சென்னை சட்டசபைக்கு ஜமீன்தாரர்களின் நன்மையை உத்தேசித்து சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஸ்தானங்களுக்கு இதுவரையில் அது எந்த உத்தேசத்தைக் கொண்டு ஒதுக்கி வைக்கப்பட்டனவோ அது போலவே நபர்களும் தெரிந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

periyar justice party leadersஏறக்குறைய ஜமீன்தார்கள் என்கிற பாகுபாடு பெரும்பாலும் பழைய காலத்தில் அரசர்களாகவோ சிற்றரசர்களாகவோ பெரிய பாளையப்பட்டுகளாகவோ அரசாங்கப் பொறுப்பை வகித்தவர்களாகவோ மிக்க பெருமையோடு வாழ்ந்த குடும்பங்கள் என்பதாகவோ இருந்த சமூகத்தை ஆங்கில அரசாக்ஷி ஏற்பட்ட பிறகும் அவர்களை அந்நிலைமையிலேயோ அல்லது அந்த சமூகத்தின் ஞாபகக் குறிப்பாவது இருக்கும்படியாகவோ கருதி நமது அரசாங்கத்தார் அவர்களை கௌரவிக்கும் முகத்தான் அவர்களுக்கென்று பல சட்ட திட்டங்களும் சலுகைகளும் கொடுத்து கூடியவரை அவைகள் மறைந்து போவதற்கில்லாமலும் அந்தந்த குடும்பங்களுக்கு ஒரு தனி கௌரவம் இருக்கும்படியாகவும் செய்து வருகிறார்கள்.

இதன் பலனாகவே நமது சென்னை சட்டசபைக்கும் இந்த ஜமீன்தாரர்களின் நன்மையையும் அவர்களது கௌரவத்தையும் தனியே உத்தேசித்து அவர்களுக்கென்று சில ஸ்தானங்கள் ஒதுக்கிவைத்து அவைகளுக்கு ஓட்டர்களையும் அந்தக் கூட்டத்தார்களுக்குள்ளாகவே ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதுவரையிலும் ஏறக்குறைய அந்த ஸ்தானங்களுக்கு அந்த சமூகத்தாரிலேயே தெரிந்தெடுக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். இந்த ஜமீன்தார் சமூகம் ஆதியில் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களாகவே ஏற்பட்டுப்போய் விட்டதாலும், இவர்களுக்கு நாட்டில் பெருத்த செல்வாக்கு இருப்பதோடு இதுசமயம் நாட்டின் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத சமூகத்திற்குத் தலைவர்களாகவும் அக்கூட்டத்தாரிலேயே பலர் ஏற்பட்டு விட்டதாலும், அத்தலைவர்களும் தாங்கள் வெறும் போகபோக்கியமே ஜமீன்தார் தத்துவம் என்று எண்ணாமல் தங்கள் சமூகத்தாரும் ஆதியில் தங்கள் ஆளுகையில் இருந்தவர்களுமான பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு உழைக்கவேண்டும் என்கிற எண்ணங் கொண்டவர்களுமாகி தைரியமாய் உழைக்க அவர்கள் இப்போது வெளியில் வந்து விட்டதாலும் நமது பார்ப்பன சகோதரர்களுக்கு இது பொறுக்காமல் இதுவரை பல ஜமீன்களுக்குத் தாங்கள் மந்திரிகளாகவோ, ஜமீன்தாரர்களுக்கு தாங்கள் காரியதரிசிகளாகவோ இருந்து அவர்களில் சிலரை கூடா ஒழுக்கங்களில் சம்பந்தப்படுத்தியும் விவகாரங்களில் இழுத்துவிட்டும் அவர்களை கடன்காரர்களாக்கவும் அதின் மூலம் ஜமீன்களை இழக்கவும் செய்து, அவற்றைத் தாங்களே விலைக்கு வாங்கி ஜமீன்தார்களுமாகி இன்னமும் கொஞ்ச நஞ்சம் மீதி இருப்பவைகளையும் அடியுடன் ஒழித்து அந்த மரியாதை, சொத்து சுகங்களையும் தாங்கள் கைப்பற்றி இருப்பதும் போக ஜமீன்தாரர்களுக்கு தாங்களே பிரதிநிதியுமாக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு இப்போது இதிலும் சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அஃதென்னவென்றால் சென்னை, செங்கல்பட்டு, நெல்லூர் முதலிய ஜில்லாக்களின் சார்பாய் ஜமீன்தார் தொகுதிக்கு இதுவரை தெரிந்தெடுக்கப்பட்டு வந்த பனகால் ராஜா அவர்கள் இதுசமயம் தென்னாட்டு மக்களின் நன்மைக்கென ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனத்திற்குத் தலைவராயிருப்பதாலும், அவருடைய தலைமை ஸ்தானத்தை பார்ப்பனரல்லாத மக்களின் இரண் டொரு பார்ப்பன சிஷ்யர்கள் தவிர மற்றெல்லா பார்ப்பனரல்லாதாராலும் ஒப்புக்கொள்ளப் படுவதினாலும், இப்படிப்பட்ட தலைவர் மறுபடியும் தெரிந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்குப் போவாரானால் அங்கு பார்ப்பன சூழ்ச்சிகள் மிகுதியும் பாதிக்கப்பட்டு விடும் என்றும், பார்ப்பனரல்லாதார் சமூகம் சுயமரியாதையும் முன்னேற்றத்தையுமடைந்து விடும் என்றும், ஜமீன் முழுதையும் பார்ப்பன ஜமீனாக்க முடியாதென்றும் கருதி ஆத்திரப்பட்டு எப்படியாவது அவரை இந்தத் தடவை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்க விடாமல் செய்வதற்காக, அவருக்கு விரோதமாய் ஒரு பார்ப்பனர் நிற்பதற்கு தந்திரத்துடனும் சூழ்ச்சிகளுடனும் வெகு மும்மரமாய் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதென்னவென்றால் தத்துவத்தில் எவ்விதத்திலும் ஜமீன்தார்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு அருகதையில்லாத ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்கிற ஒரு பார்ப்பன வக்கீல் பனகால் ராஜாவை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்படாமல் செய்வதற்காக அந்த ஸ்தானத்திற்குப் போட்டி போடப் போகிறார். இதை உத்தேசித்தே 4, 5 மாதங்களுக்கு முன்பாக ´ 1க்கு சுமார் 2 - 3 ஆயிரம் ரூபாய் வரும்படி வரத்தக்க ஒரு சிறிய மிட்டாவை சொல்பதுகைக்கு விலைக்கு வாங்கி, ஜமீன்தார் கூட்டத்தில் தானும் ஒரு ஓட்டராகப் பதிவு செய்து கொண்டும் ராஜாவுக்கு எதிராக போட்டி போடத் தீர்மானித்துக் கொண்டும் வேலை செய்து வருகிறார்.

இந்த தொகுதிக்கு மொத்தம் ஓட்டுகள் சுமார் எண்பத்தி ஐந்தே தான். இவற்றில் பார்ப்பன ஓட்டர்களின் சங்கியை 20 அல்லது 22 இருக்கும். இந்த இருபது பேர் பார்ப்பனர்களாய் உள்ள கூட்டத்தார் இந்த ஸ்தானத்திற்கு நின்று 65 பேர் பார்ப்பனரல்லாதாராயிருக்கும் ஜமீன்தார் கூட்டத்தாரை அவர்கள் மூளையில்லாதவர்கள் என்றும், தன் வக்கீல் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டவர்களென்றும் எண்ணி சுலபமாய் ஏமாற்றி ஸ்தானம்பெற்று பார்ப்பனரல்லாதாரை ஒழித்துவிடலாம் என்கிற தைரியத்தின் பேரில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஸ்ரீமான்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், டி.வி. வெங்கிட்டராம சாஸ்திரியார், சி.பி.இராமசாமி அய்யர் போன்ற பிரபல பார்ப்பனர்கள் எல்லாம் உள் உளவாய் இருந்து கொண்டு வேலைசெய்தும் வருகிறார்கள். தென்னாட்டு ஜமீன்தாரர்கள் தொகுதிக்கு ஒரு பார்ப்பனர்-அதிலும் வெகு சாதாரண பஞ்சாங்கப் பார்ப்பன குடும்பத்தைச் சேர்ந்தவர் - ஜமீன்தாரர்கள் கெடுவதினாலேயே பிழைக்க வேண்டியவராயுள்ள ஒரு வக்கீல் - ஜமீன்தாரர்கள் எல்லோரும் முட்டாள்கள் புத்தியில்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் - ஜமீன்தார்கள் ஒற்றுமையாகவோ மேன்மையாகவோ விவகார வில்லங்கங்களுக்கு மார்க்கமில்லாமலோ வாழ்வதாயிருந்தால் தங்களுக்கு வரும்படியில்லாமல் பட்டினி கிடக்க வேண்டியவரான வக்கீல் கூட்டத்தைச் சேர்ந்தவர் - ஜமீன்களும் ஜமீன் மைனர்களும் தப்பு வழியிலும், கூடா ஒழுக்கத்திலும் நடந்தால்தான் தங்கள் சமூகத்தார் பெரும்பாலும் காலட்ஷேபம் செய்யலாம் என்கிற நிலையில் உள்ள வகுப்பைச் சேர்ந்தவர் - அன்றியும் எவ்வளவு பெரிய கல்வி, புத்தி, ஒழுக்கம், பரம்பரை கண்ணியம் உள்ள ஜமீன்தாரரானாலும், பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தால் ‘சூத்திரன்’ ‘வேசி மகன்’ என்றும், ஒரு அயோக்கியனாயிருந்தாலும் மற்றும் எவ்வளவு கூடா ஒழுக்கக் காரனாயிருந்தாலும்கூட ‘பிராமணன்’, ‘உயர்ந்தவன்’ என்று சொல்லிக்கொள்ளுபவராகவும் இருக்கிற ஒருவர் நம்நாட்டுப் பழம் பெருங்குடி மக்களான ஜமீன்தார் கூட்டத்திற்கு பிரதிநிதியாக முன் வந்திருக்கிறார் என்றால் இப்பார்ப்பனர்களின் தைரியத்தையும் துணிவையும் நாம் என்னவென்று சொல்லுவது? இது கேவலம் தான் வக்கீலாயிருப்பதாலும் தன்னுடைய வக்கீல் தொழில் மாய்கையில் ஜமீன் குடும்பங்கள் தனக்கு அடிமையாய் கட்டுப்பட்டு கிடக்கிறது என்கிற அகம்பாவத்தாலும் இவ்வளவு முக்கியமான ஸ்தானத்தின் யோக்கியதையை அழிக்கத் துணிந்துவிட்டாரென்றே சொல்ல வேண்டும்.

வக்கீல்கள் என்றால் ஜமீன்தாரர்கள் பயப்படும் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது என்பதையும், வக்கீல் கூட்டத்திற்கு யோக்கியதை போய்விட்டது என்பதையும், தாசிகள் போல் வக்கீல்களும் தரகர்களை வைத்தோ வாசற்படியில் காத்துக் கொண்டிருந்தோ கக்ஷிக்காரர்களைத் தேடிப் பிடிக்க வேண்டிய நிலைமை வந்து விட்டதென்பதையும் இவர் மறந்து விட்டார் போலும். இவர் எதற்காக ஜமீன்தார் தொகுதிக்கு நிற்கிறார்? ஜமீன்தார் நன்மையில் இவருக்கு என்ன அனுதாபம் உண்டு? ஜமீன் குடும்பத்தின் பெருமையையும் கட்டுப்பாட்டையும் காப்பாற்ற இவருக்கு என்ன யோக்கியதை உண்டு? அந்தக் குடும்பங்கள் ஒழியாமலும் அந்தச் சொத்துக்கள் காப்பாற்றப்படாமலிருப்பதைக் காப்பாற்றவும் இவருக்கு எந்த விதத்தில் அக்கறை உண்டு. பழைய ஜமீன் குடும்பங்களின் தர்மம், தானம், பரோபகாரம் முதலியவைகள் இவருக்குண்டா? சுயமரியாதைத் தத்துவத்தைக் காப்பாற்ற முடியுமா? பார்ப்பனர்களுக்கு எந்தப் பதவி கிடைத்தாலும் தங்கள் இயற்கை சுபாவம் எப்படி மாறும்?

உதாரணமாக, புதிய சீர்திருத்தத்தின்படி, ஜமீன்தார் தொகுதிக்கென்று தனியாக ஸ்தானங்கள் பிரிந்த காலத்திலேயே ஜமீன்தாரர்கள் மற்ற சாதாரண ஓட்டர்களைப்போல் போலிங் ஸ்தானத்திற்கு வந்து வோட்டு போடும்படியாய் இல்லாமல் ஓட்டுச் செய்யும் கடுதாசிகளை ஜமீன்தாரர்களுக்கே நேரில் போய்ச் சேரும்படி தபாலில் அனுப்பி அவர்கள் ஒரு சமயம் அயலூரிலிருந்தாலும் ஓட்டு செய்து திரும்பவும் தபாலிலேயே அனுப்பிவிடும்படியான சௌகரியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருப்பதை நமது ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் “சுக்கிலாம் பரதாம்” என்கிற போதே கண்ணைப் பார்த்து குட்டிக் கொள்வதுபோல், இந்த சுதந்திரம் ஜமீன்தாரர்களுக்கு வேண்டியதில்லை. ஜமீன்தாரர்கள் போலிங் ஆபிசுக்கு போய் அங்கிருந்துதான் தன்னுடைய ஓட்டுகளைக் கொடுக்க வேண்டும் என்கிற ஏற்பாடு செய்வதற்காக வேண்டிய சூழ்ச்சி செய்து, இதை ஜமீன்தாரர்களே கேட்டுக் கொள்வது போல் விண்ணப்பம் எழுதி, தனக்குக் கட்டுப்பட்ட ஜமீன்தாரர்கள் சிலரிடம் கையெழுத்து வாங்கி சர்க்காருக்கு அனுப்பி விட்டாராம். இந்த அய்யர் என்கிற வார்த்தையை நம்பி ஏமாந்த ஜமீன்தாரர்களில் ஜயபூர் மகாராஜாவும் ஒருவர் என அறிகிறோம். பிறகு இரண்டொரு ஜமீன்தாரர்களுக்கு இந்த விஷயம் வெளியானதின் பேரில் பழையபடியே இருக்கட்டும் என்று சர்க்காரைக் கேட்டுக்கொண்டதினால் ஜமீன்தாரர்கள் கௌரவம் ஸ்ரீமான் அய்யர் என்கிற ஜமீன்தார் சூழ்ச்சியிலிருந்து தப்புவிக்கப்பட்டதாம். தபால் மூலம் ஓட்டு அனுப்பும் சுதந்திரம் சாதாரண ஆசாமிகளாகிய யூனிவர்சிட்டி பட்டம் பெற்றவர்களுக்குக் கூட இருக்கிறது. அதாவது ஒரு மனிதன் பி.எ. பாஸ் செய்து 35 ரூபாயுக்குத் தன் மனச்சாட்சியை விற்றுக் கொண்டிருக்கிறவனாயிருந்தாலும், அவனுக்கு ஓட்டுக்காகிதம் தபாலில் வரும்படி சட்டம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? இந்த கூட்டத்தார் முக்காலே மூன்று வீசமும் பார்ப்பனர்களாயிருப்பதால் தங்களுக்கு இந்த கௌரவம் வேண்டும். ஜமீன்தாரர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாராயிருக்கிறபடியால் அவர் ஓட்டு எடுக்குமிடத்திற்குப் போய் ஒரு மாதம் 35 ரூபாய் பார்ப்பனன் முன்னால் கைகட்டிக் கொண்டு ஓட்டுப்போட வேண்டும் போலும். ஓட்டுப் போடுகிற இடத்திற்கு வந்தால் அங்கு உள்ள பார்ப்பனரைக் கொண்டு தந்திரம் செய்து தனக்கு அனுகூலமாய் ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்கிற ஆசையின் பேரில் ஜமீன்தாரர்களின் கௌரவமே குறைந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து இந்த சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் இழக்கத் துணிந்தார் என்றால் இதுபோலவே மற்ற காரியங்களும் தங்கள் சுயநலத்திற்காக இன்னும் என்ன என்ன உரிமைகளை இழக்கத் துணியமாட்டார்; மற்றவர்களையும் ஏமாற்ற மாட்டார் என்பதை ஜமீன்தாரர்கள்தான் உணர வேண்டும்.

ஆதலால் வரப்போகும் தேர்தலில் இந்த தொகுதியைச் சேர்ந்த ஜமீன்தாரர்கள் எப்பாடுபட்டாவது ஜமீன்தார் தொகுதி ஸ்தானத்திற்கு உண்மையாகவும் பாரம்பரியமாகவும் சுயமரியாதையிலும் ஜமீன்தாரர்களின் உரிமைகளில் கவலையுள்ளவர்களாகவும் பார்த்தே தெரிந்தெடுத்தனுப்பி, தங்கள் சமூகத்தின் யோக்கியதையைக் காப்பாற்றி முற்போக்கடைய பாடுபட வேண்டுமேயல்லாமல் “மகன் செத்தாலும் சம்மதம், மருமகள் தாலி அறுபட்டால் போதும்” என்கிற கொள்கைப்படி துவேஷத்தை முன்னிட்டோ பொறாமையை முன்னிட்டோ சொந்த அபிப்பிராயபேதத்தை முன்னிட்டோ தங்கள் கடமைகளையும் தர்மத்தையும் அலக்ஷியம் செய்து பார்ப்பனரையோ வக்கீல்களையோ தெரிந்தெடுக்க நினைத்து தங்கள் சமூகத்தையும் பாரம்பரியமாய் தங்களுக்கிருந்து வரும் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் இழந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறோம். தற்காலம் நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை ஒழிப்பதற்கு நமது பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி அறியாதார் யாரும் இல்லை. இப்படியிருக்க நமது ஜமீன்தார் சமூகத்திற்கு இந்த தகவல் எட்டி இருக்காது என்று நினைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் முற்போக்குக்கு இடையூறு செய்ய நமது பார்ப்பனர்கள் ஜமீன்தார் சமூகத்தைப் பிடிப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம்.

நமது நாட்டு பண்டைப் பெருமையையும் பண்டை இலக்கியங்களையும் காட்டுவதற்கு அந்த ஒரு (ஜமீன்தார்) சமூகம்தான் இருக்கிறது. அதிலும் கையை வைத்து அதையும் ஒழித்துவிட்டால் பிறகு வெகு சுலபமாய் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது பார்ப்பனருக்கு அனுகூலமாய் போய்விடும். ஆதலால்தான் இப்போது அதில் கையை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரையில் அவர்கள் செய்து வந்த சூழ்ச்சிகளின் பலனாக, நமக்கு ஆச்சாரியார் என்னும் மதத்தலைவர்கள் பார்ப்பனர், அரசியல் தலைவர் பார்ப்பனர், நியாயாதிபதி பார்ப்பனர், நியாயவாதி பார்ப்பனர், உபதேசகர்த்தா பார்ப்பனர், உபாத்தியாயர் பார்ப்பனர், உத்தியோகஸ்தர் பார்ப்பனர், வைத்தியர் பார்ப்பனர், வைதீகச் சடங்கு செய்யும் வாத்தியார் பார்ப்பனர், நம்மையும் நம் பெற்றோர்களையும் மோக்ஷத்திற்கனுப்புபவர் பார்ப்பனர், சங்கீத வித்துவான் பார்ப்பனர், நாட்டிய வித்துவான் பார்ப்பனர், தமிழ் வித்துவான் பார்ப்பனர், தமிழ்ச் சங்கத் தலைவர் பார்ப்பனர், சோறு விற்கும் ஓட்டல்காரர் பார்ப்பனர், சிற்றுண்டி விற்பவர் பார்ப்பனர், தூது செல்வோரும் பார்ப்பனராகவே இருந்து அரசியல் மதவியல் சமூகவியல் கலைகளின் இயல் நித்திய வாழ்க்கையின் இயல்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஆதிக்கமடைந்து விட்டார்கள். செல்வத்திலும் ஆதிக்கம் பெற்று வருகிறார்கள். ஆனால் நாம் முன் சொன்னதுபோல் நமது பழங்கால பெருமையைக் காட்டும் ஜமீன்தார்கள், மகாராஜாக்கள் ஆகிய இவைகளில் இவர்களின் ஆதிக்கம் இதுவரை வளராமல் இருந்து வந்தது. இப்பொழுது தான் மெள்ள மெள்ள அவைகளிலும் கையை வைக்கத் துணிகிறார்கள். ஜமீன்தார் பிரபுக்களே! இன்று இப்பார்ப்பனர் பசப்பு வார்த்தையைக் கேட்டு ஏமாந்து போய்விட்டால் நாளைய தினம் என்ன பாடுபட்டாலும் வராது. ஆதலால் இவ்விஷயத்தில் ஒவ்வொரு ஜமீன்தாரர்களும் தங்கள் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொள்வார்களாக.

(குடி அரசு - தலையங்கம் - 29.08.1926)