ஓ சர்க்காரே நீ கனவு கண்டிருக்கலாம், ஒரு தடையுத்தரவு பிறப்பித்து விட்டால் இவர்கள் ஆத்திரப்பட்டு ஏதாவது செய்வார்கள். அதையே சாக்காக வைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தையே அடியோடு கலைத்துவிடலாம் என்று. நாங்களென்ன மடையர்களா? நம்மாளை நம்மவனையே கொண்டு அடிக்கச் செய்ய? தடையுத்தரவு பிறப்பிக்குமுன் உனக்கு அறிவிருந்தால் சிந்திக்க வேண்டாமா? இந்த இயக்கம் எத்தனைக் காலமாக இருந்து வருகிறது? இதுவரை எந்தெந்த இடத்திலாவது சர்க்காருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்கிறதா என்று?

நமக்கு வேண்டுமானால் சர்க்கார் இதுவரை எவ்வளவோ தொல்லை கொடுத்திருக்கிறது. மதுரையில் நடந்த கருஞ்சட்டை மாநாட்டின்போது சில காலிகள் எங்கள் பெரிய பந்தலுக்கு பட்டப்பகல் பன்னிரண்டரை மணிக்கு தீ வைக்கப்பட்டபோது ஜில்லா சூப்ரிண்டென்டென்ட், முதல் அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் அனைவரும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஒழுங்காக தீ மூட்டப்படுகிறதா என்று. கொஞ்சம் தடுத்திருந்தால்கூட அன்று ஒரு 50 ஆயிரம் ரூபாய் பொருள் சேதம் ஏற்பட்டிருக்காது. ஏனென்று ஆட்சியாளர்கள் கேட்டதுண்டா? ஏதோ விசாரணை ஒன்று தலைவர்கள் நடத்தினார்கள்.

அதன் முடிவு என்ன என்று கேட்டால் அது ரகசியம், சொல்ல முடியாது என்று பதில் கூறிவிட்டார்கள். சமீபத்தில் சங்கீத மங்கலத்தில் (விழுப்புரம் - _ செஞ்சி அருகில்) எங்கள் கழகத் தோழர்கள் காங்கிரஸ் காலிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். போலீசார்கூட தமது F.I.R. புத்தகத்தில் குற்றவாளிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் அவர்கள்மீது ஏதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சேலத்தில் சில காலிகளால் சோடாபுட்டி வீசப்பட்டு எங்கள் தோழர் ஒருவருக்கு கண்ணில் காயப்பட்டு 20 நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தார். முடிவில் கண்ணை இழந்தார். அதற்காக Nuisance Charge செய்து இரண்டு ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இரண்டு ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை யுனிவர்சிட்டியில் திராவிடர்கழக மாணவர்களை நடு ஜாமத்தில் போலீசை வைத்துக் கொண்டு அடித்துப் புடைத்து கடைசியாக அடித்தவர்கள்மீதுள்ள பிராது பைசா வாங்கிக் கொண்டு அடித்துப் புடைத்து கடைசியாக அடித்தவர்கள் மீதுள்ள பிராது; பைசா வாங்கிக் கொண்டு உதைபட்டவர்கள் மீது கேசு நடக்கிறது! வேறு எந்த அரசாங்கமாவது இப்படிப் பட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்துமா?

இவ்வளவையும் நாங்கள் பொறுத்துக் கொண்டுதானே வந்திருக்கிறோம்?

எங்கள் கழகத் தோழர்கள் சிலர் ஆத்திரப்படும்போதுகூட ஆத்திரப்படாதீர்கள். ஆத்திரப்பட்டால் இரண்டு கட்சியிலும் அடிபடுபவர் நம்மவராகத் தான் இருக்க நேரிடும்; ஆகவே சமாதானமாக நடந்து காங்கிரஸ் திராவிடத் தோழர்களின் அன்புக்கும் பாத்திர மாகுங்கள் என்று தானே அவர்களுக்குச் சமாதானம் கூறி வந்திருக்கிறோம்? இதை யாராவது இல்லையென்று கூற முடியுமா? அல்லது எங்கள் நடத்தையாவது இதற்கு மாறுபட்டிருந்தது என்று யாராவது கூற முடியுமா? இந்த உண்மைகளெல்லாம் சர்க்காருக்குத் தெரியாமலா இருக்கிறது? தெரிந்திருந்தும் ஏன் இந்த வீண் வேலை?

கனம் சுப்பராயன் (போலீஸ் உள்துறை மந்திரி) அவர்கள், பலாத்காரத்தைக் கையாளாத யாரையும் நாங்கள் வீணாகத் தொல்லை கொடுக்கப் போவதில்லை, என்று தம் வானொலிப் பேச்சில் கூறினார் என்று கேட்டு அவருடைய நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்டு அதற்காக அவரைப் பாராட்டி மெமோரியல் ஹாலில் பேசிவிட்டு வீட்டிற்குப் போகிறேன். அங்கு தந்தி வந்து சேருகிறது.  திருவண்ணாமலையிலிருந்து கருஞ்சட்டை போட்டுக் கொண்டு இருந்ததற்காகவும் கழகத்தில் கருப்புக்கொடியை இறக்காததற்காகவும் கழகத்துக்கு வந்து ஆறு தோழர்கள் கைதியாக்கப்பட்டு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.

---------------------

சென்னை பெரியமேட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து 7.3.1948

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It