கோயமுத்தூர் ஜில்லா போர்டின் கூட்டமொன்று பிரசிடெண்டு ராவ் சாஹிப் சி. எஸ்.இரத்தினசபாபதி முதலியார் அக்கிராசனத்தின் கீழ் கூடிற்று. இக்கூட்டத்திற்கு 40 அங்கத்தினர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில், ஸ்ரீமான் முதலியாரது நியமனம் பெற்ற பிரசிடெண்டு உத்தியோக காலத்தில் இந்தக் கூட்டம் கடைசி கூட்டமாகும். ஆதலால் ஸ்ரீமான் முதலியாருக்கு ஜில்லா போர்டு மெம்பர்களின் நன்றியறிதலைக் காட்டவும் வந்தனங்கூறவும் “சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர்கள்” உள்பட ஏறக்குறைய எல்லா மெம்பர்களுமே வந்திருந்தார்கள். அப்பொழுது இம்மாதம் 30- ²கோயமுத்தூருக்கு விஜயம் செய்யப்போகும் கவர்னர் துரை அவர்களுக்கு ஜில்லா போர்டின் சார்பாய் ஒரு உபசாரப்பத்திரம் படித்துக்கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்துவிட்டது. அக்கூட்டத்தில் ஒத்துழையா நாற்றம் வீசும் சுயராஜ்யக்கட்சி மெம்பர்களான ஸ்ரீமான் ராவ்பஹதூர் டி.எ. இராமலிங்கஞ் செட்டியாரும் ஜில்லா போர்டுக்கு சர்க்காரால் நியமனம் பெற்ற மெம்பரான ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரும் மெம்பர்களாய் ஆஜராகியிருந்தார்கள்.

உபசாரப்பத்திரத்தோடு போகாமல் உபசாரப்பத்திரத்திற்கு 350 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று அக்கிராசனர் ஒரு தீர்மானங்கொண்டு வந்தார். “ஒத்துழையாமை நாற்றங்” கொண்ட ஸ்ரீமான்கள் செட்டியார் நிலைமையும் ஐயங்கார் நிலைமையும் கஷ்டமாய்ப் போய்விட்டது. தங்களது ஒத்துழையாமை நாற்றத்தை வெளியில் காட்டி அத்தீர்மானத்தை எதிர்த்தாலோ ஸ்ரீமான் செட்டியாரின் வயிற்றுக்குள் இருக்கும் ராவ் பஹதூர் பட்டத்தையும், ஐயங்கார் வயிற்றுக்குள்ளிருக்கும் ஜில்லா போர்டு நியமனத்தையும் வெளியில் கக்க வேண்டியதாயிருக்கிறது. சர்க்காரிடம் பெற்றிருக்கும் தயவுக்காக அத்தீர்மானத்தை ஆதரித்தாலோ தங்கள் மேல் வீசுவதாகச் சொல்லும் ஒத்துழையாமை நாற்றம் மறைந்து போகும்; பிறகு சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் ஓட்டுக் கிடைக்காது என்கிற பயம். என் செய்வார்கள் பாவம்! திருடனைத் தேள் கொட்டியது போல் செட்டியார் மௌனமாயிருந்தார். ஐயங்காரோ வாதத்தில் கலந்து கொண்டு 350 ரூபாய்க்குமேல் செலவு செய்யக்கூடாது என்று உரத்துப் பேசி “ஒத்துழையாமை”யைக் காட்டிக் கொண்டார்.

தீர்மானமே 350 ரூபாய்க்கு மாத்திரம் இருக்கும்போது ஐயங்கார் 350 ரூபாய்க்கு மேல் போகக்கூடாது என்றால் என்ன அருத்தமோ தெரியவில்லை. ஒரு வீட்டில் ஒருவன் திருடி விட்டான். அவனைப் பிடித்து மேஜஸ்ட்ரேட் கோர்ட்டாரால் விசாரிக்கப்பட்டு மேஜஸ்ட்ரேட் 15 அடி அடிக்கும்படி தீர்ப்புச் சொன்னார். தீர்ப்புச் சொல்லும்போது கோர்ட்டில் கூட்டமிருந்ததால் அக்கூட்டத்தார் தனது திருட்டை மறந்து சாமர்த்தியத்தை அறியும்படி, திருடினவன் மேஜஸ்ட்ரேட்டைப் பார்த்து “15 அடிதான் அடிக்க வேண்டும்; அதற்கு மேல் ஒரு அடி விழுந்துதோ - அப்புறம் தெரியும் நம்ம சங்கதி” என்று வீர மொழி பேசினானாம். அதைப்போல் நமது ஐயங்கார் 350 ரூபாய்க்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று கண்டித்துப் பேசி அங்கு வந்திருந்த மெம்பர்களுக்கு தனது “ஒத்துழையாமை நாற்றத்தைக்” காட்டி விட்டார். பிறகு உபசாரப்பத்திரம் தயாரிக்க ஏற்படுத்திய கமிட்டியில் ஐயங்கார், செட்டியார் முதலியோரது பெயர் சேர்க்கப்பட்டது. ஸ்ரீமான் ஐயங்கார் ஜாடை காட்டி தமது பெயரை விலக்கி விடும்படி கேட்டுக்கொண்டாராம். செட்டியார் அதைக்கூட சொல்லவில்லையாம். கவர்னரை சந்திக்கும் சந்தர்ப்பத்தை இழக்கச் செட்டியாருக்கு மனமில்லை; ஐயங்காருக்கோ சம்மனில்லாமல் ஆஜராகிக் கொள்ளலாம் என்கிற தைரியம். ஓட்டர்களின் பையித்தியக்காரத்தனமானது இவர்களை இவ்வளவு புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ளச்செய்கிறது. என்ன செய்வது! இந்தியாவின் சுயராஜ்யம் இப்படிப்பட்ட தேசீய வீரர்கள் (?) கையில் சிக்கிக் கிடக் கிறது. நிற்க,

இது நடந்த பிறகு பிரசிடெண்டு ஸ்ரீமான் சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியாரின் பிரசிடெண்டு வேலையைப் பாராட்டி அடியில் கண்ட தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது. அதாவது, “இந்த போர்டின் பிரசிடெண்டாக ராவ் சாகிப் சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் 3 வருஷ காலமாய் மிகவும் போற்றும் படியாய் இந்த போர்டின் வேலைகளைச் சரிவர நடத்தினதற்காகவும் இந்த ஜில்லாவில் ஸ்தல ஸ்தாபன சுய ஆட்சி என்ற சுயராஜ்ய பரிபாலன விஷயத்தில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் அன்னியோன்னியமாய் ஒத்துழைத்து அபிவிருத்தியைக் காட்டியதற்காகவும், இந்த போர்டார் புகழ்வதுடன் தங்களது உண்மையான வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறார்கள்” என்கிற தீர்மானத்தை ஊத்துக்குளி ஜமீன்தார் குமாரராஜா அவர்கள் பிரேரேபிக்க ஏகமனதாய் நிறைவேறிற்று. ஒத்துழையாதாரோ, சுயராஜ்யக்கட்சிக்காரரோ தவிர வேறு யாராவது ஸ்தலஸ்தாபனங்களைக் கைப்பற்றி நிருவாகம் நடத்தினால் ஸ்தலஸ்தாபனங்களின் மீது இடிவிழுந்துவிடும் என்று சொல்லும் “காங்கிரஸ் விஸ்வாசிகள்” ஒத்துழையாதாரும் சுயராஜ்யக் கட்சியாரும் அல்லாத ஸ்ரீமான் ராவ் சாகிப் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் நிர் வாகம் நடத்தியும் ஸ்தல ஸ்தாபனங்களில் இடி விழுந்து விடாமல் அபி விருத்தி பெற்றிருக்கிறதற்கு என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.05.1926)

Pin It