periyar anna 500இம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திருவாளர் இராமன் செட்டியார் அவர்களின் வரவேற்புப் பிரசங்கமும் தலைவர் திருவாளர் அ. வெ. தியாகராஜா அவர்கள் தலைமை முகவுரையும் வரப் பெற்றோம். அவைகளில் தனவணிகர்களுக்கான பல அரியவுரைகள் மலிந்து கிடக்கின்றன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

“..................................... இளம் கைம்பெண்களின் நிலை அந்தோ! அவர்களை மணப்பதற்கு முற்படுபவர்கள் நமது குலத்து வீரராவார்கள். இப் பாழும் குலத்தில் ஏன் பிறந்தோம் என்று நினைந்து நினைந்து அவர்கள் உள்ளங் குழையாமற் செய்வது உங்கள் கடன்”.

“.........மற்றொரு பெரும் பிரச்சினை மனைவியை வெளிநாட்டிற்கு உடனழைத்துச் செல்லல். மனைவியுடன் கூட வாழல் வேண்டுமென வாலிபர்களாகிய நீங்கள் கொண்டுள்ள பேரவா பளிங்குக்கற் போலத் தெளிவாய் விளங்குகிறது. அவ்வுணர்ச்சி இயற்கை உணர்ச்சி; தெய்வீக உணர்ச்சி; அதைக் குலைப்பது கொடுமை கொடுமை............”

“.............கேவலம் பொருளே நமது குறிக்கோளன்று. பொருள் பெருக்குவது மனைவி, மக்கள், சுற்றத்தார் நாட்டார் இன்புறுவதற்குத் தானே. பொருள் பெருக்குவதிலேயே நம்மவர்கள் தங்கள் காலமெல்லாம் போக்கின் மனைவி மக்களுடன் இல்லறம் நடத்தி இன்புறுவது எக்காலம்?”

“.............தீண்டாமை இந்து மதத்தைத் தாழ்மைப்படுத்துவது. அதைச் சீக்கிரம் நாட்டை விட்டுத் துரத்தல் வேண்டும். இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கோவில்களிலும் பொதுவிடங்களிலும் சம உரிமையிருத்தல் வேண்டும். பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது.”

“............தேடிச் சோறு நிதந் தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம் வாடித்துன்பமிக வுழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரைகூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும், பல வீண் மனிதர்களைப் போல் நீங்கள் வாழவிரும்புகின்றீர்களா? நீங்கள் உலகத்தில் வந்து போனதற்கு உங்கள் நாட்டுச் சரித்திரத்தில் சில முத்திரைகள் வைக்க விரும்புகிறீர்களா?”

இன்னும் கல்வி தொழில் முதலியவைகளை ஆதரித்தும், சுபாசுப காலங்களில் செய்யும் ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தும் பல அரிய மொழிகள் மிளிர்கின்றன.

இவைகளைத் தனவணிகரேயன்றி நமது நாட்டார் அனைவருமே ஏற்று அதன்படி யொழுக வேண்டுமென்று நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 19.02.1928)

Pin It