சுயராஜ்ஜியக் கக்ஷித் தலைவரான ஸ்ரீமான் எஸ்.சீனிவாஸய்யங்கார், செல்லுமிடங்களிலெல்லாம் ஜஸ்ட்டிஸ் கக்ஷியார் கவர்ன்மென்டு விருந்துகளுக்குப் போகிறார்கள். கவர்னர் முதலிய கவர்ன்மென்டு உத்தியோகஸ்தர்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள். நாங்கள் விருந்துக்கும் போகோம்; விருந்தும் கொடுக்கமாட்டோம்; ஆதலால் நாங்கள் ஒத்துழையாமை வாசனைக்காரர் என்று உறுதிமொழி கூறி ஓட்டு கேட்கிறார்.

இவ்வுறுதிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதுபோல் ஸ்ரீமான் சி.ராஜ கோபாலாச்சாரியாரும் சுயராஜ்யா கக்ஷியார் உறுதிமொழிப்படி நடப்பார்கள் அதற்கு நான் ஜாமீன் என்று மேலொப்பமும் போடுகிறார். மேலொப்ப கையெழுத்து முடிவதற்குள்ளாகவே சுயராஜ்யக் கக்ஷி முக்கியஸ்தரான சென்னை கார்ப்பரேஷன் தலைவர் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் கவர்னருக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தருக்கும் விருந்து கொடுத்து வருகிறார்.

தேர்தல் பாக்கியிருக்கும்போதே இவ்வளவு நாணயமாய் நடப்பவர்கள் தேர்தல் முற்றும் நடந்த பிறகு என்ன செய்வார்கள் என்பதை ஜாமீன்தாரான ஸ்ரீமான் ஆச்சாரியாரையும் சாக்ஷிக் கையெழுத்து போடுபவரான ஸ்ரீமான் முதலியாரையும் நம்புபவர்கள்தான் பதில் சொல்லவேண்டும்..

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 07.03.1926)

Pin It