பிச்சைக் கூட்டமா தமிழினம் ?

சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது. தமிழ்நாட்டில் புயல் வீசத் தொடங்கி விட்டது - இலவசங்களின் புயல்! எதை எடுத்தாலும் 2 ரூபா என்று கூவி விற்கும் கடைக்காரரைப் போல், எதை எடுத்தாலும் இலவசம் என்று கருணாநிதியும் செயலலிதாவும் கூவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உங்கள் பொன்னான வாக்கு மட்டும்தான்.

       கிரைண்டர் அல்லது மிக்சி இலவசம் என்கிறது ஒரு கட்சி, கிரைண்டரும் மிக்சியும் மின் விசிறியும் இலவசம் என்கிறது இன்னொரு கட்சி. ஏன்? இதையெல்லாம் இலவசமாகத் தருவதற்கு பதில் எல்லாக் கல்வியும் இலவசம் என்று அறிவிக்கலாமே! விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருளை எல்லாம் இலவசமாக்கப் போவதாகச் சொல்கிறார்களே, இலவசமாகக் கிடைத்து வந்த தொடக்கக் கல்வியைக் கூட – மழலைக் கல்வியையும் சேர்த்து – ஆயிரங்கள் கொடுத்து வாங்க வேண்டிய கடைச் சரக்கு ஆக்கியது யார்? இவர்கள்தாமே!

       கருணாநிதி மற்றும் செயலலிதாவின் இலவச வாக்குறுதிகள் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முனையும் ஊழல் நடவடிக்கைகளே தவிர வேறில்லை. முன்கூட்டியே மூக்குத்தி கொடுப்பதற்கும் ஆட்சிக்கு வந்தபின் அரைப்பவுண் கொடுப்போம் என்பதற்கும் என்ன வேறுபாடு?

       அரை நூற்றாண்டுக்கு மேல் தில்லியில் காங்கிரசு ஆட்சி, 40 ஆண்டுக்கு மேல் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி… இத்தனைக்குப் பிறகும் பரம ஏழைகளுக்கு இலவச அரிசித் திட்டம் அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு என்ன காரணம்? இவர்களைப் பரம ஏழைகளாக்கியது யார்? மென்மேலும் பரம ஏழைகள் ஆக்கிக் கொண்டிருப்பது யார்? இதுதான் சுதந்திரமா? இதுதான் சனநாயகமா? இதுதான் குடியரசா? இதுதான் சோசலிசமா? இதுதான் திராவிடமா?

       இரந்துண்பதை இழிவாகக் கருதும் தமிழினத்தை இலவசத்திற்கு வாய் பிளக்கும் பிச்சைக்காரக் கூட்டமாக மாற்றி விட்டார்களே, ஏன்?

இந்த வகையில் கருணாநிதியின் திமுகவும் செயலலிதாவின் அதிமுகவும் மட்டும்தான் குற்றவாளிகளா? அவர்களது மோசடி அரசியலின் அரவணைப்பில் குளிர்காய்ந்து பதவிகளைப் பங்குபோடக் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளும் குற்றவாளிகளே அல்லவா?

       ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத கூட்டணிக் கட்சிகள் மது விலக்கை வலியுறுத்துவோம், தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதி வழங்கி தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க முற்பட்டுள்ளன. பேசாமல் இவர்கள் சாதியை ஒழிக்க வலியுறுத்துவோம், பொதுவுடமைச் சமுதாயம் அமைக்க வலியுறுத்துவோம் என்று கூட வாக்குறுதி அளிக்கலாம். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு?

       தமிழகச் சட்டப் பேரவை தானாகச் சட்டமியற்றும் இறைமை உடையதன்று. தமிழக அரசு என்பது அரசே அன்று. அதற்கு அரசுரிமை இல்லை. சட்டம் இயற்றத் துப்பில்லாததால்தான் இந்தக் கட்சிகள் விளக்குப் போட்டது சாதனை என்றும், விளக்குமாறு கொடுப்பது வாக்குறுதி என்றும் சொல்லி உங்களிடம் வாக்குச் சேகரிக்க வருகின்றன.

       ஈழத் தமிழர் இனப் படுகொலையை இந்த சட்டப் பேரவை இயற்றிய தீர்மானங்களால் தடுக்க முடிந்ததா? காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என ஆறுகள் தோறும் நாம் இழந்த நீர் உரிமையை மீட்டுக் கொடுக்க இந்த மாநில அரசினால் முடிந்ததா?

       ஈழத் தமிழர் இனப் படுகொலையில் முதல் குற்றவாளியான இந்திய அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும், அதற்காக யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று நம் நண்பர்கள் சிலர் சொல்கின்றனர். இந்த ஒரு வகையில் மட்டுமாவது காங்கிரசுக்கு மாற்றான கொள்கை கொண்ட ஒரு கட்சி இருக்குமானால், அந்தக் கொள்கையை வகுக்கவும் நடைமுறைப்படுத்தவும் உரிமையுள்ளதாக சட்டப் பேரவையும் தமிழக அரசும் இருக்குமானால் அந்த நண்பர்கள் சொல்வதைக் கருதிப் பார்க்கலாம். எதிர்ப்பென்றாலும் ஆதரவு என்றாலும் அதற்குக் கொள்கை அடிப்படை தேவை. இல்லையேல் நாமும் சந்தர்ப்பவாதக் கட்சிகளின் கூட்டத்தில் சேர்ந்தவர்களாவோம்.

       காங்கிரசு இனப் பகை என்றால், திமுகவும், அதிமுகவும் இனத் துரோக இரட்டையரே ஆவர். கூட்டணிக் கட்சிகளுக்கு கொள்கை என்று ஏதாவது இருந்திருந்தால் அதைக் கூட்டுக்கும் சீட்டுக்கும் விற்று விட்டன. இவர்களில் யாரையும் நம்மால் ஆதரிக்க முடியாது.

       இந்திய சனநாயகம் என்பது பணநாயகமே. தேர்தல் என்னும்; பணநாயகச் சூதாட்டத்தில் விடுதலையை நேசிப்பவர்களுக்கு இடமில்லை. உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், உண்மையான சனநாயக ஆற்றல்கள் இந்தப் பணநாயகத் தேர்தலை புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை. புறக்கணித்து விட்டு கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமென்பதில்லை. நமக்கென்று போராட்டப் பாதை உண்டு. வாக்களிக்க மறுப்பது வாழ்வுரிமைக்காகப் போராடுவதற்காகவே!

       பணநாயகப் பேய்களை ஓட்டுவதற்கு என்ன செய்வது?     தேர்தல் தவிர வேறு வழி இருக்கிறதா? என்று நீங்கள் கேட்கலாம். தேர்தலில் கருணாநிதியை விரட்ட செயலலிதாவை ஆதரிக்க வேண்டியுள்ளது. செயலலிதாவை விரட்ட கருணாநிதியை ஆதரிக்க வேண்டியுள்ளது. நாம் சொல்கிறோம் - கருணாநிதி, செயலலிதா இருவரையுமே ஒருசேர விரட்ட முடியும், ஊழல் கூட்டத்தையே ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முடியும். அதற்குத் தேவை தேர்தலன்று, மக்கள் புரட்சி! துனிசியாவிலும் எகிப்திலும் நடந்தது போன்ற மக்கள் புரட்சி! லிபியாவிலும் வேறு பல நாடுகளிலும் நடந்து கொண்டிருப்பது போன்ற மக்கள் புரட்சி!

       வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் விடுகிறோமே என்று சில வாக்காளர்கள் சற்றே கவலை கொள்ளலாம். அவர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமலே தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வழி செய்வதுதான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 49ஓ! (49-O)

       ஆகவே, தமிழர்களே! நாற்காலிக்காக நடைபெறும் நாய்ச்சண்டையாம் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம்! தமிழ்த் தேசியத்திற்காகவும், சமூகநீதிக்காகவும் போராட அணி திரள்வோம்!

       பணநாயகத்தை வென்று சனநாயகம் காக்க வாருங்கள் தமிழர்களே!

Pin It