ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் செங்கற்பட்டு ஜில்லாவில் பிராமணர்களுக்காக பிரசாரம் செய்து வருகையில் பல்லாவரத்தில் ஒரு பிராமணர் அக்கிராசனத்தின் கீழ் பிராமணர்களின் நற்சாக்ஷிப்பத்திரமான வரவேற்புப் பத்திரம் பெற்றுக் கொண்டு தனது திருவாக்கால் “மேல் நாட்டாருக்கு வயது 42, கீழ் நாட்டாருக்கு வயது 22; நமது நாட்டில் பஞ்சம் அதிகம்; ஆதலால் ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள். அவர் அடாத செயல்கள் செய்வதால்தான் அவருக்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறேன். ஸ்ரீமான்கள் எம்.கே. ஆச்சாரியார் வகையறாக்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்று பேசினாராம்.

இவருக்கு ஆத்மா இருக்கிறதா என்பதே நமது சந்தேகம். ஐயோ! நமது முதலியாரின் புத்தி இப்படியும் சபலமாய்ப் போகுமென்று நாம் எந்தக் காலத்திலும் எதிர்பார்த்ததேயில்லை. ஸ்ரீமான்கள் எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, எ.ரெங்கசாமி ஐயங்கார் வகையறாக்களைவிட - இவர்களது நாணயத்தைவிட - ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்? நமது முதலியாருக்கு என்ன கெடுதி செய்தார்; என்ன அடாத செய்கை செய்து விட்டார்? அல்லது அவர்கள் “கக்ஷிக்கும்” இவர்கள் “கக்ஷிக்கும்” வித்தியாசம்தான் என்ன? ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் கோயமுத்தூரில் பேசிக் கொண்டிருக்கும்போது தனது முழு வேலையும் செங்கல்பட்டு ஜில்லாவிலேயே இருப்பதாகவும், தன்னுடைய “கணங்களை” யெல்லாம் அங்கேயே அனுப்பி எப்படியாவது ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியாரை ஒழித்துவிடப் போவதாயும் உறுதி சொன்னாராம். அவரது திருவாக்கைப் பரிபாலிக்க நமது முதலியார் மர உரி தரித்துக்கொண்டு செங்கல்பட்டு ஜில்லாவுக்குப் புறப்பட்டு விட்டார் போலும். அல்லது பிராமண அக்கிராசனமும் பிராமண “நற்சாக்ஷிப் பத்திரமும்” நமது முதலியாரை மயக்கி விட்டது போலும்.

இந்தப் பிராமணர்களே நமது முதலியாருக்கு வரவேற்புப் படித்துக் கொடுத்தாலும் “உண்மை அந்தணர்” என்று வெளியில் சொன்னாலும் இவரைப் பற்றி இந்த பிராமணர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களென்பதை ஒரு சிறிதாவது ஞாபகப்படுத்திப் பார்த்தாரா? இப்படி ஒரு ஆசாமியை தங்கள் வசப்படுத்திக் கொண்டு, அவர் வகுப்பார் மீதே வசைமொழிப் புராணம் பாடும்படி செய்து நமது காரியத்தை சாதித்துக் கொள்ளுகிறோம்” என்றுதான் நினைப்பார்கள். அவர்கள் வேலை முடிந்த பிறகு திரு.முதலியாரை கண்ணெடுத்துப் பார்ப்பார்களா? சுயராஜ்யக் கக்ஷியின் அயோக்கியத் தனத்தை ஒரு நாள் வெளியில் எடுத்துச் சொன்னதற்குத்தானே “சாது” முதலியார், “உண்மை அந்தண”முதலியார், “மாரீச” முதலியாராக மாற்றப்பட்டார்?

“மேல் நாட்டாருக்கு வயது 42 - கீழ் நாட்டாருக்கு வயது 22 - ஆத லால் எம்.கே. ஆச்சாரியாருக்கு ஓட்டுக் கொடுங்கள், எ. இராமசாமி முதலியாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள்” என்று சொன்னால் என்ன அருத்தம்? எம்.கே. ஆச்சாரியார் பிரம்மாவா? எல்லோர் தலையிலும் நூறு, நூறு வயது என்று எழுதி விடுவாரா? அல்லது எ. இராமசாமி முதலியார் எமனா? 22 வயதிலேயே எல்லோரையும் கொண்டுபோய் விடுகிறாரா? ஐயோ! பாவம்! திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின் கல்வியும் - பாண்டித்தியமும் - பிராமணரல்லாதார் பிறவியும் செங்கல்பட்டு ஜில்லா பாமர ஜனங்களிடம் போய் “மேல் நாட்டாருக்கு 42- வயது, கீழ் நாட்டாருக்கு 22 - வயது. ஆதலால் இராமசாமி முதலியாருக்கு ஓட்டுப் போடாதீர்கள்; எம்.கே. ஆச்சாரியாருக்குப் போடுங்கள்” என்று சொல்லுவதற்குத்தானா பிரயோஜனப்பட வேண்டும். இவை யனைத்தையும் பாமர ஜனங்கள் அறியும் நாள் எதுவோ அதுதான் விடுதலைநாள். அதுவரை ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் போன்றோர்கள் நாள்தான்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.05.1926)

Pin It