“எச்சில் சாப்பிட்டாலும் வயிறு நிறைய சாப்பிடவேண்டும், ஏய்த்து பலனடைவதானாலும் ஆசை தீர அடையவேண்டும்” என்று ஒரு பழமொழி யுண்டு, அதுபோலவே நமது சுயராஜ்யக் கட்சியார் ஆதியில் காங்கிரசை மீறிவிட்டு போனார்கள்; பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடக்க தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று காங்கிரசைக் கேட்டார்கள். பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடப்பதை பிறர் ஆக்ஷபிக்கக்கூடாது என்றனர்.

 

பின்பு தங்களுக்கு வேண்டிய உதவியைக் காங்கிரஸ்,தனது மன சாக்ஷிக்கு விரோதமில்லாமல் செய்யவேண்டும் என்று கேட்டனர்.

பிறகு காங்கிரசில் தாங்களும் ஒரு சரியான பாகமாயிருக்க வேண்டுமென்று கேட்டனர்.

பிறகு காங்கிரசில் தாங்களே முக்கியஸ்தர்களாக வேண்டும் என்று கேட்டனர். இவ்வளவும் அடைந்தார்கள். இப்போது தாங்களே காங்கிரசாகி விட வேண்டும்; தங்களுக்கு பதவிகளும், உத்தியோகமும், காங்கிரசே வாங்கி கொடுக்க வேண்டும்; அப்படி காங்கிரஸ்காரரே எல்லா பதவியும், உத்தியோகமும் சம்பாதித்து கொடுப்பதானாலும், தங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது; தங்கள் உத்திரவில்லாமல் காங்கிரஸ்காரரும் அனுபவிக்கக் கூடாது; என்கிற நிலைமைக்கு இப்போது வந்து விட்டார்கள். இதுகள் எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் சம்மதிக்கலாம்; ஆனால் இதன் பலனாய் தேசத்தில் காங்கிரசுக்கு யோக்கியதையும், பெருமையும் போய்விடுமென்பது மாத்திரம் சத்தியம்.

கல்கத்தாவில் சுயராஜ்யக் கட்சியார் தாங்கள் நிராகரித்த மந்திரிகளின் சம்பளத்தை மறுபடியும் அனுமதிக்க, மிதவாதக் கட்சியார் எதிர்த்தும், சர்க்கார் மெம்பர்களோடு, தாங்களும் சேர்ந்துகொண்டு மிதவாதிகளைத் தோற்கடித்து சம்பளத்தை அனுமதித்துக் கொண்டார்கள்.

மத்திய மாகாணத்தில் முன்பு தாங்கள் குறைத்த மந்திரிகளின் சம்பளத்தை மறுபடியும் உயர்த்த ஒரு தீர்மானம் கொண்டுவந்துவிட்டார்கள்.

இவ்விரண்டு காரியங்களும் அடுத்த தேர்தல்களில் தாங்களே ஜெயிக்கப் போகிறோம் என்கிற உறுதியும், அப்படி ஜெயித்தால் மந்திரி பதவிகள் தங்களுக்கே கிடைக்கும் என்கிற ஆசையும், இப்பொழுது தங்களுக்கு இருப்பதையும், அதற்காக முன் ஜாக்கிரதையாய் இப்பொழுதிருந்தே சம்பளத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற தந்திரத்தையும் காட்டுகிறது அல்லவா?

 

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.12.1925)

Pin It