலை என்பது போன்ற பிச்சை எடுப்பதற்கு மாத்திரம் உபயோகப்படும்படியானதும், அதுவும் ஒரு கூட்டத்திற்கே பயன்படுவதும் எந்தக் கூட்டத்தாரிடம் இருந்து கொள்ளை கொள்ளையாய் இப்படி பணம் சம்பாதிக்கிறார்களோ அந்தக் கூட்டத்தார்களுக்கு ஒரு பைசாவும் உபயோகப்படாததும் தங்கள் சமூகத்திற்கும் உபயோகப் படாததுமான ஸ்தாபனங்களுக்குக் கொடுப்பதிலும் வீணாக இறைத்து வருகிறார்கள்.

ஆனால் நாடார் சமூகத்தார்களோ இவர்களைப்போல் அவ்வளவு கடுமுறைகளாலும் கொள்ளை கொள்ளையாயும் சம்பாதிக்கா விட்டாலும், சம்பாதித்த பணத்திலிருந்து பள்ளிக்கூடம் கட்டுவதும், அரைச் சம்பளத்திலும், கால் சம்பளத்திலும், சம்பளமில்லாமலும் பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லி கொடுப்பதும் அப்படியே எல்லா வகுப்பாருக்கும் உபயோகப் படும்படியாக எல்லா வகுப்பு பிள்ளைகளும் சம்பளமில்லாமல் படிக்க இடம் செய்திருப்பதும் ஆன காரியங்களில் செலவு செய்து வருகின்றார்கள். இதிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார் தாங்களும் பள்ளிக்கூடம் கட்டவில்லையா என்று கேட்கலாம். ஆனால் அது அவர்கள் வீணுக்கிறைக்கும் பணத்தில் நூற்றில் ஒரு பங்கு என்று கூட சொல்ல முடியாது. இந் நாடார் வகுப்பார்களுக்கு இவ்வளவு பலன் தரத்தக்க வேலை செய்ய இடம் ஏற்பட்டதற்குக் காரணம் எதுவெனில், நமது நாட்டின் நற்காலத்தின் பயனாக நாடார் வகுப்பார்கள் கல்லுச் “சாமி” இருக்கும் கோவில்களுக்குள் நுழைந்து மூடர்களாகாமல் உயிர்ச் “சாமிகள்” இருக்கும் கோயில்களில் நுழைந்து அவைகளுக்குத் தொண்டு செய்யும்படியான நிலைமை எந்தக் காரணத்தினாலோ அவர்களுக்கு ஏற்பட்டதே தான் முக்கியக் காரணம் என்போம்.

நிற்க, மேல்படி மகாநாட்டை ஒட்டி நாடார் வாலிப மகாநாடு ஒன்றும், தொழிலாளர் மகாநாடு ஒன்றும் நடைபெற்றது. வாலிப மகாநாட்டில் தலைமை வகித்த திருவாளர் திரு. கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் புராணத்தைப் பற்றிய விளம்பரங்களுக்கே அத்தலைமை ஸ்தானத்தை உபயோகித்துக் கொண்டார் என்று சொல்லுவது மிகையாகாது. எனவே அத்தலைமை உபந்யாசத்தைப் பற்றி மற்றொரு சமயம் ஆராய்வோம்.

நிற்க, தொண்டர் மகாநாட்டில் தலைமை வகித்த திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் தலைமை உபந்யாசம் அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரு புதிய உணர்ச்சியையும் புதிய உலகத்தையும் உண்டாக்கிற்று என்று சொல்லலாம். அது மிகுதியும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும், சுயமரியாதையை பெறுவதும், மக்களுக்குத் தொண்டு செய்வதுமே மனிதப் பிறவியின் பயன் என்பதுமான கொள்கைகளையே வற்புறுத்தியதாயிருந்தது. மற்றபடி அம்மகாநாடு நடந்த பெருமையும் ஒழுங்கும் பிரதிநிதிகள் வந்த கூட்டமும், பிரதிநிதிகளுக்கு செய்த வசதிகளும், உபசாரங்களும் இதுவரை நமது நாட்டில் நடந்த மகாநாடுகளில் சுமார் இரண்டொன்றைத் தவிர வேறு எங்கும் இதுபோல நடந்திருக்காது என்றே சொல்லுவோம். முடிவாக இம்மகாநாட்டின் பெருமைகளைப் பற்றி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்காமல் அடுத்த வருஷத்திற்குள்ளாகத் தீர்மானங்கள் அமுலுக்கு வரத்தக்க முன்னேற்றத்திற்கான வேலைகளை நடத்திக் காட்ட வேண்டுமாய் நிர்வாகக் கனவான்களைக் கேட்டுக் கொண்டு இத் தலையங்கத்தை முடிக்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.07.1928)

Pin It